top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 295 - கவனிப்பதிலுள்ள மாயை..!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-295

கவனிப்பதிலுள்ள மாயை..!


  • 1999-ஆம் ஆண்டு உளவியல் குறித்த ஒரு ஆராய்ச்சியில், ஒரு குழுவிடம் கூடைப்பந்து விளையாட்டில் வெள்ளைச் சட்டை அணிந்தவர்கள் எத்தனை முறை பந்தை அவர்கள் அணிக்குள் மாற்றிக் கொள்கிறார்கள் என்று எண்ணுவதற்கு சொன்னார்கள். அந்த குழு, மிகவும் கவனமாக எண்ணிக்கொண்டே வந்தது. போட்டியின் இடையில் மனிதக்குரங்கு உடையணிந்த ஒரு நபர் மைதானத்தின் உள்ளே அமைதியாக வந்து போனார். போட்டி முடிவுற்றபின், அந்த குழுவினரில் எத்தனைபேர் அந்த மனிதக்குரங்கு வந்ததை பார்த்தார்கள் என்று கேட்டபோது, “குரங்கா!! எங்கு? எப்போது?” என்று கேட்டனர். அவர்கள் பந்து கைமாறுவதிலும், எண்ணிக்கையில் கவனமாக இருந்தபோது, அங்கு வந்துபோன மனிதக்குரங்கை கவனிக்கவில்லை. இந்த ஆய்வு மனிதனின் அதீத கவனத்தில் ஏற்படும் குருட்டுத் தனத்தை தெளிவுபடுத்தியது!!

  • ஒரு பெண் தன் கணவரிடம், வேலையிலிருந்து வரும்போது சந்தைக்குள் புகுந்து பெரிய உருளைக்கிழங்கு வாங்கிவரச் சொன்னார். சின்னச்சின்னதாக வாங்க வேண்டாம், பெரிதாக பார்த்து வாங்குங்கள் என்று மறுபடியும் அழுத்தி சொன்னவுடன், அந்த கணவர் அதை ஆழமாக மனதில் பதிந்துகொண்டார். வரும்வழியில் இருந்த சந்தைக்குள் புகுந்தவர், ஒவ்வொரு கடையிலும் உருளைக்கிழங்கின் அளவு எவ்வளவு, விலை எவ்வளவு என்று கவனமாக பார்த்து, கடைசியில் ஒரு கடையை தேர்வு செய்து வாங்கிவந்தார். வீட்டில் மனைவி உருளைக்கிழங்கு சரியாக இருக்கிறதென்று சொன்னபின் தான் அவருக்கு நிம்மதியாய் இருந்தது. உருளைக்கிழங்கை சுத்தம் செய்துகொண்டே, சந்தையில் தக்காளியும், வெங்காயமும் என்ன விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்? கத்தரிக்காய் இருந்ததா? என்று மனைவி கேட்டவுடன், கணவருக்கு தூக்கிவாரிப்போட்டது, ஏனெனில் உருளைக்கிழங்கின் அளவையும். விலையையும் தேடிய அவர், தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் இருந்ததா என்பதை கவனிக்கவே இல்லை!!

டேனியல் சைமன்ஸ் & கிரிஸ்டோபர் கேப்ரிஸ், 1999-ல் நடத்திய “இன்விசிபில் கொரில்லா” என்ற ஆராய்ச்சி, மனிதனின் கவனம் குறித்த புரிதலில், சிறந்த உளவியில் பாடமாக இன்றும் இருக்கிறது. மனிதன், ஒரு குறிப்பிட்ட இலக்கில் கவனம் செலுத்துகின்ற போது, அவன் கண்முன்னே நடக்கும் மற்றவைகள் அவன் கண்களுக்கு புலப்படுவதில்லை என்பதை இந்த ஆராய்ச்சி தெளிவுபடுத்தியது. ஆம்! மனிதன் தனக்கு இதுதேவை என்று ஒன்றை உற்று கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அவனைச் சுற்றி நடப்பவைகள் எதையும் பொருட்படுத்துவதில்லை.


பெரிய உருளைக்கிழங்கில் கவனம் செலுத்திய கணவனுக்கு, வேறு என்னென்ன காய்கறிகள் சந்தையில் விற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு பொருட்டாக தெரியவில்லை. வீட்டில் மனைவி கேட்டபோதுதான், அடடா! அதையெல்லாம் கவனிக்காமல் வந்துவிட்டோமே என்று அவருக்கே தோன்றியது. இப்படித்தான் மனிதன் தன்னைச் சுற்றியுள்ளவைகள் பலவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் குதிரைக்கு கடிவாளம் இட்டதுபோல ஓடிக்கொண்டிருக்கிறான். இதை “கவனிப்பு மாயை”, “கவனச்சுருக்கம்” என்று பலபேர்களில் சொல்லலாம்.


புதிதாக வாகனம் ஓட்டுபவரின் கவனம் முழுவதும் சாலையில் இருக்கும்போது, வானொலியில் வந்த பாடல்கள் எதுவும் கேட்கப்படவில்லை. சாலைமீதிருந்த கவனத்திலும், புதுதிதாய் ஓட்டுகிறோம் என்ற பயத்திலும் வேர்த்து விடுகிறது. அதேசமயம், நன்கு பழக்கப்பட்ட ஓட்டுனருக்கு, பாடல் மீது கவனமிருக்கிறது. சாலையில் என்னென்ன புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதுகுறித்து எந்த கவனமும் இருப்பதில்லை.

இந்த கவனச்சுருக்கம் ஏன் ஏற்படுகிறது?

  • ஒரு வேலையின் மீது / ஒருபொருளின் மீது அதீத கவனம் செலுத்தும்போது, மற்றவைகள் முக்கியமில்லை என்று மனம் ஒதுக்கிவிடுவதால்;

  • மனித மூலைக்கு அபரிமிதமான ஆற்றல் இருந்தாலும், அதன் வெளிமனதால் ஒருநேரத்தில் ஓரிரு விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது [ஒரு சில அவதானிகள், 8-10 விடயங்களில் ஒரேநேரத்தில் கவனம் செலுத்துமளவிற்கு பயிற்சி செய்கிறார்கள்]

  • ஒரு குறிப்பிட்ட வேலையில் நிறைய சிந்திக்க வேண்டியிருந்தால், ஏனையவைகளை மனம் தானாக ஒதுக்கிவிடுகிறது;

  • சில செயல்கள், பலமுறை செய்யப்பட்டு பழக்கப்பட்டுவிட்டதால், அவை கவனமில்லாமல் தானாக நடந்துவிடுகிறது. அவற்றிலுள்ள தவறுகள் தென்படுவது இல்லை!

  • விருப்பமில்லாத விடயங்களை செய்யும்போது, கவனக்குறைவு பொதுவாக ஏற்பட்டுவிடும்;

  • அதீத உணர்வு நிலையில் இருக்கும்போது [கோபம், மகிழ்ச்சி, வேதனை.....], சுற்றப்புறத்தை கவனிப்பது தானாக குறைந்துவிடுகிறது;

இந்த கவனச்சுருக்கம் தான், பலரின் வெற்றியை, அவர்கள் நூலிழையில் தவறவிடச் செய்திருக்கிறது. உங்கள் இலக்கை நோக்கிய பயனத்தில், நீங்கள் எவ்வளவுதான் திட்டமிட்டாலும், சிலசமயம் புதிய பிரச்சனைகள் உருவாகியே தீரும். ஆனால் அவை எதுவும் திடீரென்று ஒருநொடியில் தோன்றுவதில்லை. உங்கள் பயனத்தின் பாதையில் படிப்படியாய் புதிய பிரச்சனைகள் உருவாகும். நம் திட்டத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாக கொண்டு பயனிக்கும்போது, இந்த புதிய பிரச்சனைகளுக்கான சாத்தியக்கூறுகளை யாரும் கவனிப்பதில்லை. அவை ஒருநாள் பெரிதாக வெடிக்கும்போது, எல்லோரும் திண்டாடிப் போகிறார்கள்;


கவனச்சுருக்கத்தினால், வியாபாரத்தில் என்னென் பிரச்சனைகள் ஏற்படுகிறது;

  • சிலசமயம் உற்பத்தியின் அளவும், பொருட்களின் தரமும் குறைந்துபோகலாம்;

  • தேவையற்ற மன உளைச்சலும், அழுத்தமும் ஏற்படலாம்;

  • முக்கியமான விடயங்கள் கவனிக்கப்படாமல் விடுபட்டால், வர்த்தக இழப்பும், வாடிக்கையாளர் இழப்பம் ஏற்படலாம்;

  • கவனக் குறைவினால், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு விபத்துக்கள் நேரலாம்;

  • புதிய யோசனைகள் குறைந்து, படைக்கும் ஆற்றல் பாதிக்கப் படலாம்;

நீங்கள், உங்கள் வேலையை கவனமாக செய்வது முக்கியம். அதேசமயம், அதைசார்ந்துள்ள மற்றவைகள் மீதும் ஒருகண் இருக்கவேண்டும். பக்கத்தில் இருப்பவன் மயங்கிவிழுந்திருக்க, நீங்கள் உங்கள் கணிணியில் வேலை செய்துகொண்டிருந்தால் சரியாகுமா?


வெற்றிக்கு இலக்கின் மீது அதீத கவனம் செலுத்துவது அவசியமானாலும், அதன் பாதையில் இருக்கும் ஏனையவற்றின் மீதும் ஒரு கண் இருந்துகொண்டே இருக்கட்டும். உங்களைச் சுற்றியுள்ளவற்றில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு தெரிந்தால்மட்டுமே, உங்களால் உங்கள் இலக்கில் குறிதவறாமல் அடிக்கமுடியும்.


காற்றின் திசையும், வேகமும் தெரியாமல்

அம்பெய்தினால்

அது இலக்கை அடைவது கடினம்தான்!


உங்கள் இலக்கை கவனமாக கவனிப்பதில் தவறில்லை – ஆனால்

அதற்கு பக்கத்தில் ஆபத்துக்கள் வருவதை கவனிக்கத் தவறினால்

உங்களின் வெற்றிப்பயனம் முழுவதுமே வீணாகிவிடும்!


கலையோ, வியாபாரமோ, விளையாட்டோ,

எதுவொன்றில் கவனம் செலுத்தும் போதும்

ஒன்றின் மீதான கவனத்தில் மயங்கி, மாயையில் சிக்கினால்

பல சின்னச்சின்ன மாற்றங்கள் தெரியாமலே போகும்!

கவனிக்காமல் விட்டவற்றில்

உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பும் இருந்திருக்கலாம்!!


- [ம.சு.கு 31.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page