top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 294 - தந்திரமான வாக்குறுதிகள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-294

தந்திரமான வாக்குறுதிகள்..!


  • சென்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிப் பட்டியலை பார்த்திருக்கிறீர்களா? மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஒவ்வொரு கட்சியும் 100-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கியிருப்பார்கள். தோற்றவர்களின் வாக்குறுதிகள் வீண். ஆனால் வென்றவர்களின் வாக்குறுதிகளை உங்களின் எத்தனை பேர் நடந்துள்ளதா என்று பரிசோதித்துள்ளீர்கள். பெரும்பாலும அந்த தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும்போதே அது சாத்தியமா? இல்லையா? என்பது அரசியல் கட்சித்தலைவர்களுக்கு தெரியும். சில வாக்குறுதிகள் சாத்தியமே இல்லையென்றாலும், அதை தைரியமாக மேடையில் செய்வதாக உறுதியளிப்பார்கள். அவர்கள் வென்ற பிறகு, பெரிதாய் அந்த வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொள்வதில்லை. பத்திரிக்கைகளும், எதிர்கட்சியும் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புக்களை செய்தால், அதற்கு “ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்”, “பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது” என்று ஏதாவதொரு பதிலை சொல்லிவிடுவார்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால், அதே கட்சியின் அடுத்த தேர்தல் அறிக்கையில் பெரும்பாலும் அதே வாக்குறுதிகள் திரும்ப இடம்பெறும்...

  • நிறுவனத்திற்கு ஒரு அலுவலக கட்டிடம் கட்ட திட்டமிடுகிறீர்கள். மூன்று மாதகாலத்திற்குள் முடிக்கவேண்டிய கட்டாயம். ஆனால், அன்றைய சூழ்நிலையில், அதை கட்ட குறைந்தபட்சம் ஆறுமாதம் ஆகும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் மூன்று மாதத்தில் முடித்துக்கொடுக்க வேண்டுமென்ற விதிமுறையுடன் ஒப்பந்ததாரரிடம் பேரம் பேசுகிறீர்கள். அந்த ஒப்பந்ததாரர், அந்த ஒப்பந்தத்தை வென்றாக வேண்டும் என்பதற்காக, தன் குழுவில் போதுமான நபர்கள் தயாராக இருப்பதாகவும், அதைக்கொண்டு கட்டாயம் முடித்துத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்து முன்தொகையை பெறுகிறார். மூன்று மாதத்தில் முடிக்க முடியாதென்று அந்த ஒப்பந்ததாரருக்கு தெரியும். ஆனால், அதை சொன்னால் அந்த ஒப்பந்தமும், முன்பணமும் கிடைக்காது என்பதால் சொல்லவில்லை. வேலையை துவங்கி செய்யும்போது, அவற்றை சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமாக பொய் சொல்லி முன்பணத்தை வாங்கிவிட்டார். இரண்டுமாதம் நிறைவடைந்த நிலையில் வேலை கால்பங்குதான் நடந்திருந்தது. அவரும் 35% பணத்தை வாங்கிவிட்டார். இப்போது அவர் தாமதத்திற்கு 100 காரணம் சொல்லி சமாளிக்கிறார். அந்த நிறுவனத்திற்கு அவற்றை கேட்பதைத் தவிற வேறுவழி ஏதாவதுண்டா?

தேர்தல் வாக்குறுதிகளைப்பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்லத்தேவையில்லை. தமிழகத்தில் அதற்கு பஞ்சமே இல்லை. நேரம் கிடைக்கும்போது, அவற்றை புரட்டிப்பாருங்கள். உங்களை எப்படியெல்லாம் எல்லா அரசியில்வாதிகளும் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்;


கட்டிட வேலைகளில், எல்லா ஒப்பந்ததாரர்களும் சொல்லும் ஒரே வார்த்தை, “நீங்கள் கவலையே படாதீர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் எல்லாவற்றையும் முடித்துகொடுத்துவிடுவோம்” என்பதுதான். ஆனால், 95%-க்கு அதிகமான கட்டிடங்கள் தாமதத்துடன் தான் கட்டி முடிக்கப்படுகிறது. அந்த தாமதங்களை எப்படி கையாள்வது என்ற போதுமான திட்டமிடலை பெரிதாய் யாரும் யோசிப்பதில்லை.


சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கக் கூடிய வியாபாரிகள் சந்தையில் வெகுவாக குறைந்துவிட்டனர். அவர்களுக்கு வர்த்தகம் கிடைக்கவேண்டும், இலாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்வதாக ஒத்துக்கொண்டு, பின்னர் சாக்குபோக்கு சொல்லி சமாளிக்கின்றனர். முன்பணம் கொடுத்தபிறகு, மெல்லவும் முடியாமல் – துப்பவும் முடியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

  • நேர்காணலில் வேலைதேடி வருபவர்கள், தன் சாதனைப்பட்டியலை எப்போதும் மிகைப்படுத்தி சொல்வது வழக்கம். அந்த நபரின் வேலைக என்னென்ன என்று நிறுவனம் சொல்லும்போது, அவையனைத்தையும் தன்னால் செய்யமுடியுமா என்று யோசிக்காமல், தான் எளிதாக செய்துவிடுவேன் என்று உறுதியளிக்கிறார்.

  • திருமண நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகிவிட்டீர்கள். உங்கள் மனைவி இன்னும் 5 நிமிடத்தில் சிகையலங்காரம் முடித்து தயாராகி விடுவேன் என்று உறுதியளிக்கிறார். ஆனால் அதற்கு குறைந்தது 20-30 நிமிடம் ஆகுமென்று அவருக்கே நன்றாக தெரியும். ஆனால் 5 நிமிடமென்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார் [ஆண்களும் அலுவலகத்தில் இருந்து கிளம்புவது குறித்து இப்படித்தான் வாக்குறுதி கொடுத்து தாமதிப்பார்கள்];

  • உங்கள் நிறுவனத்திற்கு பொருட்களை கொடுக்கும் நிறுவனம் நாளை அனுப்பிவிடுவதாக உறுதிகூறுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்று அவர்களுக்கே தெரிந்திருந்தாலும், உங்களுடனான வர்த்தகத்தை இழக்க விரும்பாமல், எல்லாவற்றிற்கும் சரி-சரியென்று தலையை ஆட்டி பணத்தை வாங்கிவிடுவார்கள்;

  • இது பல்லை வென்மையாக்கும், சருமத்தை பொலிவூட்டும், கூந்தலை வளர்க்கும், தொப்பையை குறைக்கும் என்று எண்ணற்ற வாக்குறுதிகளோடு சந்தையில் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுவதும், அதைவாங்கி உபயோகித்து ஏமாறுவதும் எல்லோருக்கும் வழக்கமான ஒன்று.

  • நாளைக்கு பணத்தை முழுவதுமான செலுத்திவிடுவேன் என்று சத்தியம் செய்து கடனாக பணத்தையும், பொருளையும் வாங்குபவர்கள், மறுநாள் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பார்கள்;

எங்கெல்லாம் இப்படி தந்திரமாக, சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்?

  • நீங்கள்தான் முழுப்பொறுப்பு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாத இடங்களில், இது மாதிரியான வாக்குறுதிகளுக்கு பஞ்சமே இருக்காது!

  • செய்து முடிக்க நிறைய மாதங்கள், வருடங்கள் எடுக்கும் திட்டங்களில், எந்தவித கணக்கீடும் இல்லாமல் தைரியமாக குறிப்பிட்ட காலத்தில் முடித்துத் தருவதாக ஒத்துக்கொள்வார்கள்!

  • பல வியாபாரிகள், வர்த்தகங்கள் மற்றும் மனிதர்களுடன் தொடர்புடைய விடயங்களிலும், ஒருவர் மீது இன்னொருவர் குறைசொல்லி சமாளிக்கலாம் என்கிற இடங்களில், தொழில்முனைவோரின் வாக்குறுதிகள் எல்லையில்லாமல் வரும்!

  • பணத்தின் மீது அதீத ஆசை கொண்டுள்ள நபர்களிடம், பணத்தேவை அதிகமுள்ள நபர்களிடம், பல ஆசைவார்த்தைகளை சொல்லி மயக்கி, முதலீடு செய்ய வைப்பதும், கடன் வாங்கித்தருவதாக கூறி முன்பணம் பெற்று ஏமாற்றுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது;

இந்த பட்டியல் எல்லாம் உங்களுக்கு எதற்கு என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், இப்படிப்பட்ட வாக்குறுதிகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் திணரக்கூடாது என்பதற்காகத்தான்.

  • வாக்குறுதிகளை கேட்டு முடிவு செய்வதற்குமுன், எது சாத்தியம்? எது சாத்தியமில்லை? என்பது உங்களுக்கு தெரிய வேண்டும்!

  • வாக்குறுதி வழங்கும் நபரின் நயமான பேச்சில் மயங்காமல், அவரது அனுபவம், முன்னர் சாதித்தவைகள் என்னென்ன என்பதை தீர விசாரித்தறிந்து முடிவெடுக்க வேண்டும்;

  • உங்கள் உள்ளுணர்வை சற்று கேளுங்கள். மற்றவர்களின் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லாவிடில், சீக்கிரத்தில் அதிலிருந்து விலகிவிடுங்கள்;

  • எதையும் கடைசி நிமிடம் வரை இழுத்துக்கொண்டிருக்காமல், முன்னரே முடிவெடுக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் தேவையற்ற அழுத்தம் காரணமாக, மற்றவர்களின் தந்திர யுத்தியில் வழியில்லாமல் மாட்டிக்கொள்ள நேரும்;

வியாபாரிகள், அரசியல்வாதிகள், வாடிக்கையாளர்கள் என்று

எல்லோரும் ஆயிரமாயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்!

எது சாத்தியம்? எது ஆசாத்தியம்? என்று

ஏனோ மக்கள் சிந்திக்காமல் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்!


ஏமாற்றுபவர்கள் தைரியமாக ஏமாற்றுகிறார்கள்;

அந்த ஏமாளிக்கூட்டம் விழித்துக்கொள்ளாதவரை

ஏமாற்றுபவர்களின் கைகள் ஓங்கியே நிற்கும்!


நயவஞ்சகமான பேச்சும், தந்திரமான வாக்குறுதியும்

நீங்கள் அன்றாடம் சந்திக்கவேண்டிய சவால்கள்!

அவற்றை இனங்கண்டு சிக்காமல் தப்பித்தால்மட்டுமே

உங்கள் இலக்குகளை நோக்கி சரியாக பயனிக்கமுடியும்!


- [ம.சு.கு 30.07.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page