“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-293
நூலிழை வேறுபாடுதான்...?
நிறுவனத்தில் பல ஊழியர்களை வைத்து மேலாளர்கள் வேலைவாங்குவார்கள். அதில் தெரிந்த மற்றும் தெரியாத வேலைகளை கொடுத்து செய்யச்சொல்லும் போது, மேலாளர் அதற்குரிய வழிமுறைகளை உத்தரவாக சொல்வார். அந்த உத்தரவுகள் வேலையை செய் என்று அதிகாரம் சார்ந்திருக்கும். ஆனால் சற்று வார்த்தைகள் பிசகினால், அது அகங்காரம் சார்ந்த உத்தரவாக மாறிவிடும். “நான் சொல்கின்றவிதம் செய்” என்று சொல்வதற்கும் “நான் சொல்வதைத்தான் செய்யவேண்டும்” என்று சொல்வதற்கும் சின்ன வேறுபாடுதான். முதல் வாக்கியத்தில் அதிகாரம் சார்ந்த உத்தரவாக இருப்பது, இரண்டாவது வார்த்தையில் அகங்காரம் சார்ந்த அடிமைகளுக்கான கட்டளை போல தெரிகிறது. மேலாளர் தன் அதிகாரத்தை செலுத்துவதற்கும், அது அகங்காரமான கட்டளையாக தென்படுவதற்கும், வெறும் நூலிழை வேறுபாடுதான்;
நல்ல தரமான பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தும் நிறுவனத்திற்கு, திடீரென்று ஒருசில வாடிக்கையாளர் புகார்கள் வருகின்றன. குறிப்பிட்ட பொருட்கள் சரியில்லை என்று வந்த புகார்கள் மீது என்ன செய்யலாம் என்று நிர்வாகம் யோசிக்கும். எதோ குறிப்பிட்ட தின தயாரிப்பில் தவறு நேர்ந்திருக்கலாம், அவற்றிற்கான காரணத்தை கண்டு சரிசெய்ய முயற்சிக்கலாம். வாடிக்கையாளருக்கு மாற்று பொருள் கொடுத்து திருப்திபடுத்தலாம். அதேசமயம், இது தேவையில்லாத தவறான புகார்கள், போட்டியாளர்கள் வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள் என்று சொல்லி கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். முதல் சூழ்நிலையில், நீங்கள் வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துகிறீர்கள். அதே இரண்டாவது சூழ்நிலையில், உங்கள் உற்பத்தி முறையின்மீது அதீத நம்பிக்கைவைத்து, வாடிக்கையாளர் கருத்தை தவறென்று ஒதுக்குகிறீர்கள். உங்களின் இரண்டுவிதமான செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடுதான். ஆனால் அது வாடிக்கையாளர் சேவையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகஅதிகம்;
பணியிடமோ, வீடோ, உங்கள் பணியாளர்களிடமோ, குடும்ப அங்கத்தினரிடமோ ஒரு வேலையை சொல்லி செய்யச் சொல்லும்போது, அதை எப்படி சொல்கிறோம்? என்ன வார்த்தைகளை பிரயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்து, அது கனிவான உத்தரவுகளா? கட்டளைகளா? அடிமைத்தனமா? என்பது தீர்மானமாகும். உங்கள் வார்த்தை பிரயோகத்தில் ஒரு நூலிழை மாற்றம், உங்கள் உத்தரவுகளின் தொனியை மாற்றி, அடிமைத் தனத்தின் கட்டளைகள் போல காண்பித்துவிடக்கூடும். உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள், ஊழியர்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன், மனமுவந்த பங்களிப்புடன் நடத்தவிரும்பினால், உங்கள் கருத்துக்களும், வார்த்தைப் பயன்பாடும், உங்கள் எண்ணமும் அதே நிலைப்பாட்டை பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் அதிகாரத்துடன் கூடிய அகங்காரத்தை வெளிப்படுத்தும் வண்ணம் எல்லைதாண்டி பேசினால், நிறுவனத்தின் கலாச்சாரமே கெட்டுப்போகக் கூடும். பின் வெற்றியை நோக்கிய உங்கள் முயற்சியில், யாரும் மனமுவந்து பங்கெடுக்க மாட்டார்கள்;
வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டும் சேவை குறைபாடுகளை, தரக்குறைபாடுகளை, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உடனடியாக சரிசெய்து கொடுப்பவர்கள், சந்தையில் தொடரந்து வாடிக்கையாளர் வரவேற்பை தக்க வைக்கின்றனர். மாறாக, வாடிக்கையாளர் கருத்துக்களை பொருட்படுத்தாமல், தங்கள் நிலைதான் சரியென்று அகங்காரத்துடன் நடப்பவர்கள் படிப்படியாய் வாடிக்கையாளர்களை இழக்கத் துவங்குகிறார்கள். ஒரு அதிருப்தியான வாடிக்கையாளர், 10 பேரிடம் தனக்கு நடந்த அநியாயத்தை சொல்லி உங்கள் நிறுவனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார். வாடிக்கையாளர் சேவையில், நிறுவனத்தின் போக்கில் நூலிழை வேறுபாடு, உங்கள் வாடிக்கையாளர் உங்கள் பிரதிநியாய் பொருட்களை பரிந்துரைப்பதற்கு பதிலாய், அதற்கு எதிரான பிரச்சாரத்தை கையிலெடுக்கிறார்.
வாழ்க்கையில் இப்படி நிறைய விடயங்கள் நூலிழை வேறுபாட்டில், தவறாக போய்விடுகிறது.
மேலாளர்களின் அகங்காரமான வார்த்தைகளில் நிறுவனத்தில் ஊழியர்கள் புரிந்துணர்வும், பரஸ்பர செயல்பாடும் குறைந்து நிறுவனத்தின் கலாச்சாரம் சீரழிகிறது;
வீட்டில் அன்பான வார்த்தைக்கும், ஆணாதிக்க உத்தரவிற்குமான சிறிய வேறுபாடு குடும்பத்தின் நல்லுறவை, புரிந்துணர்வை முற்றிலும் பாதிக்கிறது;
வாடிக்கையாளரை கையாள்வதில் வெளிப்படும் அகங்காரமான போக்கு, சந்தையில் உங்கள் பொருட்களுக்கான விற்பனையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது;
புதிய ஆராய்ச்சி, பொருட்களின் மேம்பாடு குறித்த முயற்சிகளில், உங்கள் கருத்துக்களை மட்டும் பிரதானப்படுத்தி, மற்றவர்களின் ஆலோசனையை புறந்தள்ளும் போக்கு, அந்த ஆராய்ச்சியை, பொருட்களின் மேம்பாட்டை பயனற்றதாக்கிவிடக் கூடும்;
வாடிக்கையாளர்களுடனான பேரம் பேசுதலில், உங்களின் கனிவான பேச்சுக்கும், சர்வாதிகார போக்கிற்குமான சிறிய வேறுபாடு, உங்கள் வர்த்தகத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது.
அண்டை வீட்டாருடனான பேச்சில், சமுதாயத்துடனான அன்றாட தொடர்பில் உங்கள் வார்த்தைப் பிரயோகங்கள், உங்களை நேர்மறையாளராகவோ அல்லது எதிர்மறையாளராவோ புரிந்துகொள்ள வழிசெய்கிறது;
கல்வி, விளையாட்டு, வியாபாரம், குடும்பம், அரசியல், என்று எல்லா இடங்களிலும், உங்கள் செயல்பாடுகளில் ஏற்படும் கவனக்குறைவு, சில சமயங்களில் எல்லை தாண்டியதாக கருதப்படும்.
“அஷ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்று தர்மர் சொன்னது, உண்மைக்கும்-பொய்க்குமான நூலிழை வேறுபாடுதான். இறந்தது அஷ்வத்தாமன் என்ற யானையாக இருந்தாலும், போர்களத்தில் இருந்த துரோனருக்கு அது அவரது மகன் என்று தோன்றும் வகையில் சொல்லப்பட்டதால், தர்மன் தர்மம் தவறியதாக கருதப்பட்டான். இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்வில் எண்ணற்ற தருணங்களில் இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
உண்மைக்கும் பொய்க்கும்
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும்
அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும்
அன்பிற்கும் ஆதிக்கத்திற்கும்
அறிவிற்கும் அகங்காரத்திற்கும்
நூலிழை வேறுபாடுதான்!!
சிறு கவனச்சிதறலும், உங்களை
எல்லைதாண்டச் செய்துவிடும்;
நூலிழை வேறுபாடுள்ள எல்லைக்கோட்டை
நீங்கள் தாண்டுவது உங்களுக்கே தெரியாமல் போகலாம்!
இழப்பு ஏற்பட்டபின் புரிந்துகொள்வதில் பயனில்லை!
எல்லாச் சூழ்நிலைகளிலும்
உங்கள் சொல்லிலும் செயலிலும்
கவனமாக இருங்கள்!
உங்கள் மாற்றத்தையும்
உங்களைச் சார்ந்தவர்களின் மாற்றத்தையும்
எதிரிளிருப்பவரின் மாற்றத்தையும்
தொடர்ந்து விழிப்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்!
- [ம.சு.கு 29.07.2023]
Comments