top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 292 - முடிவுகளை கொண்டு எடைபோடுகிறீர்களா..?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-292

முடிவுகளை கொண்டு எடைபோடுகிறீர்களா...?


  • பந்தையத்தில் எந்த குதிரை ஜெயிக்கும் என்று 100 பேர் பந்தயம் கட்டுகிறார்கள். முதல் நாளில் பாதிபேரின் கனிப்பு தவறாகிவிடுகிறது. வெற்றி பெற்ற 50 பேர், மறுநாள் வேறுகுதிரைகளின் மேல் பந்தயம் வைக்கிறார்கள். பாதிபேர் கனிப்பு சரியாகிறது. அடுத்த நாள் வெற்றி பெற்ற 25 பேர் மோதுகிறார்கள். கடைசியில் இரண்டுபேர் பந்தயம் கட்டும்போது ஒருவர் மட்டும் ஜெயிக்கிறார்.. கிட்டத்தட்ட 10 நாட்கள் நடைபெற்ற பந்தயத்தில், இவர் ஒருவர் மட்டும் எல்லா நாளிலும் சரியான குதிரையின் மீது பந்தயம் கட்டி ஜெயித்திருக்கிறார். அந்த ஆண்டு பந்தயத்தில் அவர் முடிசூடா மன்னன். மிகச்சிறந்த கணிப்பாளர் என்று ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தன. அவர் வெற்றிக்கான இரகசியங்கள் என்னென்ன என்று பட்டியலிட ஆரம்பித்தார்கள். 10 நாட்கள் நடைபெற்ற பந்தயத்தில், 100 பேர்போட்டியிட, அதில் ஒருவர் மட்டும் தொடர்ந்து ஜெயித்தது அவரது தனிப்பட்ட திறமையா? உண்மையில் அவரால் தவறில்லாமல் கணிக்க முடியுமா?

  • பள்ளியில் படித்த 50 மாணவர்கள், அவரவர்களுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து மேற்படிப்பை தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து வெவ்வேறு பணிகளுக்கு சென்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். பள்ளியில் இருந்து வெளிவரும் போது, இந்த படிப்பை தேர்ந்தெடு, இந்த துறையை தேர்ந்தெடு என்று பல ஆலோசனைகளை பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வழங்கினர். 10 ஆண்டுகளுக்கு பின்னால் அவர்கள் அனைவரும் சந்தித்தபோது, ஒரு சில துறைகளை தேர்ந்தெடுத்தவர்கள் சீக்கிரமாக வளர்ச்சி பெற்றிருந்தனர். ஒருசிலர் இன்னும் காலூன்ற போராடிக்கொண்டிருந்தனர். நல்ல வருமனாம் ஈட்டுபவர்களை வெற்றியாளர்கள் என்றும், புத்திசாலி என்றும் பாராட்டினர். அதே மாணவர் குழு 25-வது ஆண்டு சந்தித்தது. இப்போது வெற்றியாளர்களின் இடம் சற்று மாறியிருந்தது. முன்னர் நல்ல வருமானம் ஈட்டியவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் கலைத்துறையில் தடம் பதிக்க முயன்றவர்கள் பெரிய வெற்றிகளை பெற்றுவிட்டனர். அன்று போராடிக்கொண்டிருந்த ஓரிருவர் இன்று மிகப் பிரபலமானவர்கள் ஆகிவிட்டனர். சரியாக படிக்காத சிலர், வியாபாரத்தில் வளர்ந்துவிட்டனர். இன்று யார் தேர்வு செய்த துறை சரியானதென்று ஆசிரியர்களால் முடிவுசொல்ல முடியவில்லை?

குதிரைப் பந்தயத்தில், எத்தனை குதிரை போட்டியிட்டாலும், அவற்றில் ஏதாவதொன்று வெற்றிபெறுவது வழக்கமான ஒன்று. பங்கேற்ற எல்லா குதிரைகளின் மீதும் பணம் கட்டும்போது, எந்த கூட்டம் வென்ற குதிரையின் மீது பணம் கட்டியதோ, அந்தகூட்டம் அதிர்ஷ்டக்கார கூட்டம்தான். அந்த அதிர்ஷ்டக்கார கூட்டத்தினர், அடுத்த முறை பல்வேறு குதிரைகளின் மீது கட்டுவார்கள். அவர்களில் சிலர் மட்டுமே வெல்வார்கள். அப்படி அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் செல்லும் போது. யாரோ ஓரிருவருக்கு தொடர்ந்து 5-10 வெற்றிகள் கிடைக்கலாம். அதற்காக அவர் நிரந்தர அதிர்ஷ்டசாலி என்று சொல்வது சரியா? இந்தாண்டு பந்தயத்தில் வென்றவர்கள் பலர், அடுத்தாண்டு நடைபெற்ற போட்டியில் பல இலட்சங்களை இழந்து கடனாளி ஆகியிருக்கின்றனர். இதுபோல் நிறைய நபர்களை ஊட்டி குதிரைப்ந்தயத்தில் நீங்கள் சந்திக்கலாம். ஒரு பந்தயத் தொடரில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார் என்பதற்காக அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டில் அவர் மேதை என்று முடிவெடுப்பது முட்டாள்தனம்.


மாணவர்களின் வளர்ச்சியை பார்த்து, 10-வது ஆண்டில் சரி-தவறென்றவர்கள், 25-வது ஆண்டில் வாயடைத்துப் போனார்கள். ஆரம்பத்தில் எந்த துறை சிறந்ததென்று சொன்னார்களோ, காலமாற்றத்தில் பழைய துறைகள் சில மாற்றம் கண்டு முன்னேறின. புதிய துறைகள் சில எல்லாவற்றையும் மாற்றியமைத்தன. 10-வது ஆண்டில் வெற்றியாளர்களாக தென்பட்டவர்களை புத்திசாலி என்று முடிவுசெய்தால், 25-வது ஆண்டு நிலைமாறுகிறது. கலைத்துறையை தேர்ந்தெடுத்தவர்கள் வெற்றிபெற அதிக காலம் பிடிக்கலாம். ஆனால் அவர்கள் வென்றால், அது மிகப்பெரியதாக இருக்கும். அவர்கள் வரலாற்றிலும் இடம்பிடிக்கக் கூடும.


அப்படித்தான் தாகூரைப் பற்றி அவரது பாட்டி வருத்தப்பட்டார். இரபீந்திரநாத் தாகூரின் வீட்டில் எல்லோரும் நன்றாக படித்து மருத்துவராகவும், பல்வேறு அரசுவேலைகளிலும் இருந்தனர். ஆனால் தாகூர் அவற்றில் நாட்டம் செலுத்தாததால், அவரது பாட்டி அவரைப் பற்றி மிகவும் வருந்தியுள்ளார். அவரது செல்லப் பேரன் எதிர்காலம் குறித்து புலம்பியிருக்கிறார். அன்று அவருக்கு தெரியவில்லை - தாகூரின் கவிதை இரண்டு நாடுகளுக்கு தேசிய கீதமாகும், நோபல் பரிசு கிடைக்கும், வரலாற்றின் அழியாத புகழ் பெறுவார் என்று. பாட்டி அன்றைய காலத்தில் படித்து நல்ல வேலைக்கு போன அவரின் சகோதர-சகோதரிகளை வெற்றியாளர் என்று நினைத்தார். ஆனால் அந்த வெற்றியாளர்கள் யாருடைய பெயரும் நமக்கு இன்று தெரியாது. ஆன்று அவர்கள் பாட்டி புலம்பிய தாகூர்தான் இன்று வரலாற்று நாயகன்!!


உதராணங்களை தாண்டி உங்கள் கதைக்கு வருவோம்.

  • உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவு சரியாக இருந்ததா? அல்லது தவறு நடந்துவிட்டதா?

  • உங்களை உலகம் வெற்றியாளர் என்கிறதா? துரதிஷ்டசாலி என்கிறதா?

  • உங்கள் நண்பர்கள் எடுத்த முடிவுகள் எது சரியாக இருந்தது? எது தவறானது?

இந்த கேள்வி, உங்களை நீங்கள் சுய அலசல் செய்து கொள்வதற்காக!

ஒருவர் நன்றாக ஆய்வுசெய்து முடிவுகள் எடுப்பார். அவற்றில் சில முடிவுகள் பெரிய வெற்றியைத் தரலாம். ஒரு சில முடிவுகள் சராசரியில் முடியலாம். சில முடிவுகள் பெரிய தோல்வியில் முடியலாம். வெற்றியையும்-தோல்வியையும் பார்த்து, இவர் செய்தது சரி-தவறென்று நீங்கள் முடிவு செய்தால், அது சரியாக இருக்குமா?

  • உங்களிடம் முடிவெடுக்கும் சமயத்தில் போதுமான தகவல் இருந்திருக்காது. அதனால் முடிவு தவறாகியிருக்கக் கூடும்;

  • அதிர்ஷ்டம் சார்ந்த விடயங்களில், நீங்கள் என்னதான் முடிவெடுத்தாலும், வெற்றி கணிக்கமுடியாத ஒன்றுதான் (பரிசுச்சீட்டு....)

  • சட்டதிட்ட மாற்றங்கள், அரசியல் நிலவரங்களால் உங்கள் முடிவுகள் தவறாகப் போகலாம். திடீரென்று நீங்கள் செய்யும் தொழிலுக்கு அரசாங்கம் தடை விதிக்கலாம் (ஏற்றுமதி தடை, இறக்குமதி தடை...). அதற்காக இத்தனை நாளாய் வெற்றிகரமாய் செய்துவந்த வியாபாரம் தவறான முடிவல்லவே!

  • ஒரு சில முடிவுகள் குறுகிய காலத்தில் எந்தவொரு பயனையும் தராது. நீண்டகால நோக்கில் பெரிய வெற்றிகளை கொடுக்கும். குறுகிய காலத்தில் அவற்றை எடைபோட்டு தவறான தென்றால், அது முட்டாள்தனம் தானே. 10 மாதங்கள் விளையும் கரும்பு சாகுபடியை 3-4 மாதத்தில் விளையும் நெல்லோடு ஒப்பிட்டு முடிவுசெய்வது சரியாகுமா?

  • நீங்கள் முடிவுகள் எடுத்து யதார்த்தத்தை சந்திப்பதில்தான் உங்கள் அனுபவம் மெறுகேறுகிறது. சில தவறுகள் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்கும். உங்கள் கற்றல் பயனத்தில் இந்த தவறுகள் தவிர்க்க முடியாதவை. இதற்காக நீங்கள் திறமையற்றவரென்று யாரும் முத்திரை குத்திவிட முடியாது.

தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல்

யாரும் சிகரத்தை அடைந்ததில்லை;

அதற்காக தவறு செய்தவர்கள் எல்லோரும் வென்றுவிடவும் இல்லை;


நிகழ்வுகளின் விளைவுகளைப் பொறுத்து

முடிவின் சரி-தவறை முடிவுசெய்யாதீர்கள்;

முடிவுகள் எடுக்கப்பட்ட சூழ்நிலை,

எடுக்கப்பட்ட விதம், கருத்தில் கொள்ளப்பட்ட அம்சங்கள் என்று

எல்லாவிடயங்களையும் பொறுத்தே

முடிவின் சரி-தவறுகளை அலச வேண்டும்;


விளைவுகளைக் கொண்டு தீர்மானிப்பவர்களைப்பற்றி

நீங்கள் அதிகம் நினைத்து வருந்தாதீர்கள்;

நீங்கள் தீர்கமாக யோசித்து செய்த முடிவு தவறாகியிருக்கலாம்!

அதற்காக நீங்கள் தவறானவரோ, திறமையில்லாதவரோ அல்ல!


ஓரிரு முறை இதர சூழ்நிலைகளால் தவறாகிப்போவது யதார்த்தம்!

அதை தவறாக கணக்கிடும் சில மூடர்களின்

தவறான யூகங்களை பொறுட்படுத்தாமல்

உங்கள் அறிவை முன்னிறுத்தி தொடர்ந்து முடிவுகளை எடுங்கள்!


- [ம.சு.கு 28.07.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page