“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-291
பழிக்குப்பழி தேவையா...?
பழிக்குப்பழி என்னும் குணம் யதார்த்தமாக எல்லோரிடமும் காணப்படும் குணம். ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால், உடனே அந்த குழந்தை அடிக்க முயற்சிக்கிறது. பலசமயங்களில் மண்ணில் விழுந்து புரளும் அளவிற்கு சண்டை செல்கிறது. இந்த அடிதடி விடயத்தில் சிறியவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பெரியவர்களும் அதேபோலத்தான் செய்கிறார்கள். என்ன வீதியில் உருளுவதில்லை. மற்றபடி அடிக்அடி, குச்சிக்குச்சி, கத்திக்குகத்தி, அரிவாளுக்கு அரிவாள், துப்பாக்கிக்கு துப்பாக்கி என்று ஏட்டிக்கு போட்டியாய், பழிவாங்கும் உணர்வோடு, செய்யக்கூடாத தவறுகளை செய்து சிறையில் உழல்கிறார்கள். ஏதோ தவறுதலாக ஒரு கொலை செய்துவிட்டு சிறையில் இருப்பவர்கள் பலரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலானர்கள் பழிக்குபழி வாங்கும் நோக்கில், அதீத கோபத்தினால் அந்த தவறை செய்துவிட்டதாக கூறுகின்றனர். அப்படி நீங்கள் பழிக்குப்பழியாக என்னென்ன கடந்த ஒருவருட காலத்தில் என்னென்ன செய்துள்ளீர்கள்?
வியாபாரத்தில், ஒரு நிறுவனம் புதிய பொருளை சந்தைப்படுத்தும் போது, அதற்கு போட்டியாக மற்ற நிறுவனத்தினர் அவர்களின் புதிய பொருட்களை விளம்பரப்படுத்துகின்றனர். பொருட்களின் அளவில் சந்தைப் போட்டியாக இருக்கும்வரை இதில் தவறேதுமில்லை. ஆனால், ஒருவர் பொருளை குறித்து மற்றொரு நிறுவனம் விமர்ச்த்தாலோ, அல்லது விளம்பரங்களில் தவறாக சித்தரித்தாலோ, உடனே பழிக்குபழி என மற்ற நிறுவனங்கள் அந்த முதல் நிறுவனத்தின் பொருளை, நிறுவனத்தை விமர்சிப்பதும், அதன் பாதகங்களை விளக்குவதுமாக சண்டை துவங்குகிறது. இது வெளிப்படையாக நடக்கும் பழிக்குப்பழி யுத்தம். இதைக்காட்டிலும், திறைமறைவில் நடக்கும் பழிவாங்கல்கள் தான், நிறுவனத்தை பாதிப்பதோடல்லாமல், வாடிக்கையாளர்களையும் பாதித்துவிடுகிறது. பழிவாங்கும் நோக்கில், பொருட்களில் விஷத்தை கலக்குகிற அளவிற்கு நிறுவனங்களும், தனிமனிதர்களும் வேலை செய்திருக்கிறார்கள்;
குழந்தை பருவத்தில் சிறிதாய் துவங்கும் இந்த பழிவாங்கும் குணம், பெற்றோர்களின் கவனிப்பு குறைவினால் படிப்படியாக வளர்ந்துவிடுகிறது. பல இடங்களில் இந்த பழிவாங்கும் குணத்தையே பெற்றோர்களிடம் இருந்துதான் பிள்ளைகள் கற்றுக் கொள்கிறார்கள். சக குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் பிணக்குகளுக்கு பழிவாங்குவதும், உறவுகளுக்கு மத்தியில் ஏற்படும் ஏமாற்றங்கள், துரோகங்களுக்கு பழிவாங்குவதுமாக நடக்கும் பழிக்குப்பழிகள், குழந்தைகள் மனதில் ஊறிப்போய் விடுகிறது. இந்த குணம் எதிர்மறையான ஒன்று. இந்த பழிவாங்கும் எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதை பற்றிக்கொண்டு எவ்வளவு தூரம் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்பதில் தான், உங்கள் அழிவு காத்திருக்கிறது. ஒருவனை அழிக்கவேண்டும் என்று பழிக்குப்பழியாய் நீண்ட காலம் துரத்தியவர்கள், அவர்களும் சீக்கிரத்தில் அழிந்துபோய்விட்டனர். அப்படி நீங்கள் யாரை, எதை நீண்டகாலமாக பழிவாங்க துரத்திக்கொண்டிருக்கிறீர்கள்?
வியாபார உலகில் போட்டி அதிகரித்துக்கொண்டே இருக்கும். அது நேர்மறையான சந்தைப்போட்டியாக இருக்கும்வரை, வாடிக்கையாளர்களுக்கு ஆதாயமாக அமையும். போட்டியினால், தரமான பொருட்கள், குறைவான விலைக்கு கிடைக்கும். ஆனால் போட்டி பொறாமைகளினால், ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை விமர்சித்தால், பழிக்குப்பழி படலங்கள் துவங்குகின்றன.
ஒரு கடைக்காரருக்கு, தன் பக்கத்துக் கடைக்காரருடன் சண்டை வந்துவிட்டது. ஆரம்பத்தில் வார்த்தை தகராறாக இருந்தது, பெரிய கைகலப்பு வரை சென்றது. கடைசியில் காவல் துறை உதவியுடன் நிலைமை அமைதி அடைந்தது. ஆனால் இருவரும் பதிவு செய்த வழக்குகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாய் நிலுவையில் இருக்கிறது. அதே சமயத்தில் இருவரும், மற்றவரை எப்படி துன்புறுத்தலாம், நஷ்டமேற்படுத்தலாம் என்று அனுதினமும் யோசித்து தங்கள் சிந்தனையையும், பொருளையும் வீணடிக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட பெரிய இழப்பு யாதெனில், இவர்கள் இருவரும் வளர்ச்சி இல்லாமல், இன்னும் சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அங்கு புதிதாய் கடை திறந்தவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிவிட்டனர்.
வியாபாரமோ, வேலையோ, உறவுகளோ, குடும்பமோ, களம் எதுவானாலும், இந்த பழிக்குப்பழி குணமானது எல்லாவகையிலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்;
ஒருவர் இன்னொருவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதும், தவறான வதந்திகளை பரப்புவதும், சிலபல மாந்திரீக செய்வினைகள் செய்வதுமாக நடக்கிறது;
வியாபாரத்தில் விலைகுறைப்பிற்கு விலைகுறைப்பு, இலவசத்திற்கு இலவசம் என்று நிறுவனங்களுக்கு இடேயே போட்டியாக துவங்கும் சில செயல்கள், சில சின்னச்சின்ன தவறுகளால் பழிக்குப்பழியாக உருவெடுத்து, ஒருவர் இன்னொருவரை அழிப்பதற்காக களத்தில் இறங்கி, கடைசியில் இருவருமே அழிவை சந்திக்க நேர்கிறது;
சகோதர-சகோதரிகளுக்கிடையே ஏற்படும் இந்த பழிவாங்கும் உணர்வு, சொத்துக் தகராறுகளாக பல பஞ்சாயத்துக்களை சந்தித்து, நீதிமன்ற வாசலில் காவல்காக்க வைக்கிறது;
தம்பதியர்களுக்கிடையே ஏற்படும் அகங்காரம் சார்ந்த இந்த பழிவாங்கும் குணம், சில சமயங்களில் தன் கணவன் / மனைவியை கொலைசெய்யும் வரை இழுத்துச் சென்றுள்ளது.
வியாபார உலகில் இந்த பழிக்குப்பழி உணர்வு, பெரிய தகராறுகளாகி, வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிக்கை இழக்கச் செய்யக்கூடும். இதில் நேரம் செலவிடுவது அதிகமானால், உற்பத்தி குறைந்து நஷ்டம் ஏற்படும். ஒரு நிறுவனத்தின் ஊழியரை இன்னொரு நிறுவனம் வேலைக்கு எடுப்பது, ஒரு நிறுவனத்தின் இரகசியங்களை இன்னொரு நிறுனம் திருடுவது, காப்புரிமை சண்டைகள், ஒருநிறுவனப் பொருளைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்புவது, தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி அரசு நடவடிக்கைகளுக்கு பரிந்துரைப்பது, என்று நிறைய வேலைகளை வெறிப்படையாகவும், திறைமறைவிலும் செய்து ஒருவரையொருவர் கீழே இழுத்துக்கொள்கின்றனர்.
இந்த பழிக்குப்பழி உணர்வை பற்றிக்கொண்டு பயனித்தால், ஒருநிறுவனத்தால் தன்னுடைய வளர்ச்சியில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். இந்த பழிவாங்கும் எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் வரும். ஆனால் அதை யார் பலமாக பற்றிக்கொண்டு பயனிக்கிறார்களோ, அவர்கள் அத்துடன் தங்கள் வீழ்ச்சிக்கான குழியையும் சேர்த்து பரித்துக் கொள்கிறார்கள் என்பது நிதர்சனம்.
உங்களின் வியாபார செயல்களை அலசுங்கள். ஏதேனும் செயல்கள், யாருக்கேனும் போட்டியாக செய்கிறீர்களா? அதனால் உங்களுக்கு நேரடிப் பயன் என்ன? என்பதை அலசிப்பாருங்கள். இன்னொருவரை வீழ்த்த செலவிடும் நேரமும், பணமும் நமக்கு எல்லாவகையிலும் வீண்தான். அதை நம் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால், கொஞ்சமாவது அதில் முன்னேற முடியும்;
உங்களுக்கு போட்டியாய் யார்வேண்டுமானாலும் வரலாம்
அந்த போட்டியை எதிர்கொண்டு மேலேறுபவர்கள் சாதிக்கிறார்கள்
போட்டியாளரை பழிதீர்க்க களம்காணுபவர்கள் முடிவில் வீழ்கிறார்கள்;
ஒருவன் உங்களை அவமதித்தான் என்பதற்காக
அவனை அதேவண்ணம் அவமதிக்க
நீங்கள் செய்யும் எல்லா நேரம் & பொருட் செலவும் வீண்தான்!
ஏட்டிக்கு போட்டியாய், பழிக்குப்பழியாக நீங்கள் செய்தவற்றில்,
எதிராளிக்கு நஷ்டமிருந்ததோ - இல்லையோ?
உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுள்ளதென்று அலசிப்பாருங்கள்!
பழிக்குப்பழியென்பது மனிதஇனம் தவிர்க்கவேண்டிய குணம்
ஆனால் அதை திவரமாகப் பற்றிக்கொண்டு
நீண்ட தூரம் பயனிப்பவர்கள்தான் இங்கு ஏராளம்!
அந்த மாயவலையில் நீங்களும் சிக்கினால்
உங்கள் வாழ்க்கையும், வியாபாரமும்
படிப்படியாக சிதைந்துகொண்டே போகும்;
- [ம.சு.கு 27.07.2023]
Comments