top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 290 - இது ஒன்றுமட்டுமே காரணமா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-290

இது ஒன்றுமட்டுமே காரணமா..?


  • 2008-ஆம் ஆண்டு, சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற “லீமேன் பிரதர்ஸ்” என்னும் நிறுவனம் திவால் நிலை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த பொருளாதார சரிவு துவங்கியது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பலர் இழப்பைச் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள சில வங்கிகளும் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டன. அதே சமயத்தில், உலகின் பல முன்னேறிய நாடுகளின் வங்கிகள், திவால் நிலையை தவிர்க்க, அரசாங்கத்திடம் அவசர நிதிஉதவியை நாடின. பல பொருளாதார மேதைகள் இந்த பொருளாதார சரிவிற்கான காரணமாக அமெரிக்க வங்கிகளின் பொறுப்பற்ற வீட்டுக் கடன் திட்டத்தை சாடினார்கள். ஆனால் அந்த வீட்டுக் கடன் மட்டுமே இந்த சரிவிற்கான ஒரே காரணமா?

  • ஒரு குழந்தை முந்தைய நாள் பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)சாப்பிட்டது. மறுநாள் சிறிதாக ஜலதோஷ அறிகுறிகள் தென்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் சளியும், ஜலதோஷமும் அதிகரித்து மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வீட்டில் எல்லோரும் அந்த குழந்தை பனிக்கூழ் தின்றதனால் ஏற்பட்டதென்று சொல்லி குழந்தையை அதட்டினர். குழந்தைக்கு அது பிடிக்கும் என்பதனால் சாப்பிட்டது. அன்றைய தினம் அந்த குடும்பத்தினர் அனைவரும் தான் அதே பனிக்கூழை சாப்பிட்டுள்ளனர். மற்றவர்கள் யாருக்கும் அவ்வளவாக சளிபிடிக்கவில்லை. குழந்தைக்கு மட்டும் சற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இப்போது அந்த பனிக்கூழை சாப்பிட்டதற்காக குழந்தையை திட்டுவத் நியாயமாக இருக்குமா?

அளவிற்கு அதிகமாக வீடுகளின் மேல் கடன் வழங்கப்பட்டதால், வீடுகளுக்கான தேவை செயற்கையாக அதிகரித்தது. அதனால், வீட்டின் விலை உயர்ந்தது. இந்த சக்கரம் சில ஆண்டுகள் நீடிக்கவே, வங்கிகளின் வீட்டுக் கடன் அளவு அதிகரித்திருந்தது. வீடுகளின் விலை உச்சத்தை தொட்டு வழக்கம்போல குறைய ஆரம்பித்தவுடன், கடன்கள் திரும்புவது குறைந்தது. ஒவ்வொரு கடன் கொடுத்த நிறுவனங்களும் அடுத்தடுத்து சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன. பொருளாதார வல்லுனர்கள் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு அமெரிக்க வங்கிகளை குற்றம்சாட்டின. அது முற்றிலும் உண்மையா என்றால்? ஆயிரம் சின்ன-பெரிய காரணிகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான். அதை மட்டும் பெரிதுபடுத்தி வீட்டுக்கடனை குறைத்தால், இப்படியான மந்தநிலை வராதா? என்றால், அதற்கு எந்த வகையிலும் உறுதி கூற முடியாது.


முதலாளித்துவ பொருளாதார உலகில், மக்கள் இலாபத்திற்காக உற்பத்தியை பெருக்குவதும், போட்டிக்காக விலையை குறைப்பதுமாக எண்ணற்ற வியாபார விளையாட்டுகளில் ஈடுபடும்போது, வளர்ச்சியும், வீழ்ச்சியும் அடுத்தடுத்த தவிர்க்க முடியாத சந்தை நிதர்சனங்கள். சந்தையின் இந்த மாற்றத்தில் உங்கள் வியாபாரம் பெரிதாக பாதிக்கப் படாமலிருக்க வேண்டுமானால், பொருளாதார மாற்றங்கள், சரிவுகளுக்கான எல்லா வகையான காரணிகளையும் அறிந்து, அதற்கேற்ப உங்கள் வியாபாரத்தில் போதுமான பாதுகாப்பு முறைமைகள், மூலதன வைப்புக்களை செய்து தற்காத்துக் கொண்டால், வியாபாரக் கடலில் நீந்திக் கறையேறலாம்.


பனிக்கூழ் சாப்பிடுவதால் மட்டும் யாருக்கும் ஜலதோஷம் ஏற்பட்டுவிடாது. அதுவும் ஒருவகையான உணவுப் பொருள்தான். அளவாக சாப்பிட்டால், எதுவும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேசமயம், உங்கள் உடலின் தற்போதைய நிலை, வேறென்னென்ன சாப்பிட்டுள்ளீர்கள் என்ற பல விடயங்களைப் பொறுத்து சளி, ஜலதோஷம் போன்றவை வருகின்றன. எல்லா காரணங்களையும் பார்க்காமல், வெறும் பனிக்கூழை மட்டும் காரணமாக சொல்வதில் பயனில்லை. ஏனெனில் அவ்வாறு பனிக்கூழ் சாப்பிடாத நேரங்களிலும் சளி பிடித்திருக்கிறது. மேலும், ஒருவேளை பனிக்கூழ் குழந்தைக்க ஒத்துவராது என்று உங்களுக்கு தெரிந்தால், முதற்கண் நீங்கள் ஏன் குழந்தையை அந்த கடைக்கு அழைத்துச் சென்றீர்கள்? உங்களுக்க சாப்பிட ஆசையிருந்தால், குழந்தை இல்லாத போது செல்லவேண்டியதுதானே!! இப்போது, குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்ததற்கு யார் மூலகாரணம்?


இப்படித்தான், எல்லா நிகழ்வுகளுக்கும் நிறைய காரணங்கள் இருக்கும். ஆனால் பிரதானமான ஒரு காரணத்தை, அதுவும் நம் மீது யாரும் தவறு சொல்லிவிடாத படியான காரணத்தை கையிலெடுத்து, அது ஒன்றே காரணமென்று பேசிக்கொண்டிருப்பார்கள். முதற்கண் எதற்காக பனிக்கூழ் கடைக்கு சென்றீர்கள் என்று பெற்றோரைக் கேட்டால் திணறுவார்கள். அந்த இக்கட்டான கேள்வியைத் தவிர்க்க, வெறுமனே பனிக்கூழ் சாப்பிடாதே என்று சொன்னால் பிள்ளை கேட்பதில்லை என்று ஒரு காரணத்தை சொல்லி, அடுத்தவர் மீதான ஒரு காரணத்தை பெரிதுபடுத்தி தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். இப்படி ஒரு காரணத்தின் பின்னால் சென்று தவறுகளை திருத்துவதாக செய்யும் முயற்சிகள் முழுமையான பலன் தருவதில்லை. குழந்தை உண்ணும் உணவுப்பழக்கத்தை சரி செய்ய வேண்டுமானால், அதை அந்த குழந்தையிடம் மட்டும் அறிவுருத்துவதோடு நின்றுவிட்டால் பயனேதுமில்லை. பெற்றோர்களும் அதற்கேற்ற சூழ்நிலையை வீட்டில் அமைக்க வேண்டும். வெளியில் சென்றால், குழந்தை முன்னிலையில் அவற்றை சாப்பிடுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அப்படியாக எல்லா காரணிகளையும் சரி செய்தால், குழந்தைகளுக்கு சரியான பழக்கத்தை எளிதாக மனதில் பதியவைக்கமுடியும்.


அன்றாட வாழ்விழும், வியாபார விடயங்களிலும், பல சிக்கல்கள் மீண்டும் மீண்டும் வருதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்றால்?

  • பிரச்சனைக்கான எல்லா காரண-காரணிகளையும் பட்டியலிட்டு சரிசெய்ய முயற்சிக்காமல், ஏதோ ஒரு முக்கிய காரணியை மட்டும் பற்றிக்கொண்டு முயற்சிப்பதால், அந்த சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது;

  • பிரச்சனைக்கான முக்கிய காரணம் நீங்களாக இருக்கக்கூடும். ஆனால் உங்கள் மீதான குற்றச்சாட்டை தவிர்க்க மற்றவர் மீதான ஒரு சிறு தவறை பெரிதாக்கி, உங்கள் தற்காத்துக் கொள்ள முயிற்சிக்கும் போது, அந்த பிரச்சனை மீண்டும் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது;

  • பிரச்சனைகளுக்கான காரணத்தை அலசும்போது, நீங்கள் அனுமானிக்கும் காரணத்திற்கான சில சாட்சிகள் கிடைத்தால், உடனே அதுதான் காரணமென்று முடிவுசெய்து, மேற்கொண்டு ஆழமாக கவனிக்கத்தவறுவதும் உண்டு. உங்கள் அனுமானத்திற்கு பொருத்தமான சாட்சிகளை மட்டும் தேடினால், பிரச்சனைகளின் உண்மைக் காரணிகள் கவனிக்கப்படாமலே போகக்கூடும்;

  • பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து தவறான அனுமானங்களை பலர் ஏற்படுத்திக்கொண்டு, அவற்றை சரிசெய்ய முயற்சிப்பதில் பயனேதும் ஏற்படுவதில்லை. (உத; உங்கள் பகுதியில் வழக்கமாக ஏற்பட்ட மின்சார பாதிப்பினால் குறிப்பிட்ட முக்கியவேலையை முடிக்கவில்லை. அதற்காக மின்சார வெட்டை மட்டும் காரணம் சொல்வதில் பயனென்ன. மின்சார வெட்டு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தும், எந்த வித முன்னேற்பாடுமின்றி முக்கிய வேலைகளை கடைசி நாள்வரை தள்ளிப்போட்டால், சிக்கல்கள் வரத்தான் செய்யும்.)

இப்படி ஓருர காரணங்களை மட்டும் பேசி சரிசெய்துவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனை சுழற்சியில் சிக்கிகொள்ளாமலிருக்க என்ன செய்யலாம?

  • முதலில், ஏற்பட்டுள்ள சிக்கலுக்கான எல்லா காரணிகளையும் (நேரடி & மறைமுக காரிணிகள், காரணகர்த்தாக்கள், விளைவுகள்) பட்டியலிடுங்கள்;

  • உங்கள் அனுமானத்தை ஓரமாக வைத்துவிட்டு, எல்லா காரணிகளையும் முழுமையாக பரிசோதியுங்கள். ஒரு நபரின் தனிப்பட்ட அனுமானங்கள் தவறான முடிவுகளை கொடுக்கக்கூடும்;

  • இதுதான் காரணமென்று நன்கு தெரிந்தாலும், அதற்கான அடுத்த மூலாதாரத்தையும் தேடி சரிசெய்தால், பிரச்சனைகளை நிரந்தரமாக வேரறுக்க முடியும்;

  • உங்கள் அனுமானங்களை தாண்டி, அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட மற்றவர்களின் கருத்துக்களையும் தெளிவாக கேளுங்கள். கண்ணோட்டங்கள் மாறுபடும்போது, பிரச்சனைகளின் காரணிகளும் வெவ்வேறாக தெரிய நேரிடலாம்; தேவைப்பட்டால் நிபுணர்களிடம் ஆலோசனை கேளுங்கள்;

  • ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று எல்லா கேள்விகளுக்காம், குறைந்தது 5-6 விடைகளை அலசுங்கள்!

உங்களைச் சுற்றி ஆக்கலும்-ஆழிக்கலுமாக

எண்ணற்ற நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது;

எல்லாவற்றிற்கும் ஆயிரம் காரணங்கள் உண்டு!

மேலோட்டமாக தெரிந்த ஒன்றைமட்டும் பற்றிக்கொண்டு

உங்களுக்கு வசதிப்பட்ட ஓரிர காரணங்களை மட்டும் பற்றிக்கொண்டு

உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!


ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எவ்வாறு?

என்று எல்லாவற்றிற்குமான மூலாதாரத்தையும் கண்டு சரிசெய்யுங்கள்

உங்களால் சிக்கல்களின் உள்ளூர பயனித்து வேரை தாக்கமுடிந்தால்

அவை மீண்டும் நிகழாமல் தவிர்க்கலாம்;


மூலாதாரத்தை சரிசெய்ய, அதன் சம்பந்தப்பட்ட

எல்லாவற்றையும் அறிந்து சரிசெய்யவேண்டியது அவசியம்;

அதற்கு, சம்பந்தப்பட்ட காரணிகள் என்வெல்லாமென்று

முழுமையாக பட்டியலிட்டால்தானே முடியும்;

உங்கள் அனுமானத்தில் தெரிந்த ஒன்றே மட்டுமே பற்றிக்கொண்டிருந்தால்

முழுமையாக பட்டியலிடுவது எப்படி சாத்தியமாகும்?


- [ம.சு.கு 26.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page