“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-289
கூட்டு முயற்சியில் போலித்தனம்...?
எல்லா பள்ளிகளிலும் காலையில் வகுப்பு துவங்குவதற்கு முன் சிறியதாக ஒரு கூட்டுபிரார்த்தனை நடக்கும். மாணவர்கள் பள்ளிக்கான ஒரு பிரார்த்தனை பாடலையும், தேசிய கீதத்தையும் கூட்டாக பாடுவார்கள். உங்கள் பள்ளிப் பருவத்தல் நீங்களும் பாடியிருப்பீர்கள், நானும் பாடியிருக்கிறேன். இதை பாடுகின்ற மாணவர்களில் எத்தனை பேர், சரியாக பாடுகிறார்கள்? எத்தனை தவறுகள் நடக்கிறது? இதற்கென்று எதுவும் புள்ளிவிவரம் வெளியிடப்படவில்லை. அதே சமயம், என்னுடைய அனுமானத்தில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர், இந்த கூட்டாக பாடுதலில் ஏதாவதொரு சிறு சொதப்பலை அன்றாடம் செய்கிறார்கள். அதை அவர்கள் சத்தமாக செய்யாத வரை, சரியாக பாடும் சிலரின் சத்தங்கள் இந்த சொதப்பல்களை மட்டுப்படுத்தி விடுகிறது. உங்கள் அனுபவத்தை யோசித்துப் பாருங்கள்?
ஊர்த்திருவிழாவில் கயிறிழுக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. அதற்கான இருஅணிகள் பிரிக்கப்பட்ட போது, அங்கு மிககுண்டாகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் இருந்த இரண்டு நபர்களை, அவர்களின் அணியில் சேர்த்துக்கொள்ள அதிக பிரயத்தனம் செய்தனர். அந்த இருவரும் ஒரே அணியில் சேர்க்கப்பட்டனர். அணிக்கு 20 நபர்கள் வீதம் போட்டி துவங்கியது. ஒரு அணியில் பலம் வாய்ந்த ஆஜானுபாகுவான இருவரோடு மீதம் சராசரியானவர்கள் 18 பேர் இருந்தனர். இன்னொரு அணியில் 20 பேரும் சராசரியானவர்கள். அந்த இரண்டு நபர்கள் தங்களின் முயற்சியில் கட்டாயம் வென்றுவிடலாம் என்று அதிக பலத்தோடு இழுத்தனர். ஆனால் அவர்கள் அணியில் இருந்த மீதி 18 பேரும், இந்த பலசாலிகள் இருக்கும் தைரியத்தில், அவ்வளவாக பலம் கொண்டிழுக்கவில்லை. அதேசமயம், எதிரணியில் இருந்த 20 பேரும், தங்கள் அணியில் பலசாலிகள் இல்லாததால், எல்லோரும் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்துகொண்டு தங்களின் முழுபலத்தையும் காண்பித்தார்கள். இதில் வெற்றி யாருக்கு கிடைத்திருக்கும்?
பள்ளியிலும், வெளியிடங்களிலும் நடக்கும் கூட்டு பிரார்தனைகளில், சிலர் சொதப்புவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் அதை சத்தமாக செய்யாதவரை, அந்த கூட்டு முயற்சியை அது பாதிப்பதில்லை. ஒருவேலை நான்கைந்து பேர் சத்தமாக, தவறாக பாடினால், அந்த கூட்டுப் பிரார்த்தனைப்பாடல் முற்றிலும் சீர்குலைந்துவிடும். அதேசமயம், 100 பேர் பாடுகின்ற இடத்தில், குறைந்தது 10-15 நபர்கள் வாயைக்கூட அசைக்காமல் நின்றுகொண்டிருப்பார்கள். இன்னும் 5-10 பேர் சத்தமே வராமல் வாயசைப்பார்கள். 50%-க்கும் குறைவானவர்கள் மட்டுமே மிகுந்த ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருப்பார்கள். கூட்டாக செய்யும் எல்லா இடத்திலும், காணப்படும் பொதுவான “சமூக சோம்பல்” இது.
கயிறிழுக்கும் போட்டியில், இரண்டு பலசாலிகளைக் கொண்ட அணியினர், அவர்களின் பலமே போதும், வென்று விடலாம் என்ற யோசனையில், ஏனையவர்கள் தங்களின் பங்களிப்பில் பெரிதாய் கவனம் செலுத்தவில்லை. அவர்களில் 4-5 பேர் கயிறை வெறுமனே பிடித்துக் கொண்டு கயிறிழுப்பது போல பாசாங்கு செய்தார்கள். அதேசமயம், எதிரணியினர், தங்கள் அணியில் தனிப்பட்ட பலசாலிகள் யாருமில்லை, எல்லோருடைய பங்களிப்பும் அதிமுக்கியம் என்பதை புரிந்து, எல்லோரும் தங்களின் முழுபலத்தையும் கொண்டு முயற்சித்தார்கள். என்னதான் பலசாலிகள் இருந்தாலும், கூட்டுமுயற்சியில், பல சோம்பேறிகள் இருந்தால், அவர்களின் கூட்டுபலம் குறையத்தான் செய்யும். அதனால், பலசாலிகள் கொண்ட அணி தோல்வியுற நேர்ந்தது. இப்படித்தான் பல திட்ட செயல்பாடுகள், அணியின் செயல்பாடுகள் வென்றிருக்க வேண்டிய இடத்தில் தோல்வியுற்றிருக்கின்றனர்.
கூட்டு முயற்சியில் தனிமனித செயல்பாடுகள் பொதுவாக எப்படி இருக்கிறது என்று நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இப்படி வந்தது;
தனி நபர் வேலையை செய்யும் போது 100% முழுத்திறனையும் பயன்படுத்துகிறார்
அதேபணியை இருவர் சேர்ந்து செய்யும் போது, தனிநபரின் திறன்கள் 93%மாக குறைந்துவிடுகிறது
அதையே மூன்று நபர்களாக சேர்ந்து செய்யும்போது, அவர்களின் தனித்திறன் பங்களிப்பு 85% சதவிகிதமாகிவிடுகிறது.
அந்தக்குழு 50-100 நபர்கள் என்று போகும்போது, தனிநபர் பங்களிப்புகள் 0% - 99% வரை நபருக்கு நபர் வேறுபட்டு, சராசரியாக 50%-மாகவும் இருக்கிறது.
இப்படி கூட்டுமுயற்சியில், தனிநபரின் பங்களிப்பு குறைவதை “சமூக சோம்பல்” என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சமூக சோம்பல், உங்கள் குழுவின் உற்பத்தியை எந்தளவிற்கு பாதிக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?
தனிநபர்களின் உற்பத்தித்திறன் எவ்வளவென்று கண்டுபிடிக்க முடியாத இடத்தில், இந்த சோம்பல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது;
குழுவில் ஒரு திறமையானவர் எவ்வளவுதான் பங்களிப்பு அளித்தாலும், அவரது திறமை அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்றால், அவர்களின் உத்வேகம் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது;
குழுவின் சக உறுப்பினர்கள் வேலை சரியாக செய்யாதபோது, எதற்காக தான்மட்டும் கடுமையாக உழைக்கவேண்டுமென்று யோசித்து பங்களிப்பை குறைத்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது;
தனிநபராக குறிப்பிட்ட முடிவிற்கு பொறுப்பாளியாக இருக்கும் போது எடுக்கின்ற முடிவிற்கும், கூட்டாக எல்லோருடனும் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. கூட்டு முடிவில், தோல்வியுற்றால், அது அவர்களை தனிப்பட்ட முறையில் பாதிக்காது என்பதால், சில முட்டாள்தனமான முடிவுகளுக்கும் துணைபோகி விடுகிறார்கள்;
எண்ணற்ற பெரிய திட்டச் செயல்பாடுகள் தாமதம் அடைவதற்கான காரணங்களில் இந்த சமூக சோம்பலும் முக்கியமான ஒன்று. உங்கள் நிறுவனத்தில், நீங்கள் அமைத்துள்ள குழுக்களில், இந்த சமூக சோம்பல் எந்தளவிற்கு குடிகொண்டுள்ளது என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். இந்த சமூக சோம்பலால், 10 பேர் செய்ய வேண்டிய வேலையை 15 பேர் சேர்ந்து செய்துகொண்டிருப்பார்கள். உங்கள் உற்பத்திச் செலவு தேவையில்லாமல் அதிகரித்திருக்கும். திறமையானவர்களின் உழைப்பை, சில சோம்பேறிகள் பகிர்ந்து கொண்டிருந்தால், அந்த திறமையானவர்கள் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வேறு இடங்களுக்கு செல்லக்கூடும்;
உங்கள் கூட்டு முயற்சி திட்ட செயல்பாடுகளின் வெற்றிபெற, எல்லா கட்டத்திலும்
தனிநபர்களின் பங்களிப்பு அளவிடக்கூடியதாக அமைக்க முயற்சி செய்யுங்கள்;
தனிநபர்களின் பங்களிப்பை மேலாளர்கள் கவனிக்கிறார் என்ற விடயம் குழுவிற்கு தெரிந்திருக்கட்டும்;
கூட்டு முயற்சிக்கு, தனிநபர் பங்களிப்பிற்கும் உரிய அங்கீகாரத்தையும், சன்மானங்களையும் அவ்வப்போது வழங்குங்கள்;
ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்யும்போது
சோம்பேறிகளின் பாசாங்கு உற்பத்தியை வெகுவாக குறைக்கும்;
அந்த சோம்பேறிகளை இணங்கண்டு களையாவிட்டால்
உங்கள் உற்பத்திச் செலவும், நேரமும் தொடர்ந்து அதிகரிக்கும்;
“சமூக சோம்பல்” என்பது
கூட்டுமுயற்சியில் நிலவும் பாதகமான சூழ்நிலை;
இதை கவனத்தோடு கையாளும் தலைவர்கள் வெல்கிறார்கள்!
கவனிக்காத குழுத்தலைவர்கள், தோல்வியுறுகிறார்கள்!
கூட்டு முயற்சியில் உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கிறது?
உங்களோடு இருக்கும் மற்றவர்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது?
இரண்டு கேள்விக்குமான பதிலை ஆய்வு செய்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!
- [ம.சு.கு 25.07.2023]
Comments