“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-287
பெரிதுபடுத்தப்படும் பிரச்சனைகள்!
பொதுவாக ஒரு ஆணோ, பெண்ணோ திருமணமாவதற்கு முன்வரை, அவர்களின் தாய்-தந்தையர், உடன் பிறப்புக்கள், உறவுகள் ஏதாவது தவறு செய்தால் பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. அதனால் பொருளிழப்பே ஏற்பட்டிருந்தாலும், ஒருமுறை பேசிவிட்டு அதை கடந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால் அதே நபர், திருமணமாகி மனைவி/கணவன் வந்தபின், படிப்படியாய் பெற்றோருடன், உடன்பிறப்புகளுடன், உறவுகளுடன் ஏற்படும் சிறிய உரசல்கள் பெரிதாக தெரிகிறது. உத; உங்கள் திருமணத்திற்கு முன் அக்காள் வீட்டிற்கு செல்லும்போது, அவரது கணவர் உங்களை பெரிதாய் வரவேற்கவில்லை. அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். ஆனால், திருமணமான பின், உங்கள் மனைவியுடன் செல்லும்போதும் வரவேற்கவில்லை என்றால், நீங்கள் பொருட்படுத்தாவிட்டாலும், உங்கள் மனைவி சும்மாவிடுவாரா? பிரச்சனை ஒன்றுதான். அக்காள் கணவர் யாரையும் பெரிதாய் வரவேற்பதில்லை. ஆனால், இருவேறு சூழ்நிலைகளில் ஏன் இருவேறுவிதமாக புரிந்துகொள்ளப் படுகிறது?
அனுதினமும் நிறைய கொலை, கொள்ளை நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டே இருக்கிறது. பல இடங்களில் செல்வாக்குடையவர்கள் அவற்றை பெரிதுபடுத்த விடாமல், சமரசமாகவோ, மிரட்டியோ அந்த பிரச்சனைகளை அடக்கிவிடுகின்றனர். அப்படி ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஒருபுறம் மூடிமறைக்கப்பட்டுக்கொண்டு வந்தாலும், ஏதாவதொரு நிகழ்வு பத்திரிக்கைகளின் வாயிலாகவோ, சமூக வளைதளங்களின் வாயிலாகவோ வெளிச்சத்திற்கு வரும்போது, அதன் தீவிரம் புரிந்துகொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு சார்ந்த பெரிய பிரச்சனைகள் பல, சாதாரணமாக கருதப்பட்டு ஒடுக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றபோது, ஆங்காங்கே யாராவதொருவர் அதை வெளியுலகிற்கு தெளிவாக எடுத்துரைக்கும்போதுதான், அநீதகள் வெளிச்சத்திற்கு வந்து நியாயம் நிலைநாட்டப்படுகிறது. அந்த அநீதி ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டபோது, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், சமூகவளைதளங்களில் பரவி தலைமையில் இருப்பவர் கேள்விகேட்கும்போது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? அப்படி பெரிதுபடுத்தப்படவில்லை எனில், பிரச்சனைகளின் முக்கியத்துவமும், அபாயமும் குறைந்துவிடப்போகிறதா?
நீங்கள் மட்டும் தனியாக இருந்தவரை, உங்கள் அக்காள் கணவர் உங்களை வரவேற்பது குறித்து நீங்கள் பெரிதாய் ஒன்றும் யோசிக்கவில்லை, ஏனெனில், நீங்கள் அக்காவை பெரிதாய் கருதியிருப்பீர்கள். ஆனால் உங்கள் மனைவிக்கு அக்காளும், அக்காள் கணவரும் ஒன்றுதான். யார் முகம்மலர்ந்து வரவேற்கவில்லை என்றாலும், அதை பெரிய கௌரவக் குறைவாகவும், பிரச்சனையாகவும் கருதுவார். ஒன்றிரண்டு முறை அவர் அதை உங்களிடம் சொல்லும்போது, நீங்கள் அவர்தரப்பு நியாயத்தை உணர்ந்து பிரச்சனையாக கருதத் துவங்குவீர்கள்; ஒருசமயத்தில் சாதாரணமாய் கடந்து சென்றது, இன்று பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். இதுபோன்று உங்கள் ஊரில், உங்கள் உறவுகள் மத்தியில் இப்படியான பிரச்சனைகள் எத்தனை பெரிதாகியுள்ளன என்று யோசித்துப்பாருங்கள்.
ஆள்பவர்களும், ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களும் இப்படி பல அநியாயங்களை மூடிமறைப்பது வழக்கமான ஒன்றென்று நமக்குத் தெரியும். அவை யாராவதொருவரால் பெரிதுபடுத்தப்படும்போது, அவற்றை முக்கிய வழக்காக எடுத்து நியாயத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். ஏன் இந்த பாரபட்சமான முறைமை? ஏழைகளுக்கு நீதி அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடாதா? என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் எதை பெரிதாக்க வேண்டும், எதை கவனிக்காமல் கடந்துபோகச் செய்ய வேண்டுமென்று ஒரு கூட்டம் கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கும். இதுதான் அரசியல் யதார்த்தம்.
இந்த யதார்த்தம் எப்படி உங்கள் வியாபாரத்திற்கும், பணிக்கும், குடும்பத்திற்கும் பொருந்திவருமென்று யோசியுங்கள்!!
வியாபாரம் & பணியில்
அலுவலகத்தில் சின்னச்சின்ன வதந்திகள் சில, ஊழியர் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு, மற்ற ஊழியர்களின் நம்பிக்கையை சிதைத்திருக்கிறது;
ஒரு துறையினர் செய்த சிறுதவற்றை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்களை அழைத்து சரிசெய்து விடலாம். ஆனால் மற்றவர்களின் சிறு தவற்றை பெரிதாக்கி, முதலாளியிடம் அவர்களைப்பற்றி தவறாக சொல்லுவார்கள்;
வாடிக்கையாளர்கள், பொருட்களில் இருந்த குறைகளை தெரிவிக்கும்போது உரிய பதிலளிக்காமல் வாடிக்கையாளரை அழைக்கழித்தாள், சிலசமயம், ஆந்த வாடிக்கையாளர் அந்த பிரச்சனையை சமூகவளைதளத்தில் ஊதிப்பெரிதாக்கி நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுத்துவிடுவார்;
குடும்பவாழ்வில்
ஒருகுறிப்பிட்ட வேலையை கணவன் மனைவிக்கிடையே யார்செய்வதென்ற வாக்குவாதத்தில் துவங்கும் சிலபல பிரச்சனைகள், அவர்களின் ஆணவத்தினால் பெரிதாக்கப்பட்டு பிரிவினை வரை சென்றுவிடுகிறது;
சின்னச்சின்ன பொருள் நெருக்கடிகள் அன்றாட வாழ்வில் வந்துபோவது இயல்பு. அந்த சமயத்தில் கணவன் மனைவிக்கிடைய யார் செலவை, எந்த செலவை குறைப்பதென்று வாதங்கள் முத்தும்;
வெளியே செல்லும்போது, சீக்கிரமாக கிளம்ப வேண்டும். ஆனால், நேரத்தை பொருட்படுத்தாமல், இருவரும் தாமதித்துவிட்டு ஒருவரையொருவர் குறைகூறுவது வழக்கமான ஒன்று. ஆனால் சில சமயங்களில் அந்த குறைகள் பெரிதாக மற்றவர்களிடம் சொல்லப்பட்டு இருவருக்குமான புரிந்துணர்வு பாதிக்கப்படுகிறது;
இங்கு பிரச்சனைகள் ஏராளம். அதேபோல அவற்றிற்கான தீர்வுகளும் ஏராளம். பிரச்சனையில் ஆரம்பத்தில் அவற்றை சந்தித்து உரிய திருத்தங்ளை செய்தால், அவை வளராமல் தேய்ந்துபோகும். அதேசமயம் யார் எந்தப் பிரச்சனையை ஊதிப்பெரிதாக்குவார் என்று நம்மால் கணிக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும், எந்தப் பிரச்சனைவேண்டுமானாலும், தகவல் தொடர்பு சாதனங்ள் மூலம் வெளிப்பட்டு பெரிதாய் பேசப்படலாம். அந்த தகவல் தொடர்பைத் தாண்டி, உங்கள் திட்டமிடல் இருக்கவேண்டும்.
எதில் வேண்டுமானாலும், பிரச்சனைகள் பெரிதாக்கப்படலாம், எதுவேண்டுமானாலும் சிறிதென்று கவனிக்கப்படாமல் விடலாம் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு வியாபாரத்தையும், குடும்பத்தையும், உறவுகளையும் அரவணைப்பவர்கள், எல்லாவற்றிலும் படிப்படியாய் வெற்றிகாணுகிறார்கள்;
உலகில் ஊதிப் பெரிதுபடுத்தமுடியாதளவு
சிறிய பிரச்சனையென்று எதுவுமில்லை!
தொட்டாலும், பட்டாலும் பெரிதாக்கலாம்!
கொன்றாலும், தின்றாலும் சிறிதாக்கலாம்!
எல்லாம் நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்
உங்களைச் சார்ந்தவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்
என்பதைப் பொருத்தே தீர்மானமாகிறது!
- [ம.சு.கு 23.07.2023]
Commentaires