top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 286 - வேலையின் படிநிலைகளை திட்டமிடுங்கள்!"

Updated: Jul 23, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-286

வேலையின் படிநிலைகளை திட்டமிடுங்கள்!!


  • 5000 ஆண்டுகளுக்கு முன் இராமாயண காலத்தில் புஷ்பகவிமானம் இருந்ததாகவும், அதில் இராவணன் சீதையை பாரதத்தில் இருந்து கடல்கடந்து இலங்கைக்கு தூக்கிச் சென்றதாகவும் கதை படித்திருக்கிறோம். அந்த புஷ்பகவிமானம் அன்றைய காலகட்டத்தில் எப்படி? என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நீண்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அந்த கற்பனை விமானம் படிப்படியாய் சாத்தியமாகிவிட்டது. பல நூற்றாண்டு கண்டுபிடிப்புகளின் வாயிலாக இறுதியில் விமானமாக உருவானது. சக்கரத்தில் துவங்கி, மின்சாரம், சுழலும் மோட்டார், மின்கடத்திகள், திசை காட்டிகள், எடைகுறைவான உலோக கலவைகள், பொறி இயந்திரங்கள், உணரிகள் என்று படிப்படியாக முன்னேறிய விஞ்ஞான தொழில்நுட்பம், இன்று விமானமாகவும், செயற்கைக் கோள்களாகவும், கணிணியாகவும், செயற்கை நுண்ணறிவாகவும் உருவாகியுள்ளது. இவற்றில் எதுவும் ஓரிரவில் உருவாகிவிடவில்லை. படிப்படியாக பல்வேறு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நுட்பங்கள், ஒன்று சேர்ந்து இன்று பிரமிப்பை ஏற்படுத்தும் இராட்சத அளவில் வளர்ந்து நிற்கிறது.

  • பெரிய வீடுகட்டும் திட்டம் முடிவு செய்யப்பட்டு, ஒரு அனுபவம் வாய்ந்த பொறியாளரிடம் பணி ஒப்படைக்கப் படுகிறது. அப்போது அங்கிருந்த வீட்டு முதலாளியின் குழந்தை எப்படி வீடுகட்டுவீர்கள் என்று கேட்டது. அந்த பொறியாளர், கட்டிடம் கட்டும் வேலையை பலபகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிட்டு கட்டிமுடிப்போம் என்று சொல்கிறார். அப்படியானால் எனக்கு அலங்காரத்துடன் கூடிய வீட்டின் முன்பகுதியை காண ஆசையாய் இருக்கிறது, முதலில் அந்தப் பகுதியை முடித்து, அடுத்தடுத்த பின்பகுதிகளை செய்யுங்கள் என்று யதார்த்தமாக குழந்தை சொன்னது. குழந்தையின் ஆசைப்படி முன்பக்க சுவரைகட்டி அலங்கார வேலைகளை முடித்தபின், அஸ்திவாரம், பக்கவாட்டு சுவர், பின் சுவர் என்று வைத்துகட்டுவது சாத்தியப்படுமா? வெகுளித்தனமாய் குழந்தை கேட்பதில் தவறில்லை. ஆனால், அதேபானியில் பொறியாளர் யோசித்தால், நிலைமை என்னாவது?

கற்காலத்தில், பறவையைக் கண்டு பறக்க ஆசைப்பட்ட மனிதனுக்கு அது வெறும் கனவாகவே இருந்தது. ஏனெனில் அதற்கான தொழில்நுட்பம் அன்று வழியிருக்கவில்லை. ஆனால் அதேமனிதன் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிப்படியாக அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கினான். இன்று விமானத்தில் பறப்பதோடு மட்டுமல்லாமல், அண்டை கிரகங்களுக்கும் கலங்களை செலுத்திக் கொண்டிருக்கிறான். இதில் நீங்கள் கவனிக்கப்படவேண்டிய முக்கியவிடயம் “படிப்படியாக” என்ற முறைமை. இந்த முறைமை தெரியாமல், எண்ணற்றவர்கள் பறக்க முயற்சித்து மலையிலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கிறார்கள். அப்படி முட்டாள்தனமாக முயற்சி செய்ய நீங்கள் தயாரா?


நல்ல தரமான வீட்டைகட்ட வேண்டுமானால், இடத்தை தேர்வு செய்வது, அஸ்திவாரம், கட்டிடம், பூச்சு, மரவேலை என்று எண்ணற்ற படிநிலைகள் இருக்கின்றன. அவற்றிற்கான எல்லா திட்டங்களும் தயாராக இருந்தாலும், அஸ்திவாரம் கட்டாமல், சுற்றுச்சுவர் கட்ட செங்கல் இறக்குவதில் பயனில்லை. சுவர்களும், மேல் கூரையும் போடாமல் தளத்திற்கான பளிங்குக்கற்களை இறக்குவதில் பயனில்லை. பொருட்களை முன்கூட்டியே வாங்கினால் வைப்பதற்கு இடமில்லாமலும், சேதமடைந்தும் திண்டாட வேண்டியதுதான்.


எந்த செயலுக்கு பின்னால், எது செய்யவேண்டும், எவைற்றையெல்லாம் ஒருசேர செய்யவேண்டும், எதற்கு, எது அடிப்படை தேவை என்று எல்லாவற்றின் படிநிலைகளை புரிந்து, அதன்படி செயல்பட்டால், வழிநடத்தினால், எல்லா செயல்களும் கட்டாயம் சாத்தியப்படும்!

  • செய்து முடிக்க வேண்டிய பணியை, எந்த வரிசையில், எதற்கடுத்து எதை செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு படிநிலைகளை அறிந்து செய்யும்போது, வேலையில் குளறுபடிகள் முற்றிலுமாய் தவிர்க்கப்படுகிறது;

  • வேலைகளை பலருக்கு பகிர்ந்தளித்து, என்ன செய்யவேண்டுமென்று தெளிவாக புரியவைத்து செய்வது எளிதாகிறது;

  • எந்தெந்த வேலை எப்படி போகிறது, இப்போது திட்டம் எந்த நிலையில் இருக்கிறது, எதை வேகப்படுத்த வேண்டும், எதை சற்று தாமதிக்கலாம் என்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும்;

  • ஒவ்வொரு படிநிலை வேலைகளில், தேவைப்படும் ஆட்கள் குறைபாடு, நேரக் குறைபாடுகளை அறிந்து, தேவையான மாற்றங்களை செய்து, வேலையை குறித்தநேரத்தில் முடிக்க முடியும்;

  • ஒவ்வொரு படிநிலைகளில் வரக்கூடிய சிக்கல்களை அதனதன் அளவில் எளிதாக எதிர்கொண்டு சமாளிக்க ஏதுவாகிறது

எல்லா வேலைகளையும், அதன் படிநிலைகளை புரிந்து, அதற்கேற்ப மனிதவளத்தையும், நேரத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால், எல்லாமே அதற்குரிய நேரத்தில் வெற்றிகரமாக முடிகிறது. அந்த படிநிலைகளை புரிந்துகொள்ளாமல், முறைமை தவறி, சரியான வளங்களின் பங்கீடு இல்லாமல் செய்யப்படும் எல்லா வேலைகளும், பெரிய குழப்பத்தில் சிக்குண்டு, நீண்ட தாமதத்திற்கு பின்னர் வெற்றியிலோ, தோல்வியிலோ முடிகிறது.


இப்படி படிநிலைகளை முன்னரே வகுத்து, எல்லாவற்றையும் குதிரைக்கு கடிவாளம் இட்டதுபோல ஒரே போக்கில் செய்வதால், மக்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் பாதிக்கப் படுவதாகவும், திட்டமிடுதலில் நிறைய நேரம் வீணாவதாகவும், சிலபடிநிலை திட்டமிடலில் ஏற்படும் தவறுகள் நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதென்றும் சில கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இந்த எதிர்மறையான நிகழ்வுகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. பிறப்பு முதில் இறப்பு வரை, நீங்கள் எதைச் செய்தாலும், அதில் நேர்மறையோடு, ஏதேனுமொரு எதிர்மறை இருக்கத்தான் செய்யும். அதீத பாதிப்பை ஏற்படுத்தாத எதிர்மறைகளை பெரிதாய் எடுத்துக்கொண்டு முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யத் தவறினால், மனித இனம் வளர்ச்சிகாண்பது சாத்தியமற்றுப் போகும்.


சின்னச்சின்ன எதிர்மறைகளைத் தாண்டி, பெரிய சாதனைகளை படைக்க, என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுடம், அதன் படிநிலைகளை தெளிவாக வகுத்து, எல்லோரையும் இணைத்து, செயல்படுத்தி வெற்றி காண்பதில்தான், மனிதகுலத்தின் மிகப்பெரிய வெற்றிகள் அடங்கியிருக்கிறது;


இப்போது, நீங்கள் என்ன செயல் செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவற்றின் எந்த படிநிலையில் இருக்கிறீர்கள், எதற்கடுத்து எதை செய்யவேண்டுமென்ற தெளிவான திட்டமிடல் இருக்கிறதா என்று உங்களை பணிகளை இன்னொருமுறை மறுஆய்வு செய்துபாருங்கள்!!


நிறைய சாதிக்க வேண்டுமென்று ஆசையிருக்கலாம்!

ஆனால் ஒரே இரவில் சாதிக்க நினைப்பது முடுயுமா?


எதையும் சாதிக்க முடியும், அதற்கான படிநிலைகளை புரிந்து

அவற்றை ஒவ்வொன்றாக திட்டமிட்டு செயல்படுத்தினால்

எல்லா கனவுகளும் நிஜமாவது உறுதிதான் – ஏனெனில்

மனிதனின் கற்பனைக்கு எட்டுவதெல்லாம் சாதிக்கக்கூடியனவே!


அடித்தளம் கட்டாமல் முதல் தளம் சாத்தியமில்லை!

அஸ்திவாரம் இல்லாமல் அடித்தளம் நீடிப்பது சாத்தியமில்லை!

முதல்தளத்தின் தேவைதெரியாமல்

அஸ்திவாரத்தின் ஆழம் திட்டமிட முடிவதில்லை!


எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்ததுதான்;

எதற்கடுத்து எதுவென்று படிநிலைதெரிந்தால் மட்டுமே

தெரிந்தசெயலையும் உரிய நேரத்தில் செய்துமுடிக்க முடியும்!


- [ம.சு.கு 22.07.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page