“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-285
வெற்றிக்கு விளக்கம் தேவையில்லை!!
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநிலம் மற்றும் தேச அளவிலான தேர்தல்கள் நடக்கிறது. கிட்டத்தட்ட 10-100 நூறு கட்சிகள் இவற்றில் போட்டியிடுகின்றன. இறுதியில் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மற்ற கட்சிகள் சிலபல வெற்றிகளுடன் எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கும். பெரும்பாலான சிறிய கட்சிகள் கட்டிய காப்புத்தொகையையே இழந்திருக்கும். வென்றவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள். தோற்றவர்கள் எண்ணற்ற காரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பார்கள் – இயந்திரத்தில் கோளாறு, கள்ளவோட்டு அதிகம் போட்டுள்ளனர், அதிகமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது, என்று வென்றுள்ள கட்சியினரின் மீதான குற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மாநில அளவில் தோல்வியுற்ற அதேகட்சி, வெற்றி பெற்றுள்ள ஓரிரு இடங்களில் அந்த குறையை கூறுவதில்லை. ஏன் என்று கேட்டால், அங்கு தர்மம் வென்றுள்ளது என்பார்கள். ஒரே கட்சிக்குள் வென்றவர்களும், தோற்றவர்களும் கூறும் காரணங்களையும், சூழ்நிலைகளையும் கேட்டால், மிகமிக நகைச்சுவையாக இருக்கும்…. சீக்கிரத்தில் தேர்தல் வரப்போகிறது. எல்லாக் காரணங்களையும், நகைச்சுவைகளையும் கேட்க தயாராகிவிடுங்கள்!
இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறிதும்-பெரிதுமாக எண்ணற்ற திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு செய்துகொடுக்கிறது. அவற்றில் பல உரிய காலத்திற்குள் முடிக்கப்படும். ஒரு சில செயல் திட்டங்கள் தாமதமாகும். வெகுசில திட்டங்கள் தோற்றுப்போகும். வெற்றி பெறும் திட்டங்களை தலைமையேற்று நடத்திய மேலாளரை எல்லோரும் வாழ்த்துவார்கள். அவருக்கு பதவி உயர்வு, சன்மானமும் கிடைக்கும். கூட்டத்தினரின் மத்தியில் அவரது திட்ட அனுபவம், எப்படி சாதிக்கமுடிந்தது என்று கேட்டு பெருமைப்படுத்துவார்கள். அதே சமயம் தாமதமான திட்டங்கள், தோற்றும்போன திட்டங்களின் மேலாளர்களின் நிலைமை மிகவும் கடினம். தாமதத்திற்கான காரணத்தை நிர்வாகத்திற்கு தினம்தினம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். வேலை முடியும்வரை இதுதொடரும். செயல் திட்டம் தோற்றுவிட்டால், ஏன்? எப்படி? எதனால்? யாரால்? என்று நிறைய கேள்விகள் வரும்.சிலசமயம் அந்த மேலாளர் தோல்விக்கான காரணத்தை பெரிய அறிக்கையாகவே சமர்பிக்க நேரிடும். சிலருக்கு வேலை கூட போகக்கூடும். உங்கள் வேலையில், நீங்கள் வென்ற அனுபவத்தையும், தோற்ற அனுபவத்தையும் சற்று யோசித்துப்பாருங்கள்!
கட்சியின் தலைவர்கள், தேர்தல் நடக்கும் சமயத்தில், பல கோளாறுகள் / தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கட்சி வெற்றி பெற்று விட்டால், அவர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை மறந்துவிடுவார்கள். ஒருவேளை கட்சி தோற்றால், தாங்கள் முன்னர் சுட்டிக்காட்டிய வெற்றியாளர்களின் அநீதியான செயல்களால் தான் தோற்றோம் என்று ஒரு சப்பைகட்டு கட்டுவார்கள். ஒருவேளை தோற்றால் என்ன காரணம் சொல்லலாம் என்று முன்கூட்டியே யோசித்து கூறிவைப்பது அரசியல்வாதிகளின் வழக்கம்.
தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் உரிய நேரத்தில் முடிக்கும் போது, அதில் திட்டமிட்டபடி இலாபம் ஈட்டுகிறது. அதேசமயம், தாமதமானாலோ, தோல்வியுற்றாலோ பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். திட்டம் வெற்றிகரமாக முடியும் போது, கிடைத்த இலாபத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதேசமயம், நஷ்டம் ஏற்பட்டால், எவ்வளவு நஷ்டம், ஏன்? எப்படி? என்று ஆயிரமாயிரம் கேள்விகளுடன் திட்டமேலாளரை தொலைத்தெடுத்து விடுவார்கள். மேலாளர் உட்பட யாரையெல்லாம் பணிநீக்கம் செய்யலாம் என்றும் அலசப்படும். அப்படியான பணி நீக்கத்தை தவிர்க்க, எல்லோரும் அவர்கள் தரப்பு நியாயம் என்று பெரிய விளக்கப்பட்டியலை கொடுப்பார்கள்.
தோற்பவர்கள், தங்களையும், தங்கள் திறமையையும், தங்கள் கௌரவத்தையும் நிலைநாட்ட, தங்கள் தரப்பில் தவறில்லை என்று நிறைய விளக்கமளிப்பது மனித இனத்தின் வழக்கமானவொன்று; இது உளவியல் சார்ந்த விடயமும் கூட.. ஏன் தோற்பவர்கள் அதிக விளக்கமளிக்க நேர்கிறது?
தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள, தாங்கள் கடுமையாக முயன்றதாகவும், சூழ்நிலைகளால் தோற்றோம் என்று காரணம் சொல்வார்கள்;
தான் கடினமாக முயற்சித்தும், மற்றவர்களின் தவறுகளால் / கவனக்குறைவினால் தோற்றோம் என்று பிறர்மீது குற்றம் சுமத்தும்வகையிலும் காரணங்கள் வரும்;
தங்களுக்கு போதுமான நேரம் அளிக்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்தால், தாங்கள் சிறப்பாக தயாராகி வென்றிருப்போம் என்றும் காரணங்கள் வரும்;
நடுவர்கள் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை, அதனால் தோல்வியை தழுவ நேரிட்டதென்று குறைகளும் வரும்;
எல்லா காரணங்களையும் தாண்டி, கடைசியாக தங்களுக்கு அன்றைய தினம் அதிர்ஷ்டம் இல்லை, விதி வசத்தால் தோற்றோம் என்ற காரணங்களும் சொல்லப்படும்
தோற்ற அணியின் மீது அதிருப்தியும், நிறைய குறைகளும், தவறுகளும் சுட்டிக்காட்டப்படும்போது, அவற்றிற்கான விளக்கங்களை அவர்கள் பெரிதாய் சொல்ல நேரிடும்; தன்னை திறமையற்றவன் என்று உலகம் முத்திரைக்குத்தி விடக்கூடாது என்பதற்காக, தான் சரியாக செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டு, எங்கு தவறு நேர்ந்தது, யாரால் நேர்ந்தது, அதை இனி எப்படி நடக்காமல் சரி செய்கிறோம் என்று நிறைய விளக்கங்களை தொடர்ந்து சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
தோல்விக்கான காரணத்தை பட்டியலிடுவதில் தவறில்லை. ஆனால் அந்த காரணங்களிலிருந்து போதிய படிப்பினைகளை பெற்று, அடுத்த முயற்சியில் அவற்றை சரிசெய்து வெற்றிபெறவேண்டும். அந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கு பதிலாய், எல்லா முறையும் தோல்விக்கு சூழ்நிலைகளையும், மற்றவர்களையும் குறைகூறிக்கொண்டே இருப்பவர்கள், நிரந்தரமாக தோல்வியாளர்களாகவே இருக்க நேர்ந்துவிடுகிறது.
நீங்கள் எப்படி இருக்க ஆசைப்படுகிறீர்கள்? உங்கள் முயற்சிகளில் சிலபல தோல்விகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அவற்றிற்கான காரணங்களை பட்டியலிட்டு உங்கள் நியாயப்படுத்திக்கொண்டே இருக்கப்போகிறீர்களா? அல்லது தீர்வுகளைத் தேடி, திருத்தங்களை செய்து புதிய வெற்றிகளை படைக்கப் போகிறீர்களா?
நீங்கள் வெற்றிபெற்றால்
அதற்கான விளக்கத்தை யாரும் கேட்கப்போவதில்லை
நீங்கள் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும்!
ஒருவேளை நீங்கள் தோற்றிருந்தால்
ஏன் தோற்றேன் என்று நீங்கள் நூறு நியாயம் சொன்னாலும்
அதெப்படி என்று நிறைய கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்!
இரத்தின சுருக்கமாக சொல்பவற்றில் உண்மை அதிகமிருக்கும்!
நீண்ட கதையிலும், விளக்கத்திலும் பொய்கள் அதிகமிருக்கும்!
நீங்கள் சொல்லவருவதை எப்படி பொதுவாக சொல்கிறீர்கள்?
- [ம.சு.கு 21.07.2023]
Comments