“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-284
பொருந்துகிறதா என்பதே முக்கியம்!!
உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, ஒரு மேலாளரை தேர்வுசெய்ய வேண்டியுள்ளது. பொறியியல் சார்ந்த நிறுவனம் என்பதால், பொறியியல் பட்டம், மேலான்மைப் பட்டம், 15 ஆண்டு அனுபவம் தேவை என்று கேட்டிருந்திருக்கிறீர்கள். அதற்கு பொருத்தமான 4-5 நபர்களை நேர்காணல் செய்ய தயாராக உள்ளனர். 15-20 நபர்களைக் கொண்டு இயங்கும் உங்கள் நிறுவனத்திற்கு எந்த மாதிரியான நபரை தேர்ந்தெடுப்பீர்கள்? – கல்வியின் அடிப்படையிலா? பெரிய நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையிலா? மேலான்மைப் பணி அனுபவத்தின் அடிப்படையிலா? திறமையான பேச்சாற்றலின் அடிப்படையிலா? நீங்கள் தேர்வு செய்யும் நபர் அதிகாரத்தை நிலைநாட்டுபவராக இருந்து, உங்களின் நீண்ட நாள் ஊழியர்கள் ஓரிருவர் அவரோடு உடன்பாடில்லாமல் வேலையை இராஜினாமா செய்தால் என்ன செய்வது?
உங்களிடம் பெரிய மச்சுவீடு கட்டுவதற்குத் தேவையான பணம் இருக்கிறது. நகரத்தின் மத்தியில் உங்களுக்கு 1000 சதுரடி இடம் இருக்கிறது. உங்களுக்கு ஆசை 10,000 சதுரடியில் எல்லா வசதிகளுடன் கூடுய அரண்மனை போன்ற வீடுகட்ட ஆசை. ஆனால் உங்கள் அருகாமையில் உள்ள வீட்டினர் யாரும் இடத்தை விற்பதற்கு ஒத்துவரவில்லை. உங்களிடம் இருக்கும் 1000 சதுரடியில் அதிகபட்சம் அடுக்குமாடியாக 2500-3000 சதுரடி வீடுகட்டலாம். அதற்கு மேல் நீங்கள் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், எவ்வளவு நேர்த்தியான திட்டம் வைத்திருந்தாலும், அந்த இடத்திற்கு அது பொருந்தாது. உங்கள் ஆசைகள், திட்டங்கள் எல்லாம், உங்கள் சூழ்நிலைக்கும், இருக்கும் பொருள் வளத்திற்கும் பொருந்தி வந்தால் மட்டுமே எல்லா கனவுகளும் நனவாகும். பொருந்தாத கனவுகள் எத்தனை கண்டாலும், அவை வெறும் கனவுகளாகவே தொடர்ந்து கலைந்துபோகும்;
உயர்கல்வி பயின்ற, பெரிய நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்தவரை நீங்கள் மேலாளராக தேர்வு செய்வதாக வைத்துக்கொள்வோம். அந்த பெரிய நிறுவனத்தில் எல்லாவற்றிற்கும் செயல்முறைகள் வகுக்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஆட்கள் ஒதுக்கப்பட்டு வேலை நடக்கும். இடைநிலை மேலாளர், தலைமை மேலாளர் என்று நிறுவனம் கட்டுக்கோப்பாக இயங்கும். அந்த முறைமையை உங்களின் சிறிய நிறுவனத்தில் அவர் எதிர்பார்த்து இயங்கினால், பெரிய குழப்பம்தான் ஆரம்பத்தில் ஏற்படும். குறைந்த ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனத்தில் எல்லோரும் ஒன்றுக்கும் மேம்பட்ட வேலைகளை செய்வார்கள். அவ்வப்போது முதலாளியும் களத்தில் இறங்கி வேலை செய்வார். அங்கு அதிகார முறைமையை செயல்படுத்த முயற்சித்தால் நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். இப்படித்தான் பல நிறுவனங்கள், ஆட்கள் தேர்வு செய்வதில் கவனக்குறைவாக இருந்துவிட்டு பின் அல்லல்படுகின்றனர். ஊழியர்களை தேர்வு செய்வதில் சரி-தவறுகள் என்று எதுவும் இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர், உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்திற்கு பொருந்துகிறாரா? என்பது மட்டுமே கேள்வி.
எல்லோருக்கும் எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய அரண்மனை போன்ற வீடுகட்ட ஆசைதான். ஆனால் பலரிடம் அதற்கான பொருள் இருப்பதில்லை, சிலரிடம் அதற்கான நேரமும், இடமும் இருப்பதில்லை. அப்படி எல்லாம் இருக்கப்பெற்ற ஓரிருவர்மட்டுமே அதை செயல்படுத்த முடிகிறது. உங்கள் ஆசை, உங்கள் பொருள் வளம், உங்கள் திறமை என்று எல்லாமே பொருந்திவந்தால் மட்டுமே நீங்கள் எண்ணுவது சாத்தியப்படும். பொருந்தாதவொன்றை நீங்கள் எவ்வளவு பின்தொடர்ந்தாலும், அது இறுதியில் தோல்வியில் தான் முடியும்.
நீங்கள் உலக அழகியை மணக்க ஆசைப்படலாம். ஆனால் அவருக்கு நீங்கள் பொருத்தமா? [உங்களைப்போல அவரும் ஆணழகனை மணக்க ஆசைப்படுவாரல்லவா!!]
நீங்கள் நல்ல காய்கறிகளை வாங்கிவரலாம். ஆனால் பூக்களால் அலங்கரிக்கப்படும் இடத்தில் அந்த காய்களிகள் பொருத்தமற்றவை.
நீங்கள் எல்லா பாடங்களையும் படித்துவிட்டு தேர்விற்கு வந்திருக்கலாம். ஆனால் பொது அறிவுத் தேர்வில், இன்றைய பிரதமர் யார் என்று கேட்டால், அங்கு நாட்டு நடப்பு அறிவு முக்கியம். புத்தக அறிவு தேவையென்றாலும், அன்றைய பொத அறிவுத்தேர்விற்கு அது பொருந்தவில்லை!
உங்கள் குடும்பத்தோடு இணைந்து வீட்டையும், பிள்ளைகளையும் கவனிக்கும் மனைவி வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆனால் பட்டம் படித்து தன் இலட்சியம் நோக்கி ஓடும் பெண்னை மணந்தால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எப்படி பொருந்தும்?
அன்றாட பயனத்திற்கு இருசக்கர வாகனம் மிகவும் வசதியாக இருக்கும். ஆனால் கையோ-காலோ இல்லாத நபருக்கு அது எப்படி பொருந்தும்? அப்படியானவருக்கு அவற்றில் மாற்றங்களை செய்தால் தான் பொருந்திவரும்!
புதியதொரு தொழில்நுட்ப கருவியை வாங்கி வருவீர்கள், ஆனால் அவற்றை உங்கள் தொலைக்காட்சியில் / கணிணியில் பொருத்த முயற்சிக்கும்போது, அது பழையது தொழில்நுடபம் என்பதால், புதிய தொழில்நுட்ப கருவி பொருந்தாமல் போகிறது. அதிகபணம் கொடுத்து வாங்கியது இப்போது பொருத்தமின்மையின் காரணமாக வீணாகக் கிடக்கிறது!
ஒரு வட்டமான குழிக்குள், அதே அளவு பரப்பளவுடைய சதுர வடிவ பந்தை போட முயற்சித்தால் அது முடியாது. அதேபோல, சதுரமான குழிக்குள், அந்த குழிக்கு இணையான பரப்பளவுடைய வட்டமான பந்தை போட முயற்சித்தாலும் முடியாது. ஏனெனில் வட்டமும், சதுரமும் நேருக்நேர் பொருத்தமானவை கிடையாது;
இப்படி பொருந்துவது, பொருந்தாதது குறித்து பட்டியல் போட்டால், உலகத்தில் உள்ளவைகளின் பட்டில் விண்ணைத்தாண்டி நிற்கும்;
யதார்த்த உலகில், பல இடங்களில், பல்லாயிரம் விடயங்களில், இது சரியானது! இது தவறானது! என்று நாம் எதையும் குறிப்பிட முடியாது. ஒருவருக்கு சரியாக பொருந்துவது, இன்னொருவருக்கு பொருந்தாமல் போகலாம். பொருந்திவராதவற்றை மீண்டும் மீண்டும் பின்தொடர்வதில் பயனேதுமுண்டா?
பொருந்தி வந்தால் ஒன்றோடு ஓன்று சேர்ந்து பத்தாகலாம்;
பொருந்தாத இடத்தில் எத்தனை சேர்ந்தாலும் எல்லாம் பூஜ்ஜியம்தான்;
வெற்றியும் தோல்வியும் – உங்களுக்கு
ஏனையவைகள் எப்படி பொருந்திவருகிறதென்பதில் தான் இருக்கிறது!
எத்தனை ஊழியர் சேர்த்தாலும் – அவர்கள்
உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தோடு பொருந்தினால் மட்டுமே பயன்!
பொருந்திவரவில்லை என்றால் - அவர் எல்லாவகையிலும் பாரம்தான்!
எதிலும் சரியா-தவறா? என்பதைக் காட்டிலும்
பெரிதா-சிறிதா? என்பதைக் காட்டிலும்
உயர்வானதா-தாழ்வானதா? என்பதை காட்டிலும்
கருப்பா-சிகப்பா? என்பதைக் காட்டிலும்
கட்டமா-வட்டமா? என்பதைக் காட்டிலும்
அது உங்களுக்கு பொருத்தமானதா என்று பாருங்கள்!
பொருந்துவது மட்டுமே நிலைக்கும்!!
- [ம.சு.கு 20.07.2023]
Kommentare