top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 283 - தகவல் மிகப்பெரிய சொத்து!"

Updated: Jul 20, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-283

தகவல் மிகப்பெரிய சொத்து!


  • சில வருடங்களுக்கு முன் தமிழ் மொழியில் வந்த ஒரு திரைப்பட நகைச்சுவை இந்த தலைப்பிற்கு சரியாண உதாரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 2003 ஆண்டு “பாய்ஸ்” என்ற திரைப்படத்தில் நடிகர் செந்தில் அவர்கள், ஆண்டுமுழுவதும் எந்தெந்த கோவில்களில், மண்டபங்களில், நிகழ்ச்சிகளில் என்னென்ன சாப்பாடு கொடுப்பார்கள் என்ற ஒரு தொகுப்பை தயாரித்து வைத்திருப்பார். அதைக்கொண்டு ஒரு கோவில் மண்டபத்தில் அமர்ந்தவாறே தன் வயிற்றை நிரப்பி நம்மதியாக காலம்களிப்பார். தான் தொகுத்து வைத்த வருடம் முழுவதும் எங்கு, என்ன கிடைக்கும் என்ற தகவல் தான் தன்னுடைய பெரிய சொத்து என்ற கூறி அந்த நகைச்சுவை முடியும். இதை நகைச்சுவை காட்சியாக திரைப்படத்தில் அமைத்திருப்பார்கள். ஆனால் இதுதான் வாழ்வின் யதார்த்தம்.

  • இணையத்தில் நீங்கள் ஒரு புதிய செருப்பு வாங்குவது குறித்து தேடுகிறீர்கள், அடுத்ததாக கோவா சுற்றுலா செல்லுவது குறித்து தேடுகிறீர்கள். அன்றிலிருந்து அடுத்த 15 நாட்களுக்கு நீங்கள் இணையத்தை உங்கள் கணக்கை எப்போது திறந்தாலும், செருப்பு விளம்பரமும், கோவா சுற்றுலா பயணம் குறித்த விற்பனை விளம்பரங்கள் மட்டுமே அதிகம் காணப்படும். எந்த இணையபக்கம் திறந்தாலும், எந்த சமூகவளைதள பக்கம் திறந்தாலும், அந்த விளம்பரங்கள்தான் நிறைந்திருக்கும். உங்கள் தேவைகுறித்த விளம்பரங்கள் மட்டுமே வருவதை நீங்கள் கவனிக்காமல் போயிருக்கலாம். ஆனால் உங்கள் தேவையென்ன என்ற தகவலை, உங்கள் இணையத் தேடலில் சேகரித்து உங்களிடம் அதை விற்க முயற்சிப்பதை நிறுவனங்கள் கவனிக்கத் தவறுவதில்லை. உங்கள் தேவைகள் குறித்த தகவலை சேகரிக்க உங்கள் கணிணியேலேயே ஒரு சின்ன தகவல் திரட்டியை [குக்கீஸ்] வைத்துவிடுகின்றனர். அந்த தகவலை தேவைப்படும் நிறுவனங்கள், அவர்களின் வியாபாரத் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. நீங்கள் இணையத்தில் தேடுவது விளம்பரமாக வருகிறதா? என்று பரிசோதித்துப்பாருங்கள்!

திரைப்பட நகைச்சுவையில், எங்கு, எப்போது, என்ன வகையான உணவு தானமாக கிடைக்கும் என்ற தகவலை செந்தில் சேகரித்து வைத்துக்கொண்டு, ஒரு இளைஞனை வேலைக்குவைத்துக்கொண்டு உணவு வாங்கி வரச்சொல்லுவார். இதேபோன்று வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் தேவைகள் என்னென்ன? எதையதை எங்கு சென்று வாங்குகிறார்கள்? என்ற தகவலை திரட்டி, அவர்களின் தேவைகளுக்கு வெளியே செல்லாமல் அவர்கள் வீட்டிற்கு அந்த பொருளோ, சேவையோ கிடைக்கும் வகையில் செய்வது ஒரு வியாபார வாய்ப்பு. அப்படித்தான் இன்று எண்ணற்ற வியாபாரங்கள் புதிதுபுதிதாய் முளைத்துக்கொண்டிருக்கின்றன. திரைப்படத்தில் நகைச்சுவையாக சொன்ன “தகவல் தான் சொத்து” என்ற வாக்கியம் இன்றைய வர்த்தக உலகின் யதார்த்தமாகி விட்டது.


இன்றைய தினம் எந்தக் கடையில், என்ன பொருள் வாங்கினாலும், உங்கள் பெயரையும், கைப்பேசி எண்ணையும் கட்டாயம் வாங்கி தங்களின் வாடிக்கையாளர் பட்டியலில் பதிவு செய்கின்றனர். அதன் பின்னர் அவ்வப்போது உங்களுக்கு குறுஞ்செய்திகளாக எண்ணற்ற விளம்பரங்கள் அவர்களிடம் இருந்து வருகின்றன. அதற்கும் அடுத்தபடியாக சில நிறுவனங்கள் உங்கள் பிறந்த தேதி, திருமணநாள் குறித்த தகவல்களை சேகரித்து, அன்றைய தினம் உங்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதும், சலுகை விலை என்று விளம்பரம் அனுப்பவதும் வாடிக்கையாகி வருகிறது. வாடிக்கையாளரின் தகவல்களை கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களிலும் சேகரிக்கிறார்கள். சேகரித்த தகவல்களை பகுத்தாய்ந்து, தங்களின் வியாபார வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் மட்டும் பயன்படுத்துவதோடு நிற்காமல், உங்கள் அனுமதியில்லாமல், உங்கள் தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்கின்றனர்.


என்னென்ன தகவல்களையெல்லாம் இன்று காசாக்கிக்கொண்டிருக்கிறார்கள்?

  • வாடிக்கையாளர் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள்

  • வாடிக்கையாளர்களின் தேர்வுகள் [வாங்கிய பொருட்கள், அளவு, கால இடைவெளி, விரும்பிய நிறுவனம்,....]

  • பங்குச் சந்தை செய்திகள் [நிறுவனங்களின் வெளியிடப்படாத இரகசிய தகவல்கள்]

  • காப்புரிமை பெற்று பாதுகாக்கப்பட்ட தகவல்கள்

  • சமூக வளைதள பயனாளர் தகவல்கள், அவர்களது தேடல்கள் குறித்த தொகுப்புக்கள்,....

இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இப்படி உங்களிடம் என்னென்ன தகவல்கள் இருக்கின்றன. அதை எப்படி வியாபாரத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் உங்கள் சாமர்த்தியம்;


பல இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் தகவல்களைக் ஆய்ந்தறிவதன் மூலம்

  • சரியான வாடிக்கையாளர்களை கண்டுபிடித்து, நீங்கள் வியாபாரத்தை விரிவாக்கலாம்;

  • சரியான முதலீட்டு வாய்ப்புக்களை இணங்கண்டு முதலீடு செய்து இலாபம் ஈட்டலாம்;

  • புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், பொருட்களில் மேம்பாடுகளை திட்டமிடவும் இந்த தகவல்கள்தான் அடிப்படைத்தேவையாகிறது;

  • மருத்துவ உலகின் வளர்ச்சியே, நோயாளிகளின் விபரங்களை சேகரித்து, எண்ணற்ற சிகிச்சை முறைகளின் பலன்களை ஆய்ந்தறிவதில்தான் அடங்கியிருக்கறது.

இன்று தேர்வுகள் முதல் தேர்தல் வரை, உப்பு முதல், முந்திரிவரை, குண்டூசி முதல் விண்கலன் (இராக்கெட்) வரை, எல்லாமே தகவல் சார்ந்த வர்த்தகமாகி விட்டது. யாரிடம் குறிப்பிட்ட தகவல் முன்னதாக கிடைக்கிறதோ, அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்கிறார். அந்த வாடிக்கையாளர் தகவல், பொருட்களின் தகவல், தேவைகள் குறித்த தகவல் இல்லாதவர்கள், வாய்ப்பை இழந்து பின் தங்குகின்றனர்.


எப்படி தகல்களை திரட்டுவது, எப்படி பகுத்தாய்ந்து பயன்படுத்தவதென்று தனிப்பட்ட பட்டப் படிப்புகளே இன்று வந்துவிட்டன [பிக்டேட்டா அனலிடிக்ஸ்]. உங்கள் வியாபாரம் வளர்ச்சிபெற,

  • என்னென்ன தகவல்கள் தேவைப்படும் என்று பட்டியலிடுங்கள்

  • அந்த தகவல்கள் எங்கு கிடைக்கும்? எப்படி சேகரிப்பது என்று திட்டமிடுங்கள்!

தேவையான அளவு பொருட்செலவு செய்து தகவல்களை திரட்டுவதும், பகுத்தாய்ந்து பயன்படுத்துவதும் உங்களின் தனிப்பட்ட சாமர்த்தியம்.


இன்று தகவல்தான் எல்லாமே

அதைக்கொண்டு பணம் சம்பாதித்தவரும் இருக்கிறார்

அதைக்கொண்டு சீரழிந்தவரும் இருக்கிறார்

தகவல் ஆக்கத்திற்கும் வழிவகுக்கிறது – அதேசமயம்

அழிவிற்கும் அடித்தளம் இட்டுவிடுகிறது;


தகவல்களை திருடிவிற்று ஒரு கூட்டம் பொருளீட்டுகிறது;

தகவல்களை திரட்டி ஆய்வுசெய்து

வாடிக்கையாளரை, சந்தையை புரிந்து ஒருகூட்டம் பொருளீட்டுகிறது!

தகவல்களை கண்டுகொள்ளாமல் அனுமானத்தில் ஒருகூட்டம் கஷ்டப்படுகிறது!

இவர்களில் நீங்கள் எந்த விதம்?


தகவல் தான் இன்றைய பெரிய சொத்தென்றாலும்

கிடைக்கின்ற எல்லாமே பயனுள்ள தகவலாகிவிடாது;

உங்கள் தேவைக்கேற்ப, இருக்கின்ற வசதிக்கேற்ப,

சந்தை சூழ்நிலைக்கேற்ப, மக்களின் வர்த்தகத்திற்கேற்ப

தகவல்களை திட்டமிட்டு திரட்ட வேண்டும்;

தகவல்களை திரட்டுவதும், ஆய்ந்தறிவதும், பயன்படுத்துவதும்

இன்று 65-வது கலையாகிவிட்டதென்றால், அது மிகையல்ல!!


- [ம.சு.கு 19.07.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page