top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 282 - தலைமுறை இடைவெளியை கருத்தில்கொள்ளுங்கள்!

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-282

தலைமுறை இடைவெளியை கருத்தில்கொள்ளுங்கள்!


  • ஒரு பெரிய தொழிற்சாலையில், நீண்ட அனுபவம் வாய்ந்த மேலாளர்களின்கீழ் நீண்டகாலமாக எண்ணற்ற பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அதேசமயம், ஓய்வு பெற்ற இடைநிலை மேலாளர் இடங்களுக்கு, இளைஞர்களைக் கொண்டு நிரப்பும்போது, அவர்களால் 5-6 மாதங்களுக்கு மேல் அந்த பணியில் தாக்குபிடிக்க முடியவில்லை. சீக்கிரத்தில் வேலையை இராஜினாமா செய்தனர். இப்படி 2 ஆண்டுகளில், 10-12 பதவிகளுக்கான பணியில் ஆட்கள் நிலைக்காததால், அதன் உண்மை காரணத்தை ஆராய மனிதவளத் துறையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இறுதியில் கொடுத்த அறிக்கையில், இளைய தலைமுறையினரின் வெளியேற்றத்திற்கான முக்கிய காரணம், பழைய அனுபவம் வாய்ந்த மேலாளர்கள் என்றிருந்தது ஆச்சரியம் அளித்தது. அந்த மேலாளர்கள் அப்படி ஒன்றும் அவர்களை திட்டவும் இல்லை, மிரட்டவும் இல்லை. ஆனாலும், அந்த இளைஞர்களால் பழைய முறைமைகளை ஏற்று அங்கு பணிசெய்ய முடியவில்லை!

  • 10 ஆண்டுகளுக்கு முன்னால், புதிய தொழில்நுட்பப் பொருட்கள் வெளிவந்தால், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளம்பரப்படுத்தினார்கள். 1980-களிலிருந்த 2010 வரை, வானொலியும், தொலைக்காட்சியும் முக்கிய விளம்பர வடிவமாக இருந்தது. கைப்பேசியானாலும், கைக்கடிகாரமானாலும் எல்லாம் தொலைக்காட்சியில் தான் அதிக பணம் செலவழித்து விளம்பரப்படுத்தினர். அந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களை இன்றும் முக்கியமாக கருதி 2 நிறுவனங்கள் விளம்பரச் செலவு செய்தது. அதேசமயம், புதிதாய் துவங்கிய பல நிறுவனங்கள் சமூக வளைதள விளம்பரத்தை துவங்கின. பழைய நிறுவனங்களைவிட புதிய நிறுவனங்களின் விற்பனை சீக்கிரமாக அதிகரித்தது. காரணத்தை ஆய்ந்தவர்கள், இன்றைய தலைமுறையினர் தொலைக்காட்சிகளில் நேரத்தை செலவிடுவதைவிட 3 மடங்கு அதிகமாக கைப்பேசியில், சமூக வளைதளத்தில் செலவிடுவதாக தெரியவந்தது.

இளைய சமுதாயத்தினர், எந்த வேலையை சொன்னால், ஏன் செய்யவேண்டும்? எதற்காக? என்று கேள்வி கேட்டு பின் செய்கின்றனர். அதேசமயம், நமக்கு முந்தைய தலைமுறையினர் அதுபோன்று தங்களின் மேலாளர்களை கேள்விகேட்கவில்லை. மேலாளர் சொன்னால், ஏன்? எதற்கு? என்று கேட்காமல் அப்படியே செய்தனர். அனுபவம் வாய்ந்த பழைய மேலாளர்கள், புதிதாக நியமிக்கப்பட்ட இடைநிலை மேலாளர்களிடம் அவ்வாறான அடிபணிதலை எதிர்பார்த்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினரின் புரிதல் வேறுமாறு இருக்கிறது. அவர்கள் கேள்வியற்ற அடிபணிதலை விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் பணிக்கு பொருத்தமற்றவர்கள் என்ற ஒதுக்கவும் முடியாது. பணியில் உள்ள தலைமுறை இடைவெளியை இரண்டு சாராரும் புரிந்து கொள்ளாததுதான் பிரச்சனையாக ஆரம்பிக்கிறது.


பழைய மேலாளர்கள், புதிய தலைமுறையினர் தங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு செய்யவேண்டும், எல்லா முடிவுகளிலும் தங்கள் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும், அதே சமயம் தங்களின் அனுபவம் வாய்ந்த முடிவுகளை கேள்வி கேட்கக்கூடாது என்று எதிர்பார்த்தனர். இளைய சமுதயாத்தினர், எங்களிடம் வேலையை கொடுத்துவிட்டால், எங்களை சுதந்திரமாக விடுங்கள். வேலையை குறித்தி நேரத்தில் சரியான முறையில் செய்யவேண்டியது எங்கள் பொறுப்பு. நாங்கள் புதிய முறைமைகளை பயன்படுத்தி முடிக்கிறோம் என்கின்றனர். அதேபோல, முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்கும்போது, தங்களின் கருத்துக்களையும் கேட்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். பழைய தலைமுறை மேலாளர்கள் ஏகாதிபத்திய முறையை விரும்பிக்கொண்டிருக்க, புதிய தலைமுறையினர் சமத்துவ முறையை விரும்புகின்றனர். இந்த தலைமுறை இடைவெளிப் புரிதல் வராவிட்டால், எல்லா பழைய நிறுவனங்களிலும் இந்த பிரச்சனை பூதாகரமாக வளர்ந்துகொண்டே தானிருக்கும்;


அதிக கட்டணம் கொடுத்து தொலைகாட்சியில் விளம்பரம் செய்வதைவிட, மிதமான கட்டணத்தில் சமூகவளைதள விளம்பரம் அவர்களுக்கு இலாபகரமாக இருந்தது. பொருள், வாடிக்கையாளர் வகை, வயதுவரம்பு போன்றவற்றையும், இன்றைய தலைமுறையினரின் போக்கு, மாறிவிட்ட விருப்பங்கள் போன்றவற்றையும் கருத்தில்கொள்ளாமல், பழைய சிந்தனைகளில் விளம்பரத்தை தொடர்ந்தால், பணம்தான் விரையமாகும். தலைமுறை மாற்றங்களையும், மாறிவிட்ட எதிர்பார்ப்புக்களையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டால், படிப்படியாக வியாபார வாய்ப்புக்கள் குறைந்துவிடும். இதைப்போன்று, நீங்கள் இன்று செய்யும் தொழிலில், என்ன மாதிரியான தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?

  • நம் மூதாதையர்கள், தங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றார்கள். அவர்களில் பலர் கொத்தடுமைகளாகவே காலத்தை கழித்தனர். அன்று பசியாறுவதே பெரும் போராட்டமாக இருந்தது.

  • நம் தாத்தா-பாட்டிமார்கள், சுதந்திர கிடைத்தபின், அரசாங்கம் சில உதவிகளை செய்தது. கொத்தடிமை முறை அவர்கள் காலத்தில் படிப்படியாக மாறத் துவங்கியது. அவர்களும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக வேலைக்கு போனாலும், அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

  • நம் தந்தைமார் காலத்தில், கொத்தடிமை முறைமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்கள் கையோங்கியது. அவர்கள் உணவு, உடை போன்ற அத்தியாவசியங்களைத் தாண்டி, தங்களின் பிள்ளைகளின் படிப்பு, தங்களுக்கென்று ஒரு இருசக்கர வாகனம், தொலைபேசி இணைப்பு, வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள், என்று அடுத்த நிலை வசதிகளை நோக்கி உழைத்தனர். தங்கள் உழைப்பிற்கான ஊதியம் குறைகின்ற இடத்தில் போராடவும் செய்தனர்;

  • இன்றைய இளையதலைமுறையினருக்கு, மேலே பட்டியலிட்ட அனைத்தும் அடிப்படைத் தேவைகளாகிவிட்டன. அவையாவும் தங்கள் வீட்டில் ஏற்கனவே இருக்கிறது. இப்போது அவர்கள் பணியில் சமஉரிமையை, தனிப்பட்ட அங்கீகாரத்தை, சமத்துவத்தை, ஏற்றத்தாழ்வற்ற ஊதியத்தை, மேம்பட்ட வேலை சூழலை எதிர்பாக்கின்றனர். இந்திந்த கூடுதல் வசதிகள் பணிபுரியும் இடத்தில் இருக்க வேண்டும், தங்களை தினமும் வீட்டிலிருந்து அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்று திரும்பவேண்டும் என்று ஊழியர்களின் தேவைப்பட்டியல் நீண்டு கொண்டு போகிறது.

இந்த தலைமுறை இடைவெளியை கருத்தில் கொள்ளாமல், நீங்கள் எவ்வளவு ஊழியர்களை வேலைக்கு எடுத்தாலும், அவர்கள் 3-6 மாதங்களில் வேலையை விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினரை உங்கள் பாணிக்கு மாற்ற முயற்சிப்பது சாத்தியமில்லை. கிட்டத்தட்ட அது முட்டாள் தனமான முயற்சிதான். அவர்களுக்கு ஏற்ற வகையில் உங்கள் நிறுவன பணிகளை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நிறுவனங்கள் போராடுகின்றன.


முதலாளித்துவ பொருளாதார முறைமையில், அடுத்தகட்டமான ஊழியர்கள் கையோங்கிய நிலைமை இன்று அதிகரித்து வருகிறது. ஏனெனில் இன்றைய ஊழியர்கள் யாரும் தங்களின் உணவுத் தேவைகளுக்காக பணிக்கு வரவில்லை. தங்களின் அடிப்படைகளைக் கடந்து, ஆடம்பரம், அங்கீகாரம் என்ற நோக்கத்தில் தான் வருகிறார்கள். இன்று இந்த நிறுவனம் இல்லாவிட்டால், நாளை வேறொரு இடத்தில் வேலை கிடைக்கிறதென்று தைரியமாக இருக்கிறார்கள். ஊழியர்களை பகைத்துக்கொண்டு தினம்தினம் ஊழியர்களை மாற்றிக்கொண்டிருந்தால், நீங்கள் உற்பத்திக்கு பதிலாக பயிற்சிநிறுவனமாக மாறிவிடுவீர்கள். இன்று நீங்கள் ஊழியர்களின் தேவைகளை அறிந்து, ஒரு சமத்துவ நிலையில் வேலைவாங்கிச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.


தலைமுறை இடைவெளியில்

தொடர்பு முறைமைகள் மாறிவிட்டன!

ஊதிய முறைமைகள் மாறிவிட்டன!

வேலைசெய்யும் சூழல்கள் மாறிவிட்டன!

அதிகார முறைமைகள் மாறிவிட்டன!


இந்த மாற்றங்களை புரிந்துகொண்டு

தங்களை மாற்றிக்கொண்ட நிறுவனங்களை

அடுத்தகட்ட வளரச்சியை நோக்கி பயனிக்கின்றன! மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல்

பழைமையான அதிகாரவர்க முறைமைகளில் ஊறி

இன்னும் பழமை பேசும் நிறுவனமும், அதிகாரிகளும்

படிப்படியாய் நிராகரிக்கப்பட்டு பின்தங்குகிறார்கள்!


இன்று எந்தநிலைமையில் இருக்கிறீர்கள்

உங்கள் தொழிலுக்கான தலைமுறை இடைவெளி என்ன?

உங்கள் ஊழியர்களுக்கான தலைமுறை இடைவெளி என்ன?

உங்கள் உறவுகளுக்குள்ளான தலைமுறை இடைவெளி என்ன?

என்று எல்லாவகையான தலைமுறை மாற்றங்களையும்

நீங்கள் புரிந்து செயல்பட்டால்

மாற்றங்களை எளிதாய் ஏற்றுக்கொண்டு முன்னேறலாம்!!


- [ம.சு.கு 18.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page