top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 280 - விழிப்புநிலை!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-280

விழிப்புநிலை!!


  • வழக்கமாக நீங்கள் உங்கள் நான்கு சக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று வருகிறீர்கள். வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, ஏதோ ஒரு பொருள்வாங்கிவர உங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறீர்கள். உங்கள் வாகனத்தில் வானொலி பன்பலை நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறீர்கள். பன்பலை அலைவரிசையின் பாடல்களில் இலயித்த நீங்கள், எதற்காக வந்தோம் என்ற விழிப்பு இல்லாமல், வழக்கமாக அலுவலகம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றுவிடுகிறீர்கள். 4-5 நிமிடங்களுக்கு பிறகு, நாமெதற்கு இப்போது இந்த பாதையில் வருகிறோம் என்று ஒருநொடி யோசிக்கும்போது தான், உங்களின் பழக்கதோஷ தவறு தெரியவருகிறது. மீண்டும் வண்டியை திருப்புகிறீர்கள். இந்த தவறுகள் எனக்கும் அடிக்கடி நிகழ்கிறது. உங்களுக்கு எப்படி?

  • ஒரு விற்பனையாளர், உங்களிடம் வந்து ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால், மிகப்பெரிய அளவில் இலாபம் கிடைக்கும் என்று கூறினார். அது எப்படி சாத்தியம் என்று விளக்கமாக கூறி உங்களை முழுமையாக நம்பவைத்தார். மற்றவர்கள் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு இலாபம் இன்னும் அதிகம் என்று உங்கள் மூளையைக் கழுவினார். நீங்களே கடன்பட்டுதான் வியாபாரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பு பொன்னான வாய்ப்பென்று அவர் சொன்ன ஆசை வார்த்தைகள் உங்களை அதிக வட்டிக்கு கடன்வாங்கி முதலீடு செய்யவைக்கிறது. மாலை வீட்டிற்க வந்து இந்த கதையை உங்கள் மனைவியிடம் சொல்லும்போது, “நாமே கடன்பட்டு வியாபாரம் செய்கிறோம், நமக்கெதுக்கு இந்த முதலீடு?” என்று கேள்விகேட்கிறார். இரவு உறங்கும்போது, ஒருவேளை அந்த முதலீடு நஷ்டமானால் உங்கள் நிலைஎன்னவாகும் என்று யோசிக்கும்போது, தூக்கம் போய் பயம் நிரம்பிவிடுகிறது. அடுத்த நாள், அந்த நண்பரின் தொலைப்பேசி எண், “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதென்று” தொடர்ந்து சொன்னால், உங்களுக்கு எப்படி இருக்கும்? இப்படி அவசரமாக யோசிக்காமல், பிறரது வார்த்தைகளை நம்பி நீங்கள் முடிவெடுத்து மாட்டிக்கொண்டிருக்கிறீர்களா?

அன்றாடம் சென்றுவரும் பாதைகள் அப்படியே ஆழ்மனதில் பதிந்துவிடுகின்றன. வழக்கம்போல காலையில் வண்டியை எடுத்தவுடன், உங்கள் ஆழ்மனம் உங்கள் வழக்கமான பயனப்பாதைக்கு தயாராகி விடுகிறது. ஆனால் நீங்கள் வேறு இடத்திற்கு செல்லவேண்டுமானால், சாலையில் கவனமாக இருக்கவேண்டும். திரைப்படப் பாடல்களையோ, தொலைபேசியிலோ மும்முரமாக இருந்தால், உங்கள் கவனத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இருக்காது. அப்போது, உங்கள் ஆழ்மனம் வழக்கமான அலுவலகப்பாதைக்கு வழிவகுத்துவிடும். இது வாகனம் ஓட்டுவதில் மட்டுமில்லை, அன்றாட வாழ்வின் பல இடங்களில், பல தருணங்களில், பலவிதமாய் இந்த தவறுகள் நடக்கின்றன. என் மகளின் புத்தகத்தில் பழக்கதோஷத்தில் என் பெயரை எழுதியிருக்கிறேன். இந்த சின்னச்சின்ன தவறுகளுக்கான ஒரே காரணம், என்ன செயல் செய்துகொண்டிருக்கிறோம் என்பதில் அவ்வளவாக கவனம் இல்லாததுதான் என்பதை நாமே அறிவோம். ஆனால் அந்த விழிப்புநிலை குறித்து பெரிதாய் பொருட்படுத்தாமல் அந்த தவறுகள் தொடர்வது, ஒருநாள் பெரிய தவறுக்கு வழிவகுத்துவிடுகிறது.


உங்களிடம் அதிக வட்டிகிடைக்கும், இலாபத்தில் பெரிய பங்கு கிடைக்கும், மலிவாக கிடைக்கிறது என்று எண்ணற்ற ஆசைவார்த்தைகளை கூறி விற்பார்கள். அப்போதைக்கு அவர்களின் பேச்சில் எதனால் மயங்குகிறார்கள்? எந்தவொரு செலவினங்கள் குறித்த முடிவெடுக்கும் முன், உங்களுடைய தற்போதைய பொருளாதார நிலையென்ன, வரவு-செலவுகள் எந்த நிலையில் இருக்கிறது, அந்த குறிப்பிட்ட செலவிற்கு தேவையான பணம் கையிருப்பு இருக்கிறதா? ஒருவேளை புதிய முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால், நம்மால் இருக்கின்ற வருவாயைக்கொண்டு தாக்குபிடிக்க முடியுமா? என்று எண்ணற்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொண்டால் மட்டுமே, அந்த செலவு தேவையா? இல்லையா என்று முடிவெடுக்க முடியும். அதற்கு நீங்கள் எப்போதும் என்ன செய்கிறோம் என்பதில் விழிப்புடன் இருக்கவேண்டும். எப்போது நீங்கள் விழிப்பின்றி உங்கள் உணர்ச்சிகளுக்கு உட்பட்டிருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஆசை வார்த்தைகளால் உங்களை யாராவதொருவர் ஏதேனுமொரு வகையில் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.


உங்கள் வெற்றியும் தோல்வியும்

உங்கள் விழிப்பு நிலை சார்ந்தது!

விழிப்புடன் இருப்பவர்கள்

சந்தை மாற்றங்களை உடனுக்குடன் கவனித்து

தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர்;


நீங்கள் எல்லாச் செயல்களிலும் விழிப்புடன் இருக்க, செய்யவேண்டியவைகள் என்ன? செய்யக்கூடாதவைகள் என்ன என்று சிறிதாய் பட்டியலிடுவோம்!

  • உங்கள் சிந்தனைகளை மணிக்கொருமுறை மறு ஆய்வு செய்யுங்கள். தேவையில்லாதவற்றை அதிக நேரம் சிந்திப்பதை தவிர்க்க இது உதவும்;

  • எல்லா செயல்களை துவங்கும் முன்னர், ஒருநிமிடம் நின்று யோசித்து, என்ன செய்யப்போகிறோம்? எப்படி செய்யப்போகிறோம்? என்பதை உங்களுக்கு நீங்களே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்!

  • நீங்கள் செய்யவேண்டிய எல்லா செயல்களுக்கும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இந்த இலக்கு உங்கள் முன்னேற்றத்தை அளவிட உதவியாக இருக்கும்;

  • நீங்கள் யாரிடம் எதை சொல்வதானாலும், அதை அவர் புரிந்துகொள்ளும் விதத்தில் கவனமாக சொல்லுங்கள். ஒவ்வொருவரின் அறிவும், புரிதலும் மாறுபடும் என்பதை நினைவில் கொண்டிருங்கள்!

  • எப்போதும் கற்பதற்கு தயாராக இருங்கள். உங்களுக்கான வாழ்க்கைப்பாடத்தை தெளிவுபடுத்தும் ஆசான் ஒரு பிச்சைக்காரனாககூட இருக்கக்கூடும்;

  • உங்கள் நட்புவட்டத்தை கவனமாக அமைத்துக் கொள்ளுங்கள். தவறான சேர்க்கை, காலப்போக்கில் உங்களை தவறாக வழிநடத்தக்கூடும்;

  • மற்றவர்களின் கருத்துக்கள், விமர்சனங்களை கவனமாக கேட்டு உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள்.

  • மற்றவர்களை குறைசொல்லிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களை தாழ்த்தி உங்களால் உயர முடியாது. சராசரிக்கு மேலாக உங்களை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்;

  • முதலும், முடிவுமாக – எதையும் நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். இன்று செய்யவேண்டியதை, இப்போதே செய்து முடியுங்கள்;

என்ன செய்யவேண்டும்?

எப்படி செய்யவேண்டும்?

எப்போது செய்யவேண்டும்?

என்ற கேள்விகளுக்கு விடையிருந்தால் மட்டுமே

அந்த செயலை செய்யத்துவங்குங்கள்!

தெளிவில்லாமல் துவங்கினால்

முடிவில்லாமல் பயனித்துக்கொண்டே இருக்கநேரிடும்!


எல்லாவற்றிற்கும் உங்கள் விழிப்புநிலை மட்டுமே

சரியான பதிலாக இருக்கும்!

ஏனெனில், உங்கள் விழிப்புநிலை

உங்களை சூழ்நிலையறிந்து

இடம், பொருள், ஏவல் அறிந்து

சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்!


- [ம.சு.கு 16.07.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Commentaires


Post: Blog2 Post
bottom of page