top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 277 - இலாபத்தில் ஒருபங்கை வெளியே எடுக்கவும்!!"

Updated: Jul 14, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-277

இலாபத்தில் ஒருபங்கை வெளியே எடுக்கவும்!


  • சூதாட்ட கூடங்களை [கேசீனோ] பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோவா, போன்ற சுற்றலா பயனிகள் அதிகம் வந்து போகும் ஊர்களில் இந்த சூதாட்ட கூடங்கள் இருக்கின்றன. இங்கு பொழுதுபோக்கிற்காக சூதாட வரும் சுற்றுலா பயனிகள் சில ஆயிரங்களில் துவங்கி சில இலட்சங்களை வரை கொண்டு வருகின்றனர். அவர்களில் 10%-20% பேர் மட்டுமே இலாபத்துடன் திரும்புகின்றனர். கிட்டதட்ட 80%-90% பேர் கொண்டுவந்த முழுப்பணத்தையும் இழந்துவிட்டு வீடுதிரும்புகின்றனர். ஆரம்பத்தில் சிறிய இலாபத்தில் ஈட்டிய இவர்கள், கடைசியில் ஏனோ வழக்கம்போல எல்லாவற்றையும் இழந்திவிட்டு வீடு திரும்புகின்றனர்?

  • பொதுவாக வியாபார முதலீட்டின் அளவைப் பொருத்து, வர்த்தகங்கபளின் அளவு இருக்கிறது. ஆரம்பத்தில் சிறு முதலீட்டில் துவங்கி, அவற்றில் வரும் இலாபத்தை, அதே தொழிலில் தொடர்ந்து முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துகின்றனர். தங்களின் குடும்ப செலவிற்கு தேவையான அத்தியவசியத் தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற எல்லா இலாபத்தையும் அடுத்தடுத்த வியாபார விரிவாக்கத்திற்கு முதலீடு செய்துவிடுகின்றனர். இன்னும் ஒருபடி மேலாக, இலாபத்தோடு சற்று கூடுதலாக வங்கிக் கடனையும் வாங்கி வியாபார விரிவாக்கம் செய்கின்றனர். சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது செய்யப்படும் இந்த முதலீடுகள் அப்போதைக்கு இலாபகரமானதாக தெரிந்தாலும், சந்தை மாற்றங்களால் வியாபாரம் குறையும்போது, கடனுக்கு வட்டிகட்டவே வருவாய் போதாமல் பணத்திண்டாட்டம் ஏற்படுகிறது. ஒரு சில வியாபாரங்கள் திவால் சூழ்நிலைக்கும் தள்ளப்படுகின்றன. பலர் தங்கள் வீடுவாசலை விற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். நன்றாக வாழ்ந்தவர்கள், குழந்தைகளின் கல்விக்கட்டணம் செலுத்தக்கூட திண்டாடும் நிலைவருகிறது. தங்களின் இலாபத்தின் ஒருபகுதியை ஏன் இவர்கள் எதிர்கால நலனுக்கு எடுத்துவைப்பதில்லை?

சூதாட்ட கூடங்களுக்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு ஆரம்பத்தில் அந்த விளையாட்டுக்கள் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. தன் உடன் வந்தவர்களுடன் சேர்ந்து ஏதாவது 1-2 விளையாட்டுக்களில் சிறு தொகையை பந்தையம் கட்டுகின்றனர். அவற்றில் ஏதேனுமொன்றில் வெற்றியும், 2-3 மடங்கு பணமும் கிடைக்கிறது. வெகுசிலர், அந்த இலாப பணத்தை தனியாக வைத்துவிட்டு, கொண்டுவந்த பணத்தின் அளவோடு அடுத்த விளையாடுகிறார்கள். பெரும்பாலானவர்கள், வெற்றிக்களிப்பில், தங்களுக்கு அன்று அதீத அதிர்ஷ்டம் இருக்கிறதென்ற தவறான கணிப்பில், அடுத்தடுத்து எல்லா பணத்தையும் வெவ்வேறு விளையாட்டில் பந்தயம் கட்டி இழக்கின்றனர்.

இப்படி இழப்பது எப்போதாவது விளையாடுபவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, வழக்கமாக சூதாடுபவர்களிடமும் காணப்படும் ஒருவகை சூதாட்ட மாயை / சூதாட்ட போதை / பேராசை குணாதிசயமாகும். வெற்றி பெறும்போது, அவற்றில் ஒரு குறிப்பிட்ட பங்கை விளையாட்டிலிருந்து வெளியே எடுத்துவிட்டால், அதைக் கொண்டு உங்கள் அத்தியாவசியமான வேறு வேலைகளை முடிக்க முடியும். ஆனால் வென்றதையெல்லாம் அதே இடத்தில் இன்னும் வெல்லலாம் என்று பேராசையில் தொடர்ந்து பந்தயம் வைத்தால் இழப்பு நிச்சயமாகிவிடுகிறது.


வியாபாரத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலாபங்கள் மாறுபடும். சந்தை ஏறுமுகமாக இருக்கும் சூழ்நிலையில், ஒருசில சமயம் பொருட்கள் பற்றாக்குறையால், இருப்பு வைத்தவர்களுக்கு அதீத இலாபமும் கிடைக்கும். அப்போதைய சூழ்நிலையில், வியாபாரம் அதிக இலாபம் தரக்கூடிய முதிலீடாக தென்படும். அதனால், கிடைத்த இலாபத்தை கொஞ்சம்கூட வெளியே எடுக்காமல், அடுத்த சரக்குகள் வாங்க திரும்ப முதலீடு செய்துவிடுகிறார்கள். சந்தை சற்றே மந்தமடையும் போது, உங்கள் முதலீட்டுப்பணம் யாவும் வரவேண்டிய கடன்காளகவோ, அல்லது பொருட்களின் இருப்பாகவோ மாட்டிக்கொள்கிறது. உங்களால் வேறெதையும் செய்ய முடியாத நிலை.


வியாபாரி தான் ஈட்டிய இலாபத்தின் ஒருபகுதியை வெளியில் எடுத்து, வேறு சில பாதுகாப்பான முதலீடுகளை செய்தால், அவசரத்தேவைக்கு ஒரு தொகை தனியாக இருக்கும். அப்படி ஒரு தொகை தனியாக வைத்திருப்பது பெரிய மனநிம்மதியை அளிக்கும். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்துகொண்டு செல்லும்போது, கூடை சரிந்தால் மொத்தமும் வீண். அதேசமயம், அவற்றை இரண்டு மூன்று கூடைகளில் பிரித்து மற்ற பொருட்களுடன் பாதுகாப்பாக கொண்டு செல்லும்போது, ஒரு கூடை சரிந்தாலும், நஷ்டம் ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்றுவிடும். இதுவே காப்பீட்டின் அடிப்படையுமாகும்.


உதாரணங்களை தாண்டி உங்கள் வியாபாரத்திற்கும், அன்றாட வாழ்க்கைக்கும் வருவோம்;

  • உங்கள் வியாபாரத்தில், எந்தளவிற்கு இலாபத்தை அதனுள்ளேயே புரட்டுகிறீர்கள்?

  • வருடத்தில் எத்தனை சதவிகித இலாபத்தை வெளியில் எடுத்து வேறு இலாபகரமான முதலீட்டில் போடுகிறீர்கள்?

  • அப்படி முதலீடென்ற பெயரில் நிலங்களை வாங்கி, திரும்பவும் அதை வங்கியில் வியாபார கடனுக்கு அடமானம் வைக்கிறீர்கள்?

  • ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் அதிக வட்டி கிடைக்கிறதென்று, சொந்தபந்தங்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அவற்றில் எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள்? [ஒருவேளை அந்த முதலீடு ஏமாற்றப்பட்டாலோ, நஷ்டத்தில் முடிந்தாலோ, உங்கள் நிலை என்னவாகும்?]

  • வியாபாரத்தின் ஏறுமுக சூழ்நிலையை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முதிலீடு செய்கிறீர்கள். அந்த வியாபாரம் தொடர்ந்து ஏறுமுகமாக எத்தனை காலத்திற்கு இருக்குமென்று உங்களால் கணிக்க முடியுமா?

  • எல்லாம் கணிணிமயத்தில் மாறிவரும் சூழ்நிலையில், இன்று நீங்கள் செய்யும் வியாபாரம், எத்தனை காலங்களுக்கு நீடிக்குமென்று உங்களால் கணிக்க முடியுமா? எதிர்காலம் நிச்சயமில்லாதபோது, உங்கள் முதலீட்டை எந்தளவிற்கு பிரித்து பாதுகாத்திருக்கிறீர்கள் என்று அலசிப்பார்த்திருக்கிறீர்களா?

வியாபாரமோ, சூதாட்டமோ, உங்கள் விளையாட்டிற்கும், முதலீட்டிற்கும் ஒரு எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது ஈட்டும் இலாபங்களில் ஒரு குறிப்பிட்ட பங்கை அதிலிருந்து வெளியில் எடுத்த வேறு முதலீடுகளில் பத்திரப்படுத்தவும். வியாபாரம், சூதாட்டம் எதுவானாலும், ஒரு நாள் அதில் சரிவு வரும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த சரிவுவரும்போது, அதை தாக்குப்பிடித்து நிற்க, உங்களிடம் மாற்றுவழிகள் இருக்கவேண்டுமென்ற அவசியத்தை புரிந்து காலத்தே செயல்படுங்கள். எல்லாவற்றையும் இழந்தபின், “ஐயோ! சிறிதளவு பணத்தை மாற்றியிருந்தால், இன்று என் குடும்பம் இந்த நிலைக்கு வந்திருக்காதே!” என்று பின்னாளில் வருத்தப்படும்படி இருந்துவிடாதீர்கள்!


உங்கள் வியாபாரம் இன்று நல்ல இலாபம் தரலாம்!

ஒருநாள் மந்தநிலையில் சிறு நஷ்டத்தையும் கொடுக்கலாம்!

நஷ்டம் வரும்காலங்களில் உங்கள் குடும்பத்தை ஓட்ட

என்ன முன்ஜாக்கிரதை ஏற்பாட்டை செய்துள்ளீர்கள்?


திடீரென்று வியாபாரத்தை அப்படியே மூடவேண்டிய நிலைவந்தால்?

ஈட்டிய இலாபமெல்லாம் ஒரே தொழிலில் முடங்கினால்?

ஒரே கூடையில் எல்லா முட்டையும் இருந்து நொறுங்கினால்?

உங்கள் எதிர்காலம் என்னாவதென்று யோசித்திருக்கிறீர்களா!!


இலாபத்தின் ஒருபங்கை எப்போதும் வெளியிலெடுத்து

வெவ்வேறு பாதுகாப்பானவற்றில் முதலீடு செய்யுங்கள்!

எல்லா முட்டையும் ஒருகூடையில் இருக்கக்கூடாதென்பதை

எப்போதும், எல்லாவற்றிலும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!!- [ம.சு.கு 13.07.2023]


[முக்கிய குறிப்பு: சூதாட்டம் இங்கு உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நான் எந்த வகையில் உங்களுக்கு சூதாட்டத்தை பரிந்துரைப்பதுமில்லை / ஆதரிப்பதில்லை. நானே பொழுதுபோக்கிற்காகக் கூட எந்தவகையிலும் சூதாடுவதில்லை]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page