top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 276 - காலம் தாழ்த்தாமல் செயல்படுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-276

காலம் தாழ்த்தாமல் செயல்படுங்கள்!


  • உங்கள் நிறுவனத்தில், ஒவ்வொரு துறையினரும் பொருட்களின் தேவை குறித்து அன்றாடம் அறிக்கை சமர்பிக்கின்றனர். வழக்கமாக வாரம் ஒருமுறை, வியாழக்கிழமை நீங்கள் அவற்றை முழுமையாக சரிபார்த்து எதையெதை, எங்கு, எவ்வளவு வாங்கவேண்டுமென்று முடிவெடுக்கிறீர்கள். அதன்படி பொருட்கள் வார இறுதிக்குள் வாங்கப்பட்டு அடுத்தவார உற்பத்திக்கு தயாராக இருக்கும். உங்கள் நிறுவனத்தின் வழக்கம் இவ்வாறு சென்று கொண்டிருக்க, அடுத்தவாரம், சில முக்கிய காரணங்களினால் உங்களால் நிறுவனத்திற்கு வரமுடியாத சூழ்நிலை இருக்கும் என்று தெரிகிறது. அதற்கேற்ப பொருட்கள் கூடதலாக வாங்கிவைக்க வேண்டிய முடிவுகளை நீங்கள் கவனிக்கவில்லை. விளைவு, நீங்கள் விடுப்பெடுத்த வாரத்தில் தேவைகள் குறித்த பட்டியல் உங்கள் மேசைக்கு வந்திருக்கிறது. ஆனால், முடிவெடுக்க நீங்கள் இல்லாததால், எதுவும் வாங்கப்படவில்லை. அடுத்த திங்கட்கிழமை நீங்கள் அலுவலகம் வரும்போது, பொருட்கள் இல்லாமல், ஊழியர்கள் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கின்றனர்.

  • உங்களுக்கு அவ்வப்போது நெஞ்சில் சிறிது எரிச்சல் தெரிகிறது. 2-3 மாதங்கள் சிறிதாய் வலியும் வந்துபோகிறது. ஆனால் பெரிதாய் பாதிப்பு ஏதுமில்லாததால், நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. உங்கள் மனைவி மருத்துவபரிசோதனைக்கு செல்லலாம் என்று வலியுறுத்தியும், நீங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை என்று தவிர்த்துவிடுகிறீர்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் அதீத நெஞ்சு வலி ஏற்படுகிறது. பக்கத்துவீட்டுக்காரர்களின் உதவியுடன் மருத்துவனையில் சேர்க்கப்படுகிறீர்கள். நல்லிரவில் மருத்துவர்கள் வருகை சற்று தாமதமாக, உங்கள் நிலைமை மேலும் கவலைக்கிடமாகிறது. நீண்ட போராட்டத்திற்குபின் உங்கள் இதய இரத்தகுழாயில் இருந்த 4-5 அடைப்புகள் சரிசெய்யப்பட்டு காப்பாற்றப்படுகிறீர்கள். இந்த அவசரநிலைக்கு யார் காரணம்?

நிறுவனத்தில் அடுத்தவாரத் தேவைகளுக்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு பொருட்களை வாங்கிவைப்பது அவசியம். அதேசமயம், அந்த திட்டமிடல் ஒருபுறம் சரியாக நடந்தாலும், அவற்றிற்கான முடிவெடுக்க வேண்டிய முக்கியமானவர் சிலதினங்கள் இருக்கமாட்டார் என்று முன்கூட்டியே தெரியவரும்போது, அவரது விடுப்பை கருத்தில்கொண்டு, அடுத்தடுத்த வாரத்திற்கு தேவையானதை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குவது குறித்த முடிவுகளை எடுக்கலாம், அல்லது, அவரில்லாதபோது யார் அந்த முடிவுகளை தற்காலிகமாக எடுத்து வேலையை நகர்த்துவதென்று வரையறுக்கலாம். நீங்கள் விடுப்பெடுக்கப் போகிறீர்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், வேலைகள் பாதிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? முன்கூட்டியே உங்களுக்கு தெரிந்துருந்தும், உங்கள் நிறுவனத்தின் முக்கியமானவர்களிடம் இதுகுறித்து சொல்லி, தேவையான முன்னேற்பாடுகளை நீங்கள் செய்யத்தவறினால் நஷ்டம் உங்களுக்குத்தானே!


உங்களுக்கு அவ்வப்போது வரும் சிறுசிறு உடல் உபாதைகள் தான், பெரிய பிரச்சனைகளின் துவக்கித்திற்கான முக்கியமான அறிகுறி. அந்த சிறு உபாதைகள் வரும்போதே, உரிய மருத்துவபரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், பல அவசரநிலை பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம். ஆனால், அன்றாட வேலைபழுவில், உங்கள் உடல்உபாதைகள் குறித்த ஆரம்பகட்ட அறிகுறிகளை நீங்கள் பொருட்படுத்துகிறீர்களா? அப்படி பொருட்படுத்தாமல் விட்டதால் நிறைய மரணங்கள் ஏற்பட்டுள்ளதை நான் கண்கூட கண்டிருக்கிறேன். பற்கலில் சொத்தை சிறிதாய் ஏற்படுவது தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி சரிசெய்யாமல், அது முற்றிப்போய் தாங்கமுடியாத பல்வலி ஏற்பட்டபின் மருத்துவரை பார்த்து பல்லை பிடுங்குபவர்கள்தான் இங்கு ஏராளம். நீங்கள் எப்படி?


அன்றாட வாழ்வில், குறித்த நேரத்திற்கு சாப்பிட வேண்டுமென்பதில் நாமெல்லோரும் தெளிவாக இருக்கிறோம். பசி இருந்தாலும், இல்லாவிட்டாலும், காலை, மதியம், இரவென்று மூன்று வேளையும் சரியாக உணவை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அதேபோல, ஏன் மற்ற காரியங்களையும் அதற்குரிய நேரங்களில் நாம் செய்ய முயற்சிப்பதில்லை? ஏன் அவற்றை அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம்?


அந்தந்த செயல்களை குறித்த நேரத்தில் செய்வதால் என்ன பயன்? செய்யாமல்விட்டதால் நீங்கள் சந்தித்த இழப்புகள் என்ன என்பது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா?

  • உரிய நேரத்தில் துவக்கி செய்தால், தேவையற்ற அவசரகதி வேலைகளை தவிர்க்கலாம்; உங்களுக்கும் தேவையற்ற மனஉளைச்சல், மனஅழுத்தம் இருக்காது;

  • உரிய நேரத்தில் துவக்கி செய்யும்போது, ஒருவேளை சிறுதவறுகள் நேர்ந்தால், அவற்றை திருத்திக்கொள்ள போதுமான நேரம் இருக்கும்; அதனால் நீங்கள் சரியாக செய்துமுடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் தானாக வரும்;

  • உங்கள் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த முடியும். நாளை செய்யலாம் என்று தள்ளிப்போட்டால், அவை அடுத்த நாள் காரியங்களோடு சேர்ந்து தேவையில்லாத மனஅழுத்தத்தையும், செயலின் தரத்தில் குறைபாட்டையும் ஏற்படுத்தும்;

  • உரிய நேரத்தில் திட்டமிட்டு செயல்களை செய்பவர்கள், தங்களின் இலட்சியங்களில் படிப்படியான முன்னேற்றங்களை ஏற்படுத்தி வெற்றிக்காண வாய்ப்பை அதிகரிக்க முடியும்;

  • உரிய நேரத்தில் செய்பவர்களால் மட்டுமே, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். தாமதமாக துவங்குபவர்கள், நாளை செய்யலாம் என்று தள்ளிப்போடுபவர்கள், எப்போதும் செய்யாமல் தாமதித்ததற்கு பொய்யான சாக்குபோக்குகளை தேடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்;

உங்கள் அன்றாட வாழ்வை, அர்த்தமுடையதாக ஆக்கவேண்டிய பொறுப்பு உங்கள் கையில். வாழ்வு அர்த்தமுடையதாக இருக்க, நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை, செயல்களை பொறுப்புடன் உரிய நேரத்தில் காலதாமதமின்றி செய்தால், மன உளைச்சல் இல்லாமல், அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும்;


உங்கள் விருப்பம் எப்படி? நாளை செய்யலாம் என்று தள்ளிப்போட்டு சோம்பேறித்தனத்தில் திளைப்பதா? அல்லது இன்றைக்கு செய்ய வேண்டியதை இக்கணமே துவக்கி உரிய நேரத்தில் பொறுமையாக செய்து முடிப்பதா?


என்ன செய்ய வேண்டுமென்று தெரியும்

எப்போது செய்ய வேண்டுமென்று தெரியும்

ஆனால் இன்னும் செய்யாமல் தாமதிப்பதேன்?


எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை

அவசரகதியில் சமாளிக்கலாம் – ஆனால்

நாளை இந்தபிரச்சனை வரும் என்று

முன்கூட்டியே தெரிந்திருந்தும்,

உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் இருந்தால்

உங்களை “சோம்பேறி” என்று முத்திரை குத்துவதைத்தவிர

வேறென்ன சொல்ல முடியும்!


செய்யவேண்டியவைகளை அவசர-அவசியங்களுக்கேற்ப

பட்டியலிட்டு உடனே செய்யத் துவங்குங்கள்!

உரிய நேரத்தில் துவங்கி வழிநடத்தினாலே போதும்

செயல்கள் சரியான நேரத்தில் முடிக்க வாய்ப்பு அதிகரித்துவிடும்!!


- [ம.சு.கு 12.07.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page