top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 274 - அமைதி காப்பதில் கஷ்டமென்ன?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-274

அமைதி காப்பதில் கஷ்டமென்ன?


  • கால்பந்தாட்டத்தில், “பெனல்ட்டீ சூட்” என்னும் ஒத்தைக்கு ஒத்தையென கிடைக்கும் தண்டனை வாய்ப்பில் எப்படி விளையாடுகிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா? பந்தை உதைக்கும் அணியன் வீரர், அதை இடப்புறம், வலப்பறம், நேருக்குநேர் என்று மூன்று விதத்தில் எப்படி வேண்டுமானாலும் உதைக்கலாம். அவர் உதைத்தபின், பந்தின் திசையை நோக்கி தாவிப்பிடிக்க நேரம் இருக்காது என்பதால், தடுப்பாளர் [கோலி] ஒரு யூகத்தின் அடிப்படையில் ஏதேனுமொருபுறம் தாவுவார். சில சமயங்களில் பந்து தடுக்கப்படும். பல சமயங்களில் பந்து வேறுபக்கமாக கோட்டை கடந்து எதிரணிக்கு புள்ளி சேர்ந்திருக்கும். இடது, வலது, நேர் என்று மூன்று திசையிலும் பந்துவர சமவாய்ப்பு இருக்கிறது. இருபுறமும் தாவுவதற்கு பதிலாய், ஒரே இடத்தில் நின்றாலே, நேருக்குநேர் வரும் பந்தை தடுக்கலாம். ஆனால் இன்று வரையிலும் எந்த தடுப்பாளரும் அப்படி நிற்கவில்லை. ஏதேனுமொரு புறம் தாவுகின்றனர். ஏன் அப்படி தாவுகிறார்கள்?

  • 2008-ஆம் ஆண்டு, சர்வதேச அளவில் மிகப்பெரிய நிதி நெருக்கடியும், பொருளாதார சீர்குலைவும் ஏற்பட்டது. அதற்கான மூலகாரணம், எண்ணற்ற வங்கிகள், வீடுகள் வாங்க-விற்க அதீதமாக கடன் கொடுத்தது என்றனர். அசையாச் சொத்துக்களின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும்போது, சந்தை மிகவும் சாதகமாக இருப்பதாக எண்ணி, எல்லோரும் கடன் வாங்கி சொத்துக்களில் முதிலீடு செய்தனர். அந்த சொத்துக்களின் விலை ஒருநாள் சரியும் என்று வங்கியாளர்களுக்கும், பொருளாதார வல்லுனர்களுக்கும் நன்றாக தெரியும். ஆனாலும், ஊரோடு சேர்ந்து அவர்களும் அதன் போக்கிலேயே இயங்கினர். அளவில்லாம் சந்தையில் பணத்தை திரட்டி கடன் கொடுத்தனர். ஒருபுறம் கடன் வசூலாவது தடைபட்டபோது, திரட்டி இடத்தில் திருப்பிச் செலுத்தமுடியாமல் நூற்றாண்டு பழமைவாய்ந்த நிறுவனங்கள் திவாலாகின. ஏன் இந்த அவலநிலை?

தடுப்பாளர், ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க, பந்து இடது/வலது புறங்களில் சென்றால், எல்லோரும் ஏன் இவர் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறார் என்று சாடுவார்கள். அதேசமயம் அவர் இடப்புறம் குதிக்க, பந்து வலப்புறம் வந்தால், தவறான கணிப்பென்று ஒருமுறை சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசமாட்டார்கள். இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், ஏதாவது ஒருநிகழ்வு ஏற்படும்போது, அதை பொறுமையாக கவனித்து செயல்படுவதற்கு பதிலாக, உடனுக்குடன் ஒரு அனுமானத்தில் ஏதாவதொரு பதில் நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். சிலசமயம் அது சரியாக இருக்கும். பலசமயங்களில் அவை தவறாக இருக்கும். ஒருவேளை தவறுநேர்ந்தால், சற்று பொறுமையாக யோசித்து செய்திருக்கலாமே என்று வருந்துகிறோம். ஏன் அமைதி காத்து செயல்படுவதற்கு பதிலாய் உடனுக்குடன் ஏதாவதொன்றை செய்கிறோம்?


சூழ்நிலைகளை பொறுமையாக பார்த்து, அளவில்லாமல் உயர்ந்துவரும் சொத்துக்களின் விலைகளை பெரிதாய் பொருட்படுத்தாமல், அளவான கடன் வாங்கல்-கொடுக்கலில் நிறுத்திய வங்கிகள் தப்பின. சந்தை ஒருநாள் எதிர்பதமாக திரும்பும் என்பதை கவனத்தில் கொள்ளாமல், தொடர்ந்து பணத்தை திரட்டி கடன்கொடுத்த வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. எல்லோரும் இயங்குகிறார்கள், நாம் மட்டும் அமைதி காக்க முடியாதென்று தவறானவற்றை பின்தொடர்ந்தவர்கள் எல்லோரும் சிக்கிக்கொண்டனர். சூழ்நிலையை புரிந்துகொண்டு, கடன்/முதலீட்டு அபாயங்களை பொறுமையாக அலசிப்பார்த்து முடிவெடுத்தவர்கள், சிறிய அளவு நஷ்டத்தில் தப்பினர்.


இப்படித்தான் நிறைய சூழ்நிலைகளில் நாம் சற்று பொறுமைகாத்து யோசிப்பதற்கு பதிலாக, உடனுக்குடன் ஏதாவதொரு எதிர் செயலை செய்துவிடுகிறோம் அல்லது வாய் வார்த்தைகளில் திட்டிவிடுகிறோம்.

  • ஒரு மருத்துவர், காய்ச்சல் என்று வரும் நோயாளியை முழுமையாக எல்லா பரிசோதனையும் செய்யாமல், அவர் சொன்ன அறிகுறிகளைக்கொண்டு காய்ச்சலுக்கான மருந்தை கொடுத்து அனுப்பிவிடுகிறார். இரண்டு நாட்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை எனும்போது, அடுத்தகட்ட சோதனையை செய்கிறார். ஏன் இப்படி முதல்முறை வெறுமனே ஒரு மருந்துமாத்திரையை எழுதிக் கொடுக்க வேண்டும்?

  • உங்களுக்கு கீழ் பணிபுரிய, 1-2 ஆட்களை தேர்வு செய்ய முயிற்சிக்கிறீர்கள். அப்போதைக்கு உங்களிடம் வந்த 3-4 தன்குறிப்புக்களை [ரெஷ்யூம்] அழைத்து நேர்காணல் செய்து தேர்ந்தெடுத்து விடுகிறீர்கள். அவர்கள் இருவருமே தவறான தேர்வாக இருக்க சமவாய்ப்பு இருக்கிறது. ஏன் பொறுமையாக 10-15 நபர்களை அலசிப்பார்த்து தேர்ந்தெடுப்பதில்லை?

  • குடும்பத்தில், வியாபாரத்தில், சமுதாயத்தில் ஏதாவதொரு பிரச்சனை வந்தால், சிலர் உடனே வழக்கு தொடுத்து விடுகிறார்கள். சுமூகமாக பேசித்தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள், தேவையில்லாமல் ஆண்டாண்டகாலத்திற்கு நீதிமன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. சற்று பொறுமையாக யோசித்து செயல்பட்டிருந்தால், அவை வழக்காக மாறாமல், பரஸ்பர புரிந்துணர்வுடன் தீர்க்கப்பட்டிருக்கலாம்;

  • உங்கள் வீட்டில் கத்தியைக்கொண்டு வேலை செய்யும்போது, சிறிய கீறல்கள் கைகளில் ஏற்படும். அப்போதைக்கு இரத்தக்கசிவை நிறுத்த ஏதாவதொரு துணியை சுற்றிக்கொண்டு விட்டுவிடுகிறீர்கள். ஒரிருநாள் சிறிய எரிச்சலுக்குப்பின் அந்த காயம் மறைந்துவிடுகிறது. அதற்குமாறாக அந்த சிறிய கீறலுக்கு உடனே மருத்துவமனை சென்று பெரிதாய் கட்டுபோட்டால் எப்படி இருக்கும்?

பிரச்சனைக்களின் அளவைப்பொறுத்து, அவற்றிற்கு நீங்கள் செயலாற்ற வேண்டுமா? இல்லையா? என்று தீர்மானிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் நீங்கள் பதிலளிக்க துவங்கினால் தொடர்ந்து பதிலளித்துக்கொண்டே இருக்க வேண்டுயதுதான். அரசியல் தலைவர்கள் குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டுமே பேச முன்வருவார்கள். ஏனையவைகளை கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஏனெனில் அவற்றை பேசினால் தான் பிரச்சனை பெரிதாகும். தாங்கள் கவனிக்கவில்லை எனும்போது, அவை கீழ்மட்டத்தில் எளிதாக தீர்த்துவிடப்படும்.


உங்களிடம் அதிகாரம் இருக்கிறது,

அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதற்காக

எல்லாவற்றிற்கும் நீங்கள் களம் காண முயற்சிக்காதீர்கள்;


ஒருசிலவற்றிற்கு உங்களின் அமைதிகூட தீர்வாகலாம்;

ஒருசிலவற்றிற்கு பொறுமையாக பதிலளிப்பது

அதன் தீவிரத்தை குறைக்கலாம்;


எல்லாப் பிரச்சனைக்கும்

ஏதாவதொன்றை செய்யவேண்டுமென்று

உடனுக்குடன் களத்தில் குதிக்காதீர்கள்!

அவசரக்குடுக்கையாய் இருந்துவிடாதீர்கள்!

பலசமயங்களில் அமைதியும், பொறுமையுமே

சிறந்த தீர்வாக இருந்ததென்பதை மறந்துவிடாதீர்கள்!


- [ம.சு.கு 10.07.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

コメント


Post: Blog2 Post
bottom of page