top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 271 - பொருளாதாரத்தை தொடர்ந்து கவனியுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-271

பொருளாதாரத்தை தொடர்ந்து கவனியுங்கள்!!


  • சர்வதேச அளவில் போர் சூழல் நிலவுகிறது. அதேசமயம், நீங்கள் இருக்கும் நாட்டிற்கும் அந்த போருக்கும் எந்த தொடர்பும் இல்லை. போர் புரியும் இரு நாடுகளும் வேறு கண்டத்தில் இருப்பதால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறீர்கள். இரண்டு மாதத்தில், கச்சா எண்ணெய் விலை 50% அதிகரிக்கிறது. மூன்றாவது மாதம் வண்டி வாடகைகள் 10%-20% அதிகரிக்கின்றன. அதைத்தொடர்ந்து எல்லா பொருட்களின் விலையும் 10%-20% அதிகரிக்கின்றன. போருக்கும், உங்கள் நாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சர்வதேச அளவில் பொருட்களின் வர்த்தகம் படிப்படியாய் பாதிக்கப்பட்டு விலை ஏற்றம் காணுவது உங்கள் வீட்டு வரவு-செலவை நேரடியாக பாதிக்கிறது. நிலவும் போர்ச்சூழலில் வேலை நீடிக்குமா என்று சந்தேகம் இருக்கும்போது, ஊதிய உயர்வு சாத்தியமில்லை! ஆனால் விலைவாசி உயர்ந்துள்ளது. இப்போது சொல்லுங்கள் – நாட்டின் பொருளாதாரம் தெரியாமல் நம்வாழ்வில் திட்டமிட முடியுமா?

  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், நிறைய மானியங்களையும், 10-15 ஆண்டு வரி விலக்குகளையும் அளிக்கிறது. பஞ்சாலை/ஆடைகள் துறையில் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் உங்கள் தொழிலுக்கு அதனால் எதுவும் நேரடி பாதிப்பு இல்லை என்று உங்கள் நண்பர் சொல்கிறார். முதல் 1-2 ஆண்டுகள் எந்த பாதிப்பும் தெரியவில்லை என்ற காரணத்தினால் நீங்கள் மேற்கொண்டு அதை பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட விரவாக்கத்திற்கான முதலீடுகளை இருக்கும் தொழிற்சாலையில் மேற்கொள்கிறீர்கள். ஆனால் மூன்றாவது ஆண்டுமுதல் வியாபாரம் குறையத் துவங்கியது. ஐந்தாவது ஆண்டில், உங்கள் ஊரின் வர்த்தக அளவு 50% குறைந்துவிட்டது. உங்களிடம் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும், அந்த வரிவிலக்குகள் இலாபம் அளிப்பதாக கூறி அங்கு வாங்கத்துவங்கி விட்டனர். உங்கள் புதிய முதலீடு, உற்பத்தியை துவக்கவே இல்லை!

யார்-யாருக்கோ சண்டை நடந்தால், நான் ஏன் வருத்தப்பட வேண்டுமென்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் எங்கோ, யாருகிடையோ நடக்கும் போர், உங்கள் வீட்டு வரவு-செலவை பாதிக்கும்போது, ஏன்? எதனால்? எதுவரை? என்று தெரியாமல் நீங்கள் வீட்டில் உட்கார்ந்தால், தொடர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவராக இருந்தால், உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனைகளும் உங்கள் உற்பத்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடும். எங்கு? எப்போது? எப்படி? பாதிப்பு வரும் என்று தெரிந்துகொள்ள, நீங்கள் பொருளாதார மாற்றங்களை கண்காணித்தால் மட்டுமே சாத்தியப்படும்!


வரிவிகித மாற்றங்களால், சலுகைகளால், புதிய தொழிற்சாலைகள் அங்கு துவங்கும், புதிய கட்டமைப்புகள் உருவாக 1-2 ஆண்டுகள் எடுக்கும். ஒன்றும் மாற்றமில்லை என்று நீங்கள் அமைதிகாத்துவிட்டால், ஒரு நாள் திடீரென்று எல்லாம் மாறிப்போகும். தேவையில்லாமல் வரி அதிகமான இடத்தில் முதலீடு செய்தால், எல்லாமே பயனற்றுப்போகும். தேவைப்பட்டால், இருக்கும் தொழிற்சாலையையேக் கூட அப்படியே புதிய இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டிவரும். அரசின் கொள்கை மாற்றங்கள், வரி சீர்திருத்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மாற்றங்கள் என்று எல்லாவற்றையும் நீங்கள் கவனித்தாக வேண்டும். ஒன்றில் கோட்டைவிட்டாலும், நஷ்டம் உங்களுக்குத்தான்!!


ஏன் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், உலகத்தின் முக்கிய நிகழ்வுகளையும் தொடர்ந்து கவனிக்கவேண்டும் என்றால்

  • நாட்டின் பொருளாதார குறியீடுகளான விலைவாசிப்புள்ளி, வேலையில்லா திண்டாட்டம், வட்டி விகிதங்கள், பங்குச்சந்தை குறியீடுகள் அனைத்தும் உங்கள் வியாபாரத்தில் சிறிய & பெரிய முதலீட்டு முடிவுகளை எடுக்கும்முன்னர் கட்டாயம் அலசி ஆராயவேண்டிய விடயங்கள்;

  • எங்கு? எதில்? எவ்வளவு? முதலீடு செய்ய வேண்டுமென்ற முடிவெடுக்க, எங்கு, என்ன தேவையிருக்கிறது? எங்கு, என்ன மானியங்கள், வரிவிலக்குகள் கிடைக்கின்றன? எங்கு ஆட்களும், மூலப்பொருட்களும் எளிதில் கிடைக்கும்? என்று பொருளாதார ரீதியாகவும், சந்தையின் தேவைகள் ரீதியாகவும் கவனித்து முடிவெடுக்க முடியும்;

  • புதிய அரசாங்க கொள்கைகள் என்ன? பழையவற்றில் மாற்றங்கள் என்ன? வரிவிகிதங்களில் மாற்றங்கள் ஏதேனும் வருமா? என்று கவனித்தால் தான்,வியாபார முடிவுகளை சரியாக எடுக்க முடியும்;

  • உங்கள் குடும்பத்தின் வரவு-செலவுகளும், தேசத்தின் பொருளாதாரமும் நேரடி தொடர்புடையவை. வெறும் ஓய்வூதியம் வாங்கும் பெரியவர்களாக இருந்தால், பொருளாதார மாற்றம், வட்டியை குறைத்து உங்கள் வருவாயை குறைக்கக்கூடும்; பணியாற்றுபவராக இருந்தால், சம்பள உயர்வு, பொருட்களின் விலைவாசி உயர்வென்று எல்லாமே உங்களை நேரடியாக பாதிக்கும்;

தேசத்தின் பொருளாதாரம், வர்த்தக கொள்கைகள் குறித்து தொடர்ந்து அறிந்துகொண்டு, உங்கள் முடிவுகளை எடுப்பது மிகமுக்கியமான தேவை. அதேசமயம், மாறும் நிலைகளுக்கு ஏற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ளாமல், தேவையின்றி வருத்தப்பட்டு மனஉளைச்சலை அதிகரித்துக்கொண்டால், உங்கள் உடல்நிலைதான் பாதிக்கபடும். நாட்டுநடப்பை, பொருளாதார நிலவரத்தை தொடுர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் எல்லாமுடிவுகளிலும், நாட்டுநிலவரம் ஒரு முக்கிய விடயமாக ஆலோசிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்டால், பொருளாதார மாற்றங்களுக்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக வாய்பதிகம் இருக்கும்!


நம் வீட்டின் வரவு-செலவை பார்பதற்கே முடியவில்லை

நாட்டின் பொருளாதாரம் எனக்கெதுக்கு என்று ஒதுங்கிவிடாதீர்கள்!


உங்கள் நாட்டின் பொருளாதாரம் குறித்து தெரிந்துகொள்ளாமல்

உங்கள் எதிர்காலத்தை திட்டமிட முடியாது!

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு திட்டமிட முடியாது!

உங்கள் வியாபாரத்தை சந்தை அபாயங்களிலிருந்து காக்க முடியாது!


நாட்டின் விலைவாசிப்புள்ளி மாற்றங்கள் உங்கள்

வீடு & வியாபாரத்தின் வரவு செலவை பாதிக்கும்!

நாட்டின் வட்டிவிகித மாற்றங்கள் உங்கள்

முதலீட்டையும், கடனையும் பாதிக்கும்!

நாட்டின் அரசியல் மாற்றங்கள் உங்கள்

பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் பாதிக்கும்!


நாட்டின் பொருளாதாரம் தான் எல்லாமே

வீடோ, வியாபாரமோ, கல்வியோ, இயற்கை சூழலோ

எல்லாமே நீங்கள் வாழும் தேசத்தின்

பொருளாதார நிலைமை சார்ந்தே இரிருக்கிறது!!- [ம.சு.கு 07.07.2023]


Recent Posts

See All

நீங்கள் பெரிதாய் செய்யவேண்டுமானால் அதை உங்களுக்காக செய்துதர ஒரு நம்பிகையான ஆதரவுக்கூட்டம் இருக்கவேண்டும்; அந்த ஆதரவு கூட்டத்தை தேடுங்கள்!

மனஅழுத்தம், உளைச்சல், அமைதியின்மையை தவிர்க்க மாத்திரைகளைவிட அன்றாட தியானமும், மூச்சுப்பயிற்சியும் – உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்

Post: Blog2 Post
bottom of page