top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 268 - அதீத திட்டமிடல் குழப்பத்தில் முடியும்?"

Updated: Jul 5, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-268

அதீத திட்டமிடல் குழப்பத்தில் முடியும்?


  • கல்லூரியின் இறுதித் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யுங்கள் என்று ஆசிரியர் சொன்னதை நினைவில் வைத்திருந்த மாணவன் ஒருவன், தேர்வுக்கு பாடம்வாரியாக தயாராவது குறித்து முழுமையாக திட்டம் தீட்டினான். அந்த திட்டத்தின்படி தேர்விற்கு 20 நாட்கள் முன்னர் படிக்க ஆரம்பிக்க வேண்டுமென்றும், ஒவ்வொருநாளும் எந்தெந்த பாடத்தில் எவ்வளவு படித்து முடிக்க வேண்டுமென்றும் விலாவாரியாக திட்டமிட்டான். திட்டமிட்டபடி குறித்த நாளில் படிப்பை ஆரம்பித்தான். அனுதினமும் படித்தான், ஆனால் அவன் திட்டமிட்டதில் பாதியளவு பாடத்தைக் கூட முழுமையாக படிக்க முடியவில்லை. ஏன்?

  • கட்டுமான நிறுவனத்தில் இரண்டு மேலாளர்களுக்கு இரண்டு வெவ்வேறு ஊர்களில் குடியிருப்பு கட்டிட வடிவமைப்பு & கட்டுமான பணி கொடுக்கப்பட்டது. கட்டிட வடிவமைப்புக்களை பொறுத்த வரையில், எந்தளவிற்கு முழுமையான திட்டமிடல் இருக்கிறதோ, அந்தளவிற்கு குழப்பமின்றி வேலை எளிதாக நடக்கும். அதை புரிந்துகொண்ட மேலாளர்கள் அடிப்படை திட்டமிடல்களில் கவனம் செலுத்தினர். ஆனால் அதை முழுமையாக முடிப்பதிலும், களத்தில் வேலையை துவக்குவதிலும் இருவரும் மாறுபட்டிருந்தனர். ஒரு மேலாளர். வடிவமைப்பு குறித்த பெரிய அம்சங்கள் முடிவானதும், களத்தில் அஸ்திவார வேலைகளை ஆரம்பித்து விட்டார். இன்னொருவர், வடிவமைப்பின் அறைவாரியான எல்லா திட்டங்களையும் முடித்தபின்தான் துவங்க வேண்டுமென்று திட்டமிடலில் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அதனால் அவர் கிட்டதட்ட 2 மாதங்கள் தாமதமாக வேலையை துவக்கநேரிட்டது. அதேசமயம், ஆரம்பிப்பதிலிருந்த 2 மாதகால தாமதம், வேலையை முடிக்கும்போது கிட்டத்தட்ட 4 மாதங்களாகவும் அதிகரித்திருந்து.

ஒருநாளைக்கு இந்திந்த பாடத்தில், இத்தனை தலைப்புக்களை படித்து முடிக்க வேண்டுமென்று திட்டமிடலாம். திட்டளவில் அது சாத்தியமாக தோன்றியது, யதார்த்தத்தில் அதிக நேரம் எடுத்தது. நான்கு தலைப்புக்களை ஒருநாளில் முடிக்க திட்டமிட்டவனுக்கு, இரண்டு தலைப்புக்கள் முடிப்பதே சிறமமாக இருந்தது. திட்டமிடும்போது காலை 6 மணியிலிருந்து 8 மணிவரை, தொடர்ந்து 12-14 மணிநேரம் படிப்பதற்கு திட்டமிட்டிருந்தான். ஆனால் பாடபுத்தகத்தை அவ்வளவு நேரம் கவனம்சிதறாமல் படிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு 7-8 மணிநேரங்கள் தான் அவனால் படிக்க முடிந்தது. திட்டமிடும்போது, எல்லாவற்றின் நேரமறைகளை மட்டும் கருத்தில்கொண்டு, இவ்வளவு நேரத்தில் முடிக்கமுடியும் என்று எண்ணிவிட்டான். ஆனால் செயல்படுத்தும்போதுதான் அதில் உள்ள யதார்த்த சிக்கல்கள் தெரியவருகின்றது. அப்போது திட்டத்திற்கும், நடப்பவைக்கும் எண்ணற்ற வேறுபாடு ஏற்படுகிறது. திட்டத்தில் போதுமான கால இடைவெளிகள் கொடுக்கப்பட்டிருந்தால், சில தாமதங்களை அந்த இடைவெளியில் முடித்திருக்கலாம். இடைவெளியில்லாம் திட்டத்தை அமைத்திருந்தால், பலவற்றை முடிக்கமுடியாமல் தேர்வுகளை சந்திக்க வேண்டியதுதான்.


இப்படிதான் பல மாணவர்கள் தேர்விற்கு 2 தினங்களுக்கு முன்னால் உட்கார்ந்தால் பாடம் முழுமையும் படித்து விடலாம் என்று திட்டமிடுகின்றனர். அந்த இரண்டுநாட்கள் கடுமையாக படிக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் அந்த குறுகிய காலத்தில் பெரும்பாலும் படித்து முடிக்க முடியவில்லை. அன்றாடம் படிக்காததால், எல்லாவற்றையும் புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்பட்டது. அதனால், தேர்விற்கு 60%-70% மட்டுமே அவர்களால் பாடங்களை கடைசியில் படித்துமுடிக்க முடிகிறது. அதைவைத்து தேர்வில் ஏதோ தேறி விடுகிறார்கள். ஆனால் முடிவுகள் வரும்வரை பயத்திலும், சந்தேகத்திலுமே இருக்கவேண்டி இருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு வரவேண்டுமா?


திட்டமிடல் மிகமிக அவசியம் தான். ஆனால் எங்கு திட்டமிடல் நிறுத்தப்படவேண்டும், எப்போது களத்தில் வேலை துவக்கப்படவேண்டும் என்பது முக்கியம். திட்டமிட்டுக்கொண்டே இருந்தால், அதற்கு முடிவே இருக்காது. ஒவ்வொரு நாளும் புதுப்பது யோசனைகள் வரும். அதற்கேற்ப திட்டங்கள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். விளாவாரியாக திட்டமிட ஆரம்பித்தால், விளக்கங்களுக்கு அளவே இருக்காது. எல்லாவற்றையும் முடித்த பின்தான், வேலையை துவங்குவேன் என்றால் தேவையற்ற தாமதங்கள்தான் மிஞ்சும். முக்கிய வடிவமைப்புக்கள் குறித்ததிட்டமிடலும், அனுமதியும் கிடைத்தவுடன் முதல்மேலாளர் களத்தில் அஸ்திவார வேலைகளை ஒருபுறம் துவக்கினார். இன்னொரு குழு, அடுத்தகட்ட விளக்கத்திட்டங்களை தொடர்ந்து கொண்டிருந்தது. களத்தில் வேலைகள் நடக்கும்போது ஏற்படும் சிக்கல்கள், அஸ்திவாரத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து திட்டக்குழுவுடன் விவாதிக்கபட்டது. களத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்கு ஏற்ப, அடுத்த கட்ட திட்டங்களிலும் போதுமான மாற்றங்களை அவர்கள் ஒவ்வொன்றாக செய்து திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தானர். அடுத்தடுத்த விளாவாரியான திட்டங்கள், குறித்த நேரத்தில் களநிலவரங்களுக்க ஏற்ப தயாரானது. அவரால் திட்டமிட்ட காலத்தில் 2ஆண்டுகளில் வேலையை முழுமையாக முடிக்க முடிந்தது.


அதேசமயம் இரண்டாவது மேலாளர் முழுமையான திட்டமிடலுக்கு கூடுதலாக 2 மாதங்கள் எடுத்து எல்லா அனுமதிகளையும் பெற்றார். களத்தில் வேலையை துவக்கியபோது சின்னச்சின்ன சிக்கல்கள் வந்தன. அவற்றிற்கான மாற்றங்களை களத்தில் செய்தனர். ஆனால் ஒவ்வொரு மாற்றமும் அவர்களிடம் தயாராக இருந்த விளாவாரியான திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. களத்தில் தேவைப்பட்ட மாற்றங்கள் கிட்டதட்ட அவர்களின் அமைப்பு & திட்டமிடல் வேலைகளை இரட்டிப்பாக்கியது. அதனால் கள வேலைகளில் நிறைய தாமதம் ஏற்பட்டது. அதீதமான திட்டமிடலால், நிறைய வேலைகளை இரண்டாவது முறை செய்ய நேரிட்டது. அதன் காரணமாக அந்த திட்டம் 4 மாதகால தாமதத்தில் முடிந்தது. இப்படி நீங்கள் ஏதாவது முன்கூட்டியே திட்டமிட்டு, பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் எல்லா திட்டமிடலும் வீணாகியிருக்கிறதா!


திட்டமிடல் வேண்டும். ஆனால் அது எந்தளவுவரை இருக்கவேண்டும், எங்கு களவேலைகள் துவங்க வேண்டுமென்ற தெளிவு உங்கள் அனுபவத்தில் கற்றிருக்க வேண்டும். அந்த அனுபவ அறிவுதான் இங்கு முக்கியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்:

  • திட்டங்கள் எதுவானாலும், அதுகுறித்த முழுமையான விவரங்களை கூடுமானவரை முன்கூட்டியே சேகரிப்பது முக்கியம். களம்குறித்த முழுமையான புரிதல், தேவையற்ற களமாற்றங்களை தவிர்க்கும்;

  • திட்டச் செயல்பாடுகளில் பெரிய விடயங்கள், சின்னசின்ன விளக்கமான விடயங்கள், களத்தில் தீர்மானிக்கப்படவேண்டிய விடயங்கள் எதுவென்று தெளிவாக பிரிக்கப்பட வேண்டும்.

  • எதற்கடுத்தது எது? எந்தெந்த வேலைகள் உடனே துவங்கலாம்? எந்தெந்த வேலைகள் மற்றவற்றை சார்ந்துள்ளது என்று தெளிவாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப திட்டமிடலை செய்து வழிநடத்தினால், தேவையற்ற காலவிரயங்களும், மனிதவள விரயங்களும் தவிர்க்கப்படும்;

  • வரைபடங்கள் வரவில்லையென்று களத்தில் வேலைநின்றால் தாமதமாகும். அதேசமயம் முன்கூட்டியே செய்யப்பட்ட வரைபடங்களில் களமாற்றங்களால் நிறைய மாற்றங்கள் செய்ய நேர்ந்தாலும் நேரம் வீணாகும். கூடியவரை இரண்டு வேலைகளை ஒன்றுக்கொண்று கைகோர்த்து செல்லுமளவிற்கு திட்டமிடல் இருந்தால் தேவையற்ற விரயங்களை கட்டுப்படுத்த முடியும்;

  • கூடுமானவரை, பெரிய திட்டங்களில் அனுபவமுள்ளவர்களை குழுவில் சேர்த்துக்கொள்வதும், அவர்களிடம் ஆலோசனைகள் கேட்பதும், பல்வேறு சிக்கல்களை முன்கூட்டியே கனித்து செயல்பட உதவும்;

என்னதான் திட்டமிட்டாலும், பல்வேறு களச்சூழ்நிலைகளால், ஆங்காங்கே தவறுகளும், தாமதங்களும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உங்கள் திட்டங்களில் போதுமான கால இடைவெளிகள் இருந்தால், அவ்வப்போது ஏற்படும் தாமதங்கள், தவறுகளை அந்த இடைவெளியில் திருத்திக்கொள்ள முடியும். அதீதமாக திட்டமிட்டு 24 மணிநேரமும் இயங்கும்வண்ணம் செய்தால், அவ்வப்போது பெரியகுழப்பங்கள் உருவாகிவிடும்;


எல்லாவற்றையும் கூடியவரை திட்டமிட்டு செய்ய வேண்டும்;

ஆனால் அந்த திட்டமிடல் காலம் கடந்துசென்றால் பயனென்ன?

நிறைய யோசித்து எதை தேர்ந்தெடுப்பதென்று குழம்பி – முடிவெடுக்காமல்

கடைசியில் இழுபறியில் நின்றால் நஷ்டம் யாருக்கு?


திட்டமிடுங்கள் – அளவோடு [80%-90% வரை]

கடைசி 10%-20% -த்தை களத்தில் பார்த்துக்கொள்ளலாம்;

எவ்வளவு திட்டமிட்டாலும் களத்தில் சிறுமாற்றம் தேவைப்படும்;

திட்டமிடுதலில் 10%-20% இடைவெளி இருக்கட்டும்

அவை களத்தின் சூழ்நிலைக்கேற்ற மாற்றத்திற்கும்

தவறவிட்ட நிகழ்வுகளையும், நேரத்தையும் சரிசெய்ய வாய்ப்பளிக்கும்;


குழப்பமின்றி அளவோடு திட்டமிடுங்கள்;

வெற்றி தானாய் உங்கள் வசமாகும்;


- [ம.சு.கு 04.07.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page