“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-267
ஏன் திட்டமிட வேண்டும்?
உணவு விடுதி உரிமையாளர் ஒருவர், நாட்காட்டி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, தன் சிறிய நாட்குறிப்பில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அடுத்த 1-2 மாதங்களுக்கான நாட்காட்டியை முழுமையாக பார்த்து தன் குறிப்புக்களை முடித்தார். அவர் குறிப்பை பார்த்தபோது, எந்தெந்த நாட்கள் விசேட நாட்கள், முகூர்த்த நாட்கள், சஷ்டிகள், அமாவாசை, பௌர்னமி, திருவிழா நாட்கள் என்று குறிப்பெடுத்த, அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று குறித்திருந்தார்! அடுத்த 1-2 மாதங்களுக்கு என்ன வேண்டும் என்று இப்போது திட்டமிடுவது அவசியமா?
ஒரு படிக்காதவர், வீடுகட்ட ஆரம்பித்தார். அவரது நண்பன், ஒரு பொறியாளரைப் பார்த்து கட்டிட அமைப்பை திட்டமிட்டு வரைபடம் செய்துகொள் என்று அறிவுறத்தினார். ஆனால் அந்த நபர், கொத்தனார் தனக்கு நன்கு தெரிந்தவர், அவரிடம் தானே சொல்லி வேலைகளை செய்துகொள்வதாக சொல்லி, கட்டிட திட்டமிடலை தவிர்த்தார். அப்படி சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டிடம் கட்டினால் என்னவாகும்?
உணவக உரிமையாளர், ஒருவேளை திட்டமிடாமல் நடத்தினால் பொதுவாக என்னவாகும்?
ஒருநாள் செய்துவைத்த உணவு முழுமையாக தீராமல் வீணாகும்;
ஒருநாள் கூட்டம் நன்றாக இருக்கும், ஆனால் உணவு குறைவாக செய்யப்பட்டிருக்கும்; பற்றாக்குறையால் வியாபார வாய்ப்பு நழுவிப் போகும்;
இப்படி வியாபார வாய்ப்பு கிடைப்பது தவறவிட்டால் எப்படி வளருவது? அதேசமயம், தினம்தினம் உணவை வீணடித்தால், எப்படி இலாபம் சம்பாதிப்பது? வியாபாரத்தில் வீணாவதும் இல்லாமல், பற்றாக்குறையும் இல்லாமல் திட்டமிட்டு செய்பவர்கள், வாடிக்கையாளர் சேவையில் சிறந்துவிளங்கி மென்மேலும் வளர்ச்சி காண்கிறார்கள். திட்டமிடல் இல்லாதவர்கள், தொடர்ந்து வீணடிப்பதும், பற்றாக்குறையுமாக தங்கள் வியாபாரத்தை நகர்த்தி, தொடர் நஷ்டத்தில் ஒருநாள் மூடிவிடுகின்றனர்.
நாளைய தேவைக்கு இன்று திட்டமிட்டால் போதுமே, ஏன் 1-2 மாதங்களுக்கு திட்டமிடவேண்டும் என்ற கேள்வி அடுத்துவரும்.
சிலபொருட்கள் மொத்தமாகவும், சிலவற்றை சில்லறையிலும் வாங்கவேண்டும். சில பொருட்கள் உடனே கிடைக்கும், சிலவற்றை வாங்க 10-15 நாட்கள் காத்திருக்க வேண்டும். வியாபாரத் தேவைக்கு ஏற்ப, எதையெதை எப்போது, எவ்வளவு வாங்க வேண்டுமென்று திட்டமிட 1-2 மாதங்கள் முன்னர் திட்டமிட்டால்தான் சரியாக இருக்கும்;
கூட்டமான தினங்களுக்கு அதிக ஊழியர் வேண்டும். கூட்டம் குறைவென்றால் குறைவானவர்களை வைத்து சமாளித்துக்கொள்ளலாம். ஊழியர்கள் தேவையளவு குறித்த திட்டமிடல் இருந்தால்தான், யார்யாருக்கு என்று விடுப்பளிக்க வேண்டும், யாரை எங்கு அனுப்ப வேண்டுமென்று தெளிவுடன் செயல்படமுடியும்;
வீடுகட்டுவதற்கு, தானே இருக்கும்போது வரைபடம் எதற்கென்று தவிர்த்த நபருக்கு, என்னவெல்லாம் நடக்குமென்று ஒருநிமிடம் யோசித்துப்பாருங்கள்;
இவர் 10x16 என்று அளவு சொன்னால், கொத்தனார் 16x10 என்று அமைத்திருப்பார். கதவும், ஜன்னலும், அவருக்கு தேவைப்படும் இடத்திலிருந்து விலகியிருக்கும்.
தினமும் அவர் பக்கத்திலேயே இருந்து எது வேண்டும்? எது வேண்டாம்? என்று சொல்ல வேண்டும். ஒருநாள் வெளியில் சென்றாலும், இங்கு வேலை பாதிக்கப்படும். எதை எங்கு வைக்க வேண்டும் என்று அவர் வந்து சொல்லும்வரை ஊழியர்கள் காத்திருக்க நேரிடும்; 3-4 மாதத்தில் முடிக்கவேண்டிய கட்டிடம் 7-8 மாதங்கள் எடுத்தது;
பொறியாளர், அன்றைய கட்டிவிதிமுறைகளுக்கு ஏற்ப திட்டமிட்டிருப்பார். விதிமுறைகள் தெரியாததால், கட்டிடம் முடித்து அரசாங்கத்திடம் ஒப்புதலுக்கு வைக்கும்போது, சில விதிமுறை மீறல்களால் பெரியபாதிப்பு ஏற்படுத்தும்;
சந்தையில் புதிதாக வந்திருக்கும் பொருட்களை பொருத்த கட்டிட அமைப்பு ஏதுவாக இருக்காது. ஆங்காங்கே சிறிது இடிக்கவேண்டி வரும்;
இப்படி திட்டமிடாமல் கட்டிடத்தை துவக்கி, 10 இலட்சத்தில் முடிக்கவேண்டிய வேலையை, 15 இலட்சத்திற்கு இழுத்துச் சென்றால், யாருக்கு நஷ்டம்.
உங்கள் இலட்சியத்தை நோக்கிய செயலுக்கு, சரியான திட்டமிடல் இருந்தால்,
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும்; எதை எப்போது துவக்க வேண்டும் என்று எல்லோரிடமும் முன்கூட்டியே சொல்லி புரிய வைக்க முடியும்;
எந்தெந்த செயலுக்கு, எப்போது, எவ்வளவு ஆட்களை ஈடுபடுத்த வேண்டும் என்று திட்டமிட முடியும்;
யார்யாருக்கு என்னென்ன வேலை, பொறுப்புக்களை என்ன என்று தெளிவுற சொல்லி செயல்படுத்த முடியும்;
எதிர்வரும் சிக்கல்கள் என்ன, சவால்கள் என்ன என்று முன்கூட்டியே ஊகித்து சமாளிக்க ஏற்பாடுகளை செய்ய முடியும்;
என்ன திட்டமிட்டோம், இப்போது எவ்வளவு செய்திருக்கிறோம், தாமதங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்று அவ்வப்போது ஆராய்ந்து உரிய திருத்தங்களை செய்து, இலட்சியத்தை குறித்த நேரத்தில் அடைய முடியும்;
திட்டமிடல் இல்லாவிட்டால், மேற்கூறிய எல்லாமே எதிர்பதமாக நின்று, வேலையை தாமதப்படுத்தி, வாழ்க்கையையே சிக்கலில் நிறுத்திவிடும்; உங்கள் வாழ்க்கையை மனநிறைவோடு முன்னேற்றத்தை நோக்கி திட்டமிட்டு வழிநடத்தப்போகிறீர்களா? திட்டமிடாமல் அப்போதைக்கப்போது வந்ததை செய்து காலத்தை கடத்தப் போகிறீர்களா?
இலட்சம் பேர் கொண்ட போர்ப்படையை வழிநடத்துவதானாலும்
தனியொருவனாக உங்களை நீங்களே வழிநடத்துவதானாலும்
என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டமிடல் முதற்கண் தேவை!
ஏன்? எதற்கு? என்ற தெளிவோடு
எப்படி? எப்போது? எதைக்கொண்டு? என்று திட்டமிட்டு
யாரொருவர் படிப்படியாக செயல்படுகிறாரோ
அவரின் வெற்றிக்கான வாய்ப்புக்கள் பன்மடங்கு அதிகரிக்கிறது!!
உங்கள் விருப்பம் எப்படி?
வருவதை எதிர்கொண்டு காலம்கடத்தப் போகிறீர்களா?
திட்டமிட்டு செயல்படுத்தி வளர்ச்சியடையப் போகிறீர்களா?
- [ம.சு.கு 03.07.2023]
Comments