“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-266
எங்கு, எப்படி நிலைப்படுத்துகிறீர்கள்.?
ஒரு காகிதத்தில், அருகருகே இரண்டு கோடுகள் வெவ்வேறு ஆளவுகளில் வரையப்பட்டது. இரண்டு கோடுகளையும் மற்றவர்களிடம் காட்டி, அந்த இருகோடுகளில் எது பெரியது, எது சிறியதென்று கேட்கப்பட்டது. எல்லோரும் சரியாக சொன்னார்கள். அதே கோடுகளை இரண்டு வெவ்வேறு காகிதங்களில் வரைந்து தனித்தனியாக காட்டி எது சிறிது-பெரிதென்று கேட்கப்பட்டபோது, 50%-ற்க்கும் அதிகமானவர்கள் குழம்பி தவறாக பதிலளித்தார்கள். முதல் உதாரணத்தில் சரியாக சொன்னவர்களால், இரண்டாவது முறை குழம்பி நின்றார்கள். ஏன் இந்த குழப்பம்?
ஓவியங்கள் விற்கப்படும் ஒரு கடையில், பல சுமாரான ஓவியங்களுக்கு மத்தியில், கண்களுக்கு தென்படும் வகையில் ஒரு நல்ல ஓவியம் ஒன்று வைக்கப்படுகிறது. மற்ற ஓவியங்களை விட, அந்த ஓவியத்தின் விலை சற்று கூடுதலாக சொல்லப்பட்டபோது, மக்கள் சரியென்று ஏற்றுக்கொண்டனர். அதே ஓவியத்தை, இன்னொரு கடையில், இன்னும் பல அழகான ஓவியங்களுக்கு மத்தியில் வைத்தார்கள். அந்த ஓவியத்திற்கு அதே அதிகவிலையை நிர்ணயிக்கப்பட்டது. இப்போது யாரும் அந்த ஓவியத்திற்கு அந்த அதிகவிலையை கொடுக்க முன்வரவில்லை.ஏன்? ஓவியம் ஒன்றேதான் – ஆனால் மக்களின் கருத்து ஏன் மாறியது?
இரண்டு கோடுகளும் அருகருகே இருக்கும்போது, அதன் உயரத்தை எளிதாக ஒப்பிட முடிந்தது. கையில் எந்தவொரு அளவுகோளும் இல்லாமல், பெரிது-சிறிது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இரண்டு கோடுகளும் வெவ்வேறு காகிதங்களில் இருக்கும்போது, ஒப்பிடுவது கடினமானது. இதே சோதனையை 3-4 கோடுகளை கொண்டு முயற்சித்தபோது, மக்களின் கணிப்பில் மேலும் தவறுகள் நேர்ந்தது. ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கும் பொருட்கள், அருகருகே இருக்கும்போது, கண்களால் அதன் அளவீடுகளை கணிக்க முடிகிறது. அதே கோடுகள் வெவ்வேறு காகிதங்களில் இருக்கும்போது, அளவீட்டை கணிப்பது கடினமாகிவிடுகிறது.
அழகான ஓவியங்கள் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும். அதை சற்று கூடுதல் விலைகொடுத்து வாங்கவும் தயாராக இருப்பார்கள். கடையில் சுமாரான ஓவியங்களெல்லாம் 600-800 ரூபாய் வரை விற்கப்படும்போது, அவற்றின் நடுவே அழகான ஓவியம் ஒன்று 1000 ரூபாய் என்று குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்தால், அது அவ்வளவு கூடுதலாக தெரியாது. அதே ஓவியத்தை (ரூ.1000/-) பல்வேறு சிறந்த ஓவியங்களுக்கு (ரூ.700-900)அருகில் வைத்தால், அந்த ரூ.1000/- என்று குறிப்பிடப்பட்ட ஓவியம், சற்று கூடுதலான விலை என்று சொல்வார்கள்.
ஓவியம் மாறவில்லை, விலை மாறவில்லை,
வைக்கப்பட்ட இடமும், அதை சுற்றியுள்ள ஓவியங்களும் மாறின
விலை சரியென்று சொல்லப்பட்டது
இப்போது அதிகமென்று உணரப்படுகிறது!
இப்படித்தான் உங்கள் பொருளும், நீங்களும்!!
எதோடு ஒப்பிட்டு வைக்கப்படுகிறீர்கள் என்பதைப்பொறுத்து
உங்கள் பொருளுக்கான விலையும்
உங்களுக்கான மதிப்பும் நிர்ணயமாகிறது!!
நீங்கள் எந்தப் பொருளை, எங்கு, எப்படி வைக்கிறீர்கள் என்பது ஏன் முக்கியமாகிறது?
அந்த பொருளின் தனித்துவம் எளிதாக வெளிப்பட வாய்ப்பு கிடைக்கும்;
அந்த பொருளுக்குரிய குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைய வாய்ப்பாகும்;
சரியாக இடத்தில், சரியான நேரத்தில் பொருட்களை நிலைநிறுத்துவது, அதற்குரிய சரியான விலையை நிர்ணயித்து பெற வாய்ப்பாகும்;
ஒரு சிலசமயங்களில், நீங்கள் எவ்வளவுதான் இடம், பொருள், ஏவல் பார்த்து, உங்கள் பொருட்களை சந்தையில் நிலைநிறுத்தினாலும், உங்களால் விற்பனை அளவையும், விலையையும் அவ்வளவாக கட்டுப்படுத்த முடியாது. அந்த பொருளுக்கான சந்தையளவு நிறைவுநிலையை அடைந்திருக்கும். சந்தையளவை புரிந்து விளம்பரங்களுக்கு செலவழிப்பது முக்கியம்.
உங்கள் வியாபார வெற்றிக்கு, உங்கள் பொருட்களை, உங்கள் சேவைகளை, உங்களை, சந்தையில் ஆயிரமாயிரம் பொருட்களுக்கு மத்தியில் சரியாக நிலைநிறுத்த என்ன வேண்டும்?
உங்கள் வாடிக்கையாளர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கை முறைமை என்ன என்று தெளிவாக ஆய்வுசெய்யுங்கள்?
சந்தையின் தேவை என்ன? எதிர்கால விரிவாக்க சாத்தியக்கூறுகள் என்ன? தற்போதைய தேவையென்ன, நாளைய தேவை என்ன என்று ஆய்வுசெய்திடுங்கள்;
உங்கள் பொருட்களின் தனித்துவம் என்ன? அதை எப்படி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதென்று திட்டமிடுங்கள்;
உங்கள் பொருளுக்கும், உங்களுக்குமான போட்டியாளர்கள் யார்? அவர்களின் தனித்துவம் என்ன? என்று பட்டியலிடுங்கள்;
உங்கள் நிலைநிறுத்தலின் சாதக-பாதகங்களை தொடர்ந்து மறுஆய்வு செய்துகொண்டே இருங்கள்;
உங்கள் பொருட்களை,
உங்கள் சேவைகளை,
உங்கள் தனித்திறமையை
சரியான கூட்டத்திடம் கொண்டுசேர்க்க
அதை எங்கு? எப்படி? எப்போது? நிலைப்படுத்தி
விளம்பரப்படுத்துகிறீர்கள் என்பது அதிமுக்கியம்;
சரியாக நிலைபடுத்திவிட்டால்
உங்கள் வாழ்க்கை எளிதாகும்;
நிலைப்படுத்துவது ஒருநாளுக்கு மட்டுமான வேலையில்லை!
தொடர்ந்து சந்தையின் மாற்றங்களுக்கேற்ப
உங்களை நீங்கள் சுய ஆய்வு செய்து
முன்னேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்;
- [ம.சு.கு 02.07.2023]
Comments