top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 265 - பயிற்சி வகுப்புக்களுக்கு போய்வாருங்கள்..!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-265

பயிற்சி வகுப்புக்களுக்கு போய்வாருங்கள்..!


  • பலபெரிய நிறுவனங்களில், ஊழியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கென்று வருடாவருடம் குறிப்பிட்ட தொகையை நிதிக்கொள்கையில் ஒதுக்கீடு செய்கிறார்கள். நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் முதல் கடைக்கோடி ஊழியர் வரை எல்லோருக்கும் வெவ்வேறு நேரங்களில் அவரவர் துறை சார்ந்த பயிற்சிகள் கட்டாயம் தேவைப்படுகிறது. நீங்கள் என்னதான் செய்கின்ற வேலையை நன்றாக செய்தாலும், அந்த துறையில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள், மேம்பாடுகள் குறித்து தொடர்ந்து அறிந்துகொள்ள வாய்ப்புக்கள் குறைவாக இருக்கக்கூடும். நிபுணர்களை கொண்டு நடத்தப்படும் பயிற்சி வகுப்புக்கள், உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், உங்கள் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளவும், புதிய முறைமைகளை கற்றுக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் எந்த பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தீர்கள்? அங்கு நீங்கள் கற்றது என்ன?

  • எங்கள் ஊரில் பட்டுச் சேலைக்கடைகள் மிக அதிகம். ஊரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டுச் சேலைகள் கைத்தறி மூலம் அதிகளவில் நெசவு செய்யப்படுவதால், நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தொழில்முறையில் நிறைய மாற்றம் வந்திருந்தது. குறிப்பாக கொரோனா ஊரடங்களைத் தொடர்ந்து, விற்பனைகள் பெருமளவில் இணைய வழிக்கு மாறிவருகின்றன. கடையே வைக்காமல், வீட்டிலிருந்தே பெரிய கடையை விட அதிகளவில் ஒருசிலர் வியாபாரம் செய்கிறார்கள். அதிலும் அவர்கள் ஒன்றும் பெரிதாய் தொழில்நுட்பம் சார்ந்து படித்திருக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. அது எப்படி சாத்தியம்?

உங்களின் தனித்திறன்களை பட்டைதீட்டவும், புதியவற்றை அறிந்துகொள்ளவும், தொடர்ந்து பயிற்சி தேவைப்படுகிறது. மேலான்மை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மேலான்மை குறித்த பயிற்சி வகுப்புக்கள், உற்பத்தி கூடத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பம், உற்பத்தி முறைமை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்புக்கள், நிதிமேலான்மையில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சட்ட மாற்றங்கள் குறித்த பயிற்சி வகுப்புக்கள் என்று நிறைய நடந்துகொண்டிருக்கிறது. யார்யாருக்கு எந்தெந்த பயிற்சிகளை கொடுக்க வேண்டுமென்று திட்டமிட்டு நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். உங்கள் நிறுவனத்தில், அதற்கான முறையான பயிற்சித்திட்டத்தை செயல்படுத்துகிறீர்களா?


கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களால் அவர்களை தேடிவரும் வாடிக்கையாளருக்கு மட்டுமே விற்பனை செய்யமுடிகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வளர்ச்சியில், வீட்டிற்கு தேவையான பொருட்கள் & சமைக்கப்பட்ட உணவு என்று நிறைய பொருட்கள் வீட்டிலிருந்தே இன்று கைப்பேசி, கணிணி மூலம் வாங்கப்படுகிறது. பயணம், தங்கும் விடுதி குறித்த பதிவுகளும் வீட்டிலிருந்து செய்யமுடிகிறது. இப்படி மாறிவரும் சந்தைத்தேவைகள் புரிந்துகொண்ட சிலர், அதற்கான பயிற்சிகளை தேடிப்படித்தனர். எப்படி தொழில்நட்பத்தை பயன்படுத்தி புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பது, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதென்று கற்றார்கள். படிப்படியாக இணையவழி வியாபாரத்தை விரிவுபடுத்தி பல்லாயிரம் வாடிக்கையாளர்களோடு இன்று சிறப்பாக நடக்கிறது.


மாறிவரும் சந்தை குறித்து அறிந்துகொள்ளவும், புதிய முறைமைகளை கற்றுக்கொள்ளவும், அந்த துறைசார்ந்த நிபுணர்களிடம் அவ்வப்போது கலந்துரையாடுவதும், பயிற்சிகள் பெறுவதும் உங்கள் அறிவை விசாலப்படுத்துவதோடு, சந்தையின் புதிய சவால்களை சந்திக்க உங்களை முழுமையாக தயார்படுத்துகிறது. அதைபோல, பல்துறை நிபுணர்களுக்கு [நிதி, சட்டம், கணக்காளர், பொறியாளர், மருத்துவர்,....] அவர்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் குறித்து அறிந்துகொள்ள, அவர்களின் துறை சார்ந்த சங்கங்களும், கூட்டமைப்புக்களும் தொடர்ந்து பயிற்சி வகுப்புக்களை நடத்துகிறது.


பயிற்சி வகுப்புக்களுக்கு அவ்வப்போது செல்வதனால் என்ன பயன் விளைகிறது?

  • உங்கள் துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடவும், உங்கள் அடிப்படை சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்;

  • உங்கள் துறையில் புதிய முயற்சிகள் என்னென்ன நடக்கின்றன? புதிய ஆராய்ச்சிகள் என்ன நடந்து கொண்டிருக்கின்றன? அவற்றின் வெற்றி-தோல்விகள் எப்படி? என்று பயிற்சியாளர்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்;

  • உங்கள் துறையில் இருக்கும் மற்றவர்களுடன் தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும்; துறையின் தற்போதைய நிலைமை, எதிர்காலம் குறித்து நிபுணர்களுடைய கருத்துக்கள் மட்டுமல்லாது, மற்ற பங்கேற்பாளர்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ள முடியும்;

  • நீங்கள் மட்டுமே தனியாக செய்துகொண்டிருந்தால், உங்களின் கண்ணோட்டம் குறுகியதாக இருக்கும். பயிற்சி வகுப்புக்களும், துறை சார்ந்தவர்களுடனான கலந்துறையாடலும் உங்களின் எண்ணங்களை விசாலப்படுத்தி, சந்தையின் புதிய சவால்களை சந்திக்க உங்களை தயார்படுத்தும்;

ஒருசிலர், சில பயிற்சி வகுப்புக்களுக்கு சென்றுவந்தபின் அது தேவையற்றதென்று கருத்து சொல்லி இருக்கிறார்கள். எந்த பயிற்சி வகுப்பிற்கு போகவேண்டும் என்று சற்று ஆராய்ந்து தேர்வு செய்யவேண்டும். பயிற்சிக்கு போகவேண்டும் என்பதற்காக மீண்டும் அடிப்படைகளை கற்றுக்கொடுக்கும் பயிற்சிக்கூடத்திற்கு செல்வதில் பயனில்லை. உங்களின் தற்போதைய அறிவு, திறமைகளை பொறுத்து, அடுத்தகட்ட நிபுணத்துவ பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும்.


அடிப்படைகளை கற்பதானாலும், புதுமைகளை கற்பதானாலும், பயிற்சிக்கூடங்கள்தான் எல்லோருக்குமான சிறந்த இடம். நீங்கள் அடுத்ததாக என்ன பயிற்சி எடுக்கவேண்டுமென்று யோசியுங்கள்! உங்கள் ஊழியர்களுக்கு என்ன பயிற்சி கொடுக்க வேண்டுமென்று திட்டமிடுங்கள்;


சட்டங்கள் மாறியிருக்கலாம்!

புதிய வரிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்!

தீராத நோய்களுக்கு புதிய மருந்துகளும்,

மருத்துவ முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்!

புதிய கட்டிடப் பொருட்கள், வடிவமைப்புக்கள்

சந்தைக்கு வந்திருக்கலாம்!

புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் வந்துகொண்டிருக்கலாம்!


எல்லா மாற்றங்களையும், புதுமைகளையும்

நாளிதழால் பட்டியலிட்டு தரமுடியாது!

உங்கள் துறை முன்னேற்றத்தை, புதுமைகளை அறிய

அவ்வப்போது துறைசார்ந்த பயிற்சி வகுப்புக்களுக்கு

தவறாமல் போய்வாருங்கள்!


சந்தை & தொழில்நுட்ப மாற்றங்களை சமாளிக்க

நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல

எதிர் வரும் எல்லா சவால்களையும் சமாளிக்க

உங்கள் நிறுவனத்தில் ஏந்தெந்த ஊழியர்களுக்கு

என்னென்ன பயிற்சியளிக்கப்பட வேண்டுமென்று

திட்டமிட்டு செயல்படுத்துங்கள்!


- [ம.சு.கு 01.07.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page