top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 264 - மாறும் ஆசைகள்....கவனம்....!!

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-264

மாறும் ஆசைகள்....கவனம்....!!


  • உங்களின் ஆசைப்படி எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு கனவு வீடு கட்ட நிறைய முயற்சி செய்கிறீர்கள். சில ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர், உங்கள் ஊரின் எல்லையில் உள்ள மலைப் பாங்கான பகுதியில் அழகிய வீட்டை கட்டிமுடித்து குடியேறுகிறீர்கள். உங்கள் புதுமனைக்கு வந்தவர்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அந்த வீடு அழகாகவும், அம்சமாகவும் இருந்தது. அங்கு குடிபெயர்ந்து 1-2 மாதங்கள் வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து மகிழ்கிறீர்கள். மறுபுறம், நீங்கள் அன்றாடம் அலுவலகம் சென்று வரும் பயனநேரம் 1-2 மணிநேரம் அதிகரித்திருந்தது. ஆரம்பத்தில் புதிய வீட்டின் மீதிருந்த மோகத்தில், அந்த நேரமும், தூரமும் அவ்வளவு பெரிதாய் தோன்றவில்லை. 6 மாதங்கள் கடந்தபோது, உங்களுக்கு அந்த வீட்டில் இரசிப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அந்த வீட்டின் வசதிகள் எல்லாம் பழகிப்போய் இயல்பாகிவிட்டன. இப்போது, உங்களின் அன்றாட வேலைக்கான பயணம் 2 மணி நேரம் அதிகரித்தது மிகப்பெரிய கஷ்டமாகி வருகிறது. நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க, இந்த போக்குவரத்து நேரம் இன்னும் கூடுகிறது. இப்போது, அந்த வீடு கசக்கத்துவங்குகிறது!!! ஏன் இப்படி?

  • இளைய தலைமுறையினர் வருடமொருமுறை தங்களின் கைபேசியை மாற்றிவிடுகின்றனர். ஆப்பிள் நிறுவனம் புதிய கைப்பேசியை வெளியிட்டவுடன், முதல் ஆளாக அவற்றை வாங்கிவிடுகின்றனர். அதைப்பற்றி பெருமையாகவும் பேசிக்கொள்கிறார்கள். அதேசமயம் சற்று வயதானவர்கள், பணம் நிறைய இருந்தாலும், ஏனோ ஒரே கைப்பேசியை தொடர்ந்து 3-4 ஆண்டுகளாய் வைத்திருக்கின்றனர். புதிய கைப்பேசிக்கு மாறச் சொன்னால், அவர்கள் அவ்வளவாய் விரும்புவதில்லை. அந்த கைப்பேசி பழுதடையும் வரை அதை வைத்திருக்கிறார்கள். வயதானவர்களுக்கும் உள்ளூர புதிய கைப்பேசி மீது ஆசையிருந்தாலும், ஏனோ அவர்கள் இளைய தலைமுறையினரைப்போல உடனே மாறுவதில்லை. ஏன்?

எல்லோருக்கும் தங்களின் சொந்த வீடு குறித்து ஆயிரமாயிரம் கனவுகள் இருக்கும். அவரவர்களின் பணவசதிக்கு ஏற்ப தங்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். ஆரம்பத்தில், அந்த கனவு மெய்ப்படும் போது, எல்லையற்ற மகிழ்ச்சி நிலவுகிறது. புதுமனைக்கு வந்தவர்கள் எல்லோரிடமும் தங்கள் வீட்டின் அம்சங்கள் குறித்து விலாவாரியாக விவரித்து பரவசமடைகிறார்கள். ஆனால் 1-2 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக அந்த வீட்டிற்கு வருபவர்களிடம் அந்த வீட்டைக்குறித்து எதுவும் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும், அதிலொரு சலிப்பு தெரிகிறது. உங்களின் கனவு, ஆசை, வேண்டுதலாக இருந்த வீடு, சீக்கிரம் சலித்துப்போய்விடுகிறது. காலப்போக்கில், அதன் சாதகங்கள் எல்லாம் பழகிப்போய், அந்த வீட்டின் அமைப்பில் இருந்த ஒருசில பாதகங்கள் மேலோங்கி உங்களை தொடர்ந்து உறுத்துகிறது. இவற்றை நீங்கள் வெளிப்படையாக பேசாவிட்டாலும், இந்த மாற்றத்தை ஓவ்வொருவரும் எதிர்கொள்கிறார்கள். யதார்த்தத்தில் இந்த மாறும் ஆசையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அதன் போக்கில் கடந்து செல்ல வேண்டியதுதான்.


இப்போதைக்கு பயன்படுத்தும் கைப்பேசியைவிட மேம்பட்ட வசதிகளுடன் புதிய கைப்பேசிகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் உள்ள புதிய அம்சங்களை பயன்படுத்த இளைய தலைமுறைக்கு ஆர்வமிருக்கிறது. ஆனால் வயதானவர்கள் ஏனோ மாற்றங்களை அவ்வளவாக விரும்புவதில்லை. கையிலிருக்கும் கைப்பேசி பழகிப்போய் எளிதாகியிருக்கும். புதிதாய் ஒன்றைவாங்கி கற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. கைப்பேசி ஆப்பிள்10-க்கும், ஆப்பிள்11-க்கும் சில வேறுபாடுகள் இருக்கும். புதிய கைப்பேசியை வைத்திருக்கவேண்டுமென்ற ஆசையில் இலட்ச ரூபாய் செலவழித்து அதை வாங்குகிறீர்கள். அதிலிருக்கும் எல்லா புதிய செயலிகளையும் நீங்கள் உபயோகிக்கிறீர்களா? உங்கள் கைப்பேசியில் இருக்கும் தொழில்நுட்பத்தில், குறைந்தது 50%-மாவது உபயோகிக்கிறீர்களா என்று சோதித்துப் பாருங்கள்.


சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 55% நபர்களுக்கு கைப்பேசியில் இருக்கும் அம்சங்கள் குறித்து முழுமையாக தெரிந்திருக்கவில்லை. மேலும் அந்த கைப்பேசியில் பதிவேற்றப்பட்ட செயலிகளில், 75%-க்கும் கூடதலான செயலிகள் மாதமொருமுறைகூட உபயோகிக்கப்படுவதில்லை. இதை புரிந்துகொண்ட பெரியவர்கள், தங்களுக்கு தேவையான 3-4 செயலிகளை மட்டும் வைத்துக்கொண்டு பழைய கைப்பேசியில் நிம்மதியாக காலம் கழிக்கின்றனர். ஆனாலும் இளைய தலைமுறையினரும், பகட்டை விரும்புபவர்களும் புதிய கைப்பேசி வேண்டுமென்று, ஆசைக்கும், மோகத்திற்கும் காசை கரியாக்குகின்றனர். இந்த ஆசையில் புதியவற்றிற்கு மாறிக்கொண்டே இருக்கின்றனர். இது கைப்பேசி என்றில்லாமல், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம், கணிணி, கைக்கடிகாரம், பேனா என்று எண்ணற்றவற்றில் ஒரு திருப்தியே இல்லாமல் பணவசதி உள்ளவர்கள் சிலர் மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஆசைகள் எல்லோருக்கும் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அதன் போக்கில் நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டே இருந்தால், எப்படி அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்?

மாற்றங்கள் அவசியம் தான். ஆனால் அது அனுதினமும் தேவையா? நேற்று பச்சை பிடித்திருந்தது, இன்று சிகப்பு பிடிக்கிறதென்று வீட்டின் நிறத்தை மாற்றிக்கொண்டே இருக்கமுடியுமா?

  • உங்களின் தனித்திறன், விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப மாற்றங்கள் தேவை. ஆனால் அந்த மாற்றங்களின் சாதக-பாதகங்கள் குறித்து தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்காமல், எடுத்தேன்-கவிழ்த்தேன் என்று செய்தால் நிலைமை என்னவாகும்?

  • சமுதாய மாற்றங்கள், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசைகள் மாறுபடும். அதற்கான மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால் அந்த மாற்றத்திற்கான செலவில் கடன்காரனாகி விடக்கூடாதல்லவா!!

  • உங்கள் இலட்சியங்களை அடையும் பாதையில் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களை செய்தால் தான், எல்லா சிக்கல்களையும் சமாளிக்க முடியும். ஆனால் அந்த திடீர் மாற்றங்கள், உங்கள் ஊழியர்களை குழப்பி உங்கள் பயனத்தை கெடுத்துவிடக்கூடாதல்லவா!

உங்களுக்கு இனிப்பு சாப்பிட ஆசையிருக்கும், ஆனால் சர்க்கரை வியாதி வந்துவிடாத அளவில் அதை வைத்துக்கொண்டால் நன்று. உங்களுக்கு எண்ணெய் பதார்த்தங்கள் பிடிக்கும். ஆனால் உங்கள் எடைகூடுமளவிற்கு அதீதமாக அவற்றை சாப்பிட்டால், கஷ்டப்படப்போவது யார்?


ஆசைப்பட்டு வாங்குகிறீர்கள் / உருவாக்குகிறீர்கள். சிலநாட்களில் அவை சலித்துப்போய் அடுத்த புதிய தேடலை ஆரம்பிக்கிறீர்கள். இப்படியே எத்தனை நாட்களுக்கு தொடர்வீர்கள்? என்றைக்கு முழுமையான மன நிறைவுடன் வாழப்போகிறீர்கள்?


மனிதப் பிறவியில் நமக்கு ஆசைகள் அதிகம்!

எல்லாவற்றையும் அனுபவிக்கும் பேராசை

நம் எல்லோருக்கு் இருக்கிறது!


இட்லியோ, தோசையோ, ஊத்தப்பமோ, பனியாரமோ,

எல்லாவற்றிற்கும் மாவு ஒன்றுதான்!

எல்லாம் உங்கள் பசியாரத்தான்!


சாம்சங்கோ, ஆப்பிலோ, நோக்கியாவோ

கைக்பேசி ஒன்றுதான்!

அவற்றின் தொலைதொடர்பு பயன்பாடு ஒன்றுதான்!


வாங்கியபின் ஆறே நாளில் சலித்துப்போகிறது!

குழந்தைகளின் பொம்மை ஆசைகளைப்போலத்தான்

பெரியவர்களின் ஆசையும்

கிடைக்கும்வரை ஒருவாரும், கிடைத்தபின் ஒருவாரும்

மாறிக்கொண்டே இருக்கும்!


மாறும் ஆசைகள் குறித்த யதார்த்தத்தை புரிந்து

அனுதினமும் மாறும் ஆசைகளை / எண்ணங்களை கவனமாக கையாண்டு

இருப்பதைக் கொண்டு வாழப்பழகினால்

அமைதியான, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்!!- [ம.சு.கு 30.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page