“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-263
விரும்பியது (எதி) உழைத்தது - எது கிடைக்கும்...?
மூன்று மாணவ நண்பர்களுக்கு இடையே,. அவர்களில் யார் இந்தமுறை வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பார்கள் என்று போட்டி வந்தது. தேர்விற்கு மூன்று மாதகாலம் இருந்தது. பாடங்களை அந்த மூன்று மாதகாலத்தில் முறையாக படித்து, கணக்குகளை பயிற்சித்தால், நல்ல மதிப்பெண் எடுக்க போதுமான வாய்ப்பு இருந்தது. அவர்களில் இருவர் மட்டும் தினமும் 1 மணிநேரம் வரை படித்தனர். மூன்றாவது மாணவன் அதைக்கூட செய்யவில்லை. தேர்வுக்கு முந்தையதினம் மட்டும் புத்தகத்தை எடுத்து வாசித்தான். தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வெளியாகின. இரண்டு பேர் 50%-60% மதிப்பெண்ணுடன் தேர்வு பெற்றனர். மூன்றாவது மாணவன் தோல்வியடைந்தான். அவர்களின் முதல் மதிப்பெண் பெறவேண்டுமென்ற விருப்பம் முற்றிலும் கணவாகவே போனது. அப்படி உங்களின் எந்தெந்த விருப்பங்களெல்லாம் இன்னும் கனவுகளாகவே இருக்கின்றன?
உத்தரப்பிரதேஷ மாநிலம், ஜோஹ்ரி கிராமத்தை சேர்ந்த இரண்டு உறவுக்கார பெண்கள், “சூட்டர் தாதீஸ்” [துப்பாக்கிசுடும் பாட்டிகள்] என்ற அடைமொழியோடு, தேசத்தின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் பெண்களாக அறியப்பட்டனர். அவர்கள் முதல்முதலாக துப்பாக்கியை கையில் தொட்டபோது, அவர்களின் வயது 65-ஐ தொட்டிருந்தது. அவர்களுக்கு குறிபார்த்து துப்பாக்கி சுடும் போட்டிகளில் உலகப்புகழ் பெற வேண்டுமென்று எந்தவித ஆசையும், திட்டமும் இருக்கவில்லை. அவர்களின் மகள் / பேத்தி பயிற்சிக்கூடத்திற்கு வருவதற்கு, தினமும் துணையாக வந்துபோனார்கள். அவர்களுக்கு உதவும் போது, இவர்கள் இருவரின் துப்பாக்கியை கையாளும் திறமையை கண்ட பயிற்சியாளர், அவர்களை ஊக்குவித்து பயிற்சியளித்தார். 80 வயதைக்கடந்து, சர்வதேச அளவில் குறிபார்த்து சுடதலில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார்கள்.
படிப்பில் யார் வேண்டுமானாலும் முதல் மதிப்பெண் எடுக்கலாம். முதல் மதிப்பெண் எடுத்து, ஆசிரியர்கள் விரும்பும் மாணவராக வளம்வர எல்லோருக்கும் ஆசையிருக்கும். ஆனால் உங்களில் எத்தனைபேர் அந்த ஆசையை நிஜமாக்க, பாடத்தை நன்றாக படிக்கிறீர்கள்? கணிதங்களை பயிற்சிக்கிறீர்கள்? சரிவர படிக்காமல், வகுப்பில் முதல் மதிப்பெண் சாத்தியப்படுமா? உழைக்காமல், வெறும் ஆசைகள், கனவுகளை மட்டும் சுமந்து கொண்டும திரிந்தால், வெற்றி கிடைத்துவிடுமா?
இரண்டு பாட்டிகளும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேருவதற்கு குடும்பத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. அவர்களின் கனவன்மார்கள் ஒத்துக்கொள்ளவில்லை. போட்டிகளில் பங்கெடுக்க பிள்ளைகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புக்களை கடந்து, கடுமையாக பயிற்சி செய்தவர்கள், தங்களின் மகள் / பேத்திகளுக்கு பெரிய முன்னுதாரணமாக இருந்தனர். இந்தியா & சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்று துப்பாக்கி சுடுதலில் முடிசூடா இராணிகளாக அறியப்பட்டனர். அவர்களின் பிள்ளைகளின் கனவுகள் மெய்பட அவர்களை பயிற்சிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுவந்தவர்கள், தங்களாலும் முடியும் என்று நம்பி கடுமையாக முயற்சித்தார்கள். முறையான பயிற்சியும், ஈடுபாடும் அவர்களை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. ஆரம்பத்தில் பெரிதாய் கனவொன்றும் இருக்கவில்லை. ஆனால் பயிற்சியில் கவனம் செலுத்தி உழைத்தார்கள். அவர்களின் உழைப்பு அழியாப் புகழை தந்தது. அப்படி உங்கள் தள்ளாத வயதில், புதிதாய் ஒன்றை உங்களால் சாதிக்க முடியுமா?
மனிதர்கள் எல்லோருக்கும் பலநூறு கோடிகள் சொத்து சேர்க்க பேராசை இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று சதாசர்வகாலமும் யோசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனைபேர், அதற்கான முழுமையான முயற்சியை கடைசிவரை எடுக்கிறார்கள். ஒருசிலர் உழைக்காமல் செல்வந்தராக பரிசுச்சீட்டுகளை நம்பிவாங்கி காசை கரியாக்குகின்றனர். ஒருசிலர், ஒன்றுக்கு இரண்டு தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றும் நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர். அதிர்ஷ்டத்தையும், உதவிகளையும் நம்பாமல், தன் உழைப்பை மட்டுமே நம்பி, களத்தில் சாமர்த்தியமாக போராடியவர்கள், கோடிகளுக்கு அதிபதியாய் வளம்வருகின்றனர். அதிர்ஷ்டத்தை நம்பும் சோம்பேறிகள், மற்றவர்களின் ஆசைவார்த்தையை நம்பி ஏமாறுபவர்கள், மற்றவர்களை ஏமாற்றுபவர்கள், குறிக்கோளில்லாமல் வெறுமனே உழைப்பவர்கள், சாமர்த்தியமாக உழைப்பவர்கள் என்று பலவிதமான நபர்கள் மத்தியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று சுய ஆய்வு செய்யுங்கள்;
ஆசையும், கனவும் உங்களுக்கு நல்ல உந்துதலாய் இருக்கும். யதார்த்தத்தில் ஆசைதான் எல்லா கண்டுபிடிப்புக்கள் & சாதனைகளுக்கான தொடக்கப்புள்ளி. ஆசையில்லாமல், யாரும் பெரிதாய் சாதித்ததில்லை. ஆனால் வெற்றிக்கு பெரிய ஆசையும், பெரிய கனவு மட்டும் போதுமா? ஆசைகளை நிஜமாக்க ஆயிரம் தடங்கள்களை கடக்க வேண்டிவரும். அனுதினமும் வேர்வை சிந்த உழைக்க வேண்டும். உழைப்பை முன்னெடுப்பவர்கள், தங்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுகின்றனர்.
தோல்விகளை கடந்து கடைசி வரை போராடியவர்கள், பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள். தோல்விகளில் துவண்டு விலகியவர்கள் சிறிய ஊதியங்களில் சமரசமாகிவிட்டார்கள்.
நம் எல்லோருக்கும் பெரிய வெற்றிக்கான ஆசை இருக்கிறது. ஆனால் அதை நோக்கிய உழைப்பு எந்தளவிற்கு இருக்கிறதென்று அலசுங்கள்! உங்கள் கனவு, இலட்சியம், குறிக்கோளை நோக்கிய கடுமையான உழைப்பும், சாமரத்தியான நகர்வுகளும், உங்களை வெற்றியாளராக வளம்வரச் செய்யும்.
வெற்றிக்கு ஒரே வழி உழைப்பென்று
ஆன்றோரும் சான்றோரும் ஆயிரம் முறை சொல்லிவிட்டனர்;
அதை எத்தனை முறை சொன்னாலும் - ஏனோ
நம் மனிதமனம் அதிர்ஷ்டத்தை மட்டுமே இன்னும் நம்புகிறது!
உழைக்காமல் சோம்பேறித்தனமாய் இருக்க
எல்லா மனங்களும் உள்ளூர ஆசைகொண்டிருப்பதால்
உழைப்பின் முக்கியத்துவத்தை நன்றாக அறிந்தபின்னும்
உழைக்காமல் காலம்கடத்துவது மனித இனம் மட்டுமே!
நீங்கள்
வெந்ததை தின்று விதிவழி சாகும் வேடிக்கை மனிதரா?
ஆசைகளை பின்தொடர்ந்து கடுமையாக உழைக்கும் போராளியா?
எது உங்கள் வழியென்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்!
- [ம.சு.கு 29.06.2023]
Comments