top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 260 - கூட்டத்தை பின்தொடர்கிறீர்களா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-260

கூட்டத்தை பின்தொடர்கிறீர்களா...?


  • நம் தமிழகத்தில், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கொருமுறை, அதிக இலாபம், வட்டி தரக்கூடிய புதிய திட்டம் ஒன்று மிகவும் பிரசித்தமடையும். அந்த திட்டம் 1000 கோடிகளை கடக்கும்போது, திடீரென்று ஒருநாள் மூடப்படும். கடந்த 30-40 ஆண்டுகளில் வந்த திட்டங்களில் சில – தேக்கு மரத்திட்டம், இன்று பணம் செலுத்தி 6 மாதங்களுக்குப்பின் இரட்டிப்பு விலைக்கு பொருட்களை பெரும் திட்டம், ஈமு கோழி திட்டம், காந்தப்படுக்கை திட்டம், சங்கிலித் தொடர் திட்டம், வீட்டுமனை வாங்கும் திட்டம், பங்குச் சந்தை முதலீட்டு இலாபம் பகிர்வு திட்டம் என்று விதவிதமான திட்டங்கள் சந்தையில் வந்துபோனது. இவையணைத்தும் உங்களை பணக்காரணாக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, கடைசியில் பலரை கடனாளியாய் தெருவில் நிறுத்தியது. சிலரின் தற்கொலைகளுக்கும் காரணமானது. ஏன் இந்த திட்டத்தின் பின்னால் நம் மக்கள் ஆட்டு மந்தைபோல கேள்விகேட்காமல் போகின்றனர்?

  • இன்றைய தினம், பெரும்பாலான பெற்றோர்களின் ஆசை, தங்கள் பிள்ளையை சமச்சீர் கல்விக்கு பதிலாய், “சி.பி.எஸ்,இ” எனும் மத்திய அரசாங்க கல்வி முறையில் படிக்கவைக்க வேண்டுமென்று இருக்கிறது. அப்படி அந்த கல்விமுறையில் என்ன தனித்துவம் இருக்கிறதென்று கேட்டுப்பாருங்கள், பதில் தெரியாமல் திணறுவார்கள். அவர்களை பொருத்தமட்டில், அவர்களை சுற்றியுள்ளவர்களின் பிள்ளைகள் அங்கு படிக்கிறார்கள். அந்த கல்வி முறையில் படிப்பது கவுரவமாக கருதுகிறார்கள்! அந்த மத்திய அரசாங்க முறைக்குச் சென்று, தாய்மொழியான தமிழை படிப்பதைக்கூட நிறைய பேர் தவிர்த்துவிட்டார்கள். தமிழை ஒரு பாடமொழியாக படிப்பதைக் காட்டிலும் இந்தி படிப்பது உதவும் என்று எண்ணுகிறார்கள். ஒரு நிமிடம் யோசியுங்கள் – தமிழகத்தில் இருந்துகொண்டு, தமிழ் படிக்கத்தெரியாமல், இந்தி / பிரன்ச்சு / ஜெர்மனியம் கற்று என்ன சாதிக்கப்போகிறீர்கள்?

உங்கள் வாழ்வில் ஒன்றிரண்டு பிள்ளைகளை வளர்த்தெடுப்பதை மிகவும் கடினமான செயலென்று சொல்கிறீர்கள். ஆனால் கிராமத்தில், ஒரிரு நபர்கள் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு வெகுதூரம் அழைத்துச் சென்று திரும்புவார்கள். ஆடுகள் எதையும் கட்டாமல், பொது சாலையில் கூட்டமாக ஓட்டிச் செல்வார்கள். அந்த கூட்டத்தை விட்டு அவை விலகிச் செல்லாது. எங்கு செல்கிறோம் என்றும் தெரியாது. முன் செல்லும் தொழிலாளி, ஓரிரு ஆடுகளைமட்டும் வழிநடத்தினால், ஏனையவையாவும் தானே ஒன்றாக பின் தொடரும். இந்த ஆட்டு மந்தை குணம்தான் இன்று நம் மனித சமுதாயத்தின் சிந்தனைத் திறனுக்கு சவாலாக நின்று கொண்டிருக்கிறது!


ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? என்ற கேள்வி கேட்காமல், சீக்கிரத்தில் பணக்காரணாகும் ஆசையில், தொடர்ந்து பல்வேறு கவர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் ஏமாந்தவர்களே, மீண்டும் அப்படி ஏமாறுவது அடுத்தகட்ட முட்டாள்தனம்! இன்று எந்தத்தொழிலில் அதீத இலாபம் கிடைக்கிறது? அப்படியே ஒன்றிரண்டில் கிடைத்தாலும், அதை உங்களுக்கு ஏன் அவர்கள் தரவேண்டும்? என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர்களின் பணக்காரனாகும் முயற்சியில் நீங்கள் பலிகடா ஆகிறீர்கள். கூட்டத்தை கண்மூடித்தனமாய் பின்தொடரும் உங்களின் குணம், இருப்பதை தொலைத்து தெருவில் நிறுத்துகிறது. இன்னும் நீங்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால், இறைவனாலும் உங்களை காப்பாற்ற முடியாது!!


பிரன்ச்சு / ஜெர்மனியம் / இந்தி / சமஸ்கிருதம் / மேன்டரின் (சீனம்) / ஜப்பானியம் என்று எந்த மொழியை வேண்டுமானாலும் கூடுதலாக கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் கூட்டத்தினரை கண்மூடித்தனமாய் பின் தொடர்ந்து, தமிழகத்தில் வாழும் நீங்கள் ஏன் தமிழை தவிர்க்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன். மற்றவர்கள் செய்கிறார்கள், என் பிள்ளை ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவன் இல்லை என்று வீம்புக்கு போட்டியிடுவதில் பயனென்ன? இப்போது வாழ்வது தமிழ்நாட்டில். தமிழ் நன்கு தெரிந்தால் அன்றாட வாழ்க்கை சுலபமாகும். இல்லாவிட்டால் பிறர் உதவியை நாடவேண்டும். உங்கள் பிள்ளையின் திறன், உங்கள் வசதி-வாய்ப்பு, அருகாமை என்ற கோணத்தில் பள்ளியை தேர்வு செய்வதற்கு பதிலாய், ஊரில் பலர் தங்கள் பிள்ளைகளை பெரிய பள்ளியில், அதிக சந்தா கட்டி சேர்க்கிறார்கள், நம் பிள்ளையும் அங்கு செல்லட்டும் என்று சேர்ப்பதில் என்ன பயன்? ஏன் வீண் பகட்டிற்காக கூட்டதோடு கோவிந்தா போட முயற்சிக்கிறீர்கள்!


எங்கெல்லாம் கூட்டத்தோடு கோவிந்தா போடுகிறீர்கள்?

  • நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தை, முதலீடு செய்வதில் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிடுகிறீர்கள்;

  • உங்கள் வாழ்க்கையை, கூட்டத்தோடு சேர்ந்து, பகட்டிற்காக வாழ்ந்து, வாழ்வின் இனிமையை தொலைத்து விடுகிறீர்கள்;

  • பொருட்களை தேர்ந்தெடுப்பதில் கூட்டத்தோடு சேர்ந்து, உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை சேர்த்துவிடுகிறீர்கள்;

  • எல்லோரும் கோவிலுக்கு போகிறார்கள், புதிய கடைக்கு போகிறார்கள், நாமும் போவோம் என்று கூட்டத்தில் சென்று மாட்டிக்கொள்கிறீர்கள்;

  • பிள்ளைகளின் கல்வி விடயத்தில், உங்கள் பிள்ளையின் ஆசைகளையும், திறமையையும் கவனிக்காமல், ஊராரின் வார்த்தைகளை பின்தொடர்ந்து, பிடிக்காததை படிக்க வற்புறுத்துகிறீர்கள்!

இப்படி பட்டியலிட்டால், அது வளர்ந்துகொண்டே போகும். உங்கள் அன்றாட வாழ்க்கைச் சூழலில், நீங்கள் அப்படி எந்த ஆட்டு மந்தை கூட்டத்தை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அலசிப் பாருங்கள். அந்த கூட்டத்துடனான கோவிந்தாவில், நீங்கள் அடைந்த பயன் என்னவென்று பட்டியலிடுங்கள். ஒருவேலை நீங்கள் கூட்டத்தின் பாதையை தவிர்த்து, புதிய பாதை அமைக்க முயற்சித்திருந்தால், என்ன சாதக-பாதகங்கள் வந்திருக்கும் என்று யோசியுங்கள்.


எங்கு? எப்போது? என்ன? செய்யவேண்டுமென்று

முடிவெடுப்பது உங்கள் கையில்!

அந்த முடிவை நீங்கள் சுயமாக எடுக்கிறீர்களா? – அல்லது

ஆட்டுமந்தையென கூட்டத்தை பின்தொடர்கிறீர்களா?


கூட்டத்தை பின்தொடர்ந்தவர்கள் யாரும்

சாதித்து நான் பார்த்ததில்லை;

புதிய பாதையை அமைக்க முயிற்சித்தவர்கள் மட்டுமே

அரும்பெரும் சாதனையாளர்களாக வலம்வந்திருக்கிறார்கள்!


அப்படி புதியபாதை அமைக்க முயற்சித்த பலர்

தோற்றுள்ளார்களே என்று என்னோடு வாதாடாதீர்கள்!

ஒரு தோல்வி முடிவல்ல ! தொடர்ந்து முயன்றவர்கள் வென்றார்கள்!

நீங்கள் சாமானியனாய் கூட்டத்தை பின்தொடரப் போகிறீர்களா?

அல்லது சாதனையாளராக புதிய பாதை அமைக்க போராடப்போகிறீர்களா?

எல்லாவற்றின் முடிவும் உங்கள் கையில்!!


- [ம.சு.கு 26.06.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page