top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 256 - எதிர்காலமுள்ள வியாபாரம் என்ன?"

Updated: Jun 23, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-256

எதிர்காலமுள்ள வியாபாரம் என்ன?


  • பாடல் ஒலித்தட்டுக்கள் விற்றகடை இன்றில்லை; வீதிக்குவீதியிருந்த தொலைபேசி பெட்டிகள் இன்றில்லை; புகைப்படச் சுருளும், சின்ன புகைப்படக் கருவியும் இன்றில்லை; புத்தகக் கடைகள் குறைந்துவிட்டன / வாழ்த்து அட்டைகள் குறைந்துவிட்டன / கடிதம் எழுதுவதே குறைந்துவிட்டன / கைவினைப் பொருட்கள் குறைந்துவிட்டன / கைத்தறி உடைகள் குறைந்துவிட்டன. காலப்போக்கில் இவை எதுவும் இல்லாமலே போகக்கூடும். இவைகளுக்கான தேவை குறையவில்லை, ஆனால் உற்பத்தி முறையும், வியாபார முறையும் மாறிவிட்டன. எல்லாம் கணிணிமயமாகி, இணையவழி விற்பனைக்கு மாறிவிட்டன. நீங்கள் உங்கள் தொழிலை இணையவழிக்கு மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறீர்களா?

  • புதிதாய் எரிபொருள் நிலையம் அமைக்கும் திட்டத்தோடு ஒருவர் வங்கியில் கடன் கேட்டார். அந்த கடனை 15 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் கேட்டார். மேலாளர், 15 ஆண்டுகள் வரை வாகன எரிபொருள் தேவை இருக்குமா? என்று கேட்டார். சற்று யோசிக்க வேண்டிய விடயம்தான். மின்சார வாகனங்கள் படிப்படியாய் அதிகரித்து வருகின்ற நிலையில், எரிபொருள் விற்பனை நிலையத்தின் எதிர்காலம் என்னவாகும்! அந்த நபர் அந்த கேள்விக்கும் பதில் வைத்திருந்தார். வரும் 5-7 ஆண்டுகளில் எப்படி படிப்படியாக தன் எரிபொருள் விற்பனையை குறைத்து மின்வாகனங்களுக்கான மின்னேற்று நிலையமாக மாற்றிடும் திட்டத்தையும் விளக்கினார்.

நேற்று செய்துவந்த நிறைய தொழில்கள் இன்றில்லை. இன்று செய்யப்பட்டு வரும் நிறைய தொழில்கள் நாளை இருக்காது. நாளை புதிதாய என்ன தொழில் வருமென்று முற்றிலுமாய் இன்று கணிக்கவும் முடியாது. தொழில் நுட்ப வளர்ச்சியும், மனிதர்களின் அளப்பரிய ஆற்றலும், சாத்தியமில்லை என்று எண்ணியவைகளை நம் கண்முன் நிறுத்தியிருக்கின்றன. எளிதாக செய்யக்கூடிய எல்லாமே இயந்திரமயமாகி வருகின்றன. இன்று உங்கள் உடை தைக்கும் தையல்காரருக்கு 10 ஆண்டுக்கு பின் தொழில் இருப்பது சந்தேகம்தான் – ஏனெனில் இயந்திரமும், இயந்திரமனிதனும் ஒரு நாள் வேலையை, ஒருமணி நேரத்தில் முடித்துக்கொடுத்து விடுவார்கள். இப்படி வேகமாக மாறிவரும் எந்த தொழிலில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒருவேளை அங்கு வேலையில் இருந்தால், நீண்டகால நோக்கில் அழிந்துவிடும் தொழிலிருந்து சீக்கிரம் விலகி விடுங்கள். எதிர்காலம் இல்லாத தொழிலில் உங்களுக்கு வளர்ச்சியிருக்காது. சீக்கிரம் வளர்ச்சியும், வெற்றியும் காண வேண்டுமானால், பெரிய அளவில் விரிவுபடுத்தக்கூடிய, நல்ல எதிர்காலம் கொண்ட தொழிலாக தேர்ந்தெடுங்கள்!


வாகனங்களின் தேவை கட்டாயம் இருக்கும், ஆனால் அதற்கான எரிபொருள் தான் மாறும். அதற்கேற்ப அவர் தன் தொழிலில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமென்று முன்கூட்டியே யோசித்துவிட்டார். காலப்போக்கில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சின்னச்சின்ன மாற்றங்களை செய்து தொழிலை விரிவாக்கிக் கொள்வார். இப்படி உங்கள் தொழிலுக்கு, நீங்கள் வைத்துள்ள எதிர்கால திட்டம் என்ன? ஒருவேளை நீங்கள் வர்த்தகம் செய்யும் பொருளே எதிர்காலத்தில் இல்லாது போனால், அந்த மாற்றத்திற்கு நீங்கள் தயாரா? உங்கள் தொழில்முறையை அவ்வப்போது சுய ஆய்வு செய்யவேண்டியது அவசியம். செய்து கொண்டிருக்கிறீர்களா?


மாறிவரும் சந்தை, மாறும் வாடிக்கையாளர் தேவைகள், பருவநிலை மாற்றங்கள், என்று எண்ணற்ற காரணங்களுக்காக உங்கள் இன்றைய வியாபாரம் முற்றிலும் மாறலாம். அந்த மாற்றத்தில் உங்கள் தொழில் தொலைந்துபோகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்;

  • அவ்வப்போது சந்தை நிலவரம் மற்றும் உங்கள் தொழிற்சாலை குறித்து தனிப்பட்டதொரு ஆய்வை மேற்கொள்ளுங்கள்;

  • வாடிக்கையாளரின் இன்றைய தேவைகள் என்ன? நாளைய எதிர்பார்ப்பு என்ன? என்று கருத்துக்களை கேட்டுக்கொண்டே இருங்கள்.

  • தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும்?

  • அதற்கான முதலீடுகள் எங்கிருந்து, எவ்வளவு வரும்?

நீங்கள் தொழிலில் நிலைத்திருக்க, நிறைய திட்டங்களை வகுத்துக் கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு மாற்றத்தையும் முன்னரே கணிந்து, உங்களுக்குள் போதுமான கட்டமைப்பே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்;

  • புதுமைகளை இணங்கண்டு செயல்படுத்துங்கள்;

  • எல்லாவற்றையும் பொருமையாக ஒரு முறை எதிர்கால நோக்கில் ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள்;

  • சந்தை குறித்த ஆய்வை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள்;

  • எல்லா மாற்றங்களுக்கும் ஒருபடி முன்னால் நீங்கள் நில்லுங்கள். அந்த மாற்றங்களுக்கு நீங்கள் முன்னோடியாக இருந்தால், உலகம் உங்களை தொடரும்;

இன்று சாத்தியப்படும் எந்த தொழிலையும் செய்யுங்கள். அதேசமயம், நீங்கள் செய்யும் எல்லாவற்றின் எதிர்காலம் குறித்து சற்று ஆய்வு செய்துகொண்டே இருங்கள். எதிர்காலம் இல்லாத தொழில்களில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி நிலைத்திருப்பதென்று ஆராய்ந்திடுங்கள். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், எப்படி படிப்படியாக அதிலிருந்து வெளியேறி அடுத்த தொழிலை கட்டமைப்பதென்று வழிதேடுங்கள். பெரிய வெற்றிகாண விரும்பினால், நீங்கள் செய்யும் தொழிலில் அதற்கான எதிர்கால சாத்தியக்கூறுகள் இருக்க வேண்டும். எதிர்காலமில்லாதவற்றில் எவ்வளவு போராடினாலும், எல்லாம் ஒரு எல்லைவரை தான்.


நிறைய வியாபார வாய்ப்புக்கள் இருக்கும்

ஆனால் அவை எத்தனை காலத்திற்கு

நீடிக்குமென்று யோசித்திருக்கிறீர்களா?


மாறும் மக்களின் எதிர்பார்ப்புக்கள்

அதிவேக தொழில் நுட்ப வளர்ச்சி

இவற்றில் சிக்குள்ளும் பல தொழில்களுக்கு எதிர்காலமில்லை!


நீங்கள் இன்று செய்யும் தொழிலின் எதிர்காலமென்ன?

ஒருவேளை தொழில்நுட்ப வளர்ச்சியில் பாதிக்கப்பட்டால்

அந்த புதிய தொழில்நுட்ப்பத்திற்கு நீங்கள் உடனுக்குடன் மாறுகிறீர்களா?


மாற்றம் என்பது நிரந்தரமென்று நாமெல்லோரும் அறிவோம்

மாற்றத்தில் தொலைந்து போகாமல்

புதிய பரிமானம் எடுக்கும் தொழில்களாக தேர்ந்தெடுங்கள்!

ஒன்றுக்கு பத்தாக விரிவுபடுத்தக்கூடிய தொழில்களாக தேர்ந்தெடுங்கள்!

அத்தியாவசியத் தேவை சார்ந்த தொழில்களாக தேர்ந்தெடுங்கள்!

குறைந்த முதலீடும், ரொக்க வியாபாரமுமான தொழில்களாக தேர்ந்தெடுங்கள்!


எந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தாலும்

அதை முழுக்கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்யுங்கள்!

சந்தை மாற்றங்களையும், தொழில்நுட்ப மாற்றங்களையும்

கவனமாக கண்காணித்து போதிய மாற்றங்களை செய்யுங்கள்!

வெற்றி நிச்சயம்!


- [ம.சு.கு 22.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page