top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 254 - தகவல் பரிமாற்றம் சரியாக உள்ளதா?"

Updated: Jun 21, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-254

தகவல் பரிமாற்றம் சரியாக உள்ளதா?


  • நீங்கள் விமானத்தில் ஏறியவுடன், சிப்பந்திகள் பயனியர் பாதுகாப்பு குறித்து விளக்கம் செய்வார்கள். அவசரகால அறிவிப்பு என்னென்ன, அது எப்படி தெரிவிக்கப்படும், அந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் செய்துகாட்டுவார்கள். அவற்றை கேட்டுக்கேட்டு உங்களுக்கே சலித்துப் போயிருக்கும். ஆனால் பயனியர் பாதுகாப்பு கருதி, அவர்கள் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  • மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டவுடன், மருத்துவர்கள் பரிசோதித்து என்ன நோய் என்று ஆராய்ந்து அடுத்த 2-3 நாட்களுக்கான சிகிச்சை முறைகளை, கொடுக்கப்பட வேண்டிய மருந்துகளை பரிந்துரைத்து விடுகின்றனர். தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டியவைகள். மருத்துவருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படவேண்டிய தகவல்கள் என்னென்ன என்று கூறிவிடுகின்றனர். நல்ல அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் அவற்றை எளிதாக புரிந்து செயல்படுத்துகின்றனர். ஒருவேளை புதிய செவிலியராக இருந்து, மருத்துவர் சொன்னதை சரிவர புரிந்து கொள்ளாமல் மருந்து கொடுப்பதிலோ, கண்காணிப்பதிலோ கோட்டைவிட்டால், நோயாளியின் நிலை என்னாவது? அப்படியான மருத்துவமனைக்கும் அடுத்தமுறை நீங்கள் போவீர்களா?

பேருந்து, இரயில் பயனங்களில் அபாயநிலையென்றால், வாகனத்தை நிறுத்தி இறங்கிவிடலாம். ஆனால் விமானத்தை எங்கு இடையில் நிறுத்துவது. என்ன அபாயம் ஏற்பட்டாலும், சிப்பந்திகளும், நீங்களும்தான் களத்தில் அமைதியாக செயல்பட்டு மீளவேண்டும். அவசரத்தில் எல்லோரும் பதட்டத்துடன் தவறுகளை செய்தால் நிலைமை மோசமாகிவிடும். அப்படியான அசம்பாவிதங்களை தவிர்க்க பயனியரின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்பதால்தான், ஒவ்வொரு பயனத்தின் தொடக்கித்திலும் பாதுகாப்பு குறித்த விளக்கம் கட்டாயமாக வழங்கப்படுகிறது. இன்றுவரை என்றாவது அப்படிப்பட்ட விளக்கம் தரப்படாத விமானப்பயனம் செய்திருக்கிறீர்களா?


மருத்துவமனையில் தகவல் பரிமாற்றத்திற்கென்று தெளிவான வழிமுறைகளை வகுத்திருப்பார்கள். எதையெல்லாம் எழுத்துப்பூர்வமாக எழுதி வைக்கவேண்டும் என்று தெளிவான முறைமை இருக்கும். தெளிவாக எழுதிவைத்துவிட்டால், ஒரு செவிலியர் வேலைநேரம் முடிந்து வேறு செவிலியர் வந்து கவனிக்கும் போது, இதுவரை என்னென்ன செய்திருக்கிறார்கள், இனி என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். ஒரு வேலை குறிப்பிட்ட மாத்திரை வழங்கியதை செவிலியர் குறிப்பிடமறந்து, அடுத்த செவிலியர் அதே மாத்திரையை இரண்டாவது முறையாக வழங்கினால், நோயாளியின் நிலை பரிதாபத்திற்குறியதாகிவிடும். இந்த அபாயங்கள் தவிர்க்க தகவல் பரிமாற்ற முறைகளை பற்றி பெரிய மருத்துவமனைகளில் தொடர்ந்து பயிற்சி அளித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி உங்கள் நிறுவனத்தில் என்னென்ன தகவல் பரிமாற்றப் பயிற்சிளை நீங்கள் வழங்குகிறீர்கள்?


உங்கள் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விடயங்களுக்கு வார்த்தைகளாக கட்டளைகள் இடுகிறீர்கள், என்னென்னவற்றை உங்கள் கண்ணசைவின் மூலம், கை-கால் உடல் அசைவுகளின் மூலம் தெரியப்படுத்துகிறீர்கள் என்று ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். நீங்கள் சொல்ல விரும்பியதை சைகைகளின் மூலமாக வெளிப்படுத்தினாலே உங்கள் குடும்பத்தினர் எப்படி எளிதாக புரிந்து கொள்கின்றனர். அதே வண்ணம் உங்கள் ஊழியர்கள் உங்கள் எண்ணங்களை, சைகைகளை புரிந்து கொள்கின்றனரா? நீங்கள் முக்கிய கூட்டத்தில் பேசு, பேசவேண்டாம், அதை சொல்லாதே, இதை சொல், மௌனமாக இரு, எழுந்துபோ என்று சைகைகளில் சொல்வதை உங்கள் ஊழியர் சரியாக புரிந்து கொண்டு செய்கிறனரா? இந்த வார்த்தை மற்றும் சைகை தகவல் பரிமாற்றும் சரியாக இருந்தால் நல்லது. ஒருவேளை எதிர்பதமாக புரிந்துகொண்டால் விளைவு என்னவாகும்?


நீங்கள் எழுத்துப்பூர்வமாக தகவலை அனுப்புகிறீர்கள். உங்கள் கையெழுத்து நன்றாக இருந்தால் நீங்கள் எழுதியதை சரியாக படித்து புரிந்து கொண்டு செய்யலாம். ஒருவேளை உங்கள் கையெழுத்து மோசமாக இருந்து, “4” என்ற எண்ணை “9” என்று புரிந்துகொண்டு வேலையை செய்தால் யாருக்கு நஷ்டம்?


உங்கள் நிறுவனத்தில், விளையாட்டுக் களத்தில் எப்படி தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வது?

  • ஒரு வேலையை துவங்குவதற்கு முன், அந்த வேலை, இயந்திரம் குறித்த அத்தியாவசிய பயிற்சிகள், குறியீடுகள் குறித்த பயிற்சி அவசியம். உரிய பயிற்சி இல்லாதவர்களை களத்தில் இறக்குவது தவறு. ஒரு வேளை களத்தில் பயிற்சி அளிப்பதாக இருந்தால், அவர்கள் அருகில் பயிற்சிபெற்றவரின் கண்காணிப்பு அவசியம் இருக்கவேண்டும்;

  • எவ்வளவு நேரம் பயிற்சி அளிக்கப்பட்டாலும், அதை அவர்கள் புரிந்துகொண்டனரா என்று பரிசோதிக்க வேண்டும். அவர்களின் கவனச்சிதைவில் புரிதல் தவறாகலாம் என்ற என்பதை எப்போதும் நினைவில் வைத்து, பயிற்சிக்குப்பின் பரிசோதனை கட்டாயம் செய்யுங்கள்;

  • அபாய நிலைகள் என்னென்ன, அவை எந்தமுறையில் தெரிவிக்கப்படும் என்பதை முன்கூட்டியே தெளிவாக சொல்லுங்கள்; ஆங்காங்கே தகவல் பலகைகளை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்;

  • தேவைப்படும் இடங்களில், மற்றவர் புரிந்துகொண்டாரா என்பதை உறுதிசெய்ய, அவரையே திரும்ப என்னவென்று சொல்லச் சொல்லுங்கள்;

  • உங்கள் நிறுவனத்தில் கட்டமைத்துள்ள தகவல் பரிமாற்ற முறைகளை நீங்கள் எப்போதும் மீறிவிடாதீர்கள். நீங்கள் முன்னுதாரணமாக செயல்பட்டு தகவல் பரிமாற்றத்தை தொடர்ந்து நிலைநாட்டினால் தான், உங்கள் ஊழியர்கள் அதை எப்போதும் கவனமாக செய்வார்கள். நீங்கள் 1% தவறவிட்டால், அவர்கள் 10% தவறவிடுவார்கள்.

உலகில் நடந்த எண்ணற்ற விபத்துக்களை, சரியான தகவல் பரிமாற்ற முறைகள் இருந்திருந்தால் தடுத்திருக்கலாம் அல்லது இழப்பை குறைத்திருக்கலாம். அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.


ஒரு நாடு, உளவுபார்ப்பது தொடங்கி எண்ணற்ற முன்னெச்சரிக்கை தகவல் பரிமாற்ற முறைகளை கட்டமைத்து தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அதுபோல உங்கள் வெற்றிக்கு, நீங்கள் என்ன மாதிரியான தகவல் பரிமாற்ற கட்டமைப்பை உங்கள் நிறுவனத்தில் ஏற்படுத்தியுள்ளீர்கள், அவற்றின் செயல்பாட்டை எப்படி உறுதி செய்கிறீர்கள் என்று அவ்வப்போது அலசிப்பாருங்கள்!


நிறுவனம் பெரியோதோ, சிறியதோ

நீங்கள் சொன்னது, சொல்ல விரும்பியது

அதே முறையில், அதே பொருளில்

மற்றவர்களால் புரிந்துகொள்ளப்பட்டதா?

என்பதை தொடர்ந்து உறுதி செய்துகொண்டே இருக்கவேண்டும்!


தகவல் பரிமாற்றமானது

சொல்லாகவோ, செய்கையாகவோ, அமைதியாகவோ

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!

அதை அதே கோணத்தில், அதே பொருளில்

மறுபுறம் இருப்பவர் புரிந்துகொண்டால்

எல்லாம் சரியாக இருக்கும்!

ஒருவேலை புரிதல் தவறானால்

விளைவு என்னவாகும் என்று யோசியுங்கள்?


விளைவிற்கேற்ப போதுமான தகவல் பரிமாற்ற கட்டமைப்பை

உங்கள் நிறுவனத்தில் வைத்திடுங்கள்;

உங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்திடுங்கள்;

நல்ல கட்டமைப்பும், தொடர்ந்த பயிற்சியும்

தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கி

நிறுவனத்தின் செயல்பாட்டை எளிமையாக்கும்!!


- [ம.சு.கு 20.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarii


Post: Blog2 Post
bottom of page