top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 253 - போதுமான தகவல் இருக்கிறதா?"

Updated: Jun 20, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-253

போதுமான தகவல் இருக்கிறதா?


  • இந்தியாவில் உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பது குறித்து ஒரு அமெரிக்க நிறுவனம் ஆலோசனை துவங்குகிறது. அதன் மேலான்மைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஓரிருவருக்கு இந்தியாவில் துவக்க விருப்பமில்லை. சின்னச்சின்ன சட்ட சிக்கல்களை கூட்டத்தில் பெரிதுபடுத்தி சொன்னார்கள். அதே சமயம், அந்த குழுவில் உறுப்பினரான ஒரு பொருளாதார ஆலோசகர், வளர்ந்துவரும் கீழை நாடுகளில் உற்பத்தி நிறுவனம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தியா இல்லாவிடில் சீனா, மலேசியா, தைவான் போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றார். குழுவின் விவாதம் பல்வேறு கோணங்களில் போய்கொண்டிருக்க, இறுதி முடிவெடுக்க வேண்டிய தலைமை பொறுப்பில் நீங்கள் இருந்தால் என்னவெல்லாம் கேட்பீர்கள்?

  • புதிதாக திருமணமான தம்பதியர், கிராமத்திலிருந்து பக்கத்திலுள்ள நகரத்திற்கு குடிபெயர்வது குறித்து ஆலோசிக்கிறார்கள். தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெரிய பள்ளியில் படிக்க வேண்டும், உடனுக்குடன் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும், பொழுதுபோக்கிற்கு திரையரங்கு & இதர கேளிக்கைகள் இருக்க வேண்டும் என்று பட்டியலிட்டு பார்க்கிறார்கள். அதேசமயம், பெற்றோர்கள், சொந்தங்களை விட்டு ஏன் தூரமாக செல்கிறீர்கள் என்று எதிர்மறையான பட்டியலை சொல்கிறார்கள். ஒரு ஊரைவிட்டு இன்னொரு ஊருக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து போக இந்த விடயங்கள் மட்டும் போதுமா?

உலகளாவிய வர்த்தகம் புரியும் பல பெரிய நிறுவனங்கள், உலகெங்கிலும் தங்களின் உற்பத்தி தொழிற்கூடங்களை நிறுவுகின்றன. எந்த நாட்டில், எந்த மாநிலத்தில், எந்த ஊரில், எவ்வளவு பெரிய தொழிற்சாலை கட்டமைக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் முன்னர், என்னென்ன விடயங்களை சேகரித்து அலசுகிறது;

  • மூலப்பொருட்கள் எங்கு, எந்தளவிற்கு கிடைக்கும்

  • வாடிக்கையாளர்கள் யார், எங்கு இருக்கிறார்கள், சந்தையின் அளவு எவ்வளவு?

  • நாட்டின் பொருளாதாரம் & அன்னியச் செலாவனி கொள்கைகள் எப்படி?

  • பொருட்களை உள்ளும்-புறமும் போக்குவரத்து செய்வதன் செலவும், சாத்தியக்கூறும் என்ன?

  • நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, உள்நாட்டு வரிகள் எவ்வளவு?

  • மின்சாரம், தண்ணீர், சாலை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எப்படி?

  • கற்றறிந்த ஊழியர்கள் & சாதாரண ஊழியர்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி?

  • தொழிற்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் என்ன?

இப்படி எல்லா விடயங்களையும் தெரிந்து முடிவெடுத்தால், நீண்டகால நோக்கில் அந்த உற்பத்தி நிறுவனம் நீடித்திருக்கும். அப்போதைக்கு சலுகை கிடைக்கிறதென்று முதலீடு செய்துவிட்டு பின்னால் வருந்துவதில் பயனில்லை. சில தவறான முதலீடுகள், ஒரு நிறுவனத்தையே மண்ணோடு மண்ணாக்கியிருக்கிறது. நீங்கள் முடிவெடுக்க வேண்டிய பதவியில் இருந்தால் அல்லது அதற்கான தகவல்களை தருபவராக இருந்தால், சரியான முடிவெடுக்க என்னவெல்லாம் தேவையென்பதை பட்டியலிட்டு சேகரியுங்கள். எல்லாம் தெரிந்தபின் முடிவெடுப்பது எளிதாகிவிடும்.


கல்வி, மருத்துவம், கேளிக்கைகள் போன்றவை இன்று எல்லா கிராமங்களுக்கும் எட்டும் தூரத்தில் வந்துவிட்டன. நகரத்திற்கு, கிராமத்திற்குமான இடைவெளி, மணிநேரத்திலிருந்து சில நிமிடங்களாக குறைந்துவிட்டன. அப்படியானால், வேறென்ன விடயங்களை / தகவல்களை கவனிக்க வேண்டுமென்று யோசியுங்கள். உங்கள் வேலை, வியாபாரம், வசதிகள் என்று நிறைய இருக்கலாம். அப்படியான என்னென்ன தகவல்கள் உங்கள் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணக்கிடுங்கள்;


குடும்பமோ, வேலையோ, தொழிலோ, விளையாட்டோ, நீங்கள் ஈடுபட்டுள்ள பணி எதுவானாலும் அவற்றில் அவ்வப்போது எடுக்கவேண்டிய முடிவுகளுக்கு, போதிய தகவல்களை திரட்டி, அலசிப்பார்த்து முடிவெடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இன்றைய போட்டியில் யார் விளையாடவேண்டும் என்று தீர்மானிக்க வீரர்களின் திறமை, தற்போதைய செயல்பாடு, எதிரனியின் பலம்-பலவீனம் என்று எல்லாவற்றையும் அலசிப்பார்த்து முடிவெடுக்க வேண்டும். எதிரணியைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நீங்கள் முடிவெடுத்தால், நிலைமை எப்படி இருக்கும்?


ஒருவேளை சரியான தகவல்கள் இல்லாமல் முடிவெடுத்தால், என்ன தவறுகள் நேரலாம்;

  • நல்ல வெற்றி வாய்ப்புக்கள் தவறிப்போகலாம்;

  • உங்கள் திறமைகள் வீணாகலாம்;

  • நீங்கள் திறமையற்றவர் என்று சமுதாயம் தவறாக கணிக்கலாம்;

  • என்ன நடக்கும் என்று தெரியாததால், தேவையற்ற மன உளைச்சலும், மனஅழுத்துமும் எற்படும்;

  • சில பொருள் இழப்புக்கள் ஏற்படலாம்;

  • உச்சபட்சமாக எங்காவது உயிரிழப்பும் நேரலாம்

இந்த தவறுகளை தவிர்த்து, சரியான முடிவுகளை எடுக்க, எப்போது போதுமான தகவல்களை திரட்டி, அலசிப்பார்த்து முடிவெடுங்கள். தகவல்கள் தானாக உங்களிடம் வராது. நீங்கள்தான் தேடிப்பிடிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்;

  • என்ன விடயத்திற்கு முடிவெடுக்க வேண்டும் என்பதில் முதலில் தெளிவிருக்க வேண்டும்

  • அந்த முடிவெடுக்க என்னென்ன தகவல்கள் தேவை என்பதை தெளிவாக பட்டியலிட வேண்டும்;

  • அந்த தகவல்கள் எங்கிருந்து, யார் மூலம், எப்படி கிடைக்க வேண்டுமென்று திட்டமிடங்கள்;

  • கிடைத்த தகவல்களின் உண்மைத் தன்மையை எப்போதும் தொடர்ந்து பரிசோதியுங்கள்;

  • நீங்கள் முடிவெடுப்பதற்கு முன், அதைச் சார்ந்தவர்களின் கருத்துக்களையும் கேளுங்கள்;

  • எல்லாவற்றிற்குமான காரண-காரியங்களையும், சாதக-பாதகங்கள், அலசிப்பார்த்து முடிவெடுங்கள்;

இப்படி பட்டியலிட்டால், எல்லாவற்றிற்குமான பட்டியல் நீண்டு கொண்டே போகும்; உங்கள் கையிலிருக்கும் சூழ்நிலையில், முடிவுகள் எடுக்க என்ன தேவை என்பதை அறிந்து, சோம்பேறித்தனப்படாமல் அந்த தகவல்களை சேகரித்து, அலசிப்பார்த்து முடிவெடுங்கள். வெற்றி உங்களுக்கே!!!


நீங்கள் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில்

எல்லா சாதக-பாதகங்களையும் கருத்தில் கொண்டு

சரியான முடிவை எடுக்க

உங்களிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றனவா?


முழுமையான தகவல் இல்லாமல்

அரைகுறை அறிவுடன் / தகவலுடன் எடுக்கும் முடிவு

எப்படி சரியானதாக இருக்க முடியும்!!


முழுமையான தகவல் இல்லாவிட்டால்

நீங்கள் இல்லை என்று நம்பிசெய்யும் இடத்தில்

இருக்குமென்ற நிலைவந்தால் திண்டாட்டம்!

இருக்கும் என்ற நம்பி செய்யும் இடத்தில்

இல்லையென்ற நிலைவந்தாலும் திண்டாட்டம்தான்!

இருக்கிறதோ-இல்லையோ!! வேண்டுமோ-வேண்டாமோ!!

சரியோ-தவறோ!! இவரோ-அவரோ!! - எதுவானாலும்

முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்!

தகவல் போதவில்லை என்றால்

போதுகின்றவரை தேடிப்பிடியுங்கள்!!


- [ம.சு.கு 19.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page