top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 252 - சந்தை நிலவரமும், பொருளின் விலையும் !!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-252

சந்தை நிலவரமும், பொருளின் விலையும்!!


  • கிராமங்களில் வாரம் ஒருநாள் கூடும் சந்தைக்கு போயிருக்கிறீர்களா? மாலை 4-5 மணிக்கு சென்று காய்கறிகளை வாங்கிப்பாருங்கள். தக்காளி - கிலோ 20 ரூபாய் என்றும், வெங்காயம் – கிலோ 30 ரூபாய் என்றும் விற்கப்படும். அதே தினத்தில், சற்று தாமதமாக 9 மணிக்கு சந்தைக்குச் சென்று வாங்கிப் பாருங்கள், தக்காளியை வியாபாரி பாதிவிலைக்கு (10 ரூபாய்க்கு) கொடுப்பார். ஆனால் வெங்காயத்தை அதே 30 ரூபாய் என்பார். ஏன் இப்படி விதவிதமாக விலையை வியாபாரி மாற்றுகிறார் என்று யோசிக்கிறீர்களா?..

  • இன்றைய காலகட்டத்தில், கைபேசி செயலிகள் நம் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டன. வீட்டிலிருந்தபடியே உணவு, உடை, என்று எதையும் வீட்டிற்கே உங்கள் விருப்பம்போல தருவிக்கலாம். அப்படி நீங்கள் செயலிகளில் உணவுப் பொருட்களை வாங்கியிருக்கிறீர்களா? உத:”ஸ்விக்கி” செயலியில் பொருட்களை வாங்கும் போது, ஒரு சில பொருட்களுக்கு, சில கடைகளில் மட்டும் அவர்கள் 30%-50% தள்ளுபடி தருவார்கள். ஒரு சில கடைகளுக்கு கொண்டுவந்து கொடுக்கும் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். அவ்வப்போது “நெரிசல்”கட்டணம் என்று சற்று கூடுதலாக வாங்குவார்கள். அதே போலத்தான் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் “ஓலா” “ஊபர்” போன்ற செயலிகளும். இந்த செயலி நிறுவனங்கள் எப்படி வாடிக்கையாளர்களை மூளைச்சலவை செய்து அவர்களின் செயலி முறைகளுக்கு அடிமையாக்குகிறதென்று யோசித்திருக்கிறீர்களா?

வாரச் சந்தையோ, காலையில் கூடி முடியும் உழவர் சந்தையோ, களம் எதுவானாலும், நேரம், பொருள் & வாடிக்கையாளர் தேவை என்ற மூன்று கோணங்களின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு, அங்கு வர்த்தகம் வெகு விமரிசையாக நடக்கிறது. அழுகிவிடக்கூடிய பொருட்களான தக்காளி, கீரை வகைகள் மாலையில் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும். இரவு நெருங்கும்போது, அவற்றை பத்திரப்படுத்தி வைப்பதற்கு கூடுதல் செலவாகும் என்பதால் முடிந்தவரை குறைந்த விலைக்கு கொடுத்து முடித்துவிடுகிறார்கள். அதேசமயம், வெங்காயம் போன்ற பொருட்களை அப்படி, விலை குறைந்து விற்க யாரும் தாயாராகவில்லை. அவற்றை இன்னும் சிலதினங்களுக்கு வைத்து விற்கலாம் என்ற காரணத்தினால், விலையை குறைக்காமல் விற்கிறார்கள்.


அப்படி இரவு ஆன பின்பு, சந்தைக்கு பொருட்களை வாங்கச் சென்றால் நல்லதென்று உங்கள் மனம் நினைக்கும், ஆனால் அதிலிருக்கும் சின்னச்சின்ன சிக்கல்கள் என்னவென்றால்;

  • ஒருவேளை எல்லா முக்கியமான பொருட்களும் தீர்ந்துவிட்டால், தாமதமாக வருபவருக்கு ஒன்றும் மீதமருக்காது!

  • மாலை நேரத்தில் நல்ல தக்காளிகளை மக்கள் வாங்கிச் சென்றிருப்பார்கள். இரவு நேரத்தில், மக்கள் கழித்து ஒதுக்கிய தக்காளிகள் மட்டுமே மீதமிருக்கும்!

இந்த பிரச்சனை வெங்காயத்திலும், உருளைக்கிழங்கிலும், சேனைக்கிழங்கிழும் இல்லை. ஏனெனில் அவைகள் நீண்ட நாள் வைத்து விற்பனை செய்யக்கூடியன. அப்படி பொருட்களின் தன்மைக்கும், அன்றைய நேரத்திற்கும், வாடிக்கையாளர் தேவைக்கும் ஏற்ப விலையை நிர்ணயித்து, தேவைப்படும்போது, போதுமான மாற்றங்களை ஏற்படுத்தி விற்றால், தொழிலில் வெற்றியும், இலாபமும் அடையலாம்;


வாடிக்கையாளர் சேவையை பிரதானமாக கொண்ட சில முக்கிய செயலிகளுக்கு, பல முதலீட்டாளர்கள் வருகிறார்கள். ஆரம்பகாலத்தில், ஆயிரமாயிரம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டாலும், தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். எதற்கு அப்படி வருடத்திற்கு ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறதென்று நீங்கள் ஆச்சரியப்படலாம். உத; “ஸ்விக்கி” செயலியில் நீங்கள் உணவுகளை தேர்வு செய்கிறீர்கள். ஆரம்பத்தில் அந்த செயலியை நீங்கள் பயன்படுத்த ரூபாய் 50-500 பல இலவச திட்டங்களை அறிவித்தனர். அதே சமயம், கடைகளை ஆரம்ப காலங்களில் கட்டணமில்லாமலும், விலையில் பங்கேதுமில்லாமலும் சேர்த்தார்கள். கடையில் ரூ.100/- க்கு விற்றபொருள், வாடிக்கையாளரின் வீட்டிற்கு ரூ.90/-க்கு கிடைக்குமாறு சலுகை அறிவித்து மக்களை பழக்கப் படுத்தினார்கள். கடைக்கு சென்று சாப்பிடுவதைக் காட்டிலும் வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுவது, அவர்களின் சோம்பேறிதனத்திற்கு மிகவும் ஏதுவாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதை முற்றிலுமாய் விரும்பி ஏற்றுக்கொண்டு, நன்றாக பழகிவிட்டார்கள். இன்று கடைக்கு செல்ல சோம்பேறித்தனம். விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்குகிறார்கள். ஆரம்பத்தில் கடைகள் தேவையென்று அந்த நிறுவனம் அவர்களுக்கு சலுகை கொடுத்தது. இன்று பெரும்பாலான வியாபாரம் இணைய செயலி வழியாகிவிட்டதால், அந்த கடைக்காரர்களுக்கு இந்த செயலி நிறுவனம் தேவை என்றாகிவிட்டது. இப்போது, கடைகள், தங்கள் விலையில் 10%-25% வரை பங்கு பெறுகிறார்கள்.


சந்தையை பிடிக்கும் வரை கோடிக்கணக்கில் கொட்டினார்கள். இலவசம் என்ற மாயையில் சுழல விட்டார்கள். எல்லாம் அவர்கள் திட்டமிட்டபடி கட்டுப்பாட்டிற்குள் வந்தபின்னர், சந்தையில் எல்லாப் பொருட்களின் விலையையும், அவர்களின் பங்கையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். இன்று எதிர்த்துக்கேட்க யாருமில்லை. அந்த நிறுவனம் வைப்பதுதான் சட்டமும், பொருளின் விலையும்;


இப்படித்தான் சந்தை இயங்குகிறது;

  • சந்தைக்கு பொருள் வரத்து எந்தளவு இருக்கிறதென்பதை பொருத்து மொத்தவிலை நிர்ணயம்;

  • வாடிக்கையாளர் தேவை எந்தளவிற்கு இருக்கிறதென்பதை பொருத்து சில்லரைவிலை நிர்ணயம்;

  • பொருளின் தன்மை & அது எத்தனை நாட்களுக்கு தாங்கும், எத்தனை வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கேற்ப பொருளின் விலை நிர்ணயமாகிறது;

  • உங்கள் வியாபாரத்தில், எந்த கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைப்பொறுத்து, வாடிக்கையாளர் வரவை அதிகரிக்க தள்ளுபடி விலைகளை நிர்ணயிக்கிறீர்கள்;

சந்தையின் இயக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்;

பொருளின் விலை நிர்ணயங்களை புரிந்து கொள்ளுங்கள்;

பொருளின் வரத்து – தேவை குறித்து ஆய்ந்தறிந்து

அன்றாட விலையை நிர்ணயுங்கள்;

எல்லாவற்றிற்கும் பிரதானமாக

பொருளின் தரத்தையும், நேரத்தையும் தவறவிட்டுவிடாதீர்கள்;


சந்தை தான் வெற்றியை தீர்மாணிக்கிறதென்பர்

ஒருவகையில் அது உண்மையென்றாலும்

சூழ்நிலைக்கேற்ப இயங்கும் உங்கள் மூளைதான்

உண்மையான திறமைசாலி.


சரியான விலைக்கு விற்றால்தான்

ஏதொ ஒருசில காசுள் மிஞ்சும்.

அந்த சரியான விலை என்ன என்பதுதான்

நம் எல்லோருக்குமான பெரிய கேள்வி!

நீங்களே யோசித்து விடை தேடுங்கள்;


- [ம.சு.கு 18.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page