“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-247
வலைதளத்தின் சக்தியை பயன்படுத்துங்கள்!!
தொழில் ஆர்வம் கொண்ட, நன்றாக பேசத்தெரிந்த ஒரு பெண்மணி வீட்டளவில் சின்னச்சின்ன வியாபாரங்களை செய்துகொண்டிருந்தார். அவரது தோழி மூலம் சமூகவளைதளங்கள் பற்றியும், அவற்றை விளம்பரங்களுக்கும், வியாபாரங்களுக்கும் எப்படி இன்று நிறுவனங்களும், தனிநபர்களும் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து, யூடியூப் [youtube] தளத்தில் தன் வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணற்ற காணொளிகளை பதிவேற்றினார். இன்று அவரது தளம் பல இலட்சம் சந்தாதாரர்களுடன், ஆண்டு வருமானம் கோடிகளை கடந்து நிற்கிறது. அவரது வியாபாரம் பொருட்கள் தயாரிப்பு, பயன்பாடு, விற்பனை என்ற நோக்கில் இருக்கிறது. இதேபோல சமையல், பாடங்களை கற்பித்தல், கேளிக்கை, விமர்சனம் என்றும் எண்ணற்ற துறைகளில் இன்று பலபிரசித்து பெற்ற யூடியூப் தளங்களை வியாபார நோக்கில் நிர்வகித்து பல இலட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல நீங்கள் என்ன வியாபார திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஊரடங்கினால் பலருக்கு வேலையிழப்பு. குறிப்பாக சுற்றுலா தொழில் முற்றிலுமாக 2 ஆண்டுகள் முடங்கியபோது., விடுதிகளில் பணியாற்றிய எண்ணற்ற ஊழியர்கள் வேலையில்லாமல் இருந்தனர். அந்த சமயத்தில் சமையல் தெரிந்தவர்கள் ஆங்காங்கே சின்னச்சின்ன அடுப்படிகளை உருவாக்கி இணையத்தின் மூலம் உணவை விற்கத் துவங்கினர். இன்று பிரசித்து பெற்று விளங்கும் “ஸ்விக்கி” “ஜொமேட்டோ” போன்ற செயலிகள் அவர்களின் வியாபாரத் தேவையை பூர்த்தி செய்தது. அப்படி உணவகம் ஆரம்பித்தவர்களில் பலர், விடுதிவேலையை நிரந்தரமாக துறந்துவிட்டு தங்களின் தொழில் முயற்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எங்கள் ஊரில் பிரியாணி சமைக்கும் முறையை கற்பிப்பதில் பிரபலமாகி, சமையலுக்கென யூடியூப் தளம் நடத்தி மாதம் 4-5 இலட்சங்களில் வருவாய் ஈட்டும் யூடியூப் உழைப்பாளியும் இருக்கிறார். அன்றாடம் நிறைய உணவு உண்ணக்கூடிய ஒருவர், தன்னுடைய உணவு உண்ணும் திறமையையே “சாப்பாட்டுராமன்” என்று விளம்பரப்படுத்தி யூடியூப்பில் பணம் சம்பாதிக்கிறார்.
ஒருபுறம் தன் தனித்திறமைகளை விளம்பரப்படுத்தி ஒருசிலர் பொருளீட்டிக்கொண்டிருக்க, இப்படி பிரபலமாகி, நிறை வருவாய் ஈட்ட அதிர்ஷ்டம் வேண்டுமென்று நிறைய சோம்பேறிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் 20-25 காணொளிகளை யூடியூப்பில் பதிவேற்றி முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாய் வரவேற்பில்லை என்று சீக்கிரத்தில் விலகிவிட்டார்கள். வியாபாரம் என்பது பல ஏற்ற-இறக்கங்களை கொண்டது. அதிலும் ஆரம்பகட்டத்தில், சந்தையில் அங்கீகாரம் கிடைக்கப்பெரும் வரை சோதனைகள் தான் மிகமிக அதிகம். அவற்றை கடந்து வியாபாரத்தை நிலைநிறுத்த நிறைய போராட வேண்டும். வெற்றிகரமாக இன்று வலையுலகில் வலம்வருபவர்கள் யாரும் பெரிய பின்புலமும், செல்வாக்கும் படைத்தவர்கள் அல்ல. தங்களின் சொந்த உழைப்பில், தொடர்ந்து முயற்சித்து, வலையுலகின் ஆற்றலை பயன்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்கள். உங்கள் திட்டங்களை வலையுலகில் எப்படி பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள்!
கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்தவர்கள் பலர். அவர்களுக்கு அன்றைய தினங்களில் வேறு மாற்று வேலையும் இருக்கவில்லை. அடிப்படை தேவைகளுக்கே மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், இணைய உலகம் சில வியாபார வாய்ப்புக்களை வழங்கியது. அதை அறிந்தவர்கள், வாய்ப்பை பயன்படுத்தி இன்று நல்ல நிலைக்கு வளர்ந்திருக்கிறார்கள்.
வியாபாரத்தை கடந்து, இன்று இணைய உலகம், ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணற்ற மென்பொருள் நிறுவனங்கள், தங்களின் அலுவலகங்களை சுருக்கி, ஊழியரின் வீட்டையே அலுவலகமாக மாற்றிவிட்டனர். பல நிறுவனங்களுக்கு ஊழியர்களின் போக்குவரத்து, அலுவலக வாடகை போன்றவைகளில் எண்ணற்ற சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த சிலர், இன்று சொந்தவூர்களுக்கு வந்துவிட்டனர். இங்கிருந்தே அமெரிக்க வேலையை கவனித்து, சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இவையணைந்தும் இணைய உலகம் நமக்கு வழங்கியுள்ள பொன்னான வாய்ப்புக்கள்.
ஒருபுறம் இணையம் நம் இளைய தலைமுறையை கணிணிகளுக்கும், கைபேசிகளுக்கும் அடிமையாக்கியும், சூதாட்டங்களை பரப்பி தீமை விளைவித்தாலும், மறுபுறம் எண்ணற்றவர்களின் வாழ்க்கை மேம்பட வழிவகுத்திருக்கிறது.
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறீர்களா? இன்றைய இணைய உலகம் உங்கள் வியாபார வளர்ச்சிக்கு எப்படி பயன்படும் என்று யோசிக்கிறீர்களா?
நீங்கள் யார்? உங்கள் நிறுவனம் என்ன பொருள் விற்கிறது? என்று உலகில் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது;
உலகில் எங்கிருந்தும் எந்த பொருளையும் வாங்கவும், விற்கவும் முடிகிறது;
இன்றைய சந்தை நிலவரம் என்ன? வாடிக்கையாளர்களின் விருப்பு-வெறுப்புக்கள் என்ன? என்று சந்தை குறித்து ஆய்ந்தறிந்து கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது;
வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, சமூக வளைதளங்களும், மின்னஞ்சல்களும் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது;
பல புதிய திறமைகளை வளர்க்கும் கல்வியை இன்று இணைய உலகம் மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்கிறது. கல்வி நிறுவனத்திற்கு அது வர்த்தகம். மாணவர்களுக்கு அது ஒரு வாய்ப்பு;
மேற்குறிப்பிட்ட பட்டியல் ஒரு சிறு உதாரனப்பட்டியால் தான். உங்களின் தொழில், செயல்படும் இடம், சந்தை வாய்ப்புக்களுக்கு ஏற்ப, இணையத்தை பயன்படுத்தி உச்சத்தை தொடுவது உங்கள் சாமர்த்தியம்.
மாயங்கள் நிறைந்த இன்றைய இணைய உலகில்
இலட்சோபலட்சம் வியாபார வாய்ப்புக்கள்
புதைந்து கிடக்கின்றன;
இணையத்தின் அளப்பறிய ஆற்றலை பயன்படுத்த
முதலில் உங்களுக்கென்று அடையாளத்தை உருவாக்குங்கள்;
எப்படி உங்களின் வாடிக்கையாளரை
இணையத்தின் மூலம் சென்றடைவதென்று தெரிந்துகொள்ளுங்கள்;
வளைதளங்கள் மூலம், வாடிக்கையாளருடன்
தொடர்ந்து தொடர்பில் இருங்கள்!
இன்றைய விளம்பர உலகம்
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சியைக் காட்டிலும்
சமூகவளைதளங்களை சக்திவாய்ந்ததாக சொல்கிறது;
நாளை வேறொன்று வரும்;
அதற்கான முறைமையை இணையமே உங்களுக்கு கற்பிக்கும்;
இணையத்தை உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும்
சாதுர்யமாக பயன்படுத்துவது உங்கள் சாமர்த்தியம்!!
- [ம.சு.கு 13.06.2023]
Comments