top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 245 - வரிசையா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா?"

Updated: Jun 12, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-245

வரிசையா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா?


  • ஒரு சிறு நண்பர்கள் குழு இரவு உணவிற்கு வெளியே கடைக்கு செல்கின்றனர். உணவு வகைகளுக்கான பட்டியல் அவர்களிடம் கொடுக்கப்படுகிறது. ஓரிருவர் அந்த பட்டியலை முழுவதுமாக படித்துவிட்டு, அந்த பட்டியலில் இல்லாத ஒரு உணவுப்பொருளை கேட்கின்றனர். கடைக்கார் இல்லை என்று சொன்னபின், பட்டியலில் உள்ள ஓரிரு உணவை தேர்வுசெய்கின்றனர். ஓருவருக்கு பட்டியலை பார்த்து தேர்ந்தெடுப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு பிரியாணி இருந்தால் கொடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். ஒருவர் பட்டியலையே பார்க்காமல் எனக்கு இட்லிமட்டும் போதும் என்று சொல்லிவிடுகிறார். ஒருவர் பட்டியலில் உள்ள உணவுப்பொருளில் சில மாற்றங்கள் செய்து தருமாறு சொல்கிறார். இவர்கள் தேர்வு செய்த பாணியில் என்ன சாதக-பாதகங்கள் இருக்கின்றன? இவற்றிற்கும் உங்கள் பழக்கவழக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? சற்றி அலசுங்கள்!

  • ஒரு முக்கியமான கலந்தாய்வு கூட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் ஒரு மணிநேரத்தில் கூட்டம் துவங்கவுள்ளது. அந்த கூட்டம் குறித்த கருத்துக்கள் பலரிடம் இருந்து வரவேற்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றை உங்களின் செயலாளர் சீராக பிரிந்து பட்டியலிட்டுள்ளார். ஆயிரம் கருத்துக்களை அடுத்த சில நிமிடங்களில் படித்துவிட முடியாது. அதேசமயம் அந்த கருத்துக்கள் குறித்து அந்த கூட்டத்தில் விவரிக்க வேண்டும். பின்னர் படிக்கலாம் என்று முற்றிலுமாக தள்ளிவைக்கவும் முடியாது. சரி படிக்கலாம் என்று எடுத்து வரிசையாக படித்தால் ஓரிரு பக்கங்களை கூட தாண்ட முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன சாத்தியப்படும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

உணவகத்தில் பட்டியலில் இருப்பதில் சில பொருட்கள் தயார் நிலையில் இருக்கும். சொன்னவுடன் கிடைத்துவிடும். ஒருசிலவற்றை நீங்கள் தேர்வுசெய்தபின்தான் தயார் செய்வார்கள். குறைந்தபட்சம் 15-20 நிமிடங்கள் காத்திருக்க நேரலாம். கேளிக்கைக்காக இரவு விருந்திற்கு செல்கின்ற போது, அந்த காத்திருப்பு ஒரு பொருட்டாக இருக்காது. ஒருவேளை மதியவேளையில் அவசரமாக உணவருந்திவர வேண்டியிருக்கும் பட்சத்தில், அப்படி தேர்வுசெய்து காத்திருக்க முடியுமா?

  • உங்களுக்கு போதுமான அளவு நேரம் இருக்குமானால், தேடித்தேடி சொல்லலாம். நேரம் குறைவென்றால், எது தயாராக இருக்கிறது? அதை சீக்கிரம் கொடுங்கள் என்பீர்கள்!

  • பட்டியலைப் பார்த்து இதுவா? அதுவா? என்று குழம்புபவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் ஏதேனும் ஒன்றை சொல்லிவிட்டு அமைதியாகி விடுவீர்கள்!

  • தான் எங்கோ முன்னார் சாப்பிட்ட ஒரு உணவுவகையை நண்பர்கள் மத்தியில் பகட்டிற்காக சொல்ல நினைப்பவர், பட்டியலில் அது இல்லை என்று தெரிந்தும் கேட்பார். இல்லை என்று கடைக்காரர் சொன்னபின்னர், சரி, இதைக்கொடுங்கள், இப்படி செய்து கொடுங்கள் என்று பட்டியலில் உள்ளவொன்றை தேர்வு சொய்வார்கள்!

  • பட்டியலை தொட்டுக்கூட பார்க்காமல், வழக்கமான இட்லி கொடுங்கள் என்று சாதாரணமாக முடிப்பார்கள்!

இப்படி பட்டியலில் உள்ளவற்றை, தேர்வு செய்வதற்கென்ற அவரவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற் ஒரு பாணியை கடைபிடிக்கிறார்கள். இதில் சரி-தவறென்று ஏதுமில்லை. நீங்கள் அந்த கடைக்கு வாடிக்கையாளர். உங்களுக்க தேவையானதை அர்களிடம் இருந்தால், தயார் செய்து கொடுப்பது அவர்களது வேலை. அதே பாணியில் வீட்டில் உங்கள் தாயிடம் ஆளுக்கொரு உணவை தயார்செய்து தர கேட்கமுடியுமா? வீட்டில் ஒரு வேளைக்கு ஓரிரு உணவுப்பொட்கள் மட்டுமே செய்யப்படும். உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை அனுசரித்து சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அப்படித்தான் உங்கள் வியாபாரமும். ஒருசில இடங்களில் நீங்கள் தேர்வுசெய்து கேட்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கும். அங்கு நீங்கள் விரும்பியதை தேர்வு செய்து சாதியுங்கள். எங்கு வாய்ப்பு இல்லையோ, அங்கு இருப்பதைக் கொண்டு எப்படி சிறப்பாக செய்வதென்று பார்த்து அதில் சாதனையை மேற்கொள்ளுங்கள். சூழ்நிலைகளுக்கேற்ப, நீங்கள் வரிசையாகவும் வரலாம், உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்தும் வரலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்?அவர்களின் பங்களிப்பு என்ன? தேர்வு செய்வது சரியா? என்பதை மட்டும் தொடர்ந்து அலசிக்கொண்டிருங்கள் [கடையில் எல்லாவற்றையும் ஒரே பொழுதில் சமைக்க ஆளிருக்கும், ஆனால் வீட்டில் உங்கள் தாயால் முடியுமா?]


இரண்டாவது உதாரணத்தில், கலந்தாய்வு கூட்டம் துவங்க சிறிது நேரம் தான் இருக்கிறது. எல்லா நபர்களுடைய கருத்துக்களையும் வாசித்தபின்தான் துவங்குவேன் என்று தீர்மானித்தால், கூட்டத்தை மாற்றிவைக்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், முதல் ஓரிரு பக்கங்களை மட்டும் பார்ப்பது ஏதுவாக இருக்காது. முக்கியமான சில கருத்துக்களை தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் செயலாளர் அதை சீராக பிரிக்கும்போது, முக்கியாமனவற்றை குறித்திருப்பார். அப்போதை அவசரத்திற்கு அவர் குறிப்பிட்ட முக்கியமானவற்றை மட்டுமே பார்த்துவிட்டு அப்போதைய கூட்டத்தை நடத்துவீர்கள். கூட்டத்தில் அந்த ஆயிரம் கருத்துக்களையும் பேசமுடியாதென்பதால், அந்த முக்கியமானவற்றை மட்டும் பேசி கூட்டத்தை சிறப்பாக முடிப்பீர்கள். இதில் தவறேதுமில்லை. ஏனையவர்களின் கருத்துக்கள் தவிர்க்கப்பட்டதென்று வருத்தப்படவும் தேவையில்லை.


பள்ளியில் வருகைப்பதிவேடு குறிக்கும் போது, ஆசிரியர் வரிசையாக அழைப்பார். ஆனால் பேச்சுப்போட்டிக்கு அழைக்கும்போது, ஆர்வமுள்ளவர்கள், திறமையுடையவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழைப்பார். சூழ்நிலைகளுக்கேற்ப உங்கள் தேர்வுமுறை வரிசையாக இருக்கவேண்டுமா? குறிப்பிட்டவர்கள் மட்டுமா? என்று முடிவுசெய்யப்படும். அந்த முடிவு எந்தவகையிலும் அதீத பாரபட்சம் உடையதாக இல்லாதவரை அமைதியாக முடியும். ஒருவேளை உங்களின் பாரபட்சம் மற்றவர்களை பாதித்தால், உள்ளுக்குள் போராட்டம் வெடிக்கும்.


உங்கள் நிறுவனத்தில், எல்லா ஊழியருக்கும் ஒரேமாதிரியான சம்பள உயர்வை அளிக்கலாம், அல்லது ஆட்களுக்கேற்ப மாறுபட்ட உயர்வை அளிக்கலாம். ஒருவேளை சமமாக அளித்தால், நன்றாக வேலை செய்பவன், தன் உழைப்பு சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்று வேறுவேலை தேட வாய்ப்பாகிவிடும். அதேசமயம், ஒருசிலருக்கு மட்டும் அதீத உயர்வை அளித்து, மற்றவர்களை தவிர்த்தால், நிறுவனத்திற்குள் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து இணக்கமும், ஒத்துழைப்பும் குறைய நேரிடலாம். நிறுவனத்திற்கு சாதனையாளர்களும் வேண்டும், சராசரியாளர்களும் வேண்டும். எல்லோரையும் அனுசரிக்கும்விதமாக, அதேசமயம் பாரபட்சம் அதிகம் இல்லாத விதமாக நிர்வகிப்பதில்தான் உங்கள் மனிதவள மேலாண்மைத் திறன் வெளிப்படவேண்டும்.


உங்களின் வெற்றியை நோக்கிய பயனத்தில், எல்லாவற்றையும் ஒரேமாதிரி செய்ய முடியாது. நீங்கள் சமயத்திற்கேற்ப பல பிரசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி தோல்விகளுக்கேற்ப மாற்றங்களை செய்து முன்னேற வேண்டும். சில தேர்வுகள் தவறாகலாம். உடனே திருத்தி அடுத்த முயற்சியை துவக்குங்கள்.

  • வரிசையாக செய்வதில் ஒரு எளிமையும், ஒழுங்குமுறையும் இருக்கும். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் பெரிய சாதனைகள் செய்வது சாத்தியமில்லாமல் போகலாம்!

  • குறிப்பிட்டவற்றை தேர்வுசெய்து செய்வதில் உற்பத்திபெருக்கம் இருக்கும். அதேசமயம் எதை தேர்வுசெய்வதென்ற குழப்பமும், பாரபட்சமும் இருக்கும். சில மனக்கசப்புக்களும் உருவாகும்!

நான் வரிசையாகத்தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதில் பயனில்லை. அதேசமயம் வரிசையை மதிக்க மாட்டேன் என்று முற்றிலுமாய் அவமதிப்பதும் சரியில்லை. சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பது உங்கள் தனித்திறன்.


சிலவற்றை வரிசையாக செய்யலாம்

சிலவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்யலாம்

சிலவற்றை முக்கியத்துவத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து செய்யலாம்

இதுதான் சிறந்த முறையென்று விதியொன்றும் இல்லை

எதைச் செய்தாலும்

அது மனிதகுலத்தின் அடிப்படை தர்மத்தை மீறாதவரை

நீங்கள் தைரியமாக முடிவெடுத்த முன்னேறலாம்;


உங்கள் இலட்சியங்களுக்கேற்ப வரிசைப்படுத்துங்கள்;

உங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப முன்னுரிமை அளியுங்கள்;

ஆம்! யாரும் நம்பவைத்து ஏமாற்றப்படாத வரை

ஒருசில பாரபட்சங்களில் தவறேதுமில்லை!!!


- [ம.சு.கு 11.06.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page