top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 244 - எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-244

எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள்!


  • ஒரு சிறுவனிடம், விளையாட்டு சாதனம் ஒன்றை கொடுங்கள். அப்படி சிறுவர்களைக் கொண்ட பல வீடுகளில், ஓரிரு நாட்களுக்குள் அதன் பாகங்கள் வீட்டின் பல இடங்களில் சிதறிக் கிடக்கும். முதல் நாள் அந்த விளையாட்டுப் பொருளை இயக்கி மகிழ்ந்த சிறுவன், அடுத்த நாள் அது எப்படி இயங்குகிறதென்று புரிந்துகொள்ள முயற்சிப்பான். மூன்றாவது நாள் அந்த சாதனத்தை பிரித்து அதன் இயக்கத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பான். அது புரிந்தாலும்-புரியாவிட்டாலும், பிரித்தவற்றை திரும்ப அதேவண்ணம் மாட்டத் தெரியாததால், அதை அப்படியே போட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுவான். இப்படி உங்கள் வீட்டில் நடக்கிறதா?

  • ஒரு குறிப்பிட்ட இயந்திரத்தை கொண்டு உற்பத்தி செய்யும் போது, அதன் உற்பத்தி அளவு ஒரு குறிப்பிட்ட அளவிருக்கும். அதை தாண்டி அந்த இயந்திரத்தில் அதிகம் செய்ய முடியாது. அதே நிலையில்தான் உங்களின் போட்டி நிறுவனங்களும் இருக்கும். இப்படி எல்லோரும் ஒரு எல்லைக்கோட்டில் முட்டி நின்றுகொண்டிருந்தால் முன்னேற்றம் எப்படி ஏற்படும். யாராவதொருவர் அந்த இயந்திரத்தின் அளவைத் தாண்டி உற்பத்தியை பெருக்க வேறு முயற்சிகள் செய்தால் தானே ஏதாவதொரு வழிகிடைக்கும். யாரும் எந்த ஆராய்ச்சியும், மாறுபட்ட முயற்சியும் செய்யாமல் இருந்தால், மாற்றங்கள் எப்படி சாத்தியமாகும்? நீங்கள் நடைமுறையில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவற்றை புரிந்து செய்கிறீர்களா என்பதை கவனியுங்கள். அதில் என்ன மேம்படுத்த முடியும் என்று ஆராய்ந்து பாருங்கள். உங்களின் ஆழமான புரிதலும், அடுத்த கட்ட ஆராய்ச்சியும், சோதனையும் பல புதிய பரிமானங்களுக்கு வழிவகுக்கும். இப்போது யோசித்துப்பாருங்கள் - நீங்கள் என்ன புரட்சிக்கும், புதுமைக்கும் வித்திட்டிருக்கிறீர்கள்? ஒருவேளை இதுவரை ஒன்றும் செய்யாவிட்டாலும், இப்போது உங்கள் கைகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சி என்ன?

குழந்தைகளின் ஆர்வத்திற்கு அளவே இல்லை. அவர்கள் எல்லாவற்றையும், ஏன்? எதற்கு? எப்படி? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் கற்றல் ஆர்வம் பொதுவானது. அதை நன்கு பெற்றோர்கள் ஊக்குவிக்கும் போது, அந்த பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மேலும் வேகமாகிறது. அப்படி எதற்கும் தயங்காமல், கூச்சப்படாமல், ஏன்-எதற்கு-எப்படி என்று குழந்தைகள் கேட்டுத் தெரிந்துகொள்வது போல நீங்கள் உங்கள் சந்தேகங்களை கேட்கிறீர்களா? அல்லது புதியவைகள் உங்களிடம் வரும்போது, அதைப்பற்றி முழுமையாக ஆராய்கிறீர்கள்?


இதுவரை எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள். மனித மனம் அப்படி எதையும் அவ்வளவு எளிதில் ஆராயாமல் விட்டுவிடாது. ஒவ்வொருவரின் அறிவைப்பொருத்து அந்த ஆராய்ச்சி எவ்வளவு ஆழமாக போகும், எந்தளவிற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பது தீர்மானமாகிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் போதிய அடிப்படை அறிவைப் பெற்றவர்கள், அதில் அடுத்த கட்ட நிலைப்பற்றி ஆராய்கிறார்கள். அடிப்படை அறிவில்லாதவர்கள், அந்த அடிப்படையை புரிந்துகொள்ள ஆராய்கிறார்கள். எப்போதும் ஏதேனுமொன்றை நம் மனம் ஆராய்ந்துகொண்டேதான் இருக்கும். அந்த ஆராய்ச்சியை மனதளவில் நிறுத்திவிடாமல், களத்தில் முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே வெற்றிக்கான வாய்ப்புக்கள் உறுவாகின்றன. சிந்தனைகளையும், ஆராய்ச்சிகளையும் எண்ணத்தின் அளவோடு நிறுத்துபவர்கள், மேற்கொண்டு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் தங்கிவிடுகிறார்கள். களத்தில் ஆராய்ந்து பார்ப்பவர்கள் வெற்றி தோல்விகளை அனுபவத்திலு உணர்கிறார்கள். அந்த அனுபவம் அடுத்த கட்ட முயற்சியை ஒழுங்குபடுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும்.


உங்களிடம் புதுமையான பொருட்களில் ஒன்றே ஒன்று கொடுக்கப்படுகிறது. அதை முற்றிலுமாக புரிந்துகொண்டு அதைப்போல மேலும் பலவற்றை தயாரிக்க பழகிவிட்டால், அந்த பொருள் இன்னும் மேம்பட வாய்ப்பாகும். ஒருவேளை அந்த பொருளை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்பதற்காக அந்த பொருள் குறித்து எந்த பரிசோதனையும், ஆராய்ச்சியும் செய்யாமல் இருந்தால், அந்த பொருளோடு எல்லாம் முடிந்துபோகும். அப்படியான ஆராய்ச்சியில் தான், மேலை நாடுகள் தயாரித்த எல்லா பொருட்களுக்கும் இணையான பொருட்களை சீனர்கள் தயாரித்து மலிவு விலையில் சந்தைப்படுத்தி உலகச் சந்தையில் கோலோச்சினார்கள். அப்படி உங்கள் தெருவில், உங்கள் ஊரில், உங்கள் நிறுவனத்தில் என்ன ஆராய்ச்சி நடக்கிறதென்று தெரிந்துகொள்ளுங்கள்?


எந்த பொருளையும், எந்தவொரு செயலையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும்போது

  • அந்த பொருள் குறித்த ஆழ்ந்த அறிவை பெறுவதற்கும், மேம்படுத்துவதற்கும் வழி ஏற்படுகிறது;

  • எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன், அந்த விடயத்தை எப்படி பல கோணங்களில் பார்க்க வேண்டும், அதன் சாதக-பாதகங்களை எப்படி அலசவேண்டும் என்ற தெளிவான அறிவு வளர்கிறது;

  • ஆராய்ச்சி, தற்போதைய நிலையிலிருந்து மேலும் மேம்படுத்த புது யோசனைகளுக்கு வழிவகுக்கிறது;

எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து புரிந்துகொள்ளும்போது, எல்லாவற்றிற்குமான காரண-காரியங்கள் புரிகிறது. அப்படி காரண-காரியங்கள் தெளிவாக புரியும் போது, எந்தவொரு குழுவையும் திறம்பட வழிநடத்த முடிகிறது. செய்கின்ற செயலின் முழுமையைப் புரிந்துகொள்ளாமல், எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளாமல், இருப்பதை இருக்கின்றவாரே ஏற்பவர்கள், வெறுமனே காலத்தை கடத்தி, சாதனைகளின்றி சாமானியர்களாகவே சாகின்றனர். அப்படி சாமானியராக சாவதற்கு விரும்புகிறீர்களா? அல்லது ஆய்வுகள் மூலம் உங்கள் வாழ்வையும், உங்கள் சமுதாயத்தின் வாழ்வையும் மேம்படுத்த விரும்புகிறீர்களா?


உங்களுக்கு சொல்லப்பட்டதை

அப்படியே கண்மூடித்தனமாக செயல்படுத்தினால்

மூடப்பழக்கங்கள் வேறூன்ற வழியாகிடுமே!


பறக்கமுடியாதென்று மூதாதையர் சொன்னார்கள்

முடியுமென்று ஆராய்ந்து நிரூபித்தது நம் மனித இனம்!

தானியங்கி சாத்தியமில்லை என்றனர்

தானியங்கிகளே வாழ்க்கையாகிவிட்டது இன்றைய

நவீன ஆராய்ச்சிகளாலும் கண்டுபிடிப்புக்களாலும்!


கிடைத்ததை பயன்படுத்துவதொரு புறம்

அது எப்படி இயங்குகிறதென்று ஆராய்வது மறுபுறம்

ஆராய்ச்சியும் ஆழமான புரிதலும்

அதை ஆண்டாண்டுகாலத்திற்கு நிலைத்திருக்க வழிசெய்கிறது

ஆராயாமல் விட்டவைகள்

அந்த பொருளோடும், நபரோடும் மடிகிறது!


- [ம.சு.கு 10.06.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page