“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-241
புதியவர்களை சந்தியுங்கள்..!
புதிதாக தொழில் துவங்கிய ஒருவருக்கு, படிப்படியாய் வாடிக்கையாளர்களை அதிகரிப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் உங்கள் அவரது தொழில் குறித்து சந்தைபடுத்த தெரியாமல் திணறினார். பின்னர் நண்பர்கள் பரிந்துரையின் பேரில், அந்த ஊரில் இயங்கிய வியாபாரிகள் கூட்டமைப்பு, ரோட்டரி அமைப்பு, தொழில் பொருட்காட்சிகள் என்று எண்ணற்ற சிறுசிறு அமைப்புக்களில் உறுப்பினர் ஆகி, வாராவாரம் தவறாமல் அதன் கூட்டங்களுக்கு போனார். ஒவ்வொரு முயற்சியிலும் 2-3 மூன்று புதிய வியாபார நண்பர்கள் பரிச்சயமானார்கள். அவர்கள் மூலம் புதிய தொடர்புகளை மேலும் விரிவாக்கினார். மூன்றாண்டுகளில் அவரது வியாபாரம் பலமடங்கு அதிகரித்து விட்டது. ஆரம்பத்தில் வாடிக்கையாளர் இல்லாமலும், வாடிக்கையாளரை எப்படி தன் கடைக்கு வரவைப்பதென்றும் தெரியாமல் திண்டாடியவருக்கு எப்படி வியாபாரம் பெருகியது?
உங்கள் பள்ளி நண்பர்கள் தவிர்த்து உள்ளூரிலும், வெளியூரிலும் உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் உங்களுக்கு பழக்கம் எப்படி ஏற்பட்டதென்று ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய பள்ளி நண்பர்களோ, உறவுகளோ உங்களுக்கு அவர்களை அறிமுகம் செய்துவைத்திருக்கலாம், அல்லது விளையாட்டு / வியாபாரம் / கேளிக்கைகளில் அவர்கள் அறிமுகம் கிடைத்திருக்கலாம், அல்லது ஏதேனுமொரு பயனங்களில் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். வழிவகை எதுவாயினும் ஆரம்பத்தில் அது முதல் சந்திப்புதான், அவர்கள் புதியவர்கள் தான். அந்த சந்திப்பில் அவருடனான தொடர்பை நீங்கள் மேற்கொண்டு வளர்த்ததன் பயனாய் இன்று நட்பு நீடிக்கிறது. ஒருவேளை நீங்கள் மேற்கொண்டு பேசாமல் இருந்திருந்தால், எப்படி நட்பு வளரும்?
வாடிக்கையாளர்கள் தன் கடைதேடி வரட்டும் என்று காத்திருக்காமல், வியாபாரி களத்தில் குதித்தார். பல வர்த்தக கூட்டங்களுக்கு சென்று தன் வியாபாரத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் செய்யும் வியாபாரம், கையாளும் பொருட்கள், தன் நிறுவனத்தின் தனித்திமை என்று எல்லாவற்றையும் சந்தை அறிந்து கொள்ள பல புதியவர்களை கண்டு தானாக முன்வந்து பேசி விளக்கினார். புதியவர்களோடு பேசுவதற்கு, அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்கி தவிர்த்தால், என்றென்றும் வளர்ச்சியில்லாமல் இருக்க வேண்டியது தான்.
நீங்களாக முடிவெடுத்து வளர்த்தால் மட்டுமே எந்தவொரு புதிய நட்பும், பழக்கமும் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். புதிய அறிமுகங்கள் கிடைக்கும்போது, வெறும் வணக்கம் தெரிவித்து, உதட்டளவில் புன்முறுவல் மட்டும் செய்து நிறுத்திவிட்டால் எப்படி உறவு வளரும்? இன்று முகநூலில் 5000 நண்பர்களை வைத்துக்கொள்கிறார்கள், ஆனால் நேரில் உதவ ஒரு நண்பனும் இல்லை. எந்த புதிய நபர்களுடனும் பேசுவதில்லை. பக்கத்து விட்டில் யார் இருக்கிறார் என்பது தெரியாது. உறவுகளுடன் கலந்துரையாடுவதில்லை. காலப்போக்கில் இவர்கள் கணிணிக்கும், கைபேசிக்கு அடிமையாய் கண்கெட்டு சாவதைத் தவிர வாழ்வின் இனிமைக்கு இவர்களிடம் என்ன இருக்கிறது?
இன்று பல வியாபாரங்கள், சேவை நிறுவனங்களின் வெற்றி, அந்த உரிமையாளரின் தொடர்பு வட்டம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொருத்துத்தான் தீர்மானமாகிறது. அந்த தொடர்பு வட்டத்தை பெருக்க உங்களுக்கிருக்கும் ஒரே வழி, தினம் தினம் நிறைய புதிய நபர்களை சந்தித்து பேசவேண்டும். அதற்காக தெருவில் போகும் அனைவரையும் அழைத்துப் பேசச் சொல்லவில்லை. உங்கள் வியாபார வாடிக்கையாளர்கள் பொதுவாக கூடும் இடங்கள் எதுவென்று பார்த்து, அடிக்கடி சென்றுவாருங்கள். ஒவ்வொரு பங்கேற்பிலும் 2-3 புதிய நபர்களுடன் பேசுங்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்கொண்டு இணைப்பை தொடர்வதற்கான வழிவகைகளை சிந்தியுங்கள். ஒரே சந்திப்பில் எல்லாம் வர்த்தகமாக மாற்றிவிட முடியாது. உங்கள் அறிமுகத்தை மேற்கொண்டு தொடர நீங்கள்தான் வழிதேட வேண்டும். தொடர்பு நீடிக்கும்போது, அது உங்கள் வர்த்தகத்தை வளர்க்க வாய்ப்பாகிறது.
அனுதினமும் நீங்கள் நிறைய புதிய நபர்களை சந்தித்து பேசினால்
உங்களின் கண்ணோட்டம் விரிவடைவதோடு உலக நடப்பும், சந்தை நிலவரமும், பொருளாதாரமும் உங்களுக்கு உடனுக்குடன் தெரியவரும்;
புதிய நபர்களுடனான தொடர்பு, பல புதிய உறவுகள் வளர வழிவகை செய்யும்;
புதியவர்களிடம் கற்பதற்கு நிறைய இருக்கும். அவர்களின் அனுபவமும், அறிவும் உங்கள் அறிவை விசாலப்படுத்தும்;
உங்கள் தன்னம்பிக்கை வளர்ந்து, எந்த விதமான சிக்கலையும் சந்திக்கும் தைரியம் பிறக்கும்;
புதிய வியாபார வாய்ப்புக்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், வர்த்தகங்கள், பயன வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும்;
புதிய கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் தெரியவரும். உங்கள் சமுதாய பிணைப்பு மேலும் வலுப்படும்;
நிறைய நபர்களை சந்திப்பதும், அவர்களுடனான இணைப்பை தொடர்வதற்கும் நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் வளர்ச்சிக்கு தேவைப்படும் அந்த நேரத்தை செலவிட்டால் மட்டுமே நீங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கு முன்னேற முடியும். ஒரு சிலர் நிறைய நபர்களை பெயரளவில் சந்திப்பதற்கு பதிலாய், சிறிய வட்டத்தில் தரமான தொடர்பை தொடரலாமே என்று சொல்வார்கள். அதிலும் தவறேதுமில்லை, ஆனால் உங்கள் வர்த்தகம் அந்த சிறிய வட்டத்திற்குள் வளர முடியுமா என்று பாருங்கள்.
நிறைய நபர்களை சந்தித்து, உங்கள் தொடர்பு வட்டத்தை பெரிதாக்குங்கள். வியாபாரத்தில் உங்கள் தொடர்பு வட்டம்தான் பெரிய சொத்து. ஒவ்வொரு புதிய சந்திப்பையும் அவர்களுக்கு பயனுடையதாகவும், நினைவு கூறத்தக்கதாகவும் ஆக்குவதெப்படி என்று தொடர்ந்து யோசித்து முன்னேற்றுங்கள். உங்களுக்கு அவருடைய தொடர்பு பயனளிக்கும் என்று நீங்கள் எண்ணுவதைவிட, அவர் உங்கள் தொடர்பை மேலும் விரும்பும் வகையில் உங்களால் கருத்துப்பரிமாற்றத்தில் அவரை வசீகரிக்க முடிந்தால், உங்கள் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?
அனுதினமும் நிறைய புதியவர்களை சந்தியுங்கள்
புதியவர்கள் புதிய கண்ணோட்டத்தையும் அறிவையும் கொடுக்கலாம்
புதியவர்கள் புதிய புரிந்துணர்வை ஏற்படுத்தலாம்
புதியவர்கள் பழைய அடிமைச் சிந்தனையை தகர்த்தெரியலாம்
புதுமைக்கும் புதியவர்க்கும் வழிகொடுத்தால்
கடினமானதென்று எண்ணியவைகளெல்லாம் சாதாரணமாகலாம்!
புதியவர்களோடு பேச ஏன் இத்தனைத் தயக்கம்?
பூமிக்கு வரும்போது நாமே புதியவர்கள்தான்
புதியவர்களைக் கண்டு ஓடி ஒழியாதீர்கள்
வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்
புதியவர்களோடு கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துங்கள்;
புதியவர்கள் உங்களுக்கான ஒரு வாய்ப்பு – அதை
ஏமாந்துவிடாமல் கவனமாக பயன்படுத்துவது உங்களின் சாமர்த்தியம்;
நிறைய புதியவர்களை சந்தித்து உறவு வளர்ப்பவருக்கு
வியாபாரம் தானாக வளருகிறது!
புதியவர்களின் வர்த்தக வாய்ப்பு வியாராத்தை இரட்டிப்பாக்கலாம்
நிறைய பயனியுங்கள்! நிறைய சந்தியுங்கள்! நிறைய புதுமை படையுங்கள்!
- [ம.சு.கு 07.06.2023]
Comentarios