“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-228
வாய்ப்புக்களை நழுவ விடாதீர்கள் !..
ஒரு சிற்பியிடன் மிகப்பெரிய கடவுள் சிலை ஒன்றை செதுக்கித்தர வேண்டுகோள் வருகிறது. அவர் இதுவரை சாதாரண சிறிய சிலைகளை மட்டுமே செய்து பழக்கப்பட்டவர். அந்த பெரிய சிலை எப்படி செய்ய வேண்டும் என்று அவர் தன் குருவிடம் கற்றிருக்கிறார். ஆனால் இதுவரை அதை செய்து பார்த்ததில்லை. இப்போது வாய்ப்பு வருகிறது. செய்யவேண்டியது கடவுள் சிலை, குறித்த நேரத்தில் சரியாக செய்து கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கோவில் குடமுழுக்கு தடைபடும் என்று வேண்டுகோள் வருகிறது. அந்த சிற்பியின் நண்பர், உன்னால் முடியாவிட்டால், ஒத்துக்கொண்டு மாட்டிக் கொள்ளாதே என்று எச்சரிக்கிறார். இப்படிப்பட் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?
எங்கோ ஒருமூலையில், குக்கிராமத்தில் பிறந்த சிலர் இன்று பெரிய பதவிகளில், பெரிய சாதனையாளர்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் வெற்றிக்கான காரணத்தை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலானோர் அவர்களுக்கு கிடைத்த கல்வி என்னும் ஒரேயொரு வாய்ப்பை கெட்டியாக பிடித்து மேலேறி வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எல்லோருக்கும் வாழ்வில் அவ்வப்போது ஏதாவதொரு வாய்ப்பு வந்துபோகும். அந்த வாய்ப்பை இணங்கண்டு யார் பயன்படுத்துகிறாரோ, அவர் தன் வாழ்வின் அடுத்த கட்டதிற்கு முன்னேறுகிறார். இந்த ஆண்டில் அப்படி என்ன வாய்ப்பு உங்களுக்கு வந்ததை நீங்கள் பயன்படுத்தினீர்கள்? எந்த வாய்ப்பை தவறவிட்டீர்கள்? என்று ஒரு முறை அலசிப்பாருங்கள்!
நீங்கள் சிறந்த சிறபக் கலைஞராக விரும்பினால், பல பெரிய சிலைகளை வடித்த அனுபவம் கட்டாயம் தேவை. அதற்கான வாய்ப்புக்கள் வரும்போது அதை பயன்படுத்தவில்லை என்றால், பின் எப்படி நீங்கள் பெரிய சிற்பி ஆகமுடியும். வேலையின் அளவைப் பார்த்து பயந்தால், எப்படி முன்னேற முடியும். ஒரு சில புதிய செயல்களை எடுக்கும் போது, உங்களால் செய்யமுடியாமல் போனால், மற்றவருக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அப்படி சிக்கல் உருவாகாமல் கவனமாக திட்டமிட்டு செய்துதரும் வழிவகைகளை யோசிப்பதை விட்டுவிட்டு, சிக்கலை மட்டுமே யோசித்தால், எப்படி சாதிப்பது. தெரியாத வேலைகளை ஒத்துக்கொள்வது தவறுதான். ஆனால் தெரியாமலேயே எத்தனைகாலம் தான் இருப்பது? தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்போது, ஒத்துக்கொண்டு கவனமாக உழைத்து சாதித்தால்தான் வானம் வசப்படும்!
எனக்கு என் அனுபவங்களை எழுத்துக்களாக பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசையிருந்தது. இந்த இணையம் எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது. அதை பயன்படுத்தி பதிவிடுகிறேன். அதைவிடுத்து பழைய முறையில் புத்தகமாக மட்டுமே வெளியிட வேண்டுமென்றால், அது மிகவும் கடினமாக இருந்திருக்கும். இணையமும், சமூக வளைதளமும் ஒரு வாய்ப்பை அளித்தது. அதை நான் இன்று பயன்படுத்தி உங்களுடன் என் அனுபவத்தை எழுத்துக்களாக பகிர்கிறேன். இப்படி கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தினால், அடுத்த கட்ட வளர்ச்சி ஏற்படும். அந்த வளர்ச்சியில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கப்பெற்ற அரசாங்க பள்ளி கல்வி என்ற ஒரு மாபெரும் வாய்ப்பை பயன்படுத்தித்தான் அப்துல் கலாமும், அண்ணாதுரையும் உருவானார்கள்.
நம்முடைய பிறப்பும், வளர்ப்பும் எங்கு? எப்போது? எப்படி? என்பது நமக்கு தெரியாது. அது நம் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால், பிறந்து வளர்கின்ற போது, அது எவ்வளவு ஏழ்மையான நிலையாக இருந்தாலும், அந்த சூழ்நிலையில் சின்னச்சின்ன வாய்ப்புக்கள் கிடைக்கும். கலாமுக்கு கல்வி ஒரு வாய்ப்பாக கிடைத்தது போல. அந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பது நம் கையில் தான் இருக்கிறது. அந்த வாய்ப்பை நழுவவிட்டு, பின்னர் இறைவன் நம்மை கவனிப்பதில்லை என்று குற்றம் சொல்வதில் பயனில்லை. எடுத்தவுடன் உங்களுக்கு கோடி ரூபாய் சம்பாதிப்பற்கு வாய்ப்பு கிடைக்காது. ஆரம்பத்தில் உழைத்தால் உங்களுக்கு 100-200 ரூபாய் தான் கிடைக்கும். அந்த வாய்ப்பை முதலில் பயன்படுத்தி தொழிலை கற்று, அடுத்த கட்டமாக சுயதொழில் செய்து முன்னேறினால், சில வருடங்களில் நீங்கள் கோடிகளை சம்பாதிக்கலாம். அதைவிடுத்து, கோடி ரூபாய் வேலை வரும்வரை நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று சொன்னால், அப்படியே இருந்து வேடிக்கை மனிதராய் சாகவேண்டியதுதான்.
கிடைக்கின்ற வாய்ப்புக்களை நீங்கள் பயன்படுத்தி முன்னேர நீங்கள் கவனிக்கவேண்டிய விடயங்கள்;
சில வாய்ப்புக்கள் நேரம் சாரந்தவை. கிடைக்கின்ற அந்த தருணத்தில் முடிவெடுத்த பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது வீணாகிவிடும் அல்லது மற்றொருவர் பயன்படுத்திக் கொள்வார்;
கிடைக்கின்ற சிறிய வாய்ப்பை பயன்படுத்த சிறிய முன்னேற்றம் கண்டால் தான், அடுத்த வாய்ப்புக்கள் வரும். இருப்பதை விட்டுவிட்டால் அடுத்த கட்ட வளர்ச்சியும், முன்னேற்றமும் எப்படி சாத்தியப்படும்?
கிடைத்ததை விட்டுவிட்டு பின்னாளில் வருந்தியவர்கள் ஏராளம். எவ்வளவு கடினமான வாய்ப்பாக இருந்தாலும், குறைந்தபட்சம் சோதனை நோக்கிலாவது அந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்திலேயே கடினம் என்று அவற்றை தவிர்த்துவிடாதீர்கள்;
சிலவாய்ப்புக்கள் எந்தளவிற்கு பயனளிக்கும் என்று தெரியாது. ஒருசில எதிர்பார்த்ததைவிட அதிக பலனை கொடுக்கும். ஒருசிலவற்றில் ஏமாற்றம் ஏற்படும். ஏமாற்றங்களை பெரிதாக்கி, புதிய முயற்சிகளை தவிர்த்தால், முன்னேற்றம் இருக்காது. கிடைக்கின்ற பலன்களில் ஏற்ற-இறக்கம் இருக்கலாம். ஆனால் நீங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் மட்டுமே அது எவ்வளவு என்பது தெரியும்.
புதிய வாய்ப்புக்களை பயன்படுத்துவதென்பது உங்களின் இன்றைய சுலபநிலையிலிருந்து வெளிப்பட்டு சில சிரமங்களை தாண்டி செயல்படுத்த வேண்டிய தேவையிருக்கும். இன்றைய சுலப நிலையிலிருந்து, சொகுசான நிலையிலிருந்து வெளிப்பட நீங்கள் தயங்கினால், சாதனைகள் என்றுமே எட்டாக்கனிகளாக இருந்துவிடும்;
எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் பெரிய ஆளாக வந்திருப்பேன் என்று நிறைய பேர் சொல்வார்கள். அப்படி என்ன வாய்ப்பை எதிர்பார்க்கிறாய் என்று கேட்டால், அதன் சாத்தியக்கூறுகளை கேட்டால், அவர்களால் சொல்ல முடியாது. அவர்களுக்கு கனவுகள் மட்டும் தான் இருக்கும். அந்த கனவை நோக்கி செயல்படவேண்டுமென்ற தீவிரம் இருக்காது. இவர்களெல்லாம் பரிசுச்சீட்டே வாங்காமல் (லாட்டரி) கோடி ரூபாய் வரவேண்டுமென்று பேராசைகொண்டு அலைபவர்கள். பரிசுச்சீட்டு உங்களுக்கான வாய்ப்பல்ல. அதன்பின்னால் பணத்தை அளவில்லாமல் செலவிட்டு இருக்கும் சொற்ப செல்வத்தையும் தொலைத்து நிற்காதீர்கள். உங்கள் கையில் இன்றிருக்கும் வேலை ஒரு வாய்ப்பு. நீங்கள் படிக்கும் கல்வி ஒரு பெரிய வாய்ப்பு. கலைகளை கற்றுக்கொடுக்கும் நல்ல குருகிடைப்பது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்புக்களை கெட்டியாக பிடித்து முன்னேற்றத்தை உறுதி செய்யுங்கள்.
வாய்ப்புக்கள் எப்போது வரும்? எப்படி வரும்?
என்பதை யாரும் துள்ளியமாக கணிக்க முடியாது – ஆனால்
வாய்ப்பு வருகின்ற போது
அதை சரியாக உணர்ந்து பயன்படுத்தினால்
உங்கள் முன்னேற்றம் தானாக வேகமெடுக்கும்;
எது வாய்ப்பென்று தெரியாமல் தான்
இங்கு பல பொன்னான வாய்ப்புக்களை தவறவிடுகின்றனர்;
நல்ல கல்வி கிடைப்பது ஒரு பொன்னான வாய்ப்பு
கலைஞருக்கு நல்ல குரு கிடைப்பது வாய்ப்பு
கையில் இருக்கும் வேலையும் ஊதியமும் வாய்ப்பு
சுயதொழிலும் வாடிக்கையாளரும் ஒரு வாய்ப்பு
இவற்றை நீங்கள் எப்படி மேம்படுத்துகிறீர்கள்
என்பது உங்கள் திறமையும் ஆற்றலும் சார்ந்தது!
- [ம.சு.கு 25.05.2023]
Commentaires