top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 223 - எல்லாவற்றிற்கும் நன்றி கூறுங்கள்!"

  • Writer: ம.சு.கு
    ம.சு.கு
  • May 20, 2023
  • 2 min read

Updated: May 21, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-223

எல்லாவற்றிற்கும் நன்றி கூறுங்கள்!


  • பல சமுதாய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருப்பீர்கள். பல நிகழ்ச்சி நிரல்களை பார்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சி திறப்பு விழாவானாலும், அரசியல் மேடையானாலும், கருத்தரங்கானாலும், விவாத மேடையானாலும், கும்பாபிஷேகமானாலும், கேளிக்கை நிகழ்வானாலும், இறுதியில் “நன்றியுரை”-க்கு ஒரு 3-5 நிமிடம் ஒதுக்கியிருப்பார்கள். அப்படி நன்றியுரை இல்லாமல் ஏதாவதொரு நிகழ்ச்சி நிரலை பார்த்திருக்கிறீர்களா? எதற்காக இந்த நன்றியுரை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

  • உங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள் என்று எல்லோரும் உங்களுக்கு தினம்தினம் பலவகைகளில் ஏதனுமொரு சிறு உதவி செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு எத்தனை முறை நீங்கள் நன்றி சொல்லியுள்ளீர்கள். வெளியிடங்களில் தெரியாத ஒருவர் உங்களுக்கு உட்கார இடம்கொடுத்தாலே நன்றி! நன்றி! என்று பலமுறை சொல்லும் நீங்கள், உங்களுக்கு அன்றாடம் உதவும் குடும்பத்தினர் அனைவுருக்கும் எத்தனை முறை நன்றி சொல்லியுள்ளீர்கள்?

ஒரு தனிநபரால் மட்டுமே ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட முடியாது. அதேசமயம், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவிய அனைவருக்கும் மேடையேற வாய்ப்பிருக்காது. அப்படி மேடையேறி அங்கீகாரம் பெற வாய்ப்பில்லாத மற்ற எல்லா நல்ல உள்ளங்களையும், அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அங்கீகரிப்பதற்காகவே அந்த நன்றியுரை கட்டாயமாக எல்லா நிகழ்வுகளிலும் இடம்பெறுகிறது. அந்த விழாவிற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர் துவங்கி, விழாவிற்கு வருகை தந்த அனைத்து பங்கேற்பாளர்களையும் சேர்த்து, பந்தல் அமைத்த கடைக்கோடி ஊழியர் வரை, எல்லோருக்கும் நன்றி தெரிவிப்பார்கள். நன்றி தெரிவிப்பது ஒவ்வொரு செயலின் முடவிற்கும் அழகு சேர்க்கும். எல்லோருக்கும் மனநிறைவை கொடுக்கும்.


உதவிகள், உங்கள் குடும்பத்திற்குள் இருந்தும் வரலாம், வெளியில் நண்பர்களிடமிருந்தும், தெரியாதவர்களிடம் இருந்தும் வரலாம். சிலர் வியாபார நோக்கிலும் உங்களுக்கு உதவலாம். ஆனால் நீங்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கத்தான் வேண்டும். ஒரு சிறு நன்றி, உங்கள் குடும்ப உறவுகளை மேம்படுத்தும். சின்னச்சின்ன ஊடல்களை தவிர்க்க வழிவகுக்கும். உங்கள் தாயார், உங்களின் நன்றி என்ற வார்த்தையில், நீங்கள் வளர்ந்து பொருப்புள்ளவன் ஆகியிருப்பதாக உணர்ந்து பூரிப்படைவார். உங்கள் இல்லால், அவர்களின் பங்களிப்பை நீங்கள் அங்கீகரப்பதை மகிழ்வுடன் ஏற்பார். அவர்கள் பொதுவாக “என்கெதுக்குங்க நன்றியெல்லாம்?” என்று பெருந்தன்மையோடு சொல்லக்கூடும். அது அவர்களின் உயரிய பண்பு. உங்களின் உயரிய பண்பு என்ன? எல்லா சேவைகளையும், உதவிகளையும் உரிய நேரத்தில் அங்கீகரித்து, நன்றி தெரிவிப்பதில் தான் இருக்கிறது. அவர்களின் சமையல் நன்றாக இருந்தால், அதை செய்த கைகளுக்கு உங்களால் தங்க வளையல் வாங்கிக் கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால், மனம் மகிழ அங்கீகரித்தால், நன்றி தெரிவித்தால், அவர்களுக்கு கிடைக்கும் மனநிறைவு, அவர்கள் அட்டிலறையில் வேர்வைசிந்த உழைத்த களைப்பெல்லாம் மறந்துபோகும்.


ஒருசிலர் உங்களுக்கு உதவுவது வியாபார நோக்கத்திலாகக்கூட இருக்கலாம். “அதற்குத்தான் நாம் உரிய பணம் கொடுக்கிறோமே, எதற்காக நன்றியெல்லாம்?” என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் ஊரில் இருக்கும் பல்லாயிரம் மக்களுக்கு அந்த தருணத்தில் உதவாமல், அவர் உங்களுக்கு ஏன் உதவினார்? அதை மற்றவருக்கு செய்யாமல், உங்களுக்கு தேவையிருக்கும் தருணத்தில் உங்களுக்கு செய்கிறார் என்பதற்காக நன்றி பாராட்ட வேண்டுமல்லவா!


உங்களுக்கு உதவியவருக்கு, நீங்கள் மறுஉதவி உடனடியாய் செய்யமுடியாமல் போகலாம். ஆனால், அவர் செய்த உதவிக்கு, குறைந்தபட்சம் உடனடியாக நன்றி தெரிவிக்க உங்களுக்கு எல்லா வகையிலும் வாய்ப்பிருக்கும். ஒரு வேலை அவரிடம் நேரடியாக அப்போது சொல்லமுடியாது போனால், மறுநாள் தொலைபேசியில் அழைத்து நன்றி சொல்லுங்கள். அதுவும் முடியாவிட்டால், ஒரு நன்றி மடல் எழுதுங்கள்.

  • நீங்கள் நன்றி தெரிவிப்பதன் மூலம், அந்த நபரின் செயலை மனமாற அங்கீகரித்துள்ளதை அவர் உணர்வார். அதேபோன்ற நற்செயல்களை அவர் சமுதாயத்தில் தொடர்ந்து செய்வார். ஒரு வேலை நீங்கள் நன்றி தெரிவிக்கவில்லை என்றால், இதென்ன நன்றிமறந்த சமுதாயம் என்று மேற்கொண்டு நற்செயல்கள் செய்வதை குறைக்கக்கூடும்;

  • உங்கள் நன்றியின் மூலம், அவருடனான பிணைப்பு சற்று ஆழப்படும். உங்கள் உறவுகள் மேம்பட அது வழிவகுக்கும்;

  • உங்கள் நன்றி, அவரின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை வளர்க்கும். நீங்கள் நன்றி தெரிவித்தால், உங்களுக்கும் ஒரு மனநிறைவு இருக்கும்;

  • சமுதாயத்தில் பரஸ்பர நன்றியுணர்வு அதிகரித்தால், தேவைப்படும் சமயத்தில் உங்கள் உதவிக்கு 10 பேர் வந்து நிற்பார்கள். நீங்கள் நன்றிமறந்தவராய் இருந்தால், உங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உதவிக்கு பெரிதாய் யாரும் இருக்கமாட்டார்கள்;

“நன்றி” என்கிற வார்த்தை சொல்வதற்கும், கேட்பதற்கும் ஏதோ சாதாரணமாய் தோன்றலாம். ஆனால் பல உறவுகளின் சமரசத்திற்கும், அகங்காரத்தை ஆற்றுப்படுத்தவும், கொடைகளின் தொடர்ச்சிக்கும், மனங்களின் நிறைவிற்கும் அந்த சொல் மிகப்பெரிய காரணியாக தொடர்ந்து விளங்குகிறது. மேலும் நன்றி கூறுவதற்காக நீங்கள் செலவிடும் நேரம் எந்தவகையிலும் வீணாகாது. அதன் பலன்கள், உங்கள் நீண்ட கால நோக்கில் பலமடங்காய் வந்துசேரும்.


“மன்னிப்பு” என்ற சொல்

பல மனஸ்தாபங்களை முடிவிற்கு கொண்டுவருகிறது;

“நன்றி” என்ற சொல்

பல உள்ளங்களை குளிர்விக்கும் ஆற்றல் பெற்றது!


நன்றி மறந்த தமிழர்களல்ல நாம்!

நன்றியென்ற சொல்லுக்கு மாற்றான

வேற்றுமொழி வார்த்தைகள் வந்திருக்கலாம்!

வார்த்தைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!

நன்றி என்பது ஒரு உணர்வு!


நன்றி என்ற உணர்வு உங்கள் உள்ளத்திலிருந்து

எந்த வார்த்தையில் வெளிப்பட்டாலும்

அது மற்றவரின் உள்ளத்தில் ஏற்படுத்தும்

தாக்கம் நிரந்தரமானது! மகிழ்ச்சிகரமானது!



- [ம.சு.கு 20.05.2023]

Recent Posts

See All
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

 
 
 

Comments


Post: Blog2 Post
bottom of page