top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 221 - இன்றைய நடப்பை அறிந்திருங்கள்!"

Updated: May 19, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-221

இன்றைய நடப்பை அறிந்திருங்கள்!


  • கல்விமுறையில் எண்ணற்ற மாற்றங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. வருடாவருடம் புதிய பாடத்திட்டங்கள் கூட்டப்படுகின்றன. இன்று செயற்கை நுண்ணறிவு குறித்து புதிய பட்டப்படிப்புக்கள் வந்துவிட்டன. இன்று உங்கள் பிள்ளை கல்லூரியில் சேர வேண்டுமானால், எந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று முடிவெடுக்க வேண்டும். இன்று என்ன புதிதாக வந்திருக்கிறது, எந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரியாமல் உங்களால் எப்படி உங்கள் பிள்ளைக்கு வழிகாட்ட முடியும்?

  • சமீபத்தில் ஒருவர், ஊரின் வெளிப்பகுதியில் ஒரு மனை வாங்க ஒப்பந்தம் செய்தார். விளம்பர அறிவிப்புக்களை நம்பி சில இலட்சங்களை ஆரம்ப பணமாக செலுத்தினார். ஒரு மாதத்திற்கு முன் அந்த நிலத்தை தன் பெயரில் பதிவு செய்ய முயற்சித்தபோது, அந்த நிலம் அரசாங்க பூமி என்பது தெரியவந்தது. அதை விற்க முயற்சித்தவர் காணாமல் போய்விட்டார். ஆரம்பத்தில் போலி ஆவனங்களை காண்பித்து முன்பணம் பெற்றவர், முடிந்தவரை பணத்தை வசூலிக்க முயற்சித்தார். விஷயம் தெரியவரும் தருவாயில், ஆள் தலைமறைவாகி விட்டார். இடத்திற்க பணத்தை கொடுப்பதற்கு முன் அதன் உரிமையாளர் குறித்து அடிப்படை சோதனைகளை கூட செய்யாமல்விட்டவருக்கு, கிட்டத்தட்ட ஐந்து இலட்ச ரூபாய் நஷ்டம்.

உதவி செயலாளர் வேலைக்கு ஏற்ற வகையில் பட்டம்பெற ஆசைப்படுகிறீர்கள். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உதவியாளர் வேலையை கணிணியும், கைபேசி செயலிகளும் திறம்பட செய்கின்றன. செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் சூழலில் எதிர்காலத்தில் செயலாளர் என்ற ஒரு வேலையே இல்லாமல் போகக்கூடும். நிறைய பணிகளுக்கு எதிர்காலம் இல்லை. அந்த வேலைகளை நீங்கள் எதிர்பார்த்து படித்தால், பிற்காலத்தில் சிரமப்படவேண்டிவரும். இன்றைய நடப்பு என்ன? நாளைய எதிர்பார்ப்பு என்ன? அறிவியல் முன்னேற்றம் என்ன? என்ற எல்லா விடயங்களைப் பற்றியும் தொடர்ந்து அறிந்து கொண்டிருந்தால் மட்டுமே உங்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.


அரசாங்கம், பத்திர பதிவுத்துறையை கணிணி மயமாக்கி, அனைத்து நில உரிமைகளையும் வளைதளத்தில் எளிதில் பார்க்கும் வண்ணம் செய்திருக்கிறது. ஆனால், அப்படி ஒரு விடயம் இருக்கிறதென்ற அறிவில்லாமல், அடிப்படை சோதனைகளை செய்யாமல் பணத்தை கொடுத்து ஏமாந்தது யார் குற்றம்? சில விடயங்களை முதல் முறையாக செய்வதானால், அதன் தற்போதைய நிலவரங்கள் தெரியாவிட்டால், அதைப்பற்றி நன்கு தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு செய்யலாம். அதைவிடுத்த, தனக்கு எல்லாம் தெரியும் என்ற மேதாவித்தனமாக செய்தால், இப்படித்தான் கைப்பணத்தை தொலைத்து நிற்கவேண்டிவரும். ஒன்று சந்தை குறித்த அடிப்படை அறிவை நீங்களே தேடித்தேடி வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேலை முடியாவிட்டால், தெரிந்தவரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.


நீங்கள் இன்றைய நடப்பை அறிந்துகொள்ளாமல் இருந்தால் / கவனிக்கத் தவறினால்

  • உங்கள் போட்டியாளர்கள், புதிய உத்திகளை பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிடக் கூடும்;

  • புதிய வியாபார வாய்ப்புக்களை, உற்பத்தி முறையை, சேவை முறையை, நீங்கள் நழுவ விடக்கூடும்;

  • பழைய கதைகளை சொல்லி உங்களை நிறைய பேர் ஏமாற்றக்கூடும்;

  • தவறான அறிவுரைகளாலும், பயனற்ற செயல்களாலும் நேரத்தையும், பொருளையும் இழக்கக்கூடும்;

இன்றை நாட்டு நடப்பை, அறிவியல் முன்னேற்றங்களை நீங்கள் அவ்வப்போது தெரிந்துகொள்ளத் தவறினால், காலத்திற்கு ஒவ்வாத நபராக நீங்கள் ஓதுக்கப்படக் கூடும்; நீங்கள் இன்றைய மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வந்தால்

  • இன்றைய நாட்டு நடப்பு குறித்த அறிவு, உங்களை சரியான முடிவுகள் எடுக்க வழிவகுக்கும்;

  • உங்கள் அறிவும், பகுத்தாயும் ஆற்றலும், மேலும் ஆழமாகும்;

  • இன்றைய சூழலுக்கேற்ப, எல்லா கோணங்களிலும் பகுத்தாய்ந்து சரியான வகையில் உங்களையும், உங்கள் நிறுவனத்தையும், உங்கள் குடும்பத்தையும் வழிநடத்த முடியும்;

  • புதிய நபர்களுடன், உங்களால் எந்த தலைப்பிலும் உரையாடி, உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியும்;

  • சந்தையில் ஏற்படும் எந்த மாற்றத்திற்கும், உங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்;

  • கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிலும் நீங்கள் நவீன முறைகளை பயன்படுத்த முடியும்;

நீங்கள் எல்லா ஆசைகளையும் துறந்து சந்நியாசம் ஏற்பதைத்தவிர, வேறு எந்த செயலை இந்த பூமியில் புரிவதானாலும், இன்றைய நாட்டு நடப்பு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நாட்டு நடப்பு, மாற்றங்கள், முன்னேற்றங்கள் தெரியாமல் நீங்கள் எதைச் செய்தாலும், கட்டாயம் அதில் ஏதாவதொரு தவறு நேரக்கூடும். உங்களை நீங்கள் எப்போதும் தயார்படுத்திக் கொண்டே இருங்கள். அன்றாடம் குறைந்தது பத்து நிமிடம் அன்றைய செய்திகளை வாசியுங்கள். அரசியலுக்கு இரண்டு நிமிடம், அறிவியலுக்கு இரண்டு நிமிடம், பொருளாதாரத்திற்கு இரண்டு நிமிடம், பொழுதுபோக்கிற்கு இரண்டு நிமிடமென்று குறைந்த பட்ச நேர்த்தை தவறாமல் ஒதுக்கி உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இவையனைத்தும், உங்கள் வாழ்வின் எல்லா தருணங்களிலும் சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்;


தினம் தினம் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புக்கள்

உலகெங்கும் வந்துகொண்டே இருக்கின்றன

உங்களின் உழைப்பை இவற்றில் ஒன்று எளிதாக்கலாம்

புதிய கண்டுபிடிப்பை உங்கள்

போட்டியாளர்கள் பயன்படுத்தி முன்னேறுவதற்கு முன்

நீங்கள் பயன்படுத்தி பயனடையுங்கள்;


மாறும் உலகில் மாறாதது மாற்றம் ஒன்றே என்று

எல்லா மேதைகளும் சொல்லிவிட்டனர்

பாமரன் நான் சொல்வதற்கு புதிதாய் ஒன்றுமில்லை!

அந்த மாற்றத்திற்கு நீங்கள் தாயாராக இருங்கள்!


புதிய மாற்றங்களை நீங்களே தேடிச் செல்லுங்கள்!

மாற்றம் உங்களை மாற்றினால் நீங்கள் பலிகடா!

மாற்றத் கணித்து நீங்கள் மாறினால் நீங்கள் வெற்றியாளர்!


இந்த மாற்றத்தை கணிக்க

இன்றைய நாட்டு நடப்பை

அறிவியல் முன்னேற்றத்தை

அரசியல் மாற்றங்களை – நீங்கள்

அசைபோட்டுக்கொண்டே இருக்கவேண்டும்;



- [ம.சு.கு 18.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page