top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 219 - இரண்டாவது செயல் உங்களது கட்டுப்பாட்டில்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-219

இரண்டாவது செயல் உங்களது கட்டுப்பாட்டில்!


  • பேருந்து பயனத்தில், கூட்ட நெரிசலில் உங்கள் கால்களை நல்ல கட்டுமஸ்தான நபர் ஒருவர் மிதித்துவிட்டார். உங்களின் உடனடியான பதில் என்னவாக இருக்கும்?

  • நீங்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்திவந்த அழகான பீங்கான் குவளை, உங்கள் மனைவி சுத்தம் செய்யும்போது கீழே விழுந்து உடைந்துவிட்டது. உடனே, கோபப்பட்டு உங்கள் மனைவியை திட்டினால் நிலைமை என்னவாகும்?

பேருந்தில் மிதித்தவரை பார்த்து “அறிவிருக்கிறதா உனக்கு?” என்று கேட்டால், “கூட்டத்தில் வந்தால் இப்படி நடக்கத்தான் செய்யும். உனக்கு கஷ்டமாக இருந்தால் இறங்கி நடந்துவா” என்று உங்களுடன் அவர் சண்டைக்கு வருவார். அதேசமயம், “ஐயா! சற்று பார்த்து கால் வையுங்கள்” என்று சிறிது தாழ்மையுடன் பேசினால், அவர் உடனே மன்னிப்பு கேட்க வாய்ப்பு அதிகம். அதேபோல, ஒருவேலை நீங்கள் மிதித்திருந்தால், அவர் உங்களை திட்டுவதற்கு முன், நீங்கள் மன்னிப்பு கேட்டால், “பரவாயில்லை, சற்று கவனமாக கால் வையுங்கள்” என்று அறிவுரை கூறிவிட்டு விடுவார். கால்மிதிக்கப்பட்ட முதலாவது செயலுக்கான உங்களின் பதில் [இரண்டாவது செயல்], அந்த பிரிச்சனை அடுத்தகட்டத்திற்கு வளரவேண்டுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கிறது.


ஒரு சிறுகுவளை உடைந்ததும் நீங்கள் “அறிவிருக்கிறதா? அதைக்கூட சரியாக பிடிக்க முடியவில்லையா?” என்று உங்கள் மனைவியை திட்டினால், உங்கள் நிலைமை அடுத்த சிலமணிநேரங்களுக்கு சிரமம்தான். ஏனெனில், நீங்கள் இதற்குமுன் செய்த எல்லா தவறுகளும் அங்கு உங்கள் மனைவியால் பெரிதாக பட்டியலிடப் படும். ஒரு நிமிட கோபத்தினால், உங்கள் வரலாறே அங்கு அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கும். இது தேவையா? கோப்பை உடைந்ததை கண்டாதும், “என்ன ஆயிற்று, ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டிருந்தால் நிலைமை முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்.


நாம் ஒரு பிரச்சனைக்குரிய சூழலில், கோபப்பட்டு பொறுப்பில்லாமல் பதிலளித்தால் நிலைமை என்னவாகும்;

  • இருக்கின்ற பிரச்சனை இன்னும் சிக்கலானதாகும். கவனமாக செயல்பட்டு சுலபத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனை, பொறுப்பற்ற பதிலால் இடியாப்ப சிக்கலில் போய் நிற்கும்;

  • தவறு செய்ததை அறிந்த பின்னும், மன்னிப்பு கேட்காமல் அந்த தவறை மூடிமறைக்க முயற்சிக்கும் போது, நம்மீது சமுதாயம் கொண்டிருந்த நம்பிக்கையும், மரியாதையும் கெட்டுவிடும்;

  • மன்னிப்பின் மூலம் சுலபமாக தீரவேண்டிய பிரச்சனை, தீவிர சண்டையாகி உறவுகளை பாதிக்கும்;

  • ஆரம்பத்திலேயே சாமர்த்தியமாக தீர்க்க வேண்டிய பிரச்சனை, தேவையில்லாமல் வளர்ந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதோடு, புதிய வாய்ப்புக்களையும் பாதிக்கும்;

  • பிரச்சனை வளர்வது, உங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கி, உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்;

பிரச்சனைகள் வளர்வது எல்லாவகையிலும் பாதிப்பிற்குரியதுதான். நீங்கள் குறிப்பிட்ட தருணத்தில், நிலைமை புரிந்துகொண்டு பக்குவமாக பதிலளிக்க தவறுவதால்தான், பல சிறிய பிரச்சனைகள் பூதாகரமாகி விடுகின்றன. சூழ்நிலையை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு, சாமர்த்தியமாக கையாண்டால்,

  • பிரச்சனையை ஆரம்பத்திலேயே தீர்த்து, மேலும் அதையே உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முடியும்;

  • நீங்கள் பிரச்சனைகளை கையாளும் விதத்தில்தான், சமுதாயத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் நிர்ணயமாகிறது;

  • பல எதிர்வினைகள் உருவாகாமல், ஆரம்பத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்;

பிரச்சனை ஏற்படும் சூழலில், நம்முடைய அடுத்த செயல் எப்படி இருக்கின்றதென்பதை பொறுத்துத்தான், அந்த பிரச்சனை வளர்வதும், தேய்வதும் இருக்கிறது. அப்படியானால், அந்த மாதிரி சூழ்நிலைகளில், பிரச்சனைக்குரிய சூழலை எப்படி கையாளவேண்டும்?

  • முதல்கண் உணர்ச்சிவயப்படாமல், அமைதியாக இருக்கவேண்டியது அவசியம். ஒருவர் சத்தம் போடுகிறார் என்பதற்காக நீங்கள் சத்தமிட்டால் நிலைமை கைமீறிவிடும்;

  • உங்களின் முதல் செயல், அடுத்தவரின் செயல், இரண்டையும் முழுமையாக அலசுங்கள். தவறு உங்களுடையதோ, அடுத்தவருடையதோ, அங்கு உருவாகும் பிரச்சனை அடுத்தகட்டத்திற்கு வளராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ, அதை நீங்களே முன்னின்று செய்துவிடுங்கள்?

  • அடுத்தவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்காதீர்கள். அவர் கேட்காமலேயே மன்னித்து விடுவது உங்களின் பெருந்தன்மை;

  • எல்லாவற்றிற்கும் காரண-காரியங்களை எப்போதும் முழுமையாக அலசுங்கள். எல்லா சூழ்நிலைகள், பிரச்சனைகளின் காரண-காரியங்களை தொடர்ந்து அலசும்போது, வாழ்க்கை, மனித உறவுகள், மக்களின் முட்டாள்தனங்கள் குறித்து ஆழமான புரிதல் ஏற்படும். அந்த புரிதல், புதிதாக உருவாகும் எந்த ஒரு பிரச்சனையையும் சமயோசிதமாக கையாளும் திறமையை வளர்க்கும்.

பிரச்சனைகள் உருவாவதை உங்களால் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பிரச்சனை உருவாகும் தருணத்தில் அது மேற்கொண்டு வளராமல் இருக்க, உங்களது அடுத்த செயல்தான் முக்கியமானது. எல்லா நிகழ்வுகளிலும் ஒருவருடைய முதல் செயல் பிரச்சனைகளின் ஆரம்பப்புள்ளியாகிறது. அதற்கான பதிலாக வரும் இரண்டாவது செயல், மேற்கொண்டு அந்த பிரச்சனை வளருமா? இல்லையா? என்பதை நிர்ணயிக்கிறது. அந்த இரண்டாம் செயல் உங்கள் கையில். உங்கள் சாமர்த்தியத்தை அந்த இரண்டாவது செயலில் காட்டி நிலைமையை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், எல்லா பிரச்சனைகளையும் எளிதில் கையாண்டு வெற்றிகொள்ளலாம்;


முதல் முறை நீங்கள் அறியாமல் செய்திருக்கலாம்

உங்களுக்கு ஒருவர் தெரியாமல் தீங்கிழைத்திருக்கலாம்

இரண்டு சூழ்நிலைகளிலும் – அடுத்து

நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைபொருத்து

மேற்கொண்டு ஆவதும் –அழிவதும் நிர்ணயமாகிறது!


நீங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கலாம்

அடுத்தவர் செய்த தவறை மன்னித்து விடலாம்

இரண்டுமின்றி ஏட்டிக்கு போட்டியாய்

மல்லுக்கட்டி தெருவில் இறங்கி சண்டையிடலாம்;


உங்கள் செயல் உங்கள் கையில்

எல்லா விடயத்தையும், பிரச்சனையையும்

எப்படி முன்னெடுக்கிறோம் என்பது உங்கள் கையில்;

தீர்க்க முயற்சித்தால் பிரச்சனை தீரும்

வளர்க்க நினைத்தால் பிரச்சனை இரட்டிப்பாகும்!


உங்களின் பதில்செயல்தான்

உங்கள் வாழ்வின் நிம்மதியையும்

உங்கள் உறவுகளின் புரிதலையும்

உங்கள் வெற்றியின் பாதையையும்

இன்னும் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது!



- [ம.சு.கு 16.05.2023]

5 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page