“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-217
வேலைக்கு ஒரு முற்றுப்பள்ளி இருக்கட்டும்!
பண்டிகைக்காலம் வரும்போது எல்லா கடைகளிலும் கூட்டம் நிரம்பியிருக்கும். குறிப்பாக பிரசித்த பெற்ற துணிக்கடைகளில் நிற்பதற்கு இடமில்லாத அளவிற்கு கூட்டம் வந்துபோகும். வழக்கமாக 10 மணிக்கு கடைமூடும் முதலாளி, அப்போது இரவு 12 மணிவரை ஆவது வழக்கம். ஆனால், கூட்டத்தை கையாள்வதற்கேற்ற கூடதல் ஊழியர்களை பணியமர்த்த தவிறியதால், எல்லா ஆடைகளையும் எடுத்துவைத்து கடையை மூட இந்தமுறை அதிகாலை 3-4 மணியானது. மீண்டும் காலை 8 மணிக்கு கடையை திறக்க வேண்டிய அவசியம். இப்படி இருந்தால் உடல் நிலை என்ன ஆவது? குடும்பத்தை எப்படி பார்த்துக்கொள்வது?
நண்பர் இரவு விருந்திற்கு தன் குடும்பத்தினரை அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டு கிட்டதட்ட மாலை ஆறு மணிக்கு முடித்துவிட்டார். கிளம்புவதற்கு முன், எதற்கும் ஒருமுறை தன் மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று கணிணியில் தன் மின்னஞ்சல் கணக்கை திறந்து தன் மேலாளர் அனுப்பிய மின்னஞ்சலை திறந்தால். அவர் மின்னஞ்சலை திறந்ததும் அது மேலாளருக்கு தெரிந்தது. உடனே அவர் தொலைபேசியில் அழைத்து, இது சற்று அவசரம், ஒருமணி நேரத்திலு முடிக்கவேண்டுமென்று கேட்டார். அவரும் வேறு வழியில்லாமல் அமர்ந்து செய்ய ஆரம்பித்தார், இரவு 11 மணிக்கு வீடுவரும்போது, மனைவி பிள்ளைகளை அவரால் சமாதானம் செய்ய முடியவில்லை;
பண்டிகை காலங்களில் அப்படி வேலைபழு அதிகரிக்கும் என்பது தெரிந்த விடயமே. அதிக ஊழியர்களை தேவைக்கேற்ப எல்லா கடைக்காரர்களும் சேர்ப்பதும் வழக்கம். ஊழியர் சம்பளச் செலவை சேமிக்கிறேன் என்று நீங்களே கூடுதல் வேலைகளை கவனிக்க உட்கார்ந்தால், இப்படித்தான் கடையை சாத்தவே விடிந்துவிடும். வரும் வாடிக்கையாளருக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கமுடியாது. வேலை பழுவிற்கேற்ப ஊழியர்களை நியமித்தால் தான், எல்லாவற்றையும் சரிவர செய்யமுடியும். உங்கள் வேலையையும் சரியாக முடித்து வீட்டிற்கு குறித்தநேரத்தில் போக முடியும்.
இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, போதுமான நேரத்தை ஒதுக்கி செய்யுங்கள். உங்கள் திட்டமிடலும், நேரம் ஒதுக்குதலும் மாலை 6 மணியோடு முடியட்டும். உங்கள் திட்டமே இரவு 10 மணிவரை இருந்தால், குடும்பவாழ்வின் நிலை பரிதாபத்திற்குரியதுதான். இன்றைய வேலைகளை முடித்தவுடன் கிளம்புங்கள். யாருக்காவாவது காத்திருந்தால், நீங்கள் அங்கிருப்பதை பார்த்து ஏதாவதொரு வேலையை யாராவது சொல்லத்தான் செய்வார்கள். உங்கள் குடும்பத்தை கவனிக்க நீங்கள்தான் குறித்த நேரத்திற்கு போக வேண்டும். உங்கள் நிர்வாகமும், தொழிலும் தானாக அதை எப்போதும் சொல்லாது. உங்களின் கூடதல் நேரத்தை எப்படி பயன்படுத்தவதென்றுதான் எல்லா நிர்வாகங்களும் திட்டமிடும். உங்கள் நேரப்பயன்பாட்டில் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்;
வேலை எப்படி கூடிக்கொண்டேயிருக்கிறது;
ஒரு வேலையை முடிக்கும் தருவாயில், அடுத்த திட்டத்திற்காண வேலையை நிர்வாகம் முன்னதாகவே துவக்கிவிடுகிறது. நிர்வாகம் தன் ஊழியர்கள் எந்தளவிற்கு வேலை முடித்திருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கிறது;
தன் சக ஊழியர் ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தாலோ, அல்லது வேலையை விட்டு விலகியிருந்தாலோ, தற்காலிகமாக அவரது வேலை மற்றவர்களுக்கு கூடுதலாக பகிர்ந்தளிக்கப்படுகிறது;
பதவி உயர்வு, பாராட்டுக்களை பெற, அன்றாடம் கூடுதலான பொறுப்புக்களை ஏற்று செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது;
வியாபார வளர்ச்சிக்கு நிறுவனங்கள் தன் ஆள்பலத்தைவிட கூடுதலான திட்டங்களை ஒத்துக்கொண்டு, பின் இருக்கும் ஊழியர்கள் மீது பாரத்தை சுமத்துகிறது;
திடீரென்று ஏற்படும் ஒருசில நிகழ்வுகள், அசம்பாவிதங்கள், தேவைகள் கூடதலான வேலையை கவனிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது;
பல சமயங்களில் தேவையில்லாதவற்றில் அதிக நேரத்தை செலவிட்டு வீணடித்துவிட்டு, கடைசி நிமிடத்தில் முக்கிய விடயங்களை செய்ய முற்படும்போது, அலுவலகத்தில் தாமதமாக அமர நேர்கிறது;
மேற்கூறிய எல்லா விடயங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எல்லோரும் சந்திக்கும் வழக்கமான சூழ்நிலைகளே. இவற்றில் பலவற்றை உங்களால் தவிர்க்க முடியாது. ஒரு சில விடயங்களை, சரியாக திட்டமிட்டு செய்வதன் மூலம் தவிர்க்கலாம். எது எப்படியோ, உங்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயத்தேவை.
பொறுப்புக்களை ஏற்கும் முன்னர், உங்கள் நேரத்தின் அளவை, வேலை அளவை கவனியுங்கள்;
வேலைகளை திட்டமிட்டு காலம் கடத்தாமல் உரிய நேரத்தில் செய்து முடியுங்கள்;
வேலைகளை கூடியவரை ஊழியர்களுக்கு பகிர்ந்தளித்து செய்யுங்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்து நல்லபெயர் வாங்கவேண்டுமென்று நினைக்காதீர்கள்;
உங்கள் மேலாளருடன், முதலாளியுடன், வேலேப்பழு குறித்து உரிய நேரத்தில் பேசுங்கள்;
முக்கியத் தேவைகளுக்கு, அவ்வப்போது விடுப்பெடுத்து சென்று வாருங்கள். நீங்கள் இல்லாவிட்டாலும் நிறுவனம் ஓடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
சாதிக்க முடிந்த இலக்குகளை நிர்ணயுங்கள். இலக்குகளை அதீதமாக நிர்ணயித்தால், எப்போதும் நேரப்பற்றாக்குறையிலேயே வாழ்க்கை போகும்;
வேலை நேரத்தை பொருத்து, சூழ்நிலைகளை பொறுத்து, அன்றாடம் வேலைக்கு ஒரு முற்றுபுள்ளி இருக்கட்டும்;
குழந்தைகள் வளரும்போது அவர்களுடன் நேரம் செலவிடும் இனிமையான பொழுதுகள் உங்களுக்காக காத்திருக்காது. இல்லாலுடன் இன்பச்சுற்றுலா சென்றுவர நீங்கள்தான் நேரம் ஒதுக்க வேண்டும். வயதான பெற்றோரை கவனிக்கவும், உறவுகளுக்குள் நிகழும் வைபவங்களை கண்டு உறவுகளுடன் களிக்கவும் நீங்கள்தான நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வேலை என்றுமே தீராது. உங்கள் இல்லறத்திற்கான, விருந்தோம்பலுக்கான, கேளிக்கைக்கான நேரங்களை வேலைக்கு மத்தியில் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஏதாவதொரு வேலை
எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்;
எல்லாம் முடிந்ததென்று நினைக்கும் முன்
அடுத்தவொரு புது வேலை வந்து நிற்கும்;
வேலை கூடுவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு;
வேலை தீருவதற்கும் ஆயிரம் வழிகள் உண்டு;
வேலை தீரத்தீர வந்துகொண்டேதான் இருக்கும்;
வேலையை பார்த்தால், குடும்பத்தை என்றுமே பார்க்கமுடியாது;
வேலை ஒருபுறம் அளவோடு இருக்கட்டும்
வேலையை கடந்து
குடும்பத்தை, உறவுகளை, நட்பை வளர்க்க
நீங்கள்தான் போதுமான நேரம் ஒதுக்க வேண்டும்;
வேலைமுடியட்டும் மற்றவர்களுடன் நேரம் செலவிடலாமென்றால்
வேலை என்றுமே முடியாது;
ஒவ்வொருநாளும் வேலைக்கு நீங்கள்தான்
முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்;
இப்போது நான் இந்த கட்டுரைக்கு வைக்கிறேன்;
நீங்கள வைக்கத் தயாராகி விட்டீர்களா!
- [ம.சு.கு 14.05.2023]
Comments