top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 215 - மரியாதை தவறிவிடாதீர்கள்..!"

  • Writer: ம.சு.கு
    ம.சு.கு
  • May 12, 2023
  • 3 min read

Updated: May 13, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-215

மரியாதை தவறிவிடாதீர்கள்!


  • முப்பது ஆண்டுகளுக்கு முன், எங்கள் ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். சற்று பழமைவாதியான அவர், சாதி விடயங்களில் தீண்டாமையை அதரித்தார். தாழ்த்தப்பட்ட மக்களை மரியாதைக்குறைவாகவும் நடத்தினார். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட அவரை எதிர்த்து எதிர்கட்சியின் சார்பில் தாழ்த்துப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் நிறுத்தப்பட்டார். அந்த ஊர் தேர்தலில், கட்சிகளை பார்க்காமல், எண்ணற்றவர்கள் அந்த பெரிய மனிதரின் அகங்காரத்தையும், மரியாதைக் குறைவையும் மனதில் வைத்து, அவருக்கு எதிராக வாக்களித்தனர். கிட்டத்தட்ட பாதிக்குபாதி வாக்குவித்தியாசத்தில் அந்த பெரிய மனிதர் தோற்கடிக்கப்பட்டார்.

  • அயல்நாட்டு விமானத்தில், மலிவான பயண கட்டண வகுப்பில், ஒரு வெள்ளைக்கார பெண்ணின் அருகில், ஒரு கருப்பின பெண்ணிற்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஒரு கருப்பின பெண் அருகில் அமர மாட்டேன் என்று அந்த வெள்ளைக்கார பெண்மணி விமான சிப்பந்தியிடம் சத்தம்போட்டார். அந்த கருப்பின பெண்ணையும் எல்லோர் முன்னிலையில் அவமதித்தார். தலைமை விமானியிடம் கலந்தாலோசித்தபின், விமான சிப்பந்தி அந்த வெள்ளைக்கார பெண்மணியிடம் உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், மாற்று ஏற்பாடு முதல் வகுப்பில் செய்துகொண்டிருப்பதாகவும் சொன்னார். பின் அங்கு அமர்ந்திருந்த கருப்பின பெண்ணிடம், தங்கள் விமானத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு வருத்தம் தெரிவித்து, அவருக்கு இலவசமாக முதல் வகுப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரை அங்கிருந்து மரியாதையுடன் அழைத்துச் செல்லும்போது. அந்த வெள்ளைக்கார பெண்மணியிடம், இனி நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்.

தன்னிடம் நிறைய செல்வம் இருக்கலாம். நிறைய ஆட்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கு அடிமையல்ல. மன்னர்கால பிரிவனை முறைகளை இன்றைய மக்களாட்சி காலத்திலும் கடைபிடிக்க ஆசைப்பட்டால், மக்களை அவமதித்தால், அவர்கள் தங்களின் எதிர்ப்பை உரிய நேரத்தில் பலமாக காட்டிவிடுவார்கள். சாதி-மத பிரிவிணைகளை கடந்து, முந்தைய காலங்களில் இருந்துவந்த ஆண்-பெண் பாலின ஏற்றத்தாழ்வுகளை இன்றும் ஒருசிலர் கடைபிடிக்க முற்படுகின்றனர். ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் சாதித்து காட்டி தங்களின் மேன்மையை நிலைநாட்டிய பெண்கள் நிறைந்து இன்றைய சமதர்ம சமுதாயத்தில், பணியிடத்திலும், வீட்டிலும் பெண்களை தாழ்வுபடுத்தும் குணம் கொண்டவர்களை சமுதாயம் எதிர்க்கத் துவங்கிவிட்டது.


என்னதான் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னாலும், உலகம் முழுவதும் ஏதேனுமொரு வகையில் ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் தன் சகமனிதனை அவமதிப்பது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேசமயம் அந்த மரியாதைக்குறைவான நடவடிக்கைக்கு எதிராக விமான சிப்பந்தி நிலைமை கையாண்டது போல பலவிதமான பதிலடிகளும் துவங்கிவிட்டன. அன்றைய விமானப் பயனத்தில் அந்த வெள்ளைக்கார பெண்மணி தான் விரும்பியது போல கருப்பின பெண்ணின் அருகில் அமரவில்லை. ஆனால் அன்றைய பயனம் அவருக்கு முள்மேல் அமர்ந்தது போலத்தான் இருந்திருக்கும். சகபயனியர் அனைவரும் அந்த வெள்ளைக்கார பெண்மணியின் அகங்காரத்தையும், மரியாதைக்குறைவான செயலையும் பேசித் தீர்த்திருப்பார்கள்.


ஒரு குறிப்பிட்ட மனிதரின் தேவை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவரை அவமதிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அவரை நீங்கள் பொருட்படுத்தாமல் கடந்து சென்றிருந்தால் கூட தவறில்லை. ஆனால் சொற்களாலும், செயலாலும் அவரை அவமதித்தால், அதற்கான எதிர்வினையை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும். ஒரு சில எதிர்வினைகள் அடுத்த கணமே வரலாம். ஒரு சிலவை, 20-30 ஆண்டுகள் கழித்தும் வரலாம். வினை விதைத்தவன், வினை அறுப்பான் என்ற பொன்மொழியை மறந்துவிடாதீர்கள்.

  • எதையும் செய்வதற்கு முன்னர், ஒரு முறை நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் அணுகுமுறை மற்றவரை பாதிக்குமா? என்பதை கவனமாக சிந்தியுங்கள்;

  • எதையும் பேசுவதற்கு முன்னர், ஒரு முறை சிந்தித்தால, உங்கள் வார்த்தைகளின் தாக்கத்தை கவனமாக குறைக்கலாம். வார்த்தைகளை சிந்திவிட்டால் நீங்கா வடுக்களாகிவிடும்;

  • உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன், மற்றவர்களின் கருத்துக்களை முழுமையாக கேளுங்கள்;

  • யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் அதீதமாக அனுமானங்களை வளர்த்துக்கொள்ளாதீர்கள். ஏதேனும் அனுமானம் இருந்தால், அவற்றை பரிசோதித்து உறுதி செய்தபின் வெளிப்படுத்துங்கள்;

  • மற்றவர்களுடைய கருத்துக்களுடன் உங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். மறந்துவிடாதீர்கள் – கருத்துக்கள் வேறு, நபர் வேறு. அந்த நபரை கணிவுடனும், மரியாதையுடனும் நடத்துவது முக்கியம்;

  • உங்கள் செயல்களுக்கு நீங்கள் தான் காரணம். மற்றவர்கள் செய்த தவறுக்கு எதிர்வினையாக நீங்கள் தவறாக செய்தால், உங்களின் எதிர்வினை தவற்றிற்கு நீங்களே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும்;

  • எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கிசுகிசுக்களை பேசாதீர்கள். அப்படி பேசுபவர்களையும் பொருட்படுத்தாதீர்கள்;

  • மற்றவர்களின் கலாசாரத்தை, பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். பரந்துபட்ட அறிவு, புரிதலை ஆழப்படுத்தி, பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கும்;

  • யாரேனும் அவமதிக்கப்பட்டால், தைரியமாக உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். சகமனிதனுக்கு உறுதுணையாக நிற்பதும், சமாதானம் செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை;

  • தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் தவறாக நடந்துகொண்டிருந்தால், தவறாக பேசியிருந்தால், உடனுக்குடன் உளமாற மன்னிப்பு கேளுங்கள்;

  • ஒருவேளை நீங்கள் அவமதிக்கப்பட்டால், ஏட்டிக்குப்போட்டியாய் சண்டையிடாமல், உங்கள் உயரிய செயல்களால், சாதனைகளால் பதிலளியுங்கள்;

உங்கள் வாழ்வின் வெற்றிக்கு பணம் சேர்ப்பது மட்டும் போதுமானதன்று. உங்களைச் சுற்றிலும் நல்ல மனிதர்களை நீங்கள் சேர்த்திருக்க வேண்டும். உங்கள் ஊழியர்களை, உங்கள் குடும்பத்தினரை, உங்கள் நண்பரை, உங்கள் உறவுகளை மரியாதையுடனும், கணிவுடனும் நடத்தினால், உங்களின் இக்கட்டாண சூழ்நிலைகளில் உங்கள் பின் உறுதுணையாய் எல்லோரும் நிற்பார்கள். நீங்கள் மரியாதைக்குறைவாக நடத்தியிருந்தால், உங்களுக்கு கஷ்டம் வரும்போது, செய்த வினைக்கான பலனை அனுபவிக்கட்டுமென எல்லோரும் விலகிநிற்பர். மறந்துவிடாதீர்கள், இவ்வுலகில், மனிதராக பிறவியெடுத்துள்ள நமக்கு, எதைக்காட்டிலும் மனிதம் காப்பது முக்கியமான கடமை!


சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்

எது எப்படியாயினும்? யார் எப்படியாயினும்?

நீங்கள நீங்களாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்


எத்தருணத்திலும் தவறான வார்த்தைகளையோ

மரியாதைக்குறைவான வார்த்தைகளையோ

தெரியாமலும், அறியாமலும் பேசிவிடாதீர்கள்;


நீங்கள் பேசும் வார்த்தைகளும்

நீங்கள் அளிக்கும் மரியாதையும்

எப்போதும் மற்றவரின் நினைவில் நிலைத்திருக்கும்

அதிலும் குறிப்பாக

நல்லவிதமாக நடத்தவைகளைக் காட்டிலும்

நீங்கள் தவறுதலாக பயன்படுத்திய வார்த்தைகளையும்

அவசரத்தில் / கோபத்தில் நடத்திய விதத்தையும்

காலாகாலத்திற்கும் நினைவில் வைத்து பழிதீர்ப்பர்;



- [ம.சு.கு 12.05.2023]

Recent Posts

See All
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

 
 
 

Commentaires


Post: Blog2 Post
bottom of page