top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 213 - களைத்துப் போய்விடாதீர்கள்!"

Updated: May 11, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-213

களைத்துப் போய்விடாதீர்கள்!


  • ஒரு குறிப்பிட்ட திட்ட செயல்பாட்டில் தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்று, ஒரு மேலாளர் கூடுதலான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். அதற்குத் தேவையான ஆட்கள் குறித்த திட்டமிடுதலிலும், செலவுகளை கருத்தில் கொண்டு குறைந்த நபர்களைக்கொண்டு தன்னால் முடிக்க முடியும் என்று வீராப்பாக சொல்லிவிட்டார். அந்த திட்டத்தை எப்படி செய்யவேண்டுமென்ற தெளிவு அவரிடத்தில் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆள்பலம் குறைவாக இருந்தது அவருக்கு ஒரு பெரிய சவார். திட்டதின் இறுதிநாட்கள் நெறுங்கும் போது, அவரும் அவரது ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் உழைத்தனர். கடைசி கட்டத்தில், அவரால் செயல்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. எப்படியோ வேலை முடிந்தால் சரியென்று ஓடினார். ஒருவழியாக அந்த திட்டம் குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு உடல் நலக்குறைவினால் அவரும் அவரது ஊழியர்கள் சிலரும் வர முடியவில்லை. இப்படி அதீத பொறுப்புக்களை ஏற்று, நேரம் போதவில்லை என்று சிறப்பாக செய்யவேண்டியதை சராசரியாக செய்து கொடுப்பது சரியா? நிறைய பாடுபட்டு, உடலை கொடுமைப்படுத்தி களைத்துப்போய் நிற்பது சரியா?

  • கால்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில், போட்டியின் இடையில் முக்கிய வீரர்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்க துணை வீரர்களை களத்தில் இறக்குவார்கள். போட்டியின் இறுதி தருவாயில் முக்கிய வீரர்கள் முழுமூச்சுடன் ஓட தெம்பாய் இருக்க வேண்டுமென்பதற்காக போட்டியின் நடுவில், ஆட்டத்தின் போக்கிற்கிணங்க, மாற்று வீரர்களை களமிறக்கி முக்கிய வீரர்கள் யாரும் கலைத்துப் போகாதவண்ணம் திட்டமிடுவார்கள். இந்த முறையை உங்கள் திட்டச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியுமா?

மேலாளர் தன் திறமைகளை நிரூபிக்க வேண்டுமென்று விரும்புவது சரிதான். அதேசமயம், அதற்கான சரியான திட்டமிடுதல் அதிமுக்கியம். ஒத்துக்கொண்ட வேலையை முடிக்க தேவையான ஆள்பலத்தை திட்டமிட்டு ஏற்பாடு செய்யாவிட்டால், இருக்கின்ற ஊழியர்கள் கஷ்டப்பட வேண்டும். எவ்வளவு நாட்கள் இவருக்காக ஊழியர்கள் கஷ்டத்தை ஏற்றுக்கொள்வார்கள்? எத்தனை நாட்களுக்கு இவரால்தான் அதீதமாக இரவெல்லாம் உழைக்க முடியும்?


தொடர்ந்து மணிக்கணக்கில் களத்தில் ஓட வேண்டுய விளையாட்டுக்களில் இந்த மாற்றிவிடும் முறையை பின்பற்றத்தவறினால், சிலசமயம் இறுதிகட்டத்தில் தேவைப்படும் அதீத போராட்டத்திற்கு உடல் ஒத்துழைக்காமல் போகக்கூடும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல, நீங்கள் செய்யும் பல செயல்களில் கவனித்து செயல்படுத்த வேண்டிய முறைமை. அப்படி திட்டமிட்டு எல்லா செயல்களையும் செய்கிறீர்களா?


பல வெளிவேலைகளுக்கு ஒருநபரை மட்டுமே தொடர்ந்து அனுப்பி அதீதமாக வேலை வாங்குவோம். குறிப்பட்ட முக்கிய தினத்தில் அவர் உடல் நலம் சரியில்லாமல் விடுப்பெடுக்க, அன்றைய தினம் முழுவதும் பல சிக்கல்களோடு கடந்துவந்த அனுபவங்கள் எனக்கு நிறைய ஏற்பட்டிருக்கிறது. உங்களுக்கு எப்படி? நாம் மட்டும் களைத்துப்போகாமல் பார்த்துக்கொண்டால் போதாது. நம் சகஊழியர்களும் களைத்துப்போகாமல் போதிய ஓய்வளிப்பதற்கேற்ப உங்கள் திட்டச்செயல்பாடு இருக்க வேண்டும்.


அலுவலக மேசை வேலையானாலும், மூட்டை தூக்குவதானாலும், மனித உடலால் கையாளக்கூடிய வேலைக்கு ஒரு எல்லை உண்டு. இரண்டு நாள் தூங்காமல் வேலைசெய்தால், உங்கள் உடல் முற்றிலும் சீரழிந்துவிடும். உங்கள் சிந்தனைத்திறன் கடுமையாக பாதிக்கும். அதேபோல அளவுக்கு அதிகமாக பாரம் தூக்கினால், எழும்பும் தசையும் பாதிக்கும். மனித ஆற்றலுக்கு எல்லையில்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதன் குடிகொண்டிருக்கும் அவனுடைய உடலுக்கு எல்லை இருக்கிறதே! எண்ணங்கள் எல்லையில்லாமல் விரியலாம். ஆனால் உலகிலுள்ள எல்லா திடப்பொருளுக்கும் ஒரு அளவும், எல்லையும் இருக்கத்தான் செய்கிறது.


திரைப்படத்தில் வேண்டுமானால் கதாநாயகன் கடைசி வரை ஒற்றையாளாக நின்று 100 பேரை அடித்தும், உடலில் குண்டு பாய்ந்தபின்னர்கூட போராடியும் வெல்லலாம். நிஜத்தில் அது சாத்தியமில்லை என்பதை நாமெல்லோரும் அறிவோம். தனிமனிதனாக நீங்கள் நிறைய சாதிக்க, உடல் தெம்போடும், ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேண விரும்பினால், எந்த தருணத்திலும் அளவுகடந்து உடலைவருத்தி களைத்துப் போகாதீர்கள். ஒருவேலை அப்படி செய்ய நேர்ந்தால், உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை கட்டாயம் அளியுங்கள். உங்கள் உடல் மறுசுழற்சியில் புத்துணர்வுபெற 4-5 நாட்கள் கூட ஆகலாம். அதீதமாக தொடர்ந்து உடலைவருத்தி நோயாளி ஆவதைவிட, அளவுடன் தொடர்ந்து போராடுவது பல இடங்களில் ஏற்புடையதாக இருக்கும்;


உங்கள் உடலையும், மூளையையும்

கசக்கிப்பிளிந்து சாதிக்கிறீர்கள்;

சாதிப்பது அவசியம் தான்

சாதனையை பார்க்க நீங்கள் இருக்கவேண்டியதும் அவசியம்!


அதீதமாக எதைச் செய்தாலும்

அதற்கொரு பின்விளைவு ஏற்படுவது விதி!

அது உணவானாலும், மருந்தானாலும்

உழைப்பானாலும், உறக்கமானாலும்

எல்லாமே அளவுடன் இருப்பது அவசியம்!


காலையிலேயே அதிகம் ஓடி களைத்து நின்றால்

மாலையில் வரும் வாய்ப்புக்களை யார் பயன்படுத்துவது?

எங்கும், எப்போதும் திடீரென்றுவரும்

வாய்ப்பை பயன்படுத்த, களைப்பில்லாமல்

உங்கள் உடலும் உள்ளமும்

உற்சாகத்துடன் இருந்தால்

உங்கள் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்!!


- [ம.சு.கு 10.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page