top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 212 - இக்கணத்தில் கவனமாக இருங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-212

இக்கணத்தில் கவனமாக இருங்கள்!


  • ஒரு மாணவன் தன் பன்னிரென்டாம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறான். மூன்று மணிநேரத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதிமுடிக்க வேண்டும். விடைகளை எழுதும் போது, ஒரு சிலவற்றிற்கு பதில் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறான். மற்ற மாணவர்கள் மும்முரமாக பதில்களை எழுதிக்கொண்டிருந்தனர். இப்போது அவனுக்கு குழப்பம். அடுத்த தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுத ஆரம்பிப்பதா? அல்லது தெரியாத கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிப்பதா? என்று. இந்த மாதிரி தருணத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  • மட்டைப்பந்தாட்டத்தில் (கிரிக்கெட்), மட்டைபிடிக்கும் வீரர், ஒவ்வொரு முறையும் பந்தை சந்திக்க தயாராகும் முன்னர் மைதானத்தை சுற்றிலும் மேலோட்டமாக ஒருமுறை பார்த்துவிட்டு பந்தை எதிர்கொள்வார். கிட்டதட்ட எல்லா முன்னனி மட்டைபிடி வீரர்களும் இதை வழக்கமாக செய்கிறார்கள். ஏன்?

கேள்வித்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில், எதற்கெல்லாம் நன்கு விடைதெரியுமோ, அதை முதலில் எழுதி முடிக்க வேண்டும். உங்களுக்கு நன்றாக தெரிந்த விடைகளை முதலில் எழுதியிருந்தால், திருத்துபவர்களுக்கு உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் முதல் பக்கங்களில் ஏற்படும். தெரிந்தவை முடிந்த பின்னர், சந்தேகத்திற்குரியவைகளையும், தெரியாதவைகளயும் மீதமுள்ள நேரத்தில் முயற்சி செய்யலாம். அதைவிடுத்து, ஆரம்பத்திலேயே அந்த முயற்சியில் இறங்கினால், பின்னர் தெரிந்தவைகளை எழுத நேரம் இல்லாமல் போகக்கூடும்.


தேர்வு அறையில் அமர்ந்துவிட்ட கணம்முதல், வெளிவரும் வரை, ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு பொன்னான நேரம். நன்கு தெரிந்தவைகளை எல்லாம் சிறப்பாக எழுதி கூடியவரை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். பின்னர் மீதமுள்ள நேரத்தில் சந்தேகத்திற்குரியவைகளையும், தெரியாதவைகளையும் முயற்சித்து உங்கள் மதிப்பெண்னை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இதை விடுத்து தெரியாதவைகளை முயற்சிப்பதில் அதிக நேரம் செலவிட்டாலோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்து நேரம் செலவிட்டாலோ, நஷ்டம் உங்களுக்குத்தான். தேர்வு அறையில் உங்கள் முழுக்கவனமும் உங்கள் விடைத்தாளில் இருந்தால், நீங்கள் படித்தறிந்த அளவைப்பொறுத்து, கட்டாயம் உங்களால் எடுக்கக்கூடிய மதிப்பெண்னை கவனமாக கூட்ட முடியும்.


மட்டைப்பந்தாட்டத்தில், பந்து வீசுபவருக்கும், மட்டைபிடி வீரரின் திறமைக்கும் ஏற்ப எதிரணி தலைவர், அடுகளத்தில் தன் தடுப்பாளர்களை [பீல்டர்ஸ்] அவ்வப்போது இடம் மாற்றி நிறுத்துவார். எந்தெந்த வீரர்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்று தெரியாமல் மட்டையை சுழற்றினால், சீக்கிரத்தில் ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேற நேரிடும். ஒவ்வொரு பந்தை சந்திக்கும் முன்னர், தடுப்பு வீரர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள், அவர்களின் இடத்தில் ஏதாவது மாற்றமிருக்கிறதா? என்று மட்டைபிடிவீரர் கவனமாக பார்த்தால் தான். பந்தை இலாவகமாக திருப்பிவிட்டு ஓட்டங்களை சேர்க்க முடியும். முந்தைய பந்தில் பார்த்ததே போதுமென்று எண்ணினால், இந்தமுறை அணியின் தலைவர் சைகையிலேயே இடத்தை மாற்றி நிறுத்தியிருந்தால், ஆபத்து யாருக்கு?


ஒவ்வொரு பந்தை சந்திக்கும் முன்னரும், களத்தின் நிலவரம், யார்யார் எங்கெங்கு நிற்கின்றனர், பந்து வீசுபவர் பந்தை எப்படி பிடித்திருக்கிறார், எந்த பக்கமாக ஓடிவந்து பந்துவீசுகிறார் என்ற எண்ணற்ற விடயங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். முந்தைய பந்தின் பாணியை இப்போதும் எதிர்பார்த்து ஏமாந்துவிடக் கூடாது. இக்கணத்தில், இக்களத்தில், என்ன சூழ்நிலையென்று ஆய்ந்து இப்பொழுதே சரியான முடிவெடுத்து இயங்கினால் மட்டுமே வெற்றியை எட்டமுடியும். காலமும், களமும் உங்களுக்காக காத்திருக்காது.

  • நீங்கள் சிறந்த வாகன ஓட்டுனராக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை ஓட்டும்போதும், சாலையில் கவனமாக பார்த்துத்தான் ஒட்டவேண்டும். இக்கணத்தில் சாலை நிலவரம், போக்குவரத்து நெரிசல் தெரிந்து ஓட்டினால்தான் வாகனம் குறித்த நேரத்தில் குறித்த இடத்தை சென்றடையமுடியும்;

  • புதிய வாடிக்கையாளருக்கு உங்கள் பொருட்களை விற்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் வாடிக்கையாளர் யார்? அவரது தேவையென்ன? அவரது இப்போதைய மனநிலை என்ன? என்பதை சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்துகொண்டு இக்கணத்தில் அவரை கையாண்டால், வியாபாரம் முடிக்கப்படும்;

  • நீங்கள் சிறந்த பேச்சாளராக, ஓவியராக, இசையமைப்பாளராக இருக்கலாம். உங்கள் திறமைகள் மெச்சப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் இக்கணத்தில் நீங்கள் பேசும் பேச்சும், படைக்கும் ஓவியமும், இசையும், கவனத்துடன் சூழலுக்கேற்ப அழகுடன் படைக்கப்பட்டால்தான் உங்களால் உங்கள் புகழை தக்கவைக்க முடியும்.

இக்கணத்தை தவறவிட்டால், பல பொன்னான வாய்ப்புக்கள் வந்துபோவது தெரியாது. இக்கணத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை தள்ளிப்போட்டால், உங்களின் வளர்ச்சியும், வெற்றியும் தள்ளிப்போகும். இக்கணத்தில் உங்கள் ஆரோக்கியத்தைப் பேனாமல், வயதானபின் பேனுவதில் பயனென்ன? உங்கள் வெற்றிக்கு இக்கணத்தில் செய்பவகளை மிகமிக கவனமாக செய்யுங்கள். ஏனையவையெல்லாம் சுபமாகும்!


நேற்று என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்

நாளை என்னவேண்டுமானாலும் நடக்கலாம்!

நேற்று நடந்தவற்றை மாற்றமுடியாது

நாளை நடக்கவிருப்பது இப்போது நம் கையிலில்லை!


இப்போது இங்கு என்ன நடக்கப்போகிறதென்று

முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

இக்கணத்தைப்பற்றி அறியாமல், தெரியாமல், பேசாமல்

நேற்றையையும், நாளையையும் அறிந்திருப்பதில் என்னபயன்?


இக்கணத்தில் நடப்பவைகளை சரிவர கட்டுப்படுத்தினால்

இனி நடக்கப்போகின்றவைகள் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும்;

இக்கணத்தை தவறவிட்டால்

இக்கணத்தின் இழப்பெல்லாம் திரும்பா இழப்புதான்!


எது நடந்ததோ! எது நடக்குமோ!

அதைப்பற்றி கவலைப்படாமல்

இப்போது இருக்கும் கணத்தில்

செய்யவேண்டியவைகளை எல்லாம்

கவனமாகவும், சரியாகவும் செய்தால்

எல்லாம் வெற்றிகரமாக முடிக்கப்படும்!


- [ம.சு.கு 09.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page