top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 211 - ஆசைதான் எல்லாவற்றின் ஆரம்பம்!"

Updated: May 9, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-211

ஆசைதான் எல்லாவற்றின் ஆரம்பம்!


  • பள்ளியில் ஆசிரியர், தன் மாணவர்களிடம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், விஞ்ஞானி, விமானி, அரசியல்வாதி, ஓவியர், நடிகர், எழுத்தாளர், தொழிலதிபர் என்று எண்ணற்ற எதிர்கால கனவுகளை, ஆசைகளை ஒவ்வொருவரும் கூறினர். எல்லோரிடமும் இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின் நீங்களெல்லாம் சந்திக்கும்போது, நான் அங்குவந்து நீங்கள் விரும்பியதை சாதித்திருக்கிறீர்களா என்று சோதிப்பேன் என்று விளையாட்டாக சொன்னார்? இந்த வரிகளை நினைவு வைத்திருந்த மாணவர்கள், அன்றிலிருந்த 25-வது வருடத்தில், அதே பள்ளியில் ஒன்று கூடினர். அவர்களின் பாதிக்கும்மேற்பட்டோர் தங்களின் கனவு வேலைகளை விடாமுயற்சியில் அடைந்திருந்தனர். மீதமுள்ளவர்கள் தங்களின் முயற்சியின்மையால் கனவுகளை தொலைத்து கிடைத்த பணியை செய்து கொண்டிருந்தனர். இந்த மாணவர்களின் வெற்றிக்கு வித்து எது? ஆசிரியரா, கனவா, முயற்சியா?

  • 50 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர் ஆட்சியில் பழகிவிட்ட மக்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சுதந்திரத்திற்குமான வேறுபாடு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் தான், சுதந்திரத்தை கனவு கண்டவர்கள் போராடத் துவங்கினர். அந்த கனவும், ஆசையும் பலரது எண்ணங்களில் வலுப்பெற்ற பின்னர்தான் பேரியக்கங்கள் உருவாகி சுதந்திரத்திற்கு போராடின. அடிமை விலங்கை உடைத்தெரிய வேண்டுமென்ற கனவு இல்லாத சமுதாயமாக இருந்தவரை, கிட்டதட்ட 5-6 நூற்றாண்டுகள் முகலாயர்கள், வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். கனவு வலுப்பெற்று கூட்டம் அதிகரிக்கவே, வெள்ளையன் இனிமுடியாதென்பதை உணர்ந்து வெளியேறினான். அதே கனவு நம் நாட்டின் வளர்ச்சியை நோக்கி திரும்பியதன் பயனாய் இன்று சமமான கல்வி, சமூகநீதி, அறிவியல் வளர்ச்சி, குடியுரிமை, பாதுகாப்பு என்று மக்களாட்சியில் திளைக்கிறோம். ஒருவேளை நம் பாட்டன்மார்கள் கனவுகாணாமல் அடிமைத்தனத்தை ஏற்று வாழ்ந்திருந்தால் இன்று எப்படியிருக்கும்?

நன்றாக படித்து பலதுறைகளில் வல்லுனராக ஆசைப்பட்டவர்கள் பலரும் இலட்சியத்தை நோக்கிய கல்வியில் நாட்டம் செலுத்தி முன்னேறியிருந்தனர். கலைகளில் நாட்டம் செலுத்தியவர்கள் ஒருசிலர் முன்னேறியிருந்தனர். ஒருசிலருக்கு போதிய வழிகாட்டுதல் இல்லாததால், திசைமாறிப் போயிருந்தனர். தன் கனவு, இலட்சியம், ஆசைகளை மேலும் சிந்தித்து வளர்த்தவர்கள் அதை நிஜமாக்கினர். தன் கனவை மறந்தவர்கள் திசைமாறி நின்றிருந்தனர். அந்த மாணவர்கள் மத்தியில் பொதுவாக காணப்பட்ட விடயம், கனவிருந்தவர்கள் முன்னேறி இருந்தனர். கனவை தொலைத்தவர்கள் சாமானியர்களாக இருந்தனர்.


இன்று அடிமைத்தனத்தைப் பற்றி கனவு காண்பதற்கே கொடுமையாக இருக்கிறது. அவ்வளவு கொடுமைகளை சகித்து அவர்களின் கனவுகளால் இன்றைய தலைமுறையை வளர்த்தெடுத்துள்ளனர். இன்று நாம் அடுத்த தலைமுறைக்காண கனவை சரியாக காண்கிறோமா? அடுத்த தலைமுறை வாழ ஏற்புடைய இயற்கை சூழலை தக்கவைக்கிறோமா? உங்கள் கனவு உங்களோடு முடிந்துவிடுவதல்ல. ஆக்கமோ - அழிவோ, எதுவானாலும் தலைமுறைக்கும் அதன் தாக்கும் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. தங்களின் கனவுகளை தொடர்ந்து அலெக்சாண்டரும், சீசரும், இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழனும் தங்கள் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தினர். அந்த கனவுகளும், திறமையும் இல்லாததால் அவர்களின் அடுத்த தலைமுறைகள் அதை தக்கவைக்க முடியவில்லை. முடியாட்சியோ, மக்களாட்சியோ, எல்லாம் மக்களின் கனவுகளிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. கனவில்லாத மக்கள்கூட்டம் அடிமைத்தனத்தில் உழல்கிறது.


கனவும், ஆசைகளும் ஆக்கத்திற்கு வழிவகுப்பது போல, எண்ணற்ற அழிவுகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. உலகை ஆள நினைத்தவர்கள் உருவாக்கிய அணுகுண்டுதான் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஆளநினைப்பவர்களின் கனவு எல்லா வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் காரணமாகி நிற்கிறது. தன் கனவுகளைக் கடந்து, அடுத்தவர் கனவுகளின் மீதான பொறாமைத்தீ ஏமாற்றுதலுக்கும், துரோகத்திற்கும் வழிவகுக்கிறது. எல்லாம் ஆசைதான்! ஆம் எல்லாமே பேராசைதான்!!


இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான ஆசையை புத்தர் சொன்னதுபோல துறக்க முயற்சிப்பதானால் சந்நியாசம் ஏற்க வேண்டும். அங்கும் எண்ணற்ற ஆசைகளுடம் ஒருகூட்டம் மோதிக்கொண்டிருப்பதை மறந்துவிடாதீர்கள்.


அழிவைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். நாம் ஆசைப்பட்டு ஆக்கத்திற்கு வழிவகுப்போம். நமக்கென ஒரு கனவை உருவாக்குவோம். எல்லோரும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்றால் சாத்தியமில்லை. ஆனால் எல்லோரும் மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென்று கனவுகண்டால் அது எல்லாவகையிலும் சாத்தியமான ஒன்று.


உங்களின் வளமான வாழ்க்கைக்கு, அமைதியான வாழ்க்கைக்கு, படைப்பாற்றலுக்கு, சாதனைகள் புரிவதற்கு, சேவை புரிவதற்கு, சமத்துவத்திற்கு, சந்நியாசத்திற்கு என்று உங்களின் இலட்சியத்திற்கேற்ப உங்கள் கனவுகளை, ஆசைகளை வளர்த்தெடுங்கள். அந்த கனவுகள் மெய்பட என்ன செய்யவேண்டுமென்று சரியாக திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் கனவும் ஆசையும் தான் இங்கு எல்லாவற்றிற்குமான ஆரம்பப்புள்ளி என்பதை மறந்துவிடாதீர்கள்;


“ஆசைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்” என்றார் ஒருவர்;

“எல்லாவற்றிற்கும் ஆசைப்படு” என்கிறார் ஒருவர்;

“ஆசை துறந்தால் அகிலம் உனக்கு” என்கிறார் ஒருவர்;

இதில் எது சரி? எது தவறு?

இந்த கேள்விக்கு விடை யாருக்கும் தெரியாது என்பது நிதர்சனம்;


ஆசைதான் மனித வாழ்வின் ஆரம்பம்

ஆசைதான் எல்லா கண்டுபிடுப்புக்களின் அடித்தளம்

ஆசைதான் வாழ்வின் ஓட்டத்திற்கு எரிபொருள்

ஆசை! ஆசை! ஆசை!

ஆசை ஒன்றுதான் எப்போதும் எல்லாமும் ஆகி நிற்கிறது;


கற்பதற்கு ஆசைப்படுங்கள்!

சாதிக்க ஆசைப்படுங்கள்!

பொருள் சேர்த்து ஆசைப்படுங்கள்!

ஈகைவளர்க்க ஆசைப்படுங்கள்!

அன்பு செலுத்து ஆசைப்படுங்கள்!

கருணை காட்ட ஆசைப்படுங்கள்!

எல்லாவற்றுள்ளும் எவ்விடத்தும், எக்கணமும்

எதற்காகவும் மனிதம் காக்க ஆசைப்படுங்கள்!!



- [ம.சு.கு 08.05.2023]





Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page