“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-210
இழப்புக்களை யார் ஏற்படுத்துகின்றனர்?
எங்கள் ஊரில் நீண்டகாலமாக ஒரு உணவகம் சிறிய அளவில் நற்பெயருடன் செயல்பட்டு வந்தது. அதன் முதலாளி திடீரென்று இறந்துவிடவே, மேலாண்மைக் கல்வியை முடித்திருந்த அவரது மகன் நிர்வாக பொருப்புக்களை ஏற்றுக்கொண்டு நடத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில், அந்த உணவகம் தொடர் நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்டுவிட்டது. அளவான இலாபம் மற்றும் தரமான உணவின் மூலம் மக்களுக்கு சேவை என்றிருந்த உணவகத்தின் கண்ணோட்டத்தை முற்றிலுமாய் அதிக இலாபம் ஈட்டும் கண்ணோட்டத்திற்கு மாற்றியமைத்ததுதான் அந்த உணவகத்தின் வீழ்ச்சிக்கை காரணமானது.
நடுத்தரவயதுடைய ஒருவருக்கு, நீரிழிவு நோயும், இரத்த அழுத்த பிரச்சனையும் இருப்பதை உணர்ந்து மருத்துவர் அவரிடன் என்ன செய்யலாம்-செய்யக்கூடாது, எதை சாப்பிடலாம்-சாப்பிடக்கூடாது என ஒரு சிறுபட்டியலை விளக்கினார். எல்லாவற்றிற்கும் சரி-சரியென்று தலையை ஆட்டிவிட்டு வந்தவர், எதையும் பொருட்படுத்தாமல் தன் வழக்கமான பாணியில் குடியும்-கும்மாளமுமாகவே பொழுதை கழித்தார். அன்றிலிருந்து ஓராண்டுக்குள்ளாகவே தீவிர நோய்பாதிப்பில் உயிரிழந்தார். அவரது இழப்பால் குடும்பம் ஏழ்மைக்குப் போனது. இதற்கு நோயை காரணம் சொல்வதா? மருத்துவரையா? அல்லது அந்த நபரையா?
சிறிய ஊரில், உணவகங்களின் தேவை குறைவாகத்தான் இருக்கும். மேலும். பொருளாதார நோக்கிலும், உணவின் தரம், சுவை என்ற கண்ணோட்டத்திலும், மக்கள் உணவகத்தைக் காட்டிலும் வீட்டில் சமைத்துண்பதை பெரும்பாலும் விரும்புவார்கள். அவர்களின் எண்ணங்களை கருத்தில்கொண்டு தரமான உணவை, அளவான விலையில் கொடுத்துவந்த பெரியவரால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனால், இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மூலப்பொருட்களின் தரத்தை குறைத்து, உணவுப்பொருட்களின் விலைகளை உயர்த்த அவரது மகன் முயற்சித்தபோது, உணவகத்தின் நற்பெயர் படிப்படியாக சரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்கள் அதிக இலாபம் வரவதை பார்த்த மகன், படிப்படியாக வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதை கவனிக்கவில்லை. இறுதியில் வாடிக்கையாளர் வருகை குறைந்து, செலவுகளுக்கு போதிய வருவாயின்றி கடை நிரந்தரமாக மூடப்பட்டது. இப்படி ஒரு சிறிய நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட யார் காரணம்? சந்தையா அல்லது நிர்வாகமா?
இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு, இரத்த அழுத்தம், உடல்பருமண் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் சர்வசாதாரணம் ஆகிவிட்டன. முறையான உணவுக்கட்டுப்பாடு, போதிய உறக்கம் போன்றவைகள் இல்லாததால், பலரும் இந்த உடல் உபாதைகளால் அல்லல்படுகின்றனர். இந்த நோய்கள் இன்ன காரணத்தினால் தான் வருகிறதென்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் ஒருசிலர் அதை பொருட்படுத்துவதேயில்லை. இறுதியில் அது அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்துவிடுகிறது. பணத்தின் பின்னால் ஓடி, ஆரோக்கியத்தை தொலைத்து நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த செயல்பாடுகளுக்கு யார் காரணம்??!!
பல சமயங்களில் நிர்வாகத் தலைவர்கள், சந்தையின் கருத்துக்களை, தன் ஊழியர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல், அவர்களின் அனுகுமுறைதான் சரியென்று பிடிவாதமாக செயல்பட்டு பல நிறுவனங்களின் நிரந்தர வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளனர். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டிப்பறந்த கிங்பிஷர் நிறவனர் மல்லையா, சத்தியம் நிறுவனர் இராமலிங்க இராஜூ, வைர வியாபாரி நீரவ் மோடி என்ற பெயர்கள் நன்கு பிரசித்தம்.
ஒரு சில நிறுவனங்கள், நிர்வாகத்திறமை குறைபாடுகளால், தவறான முடிவுகளால் வீழ்ந்தன;
ஒரு சில நிறுவனங்கள், முதலீட்டாளர்களை ஏமாற்ற, கணக்கு வழக்குகளில் பித்தலாட்டம் செய்ததால் விழுந்தன [சத்தியம், என்ரோன்.....];
ஒரு சில நிறுவனங்கள், திட்டமிட்டு வங்கிப் பணத்தை, மக்களின் பணத்தை ஏமாற்றியதால் விழுந்தன;
ஒரு சில நிறுவனங்கள், சந்தை மாற்றங்களை கணிக்கத் தவறியதால் விழுந்தன;
ஒரு சில நிறுவனங்கள், அளவிற்கு அதிகமான விரிவாக்கம், பணமுடக்கத்தினால் விழுந்தன;
எல்லா நிறுவனங்களின் வீழ்ச்சியும், பெரும் நஷ்டத்திற்குமான ஆரம்பப்புள்ளி அந்த நிறுவனத்திற்கு உள்ளிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது. நிர்வாக மேலாண்மையில் சில முடிவுகள் தவறாகலாம். ஆனால் அந்த தவற்றை கண்டுபிடித்து சீக்கிரம் திருத்திக்கொள்ளத் தவறினால், அது நிரந்தர வீழ்ச்சிக்கு வித்தாகி விடுகிறது.
உங்கள் உடல் ஆரோக்கியமோ, வியாபார வளர்ச்சியோ, நீங்கள் உரிய கவனம் செலுத்தி, தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி நிர்வகித்தால் வெற்றிகாணலாம். நீங்கள் அக்கரையில்லாமல் இருந்தால் உடல் பெருத்து நோய்வாய்ப்படுவதும், வாடிக்கையாளர் குறைந்து நஷ்டம் ஏற்படுவதும் தானாக நடந்துவிடும்.
வெற்றிக்கு மட்டும் உங்கள் செயல்பாடுகள் தேவையென்றில்லை. இருப்பதை தக்கவைப்பதற்கும், நஷ்டத்தை குறைப்பதற்கும் நீங்கள் தொடர்ந்து கவனமாக இயங்கவேண்டும். ஒருசில முடிவுகள் தவறாகி நஷ்டம் ஏற்படலாம். ஆனால் அந்த தவறை ஏற்றுக்கொண்டு உரிய திருத்தத்தை செய்தால் நஷ்டத்தை குறைத்து மீண்டு விடலாம். வீம்பிற்கும், கௌரவத்திற்கும் இடம் கொடுத்து, பிடிவாதமாக நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நின்றால், நஷ்டம் அளவு கடந்து எல்லாவற்றையும் இழக்கச் செய்துவிடும்;
தோல்விகளால் சில இழப்புகள் வரலாம்;
அந்த தோல்வி நிரந்தரமானால்
அதைச்சார்ந்த இழப்புக்களும் நிரந்தரமாகிவிடும்;
தோல்வி குறித்து அதீதமாக வருந்திக்கொண்டிருந்தால்
இழப்புக்கள் இன்னும் அதிகரிக்கும்;
சிலசந்தர்ப்ப சூழ்நிலைகளால் நீங்கள் தோற்கலாம்
ஆனால் இழப்புக்களை கட்டுப்படுத்தி
அடுத்த முயற்சியை தொடர்ந்தால்
கட்டாயம் வெற்றி உங்கள் தலையெழுத்தை மாற்றும்;
ஞாபகத்தில் கொள்ளுங்கள்
இந்த விதி சூதாட்டத்திற்கு பொருந்தாது
- [ம.சு.கு 07.05.2023]
Comments