top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 209 - பொருந்தாததை சீக்கிரத்தில் விலக்கிடுங்கள்!"

Updated: May 7, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-209

பொருந்தாததை சீக்கிரத்தில் விலக்கிடுங்கள்!


 • உங்கள் வீட்டு அலமாரியில், 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த சட்டைகளும், கால்சட்டைகளும் இரண்டு வரிசையில் நிறைந்திருக்கின்றன. அவற்றை இப்போது அணிவதேயில்லை. பல உடைகள் அளவு போதுவதில்லை. சில உடைகள் இன்றைய நாகரீகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இப்போது எடுத்து வரும் புதிய உடைகளை வைப்பதற்கு இடமில்லை. இந்த சிக்கலை தீர்க்க, புதிய அலமாரி வாங்க திட்டமிட்டால், அதிலும் சிக்கல், அதை வைப்பதற்கு ஏற்ற இடம் வீட்டில் இல்லை. இனி அலமாரி வைக்க ஏதுவாக இன்னொரு அறை கூடுதலாக கட்டலாம் என்றால், அதிலும் சிக்கல், கூடதல் அறை கட்ட இடமேயில்லை. அதை தீர்க்க கூடதல் இடத்தை வாங்கலாம் என்றால், பக்கத்துவீட்டுக்காரர் ஏற்கனவே முழுவதுமாக வீட்டை கட்டிவிட்டார். துணி வைக்க அலமாரி போதவில்லை என்று இடம் வாங்கி வீடுகட்ட வேண்டியிருக்கிறது. இது சரியான யோசனையா?

 • 35 வயது வாலிபருக்கு ஜிம்னாஸ்டிக் [சீருடற்பயிற்சி] கற்றுக்கொண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆசை. தன் சிறுவயதிலிருந்த ஜிம்னாஸ்டிக் கனவு, வசதியின்மையின் காரணமாக அப்போது முயற்சிக்கவில்லை. இப்போது வசதியிருக்கும்போது செய்ய முயற்சி செய்தார். அதற்கான பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து கடுமையாக பயிற்சி செய்ய முயற்சித்தார். வாரவாரம் உடல்தசை பிடிப்பு மற்றும் வலிகளுக்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தது. தன் 35-வது வயதில், உடலை இரப்பர் போல திடீரென்று வளைக்க முயற்சித்தால் தசை பிடிக்கத்தானே செய்யும். சிறிய வயதிலிருந்து பயிற்சித்தால் மட்டுமே உடலை இலாவகமாக வளைக்கச் செய்யமுடியும் என்று தெரிந்திருந்தும், உடல் அமைப்பு, எலும்பு-தசையமைப்புக்கள் முற்றிலுமாக வளர்ந்த நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் முயற்சி பயன்தருமா?

வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் துணி வைக்க போதுமான இடம் வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் துணிகளை வைக்க பொதுவாக எல்லோருக்கும் போதுமான இடம் இருக்கும். ஆண்டாண்டுகாலமாய் பயன்படுத்தாத, உபயோகமற்ற, பொருத்தமற்ற உடைகளை வைக்க அதிக இடத்தை எடுத்துக்கொண்டால், வாங்கும் புதிய உடைகளை எங்கு வைப்பது. அப்படி பழையவற்றை சேர்த்துவைப்பதற்கு நீங்கள் அருங்காட்சியகம் தனியாக கட்டிக்கொள்ளுங்கள். வாழ்கின்ற வீட்டில் அப்படி பொருத்தமற்ற, தேவையற்ற உடைகளை, பொருட்களை சேர்த்தீர்களானால், வீட்டில் உட்காரக்கூட இடம் இருக்காது. தேவையற்றதை வைத்துக்கொண்டு, தேவையானவற்றை வாங்கும் போது அவற்றை வைக்க இடமில்லை என்று புதிய கட்டிடம் கட்ட யோசிப்பது அதீத முட்டாள்தனம் தானே!


உடல் அமைப்பு வளர்கின்ற பிள்ளைப் பருவத்தில், உங்களுடைய உடல் எந்தவகையில் வேண்டுமானாலும் பயிற்சிக்கப்பட்டு தயாரபடுத்தப்படலாம். பிள்ளைப்பருவத்தில் எலும்புகளும், இளம் தசைகளும் எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும். அதேசமயம், பெரியவர்களாகும்போது எலும்பு, தசைகள் வலுப்பெற்று முதிர்கின்ற நிலையில் அவற்றை வளைக்க முயற்சிப்பது ஆபத்தானது தானே! பெரியவர்களான பின் பிள்ளைகள் செய்ய வேண்டியதை முயற்சிப்பதில் பயனிருக்கிறதா? தன்னால் இப்போதும் முடியும் என்று தொடர்ந்து முயற்சித்தால், ஏதோ 20%-30% நடக்கும். ஆனால் 100% வளைப்பேன் என்று பிடிவாம் பிடித்தால் எலும்பை முறித்துக்கொண்டு உட்கார வேண்டியதுதான்! இப்போதைய வயது, உடலமைப்பிற்கு சாத்தியமற்ற செயலை செய்வேன் என்று பிடிவாதமாக செய்தால், நேரமும், பொருளும் வீணாகத்தான் போகும்.


வீடோ, வியாபாரமோ, தேவையானவற்றை வைத்துக்கொண்டு, தேவையற்றதை கூடிய விரைவில் அப்புறப்படுத்துவது மேலாண்மையின் ஒரு முக்கிய பாடம். அதேபோல மனிதனின் செயல்பாட்டிலும், எது சாத்தியப்படுமோ அதை செய்வதும், சாத்தியமே இல்லாதவற்றை தவிர்ப்பதும் முக்கியமான முடிவுகள். தேவையற்றவைகளை பற்றிக்கொண்டும், சாத்தியமில்லாதவற்றை பின்தொடர்ந்தும் சென்றுகொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் சாத்தியமில்லாமல் போகும்.

 • இன்றையதினம் எல்லா தொழில்களிலும் அதிவேக உற்பத்தி முறைமைகளும், இயந்திரங்களும் வந்துவிட்டன. ஆனாலும் பழையமுறையிலேயே செய்வேன் என்று பிடிவாம் பிடித்தால், வியாபாரத்தை மூடவேண்டியதுதான்;

 • அன்றாடம் நிறைய வியாபார சிக்கல்கள் வரும். அவற்றை கையாள எண்ணற்ற ஆலோசனைகளும் வரும். அவற்றில் ஏற்புடையதை மட்டும் தேர்வு செய்து செயல்படுத்தினால் வெற்றிகாணலாம். இன்னார் சொல்லிவிட்டார் என்பதற்காக பொருந்தாதவற்றை செய்தால், சிக்கல் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

 • ஒருசில ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை. அவர்களுக்கு பயிற்சியளித்தும் பயனில்லை. அவர்களுக்கேற்ற வேலை கொடுக்க உங்களிடம் வேலையில்லை. இந்த சூழ்நிலையில் அந்த ஊழியரை தொடர்ந்து வைத்துக்கொண்டு ஊதியம் அளித்துக்கொண்டிருந்தால், வியாபாரம் எப்படி கட்டுபடியாகும்.

 • வீட்டில் தேவையற்ற, உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு அலமாரிகளை நிறப்பிக்கொண்டிருப்பதில் என்ன பயனிருக்கிறது. புதியவற்றை வைக்க இடமில்லாமல், ஆங்காங்கே எல்லாவற்றையும் கீழே குப்பைபோல வைக்கவேண்டியிருக்கும். வீட்டில் நடப்பதற்கு இடமில்லாமல் தேவையில்லாத பொருட்களையும், ஆடைகளையும் நிரப்பிக்கொண்டிருந்தால் அன்றாட வாழ்க்கை நரகம்தான்;

உங்கள் கணிணியின் முகப்புத் திறையில் எத்தனை கோப்புகளை வைத்திருக்கிறீர்கள்? அவற்றில் எத்தனை கோப்புகள் இப்போது தேவை? உங்களுக்கு தேவையானதை தேடியெடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கிறது? இந்த கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொண்டு கணிணித்திறையை அலசுங்கள்.


தேவையானதைமட்டும் வைத்துக்கொண்டு, தேவையில்லாதவற்றை அகற்றுவதாலும், உங்களுக்கு பொருந்தாத செயல்களை தவிர்ப்பதாலும்

 • உங்களின் பொன்னான நேரத்தை பயனுடையதாக்க வாய்ப்பு அதிகரிக்கும்

 • தேவையானவற்றை எளிதில் தேடியெடுக்க முடியும்

 • மனம் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து தெளிவுடன் இருக்கும்

 • தேவையானவற்றிற்கு போதுமான இடமும், அவற்றை பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கும்

உங்களுக்கு தேவையானது-தேவையற்றது. பொருத்தமானது-பொருத்தமற்றது என்னென்ன உங்களிடம் இருக்கிறது, எதை பற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே அவ்வப்போது அலசி முடிவெடுங்கள்.


உங்களுக்கு பொருத்தமானதென்றால்

கடைசிவரை போராடுங்கள்!

உங்களுக்கு பொருத்தமில்லையென்றால்

சீக்கிரத்தில் வெளியேறிவிடுங்கள்!


முயற்சிக்கிறேன் என்ற பேரில்

பொருந்தாதவற்றோடு போராடுவது

நேரத்தையும், ஆற்றலையும்

தேவையின்றி வீணடித்துவிடும்!


- [ம.சு.கு 06.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page