top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 208 - தோல்வியென்றொன்றில்லை!"

Updated: May 6, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-208

தோல்வியென்றொன்றில்லை!


  • ஒரு பட்டதாரி இளைஞர் தொடர்ந்து வேலைக்கான நேர்காணலில் தோல்வியடைந்தார். ஒருவருட காலத்தில், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை சந்தித்திருந்தார். ஏனோ, அவரது பொறியில் படிப்பிற்கு ஏற்றதொரு வேலையில் தேர்வுபெறவே முடியவில்லை. சில இடங்களில், அவருக்கு பணி முன்அனுபவம் இல்லை என்று கூறிவிட்டனர். சில இடங்களில் ஆரம்பத்தில் குறைந்த ஊதியித்தில் பயிற்சி ஊழியராக இருக்கவேண்டுமென்று கூறியுள்ளனர். சில இடங்களில், தங்கள் வேலைக்குகந்த அடிப்படை அறிவும் அனுபவமும் இல்லை என்று கூறிவிட்டனர். சில இடங்களில் பதில் வரவேயில்லை. இவை அனைத்தையும் ஒன்றுபடுத்தி தான் நிரந்தரமாக தோற்றுவிட்டதாக அந்த இளைஞர் கருதினார். எதிர்பார்க்கும் வேலை கிடைக்கவில்லை என்பது தோல்வியா?

  • பள்ளியில் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயப் போட்டி நடத்த தீர்மாணிக்கப்பட்டு தேதி குறிக்கப்பட்டது. ஓட்டப்பந்தயத்தில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் மாணவர்களிடம் அதிகரித்தது. ஒரு சில மாணவர்கள் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் தினமும் காலையில் சில பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தனர். போட்டி தேதி நெருங்கும்போது, ஒருசிலரின் பயிற்சிகள் தீவிரம் அடைந்தன. இறுதிப் போட்டியில் கடுமையான பயிற்சிசெய்த மாணவர்கள் மூன்று பேர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஏனையவர்கள் பின்தங்கியிருந்தனர். இந்த போட்டியில் பங்கேற்ற மற்ற மாணவர்கள் தோல்வியாளர்களாக கருதப்பட்டனர். நிஜத்தில் அவர்கள் தோற்றனரா ?

புதிதாய் கல்வி முடித்த பட்டதாரிக்கு, வேலையில் முன்அனுபவம் இருக்காது. அதனால் எடுத்தவுடன் எந்த நிறுவனமும் அவருக்கு மேலாளர் வேலையை கொடுக்காது. நீங்கள் மேலாளர் வேலைக்கு முயற்சித்தால் தோல்விதான் மிஞ்சும். அங்கு தோற்றுவிட்டேன் என்று மனம்வருந்துவதில் பயனில்லை. நிஜத்தில் அங்கு தோல்வி ஏற்படவில்லை. தவறான முயற்சிதான் நிகழ்ந்துள்ளது. அந்த இளைஞர் தனக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஊழியர் வேலையை ஏற்று அனுபவத்தை வளர்த்திருக்கலாம். அதை ஏற்காமல், தனக்கு மேலாளர் வேலை கிடைக்கவில்லை, தான் தோற்றிவிட்டேன் என்று கருதினால், அது அவரது முட்டாள்தனம் தானே!


ஓட்டப்பந்தய போட்டியில் முதலிடம் பிடிக்க எல்லோருக்கும் ஆசை. ஆனால் அதற்கான பயிற்சியை ஒருசிலர் மட்டுமே செய்தனர். யார் கடுமையாக பயிற்சிசெய்தாரோ, அவர் நல்ல உடல் தகுதியுடன் போட்டியில் வேகமாக ஓடி முதல் பரிசை வென்றார். அவரை விட சற்று குறைவாக ஓடியவர் இரண்டாம் பரிசு. அடுத்தவர் மூன்றாம் பரிசு. ஏனையவர்களுக்கு பரிசு ஏதுமில்லை. ஏனையவர்கள் போட்ட உழைப்பிற்கு ஏற்ற ஊதியமாக போட்டியின் முழுதூரத்தை ஒடிக் கடந்துநின்றனர். அவர்களது உழைப்பு போதுமான அளவு இல்லாததால், அவர்களால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. கடின உழைப்பை போட்டவர் வென்றார். அவ்வளவாக உழைக்காதவர், பரிசின்றி போட்டியின் எல்லைக்கோட்டை வெறுமனே கடந்துநின்றார். அவரவர்களின் உழைப்பிற்குரிய விளைவு நிகழ்ந்தது. இங்கு வெற்றியும்-தோல்வியும் உழைப்பிற்கேற்ற ஊதியமேயன்றி, யாரோ வழங்கிய பரிசல்ல.


உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கப்பெறும்போது, எப்படி தோற்றுவிட்டேன் என்று சொல்ல முடியும்?

  • தினந்தோறும் நன்றாக பயிற்சிகள் செய்து, எல்லா நுணுக்கங்களையும் தெரிந்து போட்டியில் பங்கேற்கும் வீரருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிறது;

  • உற்பத்தி மற்றும் விற்பனை திட்டங்களை சரியாக வகுத்து, அனுதினமும் சரியாக மேற்பார்வை செய்து, அவ்வப்போது வரும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்த்து, சந்தை மாற்றங்களை அனுதினமும் கவனித்து உரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நபர், தொழிலில் பெரிய வெற்றிகளை சாதிக்கிறார். அதை முறையாக செய்யாதவர், சராசரி அளவுகளோடு நின்றுவிடுகிறார்;

  • அனுதினமும் கலைகளில் நாட்டம் செலுத்தி பயிற்சிகளை மேற்கொள்பவர், சிறந்த படைப்புக்களை வெளியிடுகிறார்;

  • தினமும் பாடங்களை முறையாக படித்து புரிந்துகொள்ளும் மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். சரிவர படிக்காதவர்களின் மதிப்பெண் குறைவாக இருக்கிறது.

100% படித்த மாணவன், தேர்வில் 100% மதிப்பெண் எடுக்கிறான். 60% படித்தவன் 60% மதிப்பெண் எடுக்கிறான். கடைசி நிமிடத்தில் ஏதோ 10% படித்தவன், வெறும் 10% மதிப்பெண் எடுக்கிறான். இங்கு 10% மதிப்பெண் எடுத்தவன் தோற்றுவிட்டான் என்று சொல்வாரகள். நிஜத்தில் அவன் படித்த 10% பாடத்திற்குரிய 10% மதிப்பெண் பெற்று அவன் போட்ட உழைப்பளவில் வெற்றிதான் பெற்றிருக்கிறான். அவன் சமுதாயம் எதிர்பார்த்த தேர்ச்சி சதவிகிதமான 40%-ஐ பெறவில்லை. ஏனெனில் அவன் அதற்குரிய உழைப்பை முதலீடு செய்யவில்லை. எவ்வளவு முயற்சி செய்தானோ, அவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளான்.


தோற்றுவிட்டேன் என்று எண்ணுகிறீர்களா?

ஏன் ? எங்கு ? எதற்கு ? எதனால் ? எப்படி ? தோற்றோம்

என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?


உங்களின் முயற்சிக்கு / உழைப்பிற்கு

உரிய ஊதியம் கிடைக்கிறது;

அது வெற்றியாகவும் இருக்கலாம்;

அது தோல்வியாகவும் இருக்கலாம்;

நீங்கள் வெற்றி-தோல்வியென்று என்னபெயர்

வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்

அடிப்படையில் அது உங்கள் ஊதியம் மட்டுமே;


உங்கள் உழைப்பு சரியாக இருந்திருந்தால் வெற்றியாகவும்

உங்கள் உழைப்பு சரியில்லாது போனால் தோல்வியாகவும்

உங்களை வந்து சேர்ந்திருக்கும்;

வெற்றியும், தோல்வியும் நிலைகளல்ல, விளைவுகள்தான்;


நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும்,

செயல்படுத்தியது ஒன்றாகவும் இருக்கலாம்;

திட்டமிட்டது நடக்கவில்லை என்பதால் தோல்வியெனலாம்

ஆனால்

செயல்படுத்தியது எதுவோ, அது நிகழ்ந்துள்ள வகையில்

அதுவும் ஒருவகை வெற்றிதானே;

இங்கே தோல்வியென்ற கேள்வி எங்கே?


- [ம.சு.கு 05.05.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page