top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 205 - ஏற்ற-இறக்கங்களுக்கு தயாராக இருங்கள்!"

Updated: May 3, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-205

ஏற்ற இறக்கங்களுக்கு தயாராக இருங்கள்!


  • எங்கள் ஊரில் நூற்பாலைகள் அதிகம். நாட்டின் பருத்தி விளைச்சலுக்கு ஏற்ப பஞ்சு விலையில் மாற்றமிருக்கும். அதற்கேற்ப சில மாதங்கள் நல்ல இலாபம் வரும். மற்ற மாதங்களில் ஆலையை ஒட்டுவதே நஷ்டம் தான். ஓட்டாமல் நிறுத்தினால் அதைவிட நஷ்டமாகும் என்பதற்காக கைக்கும்-வாய்க்குமாக ஓட்டுவார்கள். வியாபாரத்தில் வருகின்ற இந்த ஏற்ற இறக்கங்கள் நன்றாக வியாபாரிகளுக்கு தெரியும். இருந்தும், சில சமயம் முட்டாள்தனமாக திட்டங்களை வகுத்து கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒன்று அதிக விலைக்கு பஞ்சை வாங்கி இருப்புவைத்து மாட்டுகிறார்கள், அல்லது விலை குறைவாக இருக்கும்போது பஞ்சை வாங்க நடைமுறை மூலதனமின்றி கஷ்டப்படுகின்றனர். ஏன் இவர்கள் இந்த ஏற்ற-இறக்கங்களை புரிந்து கொள்வதில்லை!

  • உங்களின் அன்றாட வாழ்கையில் உங்களின் அன்றாட செயல்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் படைப்பாற்றலை சற்று நிதானமாக மறுஆய்வு செய்துபாருங்கள். உங்களால் எல்லா நாளும், ஒரே மாதிரி செயல்படவும், படைக்கவும் முடிகிறதா என்று பாருங்கள்? மனிதர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் குறித்த மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ஆய்வுகள் பொதுவாக கூறுவது, ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும், அன்றன்றைக்கு இருக்கும் மனநிலை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, படைப்பாற்றலில் எண்ணற்ற ஏற்ற-இறக்கங்கள் வந்துபோகும் என்பதுதான். எனக்கும் சில நாட்கள் மிகமிக சுறுசுறுப்பாகவும், சில நாட்கள் சோம்பலாகவும் கழிவதை என்னால் அவ்வப்போது உணர முடிகிறது. அதேசமயம் இப்படி அவ்வப்போது ஏற்படும் மந்தநிலையை தவிர்க்க வேண்டுமென்று விரும்பினாலும், சக்கர சுழற்சிபோல, மனநிலையில் ஏற்ற-இறக்கங்கள் வந்துபோவதை தடுக்க முடியவில்லை. இதற்கு என்னதான் வழி?

மூலப்பொருட்கள் விலை குறைவாக இருக்கும்போது, அவற்றை வாங்கி இருப்பு வைப்பது நல்லது. அதேசமயம் அதற்கு நடைமுறை மூலதனம் நிறைய வேண்டும். விலை ஏற்றங்களின் போது தவறாக திட்டமிட்டு அதிகவிலையில் நிறைய இருப்புக்களை வாங்கிவிடுவதிலும், வாடிக்கையாளர்களுக்கு அதிகம் கடன் கொடுத்து விடுவதாலும், தேவைப்படும் நேரத்தில் பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள். வியாபாரத்தில் வரும் இந்த தவிர்க்க முடியாத ஏற்ற இறக்கங்களை எப்போதும் கருத்தில்கொண்டு, தேவையான உபரி மூலதனத்தை பத்திரப்படுத்தி வைப்பவர்கள், எல்லா சூழ்நிலைகளையும் படிப்படியாக சமாளித்து வெற்றி கொடி நாட்டுகின்றனர்.


தனிமனித வாழ்வில் உடல் நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, அவர்களின் மனநிலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மகிழ்சியான மனநிலையில் இருக்கும்போது, உற்பத்தித்திறனும், படைப்பாற்றலும் சிறப்பாக இருக்கும். அதேசமயம், மனஅமைதி குறைந்த சூழ்நிலைகளில் உற்பத்தித்திறனும், படைப்பாற்றலும் வெகுவாக பாதித்திருக்கும். இந்த ஏற்ற இறக்கங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென்று எல்லோரும் முயற்சிக்கின்றனர். ஆனால் மனத்தின் ஏற்றத்தை தொடர்ந்து இறக்கம் தானாக வந்துதான் தீருமென்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்த சமயங்களில் செய்ய எண்ணயவற்றை முழுமையாக செய்துமுடிக்க முடியாமல் போகும். அதற்காக வருத்தமடைவதில் பயனில்லை. அப்படி இறங்குமுகமாக செல்கிறதென்ற புரிதல் ஏற்படும் போது, சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். பல சமயங்களில், நீங்கள் விழிப்புடன் செய்யும் திருத்தங்கள், சரிவுகளை தடுத்து மிண்டும் ஏற்றத்திற்கு வழிவகுக்கும்.

  • சில தொழிற்சாலைகள், விவசாய உற்பத்தி சார்ந்தவை;

  • சில தொழிற்சாலைகள் சீதோசன நிலை சார்ந்தவை;

  • சில தொழிற்சாலைகள் மக்கள் கொண்டாட்டங்கள் சார்ந்தவை;

  • சில தொழிற்சாலைகள் அரசாங்க கொள்கைகள் சார்ந்தவை;

நாட்டில் நடக்கும் எல்லாத் தொழிலும் ஏதேனுமொரு பொருளாதார நடவடிக்கைகளையோ, இயற்கை மாற்றங்களையோ சார்ந்தவையாகவே இருக்கும்போது, அவை தன்னிச்சையாக எப்போதும் வளரந்துகொண்டே இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. வானம் பொய்த்தால், விவசாய உற்பத்தி பாதித்து தொழிற்சாலைக்கு வரத்து குறையும். சீதோசன நிலை மாறும்போது, பொருட்களின் தேவை மாறும். திருவிழாக்கள் இல்லாத மாதங்களில் விற்பனை குறையும். இவை வழக்கமான ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். வியாபார சக்கரத்தில் ஏறுமுகத்தை தொடர்ந்து சிறிது இறங்குமுகமும் வந்து போவதை தவிர்க்கமுடியாது. ஆனால் அப்படி வரும் இறங்குமுகத்தை முன்கூட்டியே கணித்து, அதனால் பெரிய பின்விளைவுகளும், இழப்புகளும் ஏற்படாத வண்ணம் தற்காத்துக் கொள்வது முக்கியம்.

  • வியாபாரம் ஏறுமுகத்தில் இருக்கும் காலங்களில், பணத்தை பலவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து முடக்கிவிட்டு, பொருளாதார மந்தநிலை காலங்களில் அந்த முதலீடுகளை திரும்பப்பெற முடியாமல், பெரிய பணச்சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் இங்கு ஏராளம். எறும்புகள் மழைக்காலத்திற்கு சேர்ப்பது போல, உங்கள் வியாபாரத்திலும் குறிப்பிட்ட தொகையை அவசர நிதியாக தனியாக வைக்கப் பழகுங்கள்;

  • உங்கள் உடல்நிலைகளில் மாற்றம் வருவதை முற்றிலுமாய் தவிர்க்க முடியாது. அதற்கேற்ப உங்களின் உற்பத்தித்திறனும் மாற்றம் காண்பது இயற்கை. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்களின் செய்பாடும், வாக்குறிதிகளும் இருந்தால், ஏற்ற இறக்கங்களை சமாளித்து முன்னேறலாம்.

  • வாழ்க்கையில் உங்களுக்கு நெருக்கமானவரை ஒருநாள் இழக்கக்கூடும். மரணத்தை யாராலும் தடுக்கமுடியாது. அந்த இழப்புகளை ஏற்று அடுத்து என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் யோசிக்கத் துவங்கினால், இறக்கங்களை தடுத்து மீண்டும் வளர்ச்சிக்கு வழிகாணலாம்;

தனிமனித மனநிலை ஏற்றத்தாழ்வுகளை குறைக்க, முதற்கண் மனஅமைதி பேனுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டயது அவசியம். முறையான உணவு, சரியாண நேரத்தில் உறக்கம், கோபத்தை குறைத்து அன்பு பாராட்டுதல் என தனிமனித நடவடிக்கைகளில் சரியாக கவனம் செலுத்திவந்தால், மனநிலை ஏற்றத் தாழ்வுகளை குறைக்க வாய்ப்பாகும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையிழக்காமல், தன்னம்பிக்கையோடு முயற்சித்தால், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் வியாபார விடயங்களில் வரும் ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கலாம்.


வாழ்விலும், வியாபாரத்திலும், விளையாட்டிலும் ஏற்ற-இறக்கங்களை எதிர்கொள்ள உங்களின் அனுபவம்தான் சிறந்ததொறு வழிகாட்டி. ஏற்ற இறக்கங்களை தவிர்க்கமுடியாது என்ற புரிதலுடன், இரண்டிற்குமான திட்டமிடலில் கவனம் செலுத்தினால், சரிவுகளை சமாளித்து வளர்ச்சியை வேகப்படுத்த முடியும்.


இன்ப-துன்பங்கள், இரவு-பகல் போல் மாறிமாறி வருகிறது

அதேபோலத் தான் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களும்!!


எல்லாவற்றையும் கடந்தால் தான் வெற்றி கிட்டும்;

ஏறுமுகமாக இருக்கும் எல்லாமே ஒருநாள்

உச்சியைத் தொட்டு கீழே விழத்தான் செய்யும்;

கீழே விழுவதெல்லாம் ஒருநாள்

தரைதட்டி திரும்ப மேலே எழத்தான் வேண்டும்;


ஏற்றத்தை தொடர்ந்து இறக்கமும்

இறக்கத்தை தொடர்ந்து ஏற்றமும்

வியாபார உலகின் அன்றாட முறைமை!


ஏற்றத்தில் இறக்கத்திற்கு தயாராகுபவனும்

இறக்கத்தில் ஏற்றத்திற்கு தயாராகுபவனும்

எல்லாச் சூழ்நிலைகளிலும் வெற்றி கொள்கின்றான்;



நாம் கடக்கமறுத்து விலகினாலும்

அவை தானாக நம்மை கடந்துபோகும்;

நடப்பதை நடக்கின்றவாறு ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்;



- [ம.சு.கு 02.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

תגובות


Post: Blog2 Post
bottom of page