top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 204 - சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள்!"

Updated: May 2, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-204

சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள்!


 • நீங்கள் பல்பொருள் அங்காடி ஒன்றை வைத்து நடத்துகிறீர்கள். சிறியதாய் ஆரம்பித்து இன்று மாதம் பல இலட்சங்கள் வியாபாரம் செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. அந்த கடைக்கு செய்திருக்கவேண்டிய வரிப் பதிவுகள் எதையும் செய்யவில்லை. சிறிதாக இருந்தபோது நீங்கள் அதை பொருட்படுத்தவில்லை. வரி வசூலிக்கும் அலுவலகமும் சிறுதொழிலாக கருதி ஒன்றும் செய்யவில்லை. வியாபாரம் வளர்ந்ததும், கடையின் அளவு பெரிதானது. ஆனால் நீங்கள் இன்னும் வரிப் பதிவுகளை செய்து சரக்கு & சேவை வரிகளை செலுத்தவில்லை. இப்படியே ஓரிரு வருடங்களை கடத்துகிறீர்கள். உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு மொட்டை கடுதாசி வரி அலுவலகத்திற்கு ஆதாரங்களுடன் செல்கிறது. உங்கள் நிலை என்னவாகும்?

 • அவசரமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க, அவசரத்திற்கு, ஒருவழிப் பாதையில் வாகனம் ஏதுமில்லை என்று எதிர்புறமாக செல்கிறீர்கள். சற்று தொலைவில் போக்குவரத்து காவலர் உங்களை பிடித்து நிறுத்திவிடுகிறார். நீங்கள் அவசரம் என்று என்ன சமாதானம் சொன்னாலும், அவர் கேட்பதாக இல்லை. செய்த குற்றத்திற்கு 1000 அபராதம் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்ப அரைமணி நேரம் ஆனது. சரியாண பாதையில் சென்றிருந்தால் 5 நிமிடம் தாமதமாகியிருக்கும். ஆனால் ஒருவழிப்பாதையில் தெரிந்தே எதிரில் சென்று மாட்டியதால், அரைமணி நேர தாமதத்துடன் ரூ.1000/- நஷ்டம் வேறு கூடதலாக.

வியாபாரம் சிறிதாக இருந்தவரை, அது யார் கண்களையும் உறுத்தவில்லை. அதேசமயம் உங்கள் வியாபாரம் வளரும்போது, போட்டி-பொறாமைகள் அதிகரிக்கும். உங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட, உங்களை வீழ்த்த ஒரு கூட்டம் தயாராக இருக்கும். அரசாங்கங்களுக்கு தவறுகள் மொட்டைக் கடிதமாக அவ்வப்போது செல்லும். ஒருநாள் வரி அலுவலர்கள் சோதனைக்கு வரும்போது, உங்களின் பல ஆண்டு வரிபாக்கியை ஒரு சேர கட்டுமாறு உத்தரவுகள் வரும். வரியோடு கூடுதலாக வட்டியும் வளர்ந்திருக்கும். நீங்கள் மக்களிடம் வரியை வசூலித்து கட்டுவதுதான் சரக்கு & சேவை வரி. நீங்கள் வசூலிக்கவில்லை என்று சொன்னால், அது உங்கள் தவறென்று கூறுவார்கள். பல ஆண்டு வரியை ஒரு சேர கட்ட நீங்கள் சேர்த்த செல்வத்தை விற்க நேரலாம். இந்த விபரீதம் தேவையா? ஒரு சிலர் இந்த பிரச்சனையை அலுவலர்களை சரிகட்டி சமாளிக்கலாம் என்று கூறலாம். ஒருவேலை அவர்களை அதை ஏற்காமல் சிக்கவைத்தால், குற்றம் இன்னும் பெரிதாகுமே!!


இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களுக்கான 99% காரணம், யாராவதொருவர் சாலை விதிகளை பின்பற்றாதது தான். அதிலும் குறிப்பாக விபத்தில் ஏற்படும் எல்லா மரணங்களுக்கும் ஒரே காரணம், ஏதாவதொரு விதியை மீறுவதுதான். இப்படி விதியை மீறுவதால்தான் விபத்தும், உயிரழப்பும் ஏற்படுகிறது என்று தெரிந்திருந்தும், அந்த மாதிரி தனக்கு நடக்காது என்று நம்பிக்கொண்டு செய்பவர்கள் ஏராளம். வீட்டில் பெரியவர்கள் சொல்லியும், தலைக்கவசம் போடாமல் சென்று மாண்டவர்கள், ஒரு வழிப்பாதையில் செல்பவர்கள், மதி அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் என்று எத்தனையெத்தனை விதிமீறல்கள்.


மனித சமுதாயம் தழைக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், சட்டங்களை வகுக்கின்றன. அவற்றை அந்த மக்கள் கூட்டமே பின்பற்றத் தவறினால் என்னவாகும்;

 • சமுதாய நல்லிணக்கம் குறைந்து சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்!

 • தனிமனித உரிமைகள் வெகுவாக பாதிக்கும்!

 • மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எங்கும், எதிலும் பயம் அதிகரிக்கும்!

 • மக்களுக்கு அரசாங்கம், மற்றும் நீதித்துறைகளின் மீதிருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும்!

தனிமனித வாழ்க்கையில் சட்டத்தை பின்பற்றினால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை. அதேபோல, உங்களின் வேலை மற்றும் வியாபார விடயங்களில் சட்டங்களை ஏன் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

 • சட்டங்களை கடைபிடிக்காமல் மாட்டிக்கொள்ளும்போது, பெரிய அபராதங்களை செலுத்த நேரிடும் [பல நிறுவனங்கள், அபராதங்களை கட்ட முடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன];

 • ஒரு ஊழியராக நீங்கள் அரசு சட்டங்களை, நிறுவன விதிகளை மீறும்போது, நிர்வாகம் வேலை நீக்கம் செய்யக்கூடும்;

 • சட்டங்களை பின்பற்றவில்லை என்பது சந்தையில் தெரியும்போது, நிறுவனத்தின் நற்பெயர் பெரிய அளவில் பாதிக்கப்படும்;

 • பெரிய நிறுவனங்கள் யாவும், முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. முதலீட்டாளர்கள் நேரடி நிர்வாகத்தில் இல்லாததால், நிர்வாகிகளின் சட்ட விரோதமான செயல்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முற்றிலுமாய் சிதைத்துவிடும்;

 • நேர்மையான நடவடிக்கைகளை கொண்டுள்ள நிறுவனம், எந்த சோதனைகளையும் தைரியமாக எதிர்கொள்ளும். சட்டவிரோத நடவடிக்கைகள் இருந்தால், எல்லா நேரமும் பயத்துடனே வியாபாரம் செய்ய வேண்டும். ஒரு தவற்றை மறைக்க, நிறைய தவறுகள் செய்ய வேண்டிவரும்.

 • ஒரு நிறுவனத்தின் தவறுகளை பயன்படுத்தி, ஒருசிலர் மிரட்டி தனிப்பட்ட ஆதாயங்கள் தேட முற்படுவார்கள்;

 • பொதுமக்கள், முதலீட்டாளர்கள், அரசாங்கம், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என்று அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் நிறுவனத்தின் நேர்மையான செயல்பாடுடன் நேரடி தொடர்புடையவை. நிறுவனம் எவ்வளவு விதிமீறல்களை செய்கிறதோ, அந்த அளவிற்கு அதன்மீதான நம்பிக்கை பாதிக்கப்படும்;

உங்கள் தனிமனித வாழ்க்கையோ, வியாபாரமோ, விளையாட்டோ, எல்லா களத்திற்கும் சட்டதிட்டங்களை மனித சமுதாயம் நிர்ணயித்துவிட்டது. அவற்றை அறிந்து, முறையாக கடைபிடிப்பவர்கள் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க வாய்ப்பு அதிகம். சட்டங்களை மீறி, குறுக்குவழியில் ஆதாயம் தேடுபவர்கள் அப்போதைக்கு பலன் அடைந்தாலும், அது நீண்டகாலம் நீடிக்காது. சட்டம் ஒருநாள் அதன் கடமையை செய்யும்போது, அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள்.


உங்கள் வியாபார திட்டங்கள் யாவும் சட்டத்திற்கு உட்பட்டதாய் இருக்கட்டும். ஏதேனும் காரணங்களினால், அவசரத்தினால், ஒருசில சட்டமீறல்கள் ஏற்பட்டால், அவற்றை மேற்கொண்டு தொடராமல், அவற்றிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வையுங்கள். எங்கும், எதிலும் சட்டதிட்டங்களை பின்பற்றுவது உங்கள் வழக்கமாக இருக்கட்டும். அவ்வப்போது ஏற்படும் விதிமீறல்கள், விதிவிலக்காக இருக்கட்டும். அந்த விதிவிலக்குகளையே வாழ்க்கையாக்கி நிம்மதியை தொலைத்துவிடாதீர்கள்;


மனிதகுலம் அமைதியாக இயங்குவதற்கான

முழுமுதற் காரணம் - தனக்கென தானே

வகுத்துக்கொண்ட சட்டதிட்டங்களை

இன்றும் எல்லோரும் மதித்து நடப்பதால்தான்!


ஒருவேளை மனிதன் வகுத்த சட்டங்களை

மனிதன் கடைபிடிக்க மறுத்தால்

காலப்போக்கில் சட்டமும் இருக்காது

அதைத் தொடர்ந்து மனிதமும் இருக்காது!


சட்ட திட்டங்களுக்கு உட்படுவது சிரமமல்லா

எப்படி உட்பட்டு நடப்பதென்று நீங்கள்

யோசிக்கத் துவங்கினால் எல்லாம் எளிதாகும்!- [ம.சு.கு 01.05.2023]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page