top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 202 - நீங்கள் மாற்றவேண்டியது எது?"

Updated: Apr 30, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-202

நீங்கள் மாற்றவேண்டியது எது?


  • ஒரு மாணவனுக்கு கணிதப்பாடம் மட்டும் ஏனோ சரியாக வரவில்லை. மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுக்கும் அவனுக்கு கணிதத்தில் தேறினால் போதும் என்ற நிலை. கணித வகுப்பு என்றாலே பயம். ஏதோ சிறு வயதில், கணக்கு தவறாக போட்டதற்கு ஆசிரியர் அடித்துள்ளார். அந்த சம்பவத்தில் துவங்கிய பயம் ஆண்டாண்டு காலமாய் தொடர்கிறது. பத்தாம் வகுப்பு முடிந்ததும் கணிதத்திற்கு ஒரே அடியாய் முழுக்குப்போட வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறான். அப்படி கணிதத்தை முற்றிலுமாய் விலக்கிவிட்டு பெரிய சாதனைகளை படைக்க முடியும்.

  • இன்றைய நெரிசல் நிறைந்த வாழ்க்கை பயனத்தில், உங்களின் அன்றாட அலுவலகப்பயனம் வாகன நெரிசல்களுக்கு இடையில் சிக்குண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் போது, அரசாங்கத்தையும், சக மனிதர்களின் பொறுப்பின்மையையும் திட்டித் தீர்க்கின்றனர். அப்படி திட்டி உங்கள் மனஅழுத்தத்தையும், இரத்த அழுத்தத்தையும் கூட்டுவதில் யாருக்கு நஷ்டம்? நெரிசல், தாமதங்களை கருத்தில் கொண்டு நீங்கள் சற்று சீக்கிரம் புறப்படுகிறீர்களா? எல்லா நேரங்களிலும் சாலை விதிகளை சரியாக மதிக்கிறீர்களா? நெரிசலை குறைக்க / தவிர்க்க நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள்?

கணிதமும், அறிவியலும் அன்றாட வாழ்வின் ஆணிவேர் என்பது அசைக்கமுடியாத உண்மை. நீங்கள் எந்தத் துறையில் சாதிப்பதானாலும், அடிப்படை அறிவியலும், கணிதமும் தெரிந்திருந்தால் தான் அது சாத்தியம். பொருளாதாரமோ, கணக்கியலோ, வின்வெளி ஆராய்ச்சியோ, சமையலோ, உற்பத்தி நிலையமோ, சேவை மையமோ, எங்கும் கணிதம் தேவை. கணிதத்தை ஒதுக்கிவிட்டு பெரிதாய் சாதிக்க முடியாது. கணிதத்தை கண்டு பயந்து ஒதுங்குவதில் பயனில்லை. மாறாய் கணிதத்தை படிப்படியாய் அணுகி புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மாணவன் கணிதபாடத்தின் மீதான தன் தவறான கண்ணோட்டத்தை மாற்றி நேர்மறையாக எதிர்கொண்டு பயத்தை விலக்கினால், அவனுடைய எதிர்காலத்திற்கு நல்லது. கணிதத்தை மாணவனால் மாற்ற முடியாது. ஒதுக்கவும் முடியாது. அவன் வளர்ச்சிக்கும் வெற்றிக்குமான ஒரே வழி, கணித பாடத்தை நோக்கிய தனது எண்ணத்தை, கண்ணோட்டத்தை மாற்ற வேண்டியதுதான்.


இன்றைய 140+கோடி மக்கள் தொகையில், கூட்டம், போக்குவரத்து நெரிசல் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம். அந்த கூட்டத்தை குறைகூறுவதில் பயனில்லை. மாறாய் அந்த கூட்டத்தினுள் வாழ்க்கையை எப்படி நெறிப்படுத்திக் கொள்வதென்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும். மற்றவர்களை குறைகூறி ஒன்றும் மாற்றிவிட முடியாது. அதேசமயம், அந்த சூழ்நிலை, நிகழ்வுகளை கணித்து நீங்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தால், நீங்கள் வளர்ச்சியை நோக்கி பயனித்துக் கொண்டே இருக்கலாம்.

  • வாகன நெரிசலை குறைகூறி பயனில்லை. ஒன்று சீக்கிரத்தில் கிளம்புங்கள், அல்லது இடத்தையும், பாதையையும் மாற்றிக் கொள்ளுங்கள்;

  • உங்கள் எடை அதிகரித்து குண்டானால், சமைத்தவரை திட்டிப்பயனில்லை. உணவின் மீதான உங்கள் அணுகுமுறை மாறவேண்டும். உடற்பயிற்சி செய்ய துவங்க வேண்டும்;

  • உங்கள் துணையுடனும், பிள்ளைகளுடனும் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தால் நிம்மதி இருக்காது. உங்கள் முன்கோபத்தை குறைத்து, அன்பையும் அனுசரணையையும் கூட்டுங்கள்;

  • அலுவலக வேலை சலிப்புதட்டினால், உடனடியாக வேலையை மாற்ற முடியாது. அந்த வேலையை அணுகும் விதத்தை மாற்றிப்பாருங்கள்;

  • பணத்தை சேர்க்க வேண்டியது அவசியம்தான். அதேசமயம் மனித நேயத்தையும், உறவுகளையும் வளர்க்கவேண்டியது அதனினும் அவசியம் என்பதை புரிந்து முன்னெடுங்கள்;

  • பணச்சிக்கல்களில் மாட்டித் தவிக்கும்போது, சொத்துக்களை காக்கிறேன் என்று கடனை கூட்டாதீர்கள். கடனை குறைத்து நிம்மதியை கூட்ட, சில சொத்துக்களை விற்பது குறித்து அலசுங்கள்!

  • நீங்கள் சமீபத்தில் செய்தவைகள் சில தோற்றிருக்கலாம். அதற்காக நேரம் சரியில்லை, ஜாதகம் சரியில்லை என்று மூடநம்பிக்கையின் பின்னால் ஓடாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளை மறு ஆய்வு செய்து மாற்றத்திற்கு வழிதேடுங்கள்;

எங்கும் எதிலும் பிரச்சனைகளும், சிக்கலும் வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு என்பது நிதர்சனம். பிரச்சனைகளை தீர்க்க, மற்றவர்களை மாற்ற வேண்டும் என்று கணக்கு போடாதீர்கள். அது பெரும்பாலும் நடக்காது. உங்களால் செய்யகூடியது ஒன்றுதான் - அந்த பிரச்சனை குறித்த உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது.


மேலே குறிப்பிட்ட சில சூழ்நிலைகளும், நீங்கள் மாற்ற வேண்டியதும் ஒரு சிறு உதாரணப் பட்டியல் தான். அன்றாட வாழ்வில், வெவ்வேறுபட்ட சூழ்நிலைகளில் விதவிதமாய் சிக்கல்கள் வரும். சிலசமயம், “எனக்கு மட்டும் எங்கிருந்துதான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறதோ?” என்று நீங்களே மனம் துவண்டு நிற்கக் கூடும். எதற்கும் அசந்து விடாதீர்கள். நம்பிக்கை தரும் எழுத்துக்களை வாசியுங்கள். சிறந்த பேச்சாளர்களின் உரைகளை வலைதளத்தில் தேடிப்பிடுத்து கேளுங்கள்.


உங்கள் மனதை அமைதிப்படுத்த, உங்கள் கண்ணோட்டத்தையும், அணுகுமுறையையும் மாற்றுங்கள். மனம் அமைதியடைந்தால், எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு தானாக பிறக்கும்.


நீங்கள் மாற்ற வேண்டியது மற்றவர்களை என்று தவறாக கணக்குப்போட்டு தோற்றுப்போகாதீர்கள். உங்களால் மாற்றக் கூடியது உங்களை மட்டும்தான்!!


அன்றாடம் சமுதாயத்தில் நிறைய நிகழ்வுகளை பார்ப்பீர்கள்

எல்லாவற்றையும் உங்கள் பாணியில் மாற்றியமைக்க

உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும்;

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில்

எத்தனை விடயங்களை மாற்றியமைத்திருக்கிறீர்கள்;


நிகழ்வுகளையும், மனிதர்களையும் மாற்றியமைக்கும் திறன்

உங்களிடம் இருந்தால், பரிச்சனைகளே இருக்காது – ஆனால்

எது மாறுகிறதோ இல்லையோ

எதை உங்களால் மாற்றியமைக்க முடிகிறதோ இல்லையோ

உங்களால் மாற்றியமைக்க வல்ல ஒரே பெரும் சக்தி

உங்கள் எண்ணமும், கண்ணோட்டமும் தான்;


உங்கள் கண்ணோட்டம் மாறினால்

சிக்கல் தீர்வதற்கான புதிய வழிகள் புலப்படும்;

முடியும் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவருக்கு

எல்லாவற்றிலும் முடிவதற்கான வழிதென்படும்;

மற்றவர்களை மாற்ற முற்படும் முன்

நம்மில் என்ன மாற்றும் செய்தால்

நமக்குத் தேவையான முன்னேற்றம் கிடைக்குமென்று ஆலோசித்து

உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர சாத்தியமுள்ள

உங்கள் எண்ணங்களை, கண்ணோட்டத்தை, அணுகுமுறையை மாற்றினால்

நீங்கள் சாதிப்பதற்கு இந்த பிரபஞ்சமே வழிதிறக்கும் !!



- [ம.சு.கு 29.04.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page