top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 201 - வாழ்க்கையை அதன்போக்கில் வாழுங்கள்..!"

Updated: Apr 29, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-201

வாழ்க்கையை அதன்போக்கில் வாழுங்கள்!


  • நாளைய தினம் காலை திருமண நிகழ்விற்கு செல்லவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறீர்கள். காலை 5 மணிக்கு குடும்பமே தயாராகிவிட்டது. வீட்டை பூட்டிவிட்டு உங்கள் நான்கு சக்கர வாகனத்தில் ஏற முற்படும்போது தெரிகிறது, முன்பக்க சக்கரத்தில் காற்றில்லை என்று. நேற்று வாகனத்தை நிறுத்தும் போது எல்லாம் சரியாகத்தான் இருந்ததை நீங்களே உறுதிப்படுத்தியிருந்தீர்கள். ஆனால் காலையில் பார்க்கும்போது காற்று முற்றிலுமாய் போயிருக்கிறது. எல்லாம் சரியாகத் தான் இருக்கிறதென்று உறங்கச் சென்றவருக்கு விடியற்காலையில் இந்த சிக்கல். குடும்பத்தினர் எல்லோரும் தயாராகி நின்று கொண்டிருப்பதால், கூடுதல் மனஅழுத்தம். எவ்வளவுதான் முன்ஜாக்கிரதையாக பார்த்திருந்தாலும் இப்படி தவிர்க்க முடியாத சில சிக்கல்கள் வந்து உங்கள் மனஅழுத்தத்தையும், இரத்த அழுத்தத்தையும் உயர்த்துகிறது. இதற்குப் பெயர்தான் விதியா?

  • உங்கள் பிள்ளைக்கு அறிவியல் பாடத்தில் அவ்வளவாக பிடிப்பில்லை. மிக குறைந்த மதிப்பெண்களையே அதில் எடுக்கிறார். உங்கள் பிள்ளையை மருத்துவராக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆசை. ஆனால் அறிவியல் என்றாலே பிள்ளைக்கு பயம். பத்தாம் வகுப்பவரை, நீங்களும் உங்கள் துணைவரும் அதிக நேரம் செலவிட்டு சொல்லிக்கொடுக்கிறீர்கள். எப்படியோ அறிவியல் பாடத்தில் தேறிவிடுகிறார். அதேசமயம் கணிதத்தில் நல்ல மதிப்பெண். இப்போது உங்களின் “மருத்துவப் படிப்பு” கணவை உங்கள் பிள்ளையிடத்தில் திணிக்க முற்பட்டால், என்ன ஆகும்?

நான்கு சக்கர வாகனம் விடியற்காலை பிரச்சனை செய்யும்போது, அந்த நேரத்தில் அதை சரிசெய்ய ஆள்ளில்லை என்பதால் மனஅழுத்தம் வருவது இயல்பே. இந்த சூழ்நிலையில் நீங்களும், குடும்பத்தினரும் வண்டியை குறை சொல்வதில் பயனில்லை. இருக்கின்ற சூழ்நிலையில் அடுத்தென்ன செய்வதென்று பார்க்கவேண்டியது தான். ஒரு வாடகை வண்டியை பிடித்து உங்கள் குடும்பத்தினரை முன்னால் அனுப்பிவிட்டு, வாகனத்தின் சக்கரத்தை மாற்றி 1-2 மணிநேரம் தாமதமாக நீங்கள் செல்லலாம் (அல்லது) எல்லோருமே வாடகை வண்டயில் சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிவந்த பின் வாகன சக்கரத்தை சரிசெய்யலாம். இருக்கின்ற சூழ்நிலையில், செய்யப்பட வேண்டிய காரியத்தின் அவசரத்தை பொறுத்து மாற்று வழி என்ன செய்யலாம் என்று யோசித்து செய்தால் சிக்கல் தீரும். அதை செய்யாமல், உங்கள் வாகனத்தையும், குடும்பத்தினரையும் வெறுமனே காரணமில்லாமல் கடிந்து கொண்டிருந்தால், உடல் நலமும், மனநலமும் தான் பாதிக்கும்.


உங்கள் மருத்துவர் விருப்பத்தை பிள்ளைகள் மேல் திணித்தால், பிள்ளைகள் வேண்டா வெறுப்பாக படிப்பார்கள். ஈடுபாடு இல்லாத துறையில் சாதனைகள் புரிவது சாத்தியமில்லை. திணிக்கப்பட்ட துறையில் ஒரு சராசரி மாணவனாக வெளிவந்தால், அவர்களது எதிர்காலம் எப்போதுமே ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும். பிள்ளைகளுக்கு எந்த பாடத்தில் ஈடுபாடிருக்கும், எதை விரும்ப மாட்டார்கள் என்பது உங்கள் கைகளில் இல்லை. அதே சமயம் அவர்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்யும்போது, அதில் அவர்களை மேற்கொண்டு வழிநடத்திட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. பல்வேறு படிப்புகளுக்கான எதிர்காலம் குறித்து பிள்ளைகள் அறிந்துகொள்ள நீங்கள் ஆவன செய்யவேண்டியது உங்கள் கடமை. அதில் அவர்கள் என்ன தேர்வு செய்கிறார்களோ, அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து வழிநடத்தினால் அவர்களது வாழ்க்கை நன்றாகப் போகும்.


இன்றைய தினம், நாட்டில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு மனஅழுத்தம் / இரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கிறதென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏன்? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நேரம் தவறி சாப்பிடுவது, சரியாண நேரத்திற்கு உறங்கி எழுவதில்லை, அன்றாடம் செய்யவேண்டிய வேலைகளை குறித்த நேரத்தில் செய்யாமல் நாளை என்று எல்லாவற்றையும் தள்ளிப்போட்டு கொண்டே இருந்துவிட்டு கடைசி நேரத்தில் அவசரப்படுவது, அதீதமாக கோபப்படுவது போன்ற எண்ணற்ற வாழ்வியல் முறை தவறுகளால், தேவையில்லாமல் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.


வேலையும், தொழிலும் நன்றாக சென்றுகொண்டிருந்த பலருக்கு, திடீரென்று வந்த கோவிட-19 பெருந்தொற்றால், எல்லாமே பாதித்தது. இதில் பலரும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர்.

  • ஒருசிலர் தனக்கு நெருக்கமானவர்களை நோயின் கோரதாண்டவத்தில் இழந்து நின்றனர்;

  • பெரும்பாலானவர்களுக்கு சில மாதங்கள் வேலையும், ஊதியமும் இல்லை. அந்த நிலைமை ஒருசில துறைகளில் நீண்டகாலம் நீடித்தது;

  • நிறைய தொழில்கள் மீளமுடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டன;

  • பல பிள்ளைகளின் படிப்பு வெகுவாக பாதிக்கப்பட்டது. சில ஏழைக் குழந்தைகள் படிப்பை மேற்கொண்டு தொடரவே இல்லை;

இந்த பேரிழப்பை ஏற்படுத்திய கோவிட்-19 பெருந்தொற்றை உலகமே சபித்தது. என்னதான் தடுப்பூசி கண்டுபிடித்து நோயைக்கட்டுப்படுத்தினாலும், இழந்தவைகள் இழந்தவைகள்தானே. அவற்றை நீங்கள் எப்படியும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. உலகமே ஊரடங்கில் அடங்கி நிற்கும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். உங்கள் எண்ணங்கள், திட்டங்களையெல்லாம் மீறி, நடைமுறையில் நிறைய நடக்கும். அவற்றில் ஒருசிலவற்றை முன்ஜாக்கிரதையான நடவடிக்கைகளால் தவிர்க்கலாம். ஆனால் எல்லாவற்றையும் கணித்து தடுப்பதும் சாத்தியமில்லை.


பல இயற்கை சீற்றங்களும், அசம்பாவிதங்களும், மனிதத் தவறுகளும் அவ்வப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஏதாவதொரு தவறு நிகழ்வதுதான் வாழ்வின் யதார்த்தமும், நிதர்சனமும் ஆகும். ஏற்படும் தவறுகளுக்கும், இழப்புகளுக்கும் நீங்கள் மனமொடிந்து உட்கார்ந்தால், எதுவும் மாறிவிடாது. உங்களால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகளை, யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செய்தால், நிலைமை சீரடைந்து முன்னேற்றத்திற்கு வழிபிறக்கும். நிகழ்ந்தவற்றை அதிதீவிரமாக எடுத்துக்கொண்டு, உங்கள் மனதை வருத்தினால், மனவருத்தம் உடலை பாதித்து கூடுதல் பிரச்சனைகளை உருவாக்கும்;


வாழ்க்கையை அதிதீவிரமாக எடுத்துக்கொண்டால்

தேவையற்ற மனஅழுத்தமும் நிம்மதியின்மையுமே மிஞ்சும்;

வாழ்க்கையை அதன் போக்கில் கண்டு இரசியுங்கள்!


உங்களுக்கானது, உங்களுக்கு கட்டாயம் வரும்

உங்களுக்கல்லாதது, என்ன செய்தாலும் உங்களுக்கு வராது

ஒருவேளை வந்தாலும் தங்காது

இந்த எழுதப்படாத யதார்த்த விதியை

யார் சொன்னாலும் உங்களுக்கு புரியாது

நீங்கள் அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்;


காற்று போகும் திசையில் மட்டுமே

படகால் வேகத்தை அதிகரித்து சாதிக்க முடியும்;

எதிர் திசையில் என்ன முயற்சித்தாலும்

ஒரளவிற்கு மட்டுமே முன்னேற முடியும்;


வாழ்க்கையிலும் அதே விதிதான்

சூழ்நிலைகளை புரிந்துகொண்டு

அப்போதைய நிலைமைக்கும் தன்மைக்கும் ஏற்ப

உங்கள் செயல்களை, திட்டங்களை

வடிவமைத்து / மாற்றியமைத்து செயல்படுத்தினால்

வெற்றியை சீக்கிரத்தில் தொட்டுவிடலாம்!!



- [ம.சு.கு 28.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page