top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 200 - அவரவர் பங்கு அவரவருக்கே..!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-200

அவரவர் பங்கு அவரவர்க்கே!!


  • கிராம கைவினைக் கலைஞர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி, நகரத்தில் உள்ள பெரிய கடைகளுக்கு ஒரு வியாபாரி விற்றுவந்தார். சந்தையில் விலை குறையும்போது, உடனடியாக வாங்கும் விலையை குறைப்பார். அதேசமயம், விலை அதிகரித்தால், சில நாட்கள் தாமதித்து வாங்கும் விலையை கூட்டுவார். அதிலும் கூட்டுவது குறைவாகவே இருக்கும். சந்தையின் நிலவரம் குறித்த அன்றாட தகவல்கள் சிறு உற்பத்தியாளர்களிடம் இல்லாததால், வியாபாரி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதிக இலாபத்தை சம்பாதித்தார். சில சமயங்களில் அவரால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம்கூட ஏற்பட்டது. நாளடைவில் சந்தை விலை குறித்த தகவல்கள் ஒருசில உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தபோது, அவரது கொள்ளை இலாப முறைகளை உற்பத்தியாளர்கள் அறிந்துகொண்டனர். அதனால் இளைஞர்கள் ஓரிருவர் முன்வந்து மற்றவர்களின் சார்பாக சந்தைக்கு பொருட்களை நேரடியாக அவர்களே கொண்டுவரத் துவங்கினா். ஆறு மாத காலத்தில் உற்பத்தியாளர்களின் நேரடி அனுகுமுறை சுமுகமாக சந்தையில் ஏற்றுக்கொள்ளப்படவே, அந்த வியாபாரி அந்த தொழிலிருந்து முற்றிலுமாய் வெளியேற்றப்பட்டார். அவர் பின்னாளில் கூறிய சமாதானங்களை உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

  • தொழிலாளர்களின் நலன்காக்க போராடும் தொழிற்சங்கங்கள் உருவான வரலாற்றை படித்திருக்கிறீர்களா? ஐரோப்பிய கண்டத்தில் ஆரம்பகாலங்களில் துவங்கிய நூல் உற்பத்தி தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில், நீண்ட நேரம் வேலை வாங்கப்பட்டனர். நாட்கள் செல்லச்செல்ல, முதலாளிகளின் வளம் ஒருபுறம் பெருக, தொழிலாளர்களின் நிலைமை மோசமானது. நீண்ட வேலை நேரத்தினால், உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையை படிப்படியாய் உணர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடி போராடத் துவங்கியதன் விளைவே, இன்று நாம் காணும் பல தொழிற்சங்கங்கள்.

வியாபாரியால், சந்தைகுறித்த தகவல்களை மறைத்து, உற்பத்தியாளர்களுக்கான பங்கை சிலகாலம் தானே வைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் உண்மை நிலை தெரியவரும்போது, அவர் தனக்கு பொருள் வழங்கியவர்களின் நம்பிக்கையை இழந்து, மேற்கொண்டு அந்த தொழிலை தொடர வழியின்றிப்போனது. ஒருவேளை அவர் நியாயமான இலாபத்தோடு செய்திருந்தால், உற்பத்தியாளர்கள் தாங்களாக சந்தைக்கு கொண்டுவரவேண்டிய தேவை வந்திருக்காது. வியாபாரிக்கும் தொழில் தொடர்ந்திருக்கும்.


முதலாளிகளின் ஏகாதிபத்திய முறையை தொழிற்சங்கங்கள் கேள்வி கேட்டு போராடியதன் பயனாகத்தான், இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் நலனுக்கான எண்ணற்ற சட்டங்கள் எல்லா நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளன. எல்லா நாடுகளிலும், எல்லா முதலாளிகளும் ஆரம்பத்தில் அதிக இலாபத்தை கணக்கிட்டு, ஊழியர்களுக்கும், மூலப்பொருட்களை வழங்குபவருக்கும் குறைவாக எப்படி கொடுப்பது என்று கணக்குப்போடுகிறார்கள். வியாபார ஏற்றத்தாழ்வுகளின் போது, தொழிலாளர்கள், மற்றும் மூலப்பொருட்கள் வழங்குபவர்களின் ஆதரவு குறையும்போதுதான் அவர்களுக்கு அதன் விளைவுகள் புரிகிறது. சீக்கிரத்தில் புரிந்து கொண்டவர்கள் முறையான பங்கீட்டு முறையை சீக்கிரத்தில் ஏற்படுத்திவிடுகின்றனர். தாமதிப்பவர்கள், சில நஷ்டங்களுக்கு பின்னால் சரிசெய்கிறார்கள்.


தொழிற்சாலையில், வியாபாரத்தில் சரியான பங்கீடு இல்லாமல் போனால் என்னவாகும்

  • ஊழியர்கள், அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்கும் வேலையை தேட ஆரம்பித்து விடுவார்கள். எப்போது வேலை கிடைத்தாலும், ஓடிவிடுவார்கள்;

  • மூலப்பொருட்களை வழங்குபவர்கள், தங்களின் பொருட்களுக்கு சரியான விலை கொடுக்கப்படவில்லை என்றால், வேறு வாடிக்கையாளர்களை தேடிக்கொண்டிருப்பர். எப்போது புதிய வாடிக்கையாளர் கிடைத்தாலும், உடனடியாக கைமாறிவிடுவர்;

  • நிறுவனம் குறித்து தவறான கருத்துக்கள் ஊழியர்கள், வியாபாரிகள் மத்தியில் பேச்சு ஆரம்பிக்கும். அதனால் நல்ல திறமையானவர்கள் வேலைக்கு கிடைக்க மாட்டார்கள்.

  • ஊழியர்களின் ஈடுபாடும் குறைந்து, நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த சிந்தனைகள் இல்லாமல். வேலைகள் கடமைக்காக அல்லாமல் கடனுக்காக நடந்தேறும்;

புகழ்பெற்ற டாடா நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்னர், ஒருமுறை தொழிலாளர் போராட்டம் நடந்தது. அன்றிலிருந்து ஊழியர்கள் மீதான நிர்வாகத்தின் கண்ணோட்டம் முற்றிலுமாய் மாறியது. தங்களின் இலாபத்தில் ஊழியர்களுக்கும் பங்குண்டு என்பதை நிர்வாகம் செயலில் நிரூபிக்க ஆரம்பித்த பின்னர், இன்று வரையிலும் எந்த பெரிய போராட்டமும் வரவில்லை.


அதேபோல, வியாபாரத்தில் உங்கள் போட்டியாளர்களை முற்றிலுமாய் அழிக்க திட்டமிடாதீர்கள். அவர்களை நீங்கள வெளியேற்றினால், புதிதாய் வேறொருவர் அதிக பலத்துடன் களமிறங்கக்கூடும். நீங்கள் உங்கள் முதன்மை நிலையையும், முக்கியத்துவத்தையும் காப்பாற்றலாம். ஆனால் மற்றவர்களை அழிக்க நினைத்தால், அவர்களுக்கான சிறு பங்கை நீங்கள் பறிக்க நினைத்தால், அப்போதைக்கு நீங்கள் வென்றது போல தெரிந்தாலும், சீக்கிரத்தில் பெரிய போட்டியை சந்திக்க நேரிடும். எல்லா வியாபாரத்தையும் நீங்கள் சாதுர்யமாக பிடுங்கிவிட்டால், கடைசியில் அரசாங்கம் சட்டத்தை கையில் எடுத்து, உங்கள் சாமராஜ்யத்தை ஆட்டுவிக்கும்;

  • எத்தனையோ காரணங்களினால் நிறுவன ஊழியர்கள் மத்தியிலும், சந்தையிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் அவற்றை கவனமாக கையாண்டு, எல்லோருக்கும் அவரவர் பங்குகளை சரியாக கிடைக்கச் செய்தால், நீங்கள் சந்தையில் நிலைத்திருக்க வாய்ப்பு அதிகம்;

  • கூடியவரை வெளிப்படைத் தன்மையை நிர்வாகத்திலும், வியாராத்திலும் அமல்படுத்தினால், ஊழியர்கள் மத்தியிலும், வாடிக்கையாளர் மத்தியிலும் நிறுவனத்தின் மீதான நம்பிகைக கூடும்;

  • ஒரு முதலாளியாக, உங்கள் ஊழியர்களின் தேவைகள், கணக்கீடுகள், திறமைகள், களத்தில் செயல்பாடுகள் குறித்து நீங்கள் தொடர்ந்து அலசிக்கொண்டே இருக்கவேண்டும். தேவைப்படும் போது காலம் தாழ்த்தாமல் ஊழியர்கள் நலன் குறித்த முடிவுகளை எடுத்து செயல்படுத்த வேண்டும்; அதேபோல உங்களின் வாடிக்கையாளர்கள், பொருள் வழங்குபவர்கள் என்று எல்லாவற்றையும் தொடர்ந்து அலசி, அவர்களுக்கான சரியான சேவையை, சரியான விலையை வழங்கினால், அவர்களின் நம்பிக்கையோடு நீண்டகாலம் நீங்கள் தொழில் செய்யலாம்;

உங்களுக்குரிய இலாபம் உங்களுக்கு மட்டுமே – அதேபோல

அடுத்தவருக்கு போகவேண்டிய இலாபம் அவர்களுக்குத் தானே!

அதை நீங்கள் முறைகேடாக பறிக்க நினைத்தால்

எத்தனை காலத்திற்கு அப்படி ஏமாற்றி பறிக்க முடியும்

நீங்கள் ஏமாற்றியது தெரியவரும் காலத்தில்

உங்களின் நிலை என்னவாகும்?


உங்களின் இலாபத்தைமட்டும் குறிக்கோளாக கொண்டு

நீங்கள் முடிவுகளை எடுக்க நினைத்தால்

நீங்கள் சமுதாயத்திற்கான மனிதர் அல்ல!

உங்கள் பங்கை எடுத்துக்கொண்டு

பிறருக்கான பங்கை உரிய நேரத்தில் உரிய வகையில்

கிடைக்கச் செய்தால் மட்டுமே

சமுதாயத்தின் நம்பிக்கையை சம்பாதித்து

வெற்றியை நோக்கி பயனிக்க முடியும்;


- [ம.சு.கு 27.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page